பெண்ணாலம்
பவள சங்கரி
பட்டொளிவீசும் பதின்மத்தின் தலைவாசலில்
பட்டுத்தெளியும் திருமணபந்தமெனும்
சிறைவாசம்.
கடமையே கண்ணாக
கணவனின் சுகசீவனமே
மாசற்ற கற்புநெறியாக
இனிய பதினாறில் இளம்தாயாகி
மறுபிறவியாய்
மகத்தான தலைப்பிரசவம்.
கனியும் காதலால் உறவுகளையும் சுமக்கும்
அச்சாணியாய்
குதூகலமான குடும்ப பாரம்.
தளிர்நடை பயிலும் முன்பே மூத்தாளாக
உயரச்செய்த
வல்லமையான மறுபிரசவம்.
தொலைக்காட்சி திரைக்காட்சி அபூர்வமான
காலகட்டத்தில்
கட்டில்காட்சியே பொழுதுபோக்காய்!
தொன்விருட்சமாய் விழுதுகள்
இரத்த பந்தங்கள்
சூப்பிய பனங்கொட்டையாய் சுண்டியவதனம்.
பொருளாதாரமும் வாழ்வாதாரமும்
உராயும் கோட்டின்
உளைச்சலின் உச்சம்.
குருதியும் கொதித்து இருதயமும் துடித்து
பரிதவிக்கும் வேளை
கிடுகிடுக்குமோசை படபடக்குமுயிர்.
சரசரக்கும் பாசக்கயிற்றை வீசி
துடிதுடிக்கும் உயிரை
சிகரமேற்றும் சிலிர்ப்பு .
பட்டதெல்லாம் போதுமினி
துயர் படமுடியாதென்றே
பந்தபாசம் விலக்கி
பக்திநெறிப் பயணத்தின் ஆயத்தமாக
விழுதுகள் வேரூன்ற உற்றதுணை நாடி
கூப்பித்தொழும் முதிதையில்
மாலவனின் மாயலீலையால்
காலனின் கயிறும் பொடிப்பொடியாக
பாசமும்வெல்ல நேசமும்சிறகடிக்க
படபட இதயமும்
மெது மெதுவாய் துடிக்க
லப்..டப்….லப்…..டப் ஓசையுடன்
இதயக்கண் விழிக்க
பட்ட துயரே இதமாய் இனிக்க
கனிந்து நின்று கசிந்து உருகி
மாடாயுழைத்து ஓடாய்த்தேய்ந்து
தண்ணளி வீசும் பெண்ணாலம்!!!!
படத்திற்கு நன்றி :
http://upload.wikimedia.org/wikipedia/commons/9/9b/Banyan_tree_on_the_banks_of_Khadakwasla_Dam.jpg
பிள்ளைப்பருவம் தொடங்கி
பாவையாய்க் கவர்ந்து
தாய்மையில் ஒளிர்ந்து
பாசத்தில் திளைத்து
பெருமை சேர்க்கும்
பெண்மையின் பாதையில்,
பட்டதுயரே இதமாய் இனிக்கக்
கசிந்துருகி நிற்கும்
பெண்ணாலம் சிறப்புத்தான்…!
வாழ்த்துக்கள்…!
-செண்பக ஜெகதீசன்…
நன்றி திரு செண்பக ஜெகதீசன்.