ஓரினச் சேர்க்கையில் நாட்டம் உடையவர்களிடையே திருமணம்

 

நாகேஸ்வரி அண்ணாமலை

இந்தியாவில் திருமணம் என்றாலே அது ஒரு பெண்ணிற்கும் ஆணிற்கும் இடையே நடக்கும் ஒரு ஒப்பந்தம் என்றுதான் வழங்கி வருகிறது. இந்தியாவில் ஓரினச் சேர்க்கையில் நாட்டமுடையவர்கள் இருந்தாலும் இன்னும் அதற்கு சமூக அங்கீகாரம் இல்லையாதலால் பலர் அதை வெளியில் காட்டிக் கொள்வதில்லை என்கிறார்கள். அதனால்தான் அதற்குரிய புள்ளி விபரங்கள் நம் நாட்டில் கிடைக்கவில்லை. வெளிப்படையாக ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் பகிரங்கமாகத் திருமணம் செய்துகொண்டதாகச் செய்தி எதுவும் இல்லை.

அமெரிக்காவில் திருமணம் என்ற சொல்லை ஒரு ஆணிற்கும் ஒரு பெண்ணிற்கும் இடையே நடக்கும் வாழ்க்கை ஒப்பந்தத்தை குறிக்கும் சொல்லாக மட்டுமே வழங்க வேண்டும் என்று பலர் வாதாடுகிறார்கள். அமெரிக்காவில் இப்போது ஒரே இனத்தைச் சேர்ந்த இருவர் சேர்ந்து வாழ்வது அல்லது திருமணம் செய்துகொள்வது என்பது அதிகரித்து வருகிறது. ஆனால் பழமைவாதிகள் பலர் இதை ஆதரிக்கவில்லை.

ஆயிரத்துத் தொளாயிரத்தித் தொண்ணூறுகளிலிருந்தே இவர்களுடைய உரிமைகளுக்காகப் போராட்டம் நடந்து வந்தாலும் 2004 வரை ஒரினச் சேர்க்கைத் திருமணங்கள் அமெரிக்கா முழுவதும் தடை செய்யப்பட்டிருந்தன. முதல் முதலாக மாசசூசெட் மாநிலம் 2004-இல் இந்த வகை திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் அளித்தது. அதன் பிறகு பல மாநிலங்கள் மாசசூசெட்டைப் பின்பற்ற ஆரம்பித்தன.

அமெரிக்காவில் மாநிலங்களுக்கென்று சில உரிமைகள் உண்டு. ஓரினச் சேர்க்கைத் திருமணங்களை ஆதரிப்பதற்கோ அல்லது தடை செய்வதற்கோ மாநிலங்களுக்கு உரிமை உண்டு. ஓஹையோ, மெயின், மாசசூசெட்ஸ், வெர்மொன்ட், நியூஹேம்ஷையர், கனெக்டிக்கெட் ஆகிய ஆறு மாநிலங்களும் இந்த மாதிரித் திருமணங்களை ஆதரித்துச் சட்டங்கள் இயற்றியிருக்கின்றன. இந்த மாநிலங்களில் ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ளலாம். இவர்களுக்கு வழக்கமாக ஆணும் பெண்ணுமாகத் திருமணம் செய்துகொண்டு தம்பதிகளாக வாழும் தம்பதிகளுக்குள்ள எல்லாச் சலுகைகளும் – வாரிசு உரிமைகள் (inheritance rights), ஓய்வூதியத்தில் உரிமை போன்றவை (widow(er)’s pension) – உண்டு. இவர்களைத் தம்பதிகள் என்றே இந்த மாநிலங்களில் அழைக்கிறார்கள். நியூ ஜெர்ஸி, டெலவேர் ஆகிய இரண்டு மாநிலங்களில் இவர்களை ஜோடிகள் என்று அழைக்கிறார்கள். இந்த வகைத் திருமணங்கள் சிவில் யூனியன் (civil union) என்று அந்த மாநிலங்களில் அழைக்கப்படுகின்றன. தம்பதிகள் என்று இவர்கள் அழைக்கப்படாவிட்டாலும் இவர்களுக்குத் தம்பதிகளுக்கான எல்லாச் சலுகைகளும் இருக்கின்றன. மேற்கு மாநிலங்களான கலிஃபோர்னியா, ஆரகன், நெவாடா, வாஷிங்டன், ஹவாய் ஆகிய மாநிலங்களில் இவர்களை சேர்ந்துவாழும் ஜோடிகள் (domestic partners) என்று அழைக்கிறார்கள். இவை தவிர மற்ற மாநிலங்கள் இந்த மாதிரித் திருமணங்களை எதிர்த்து தங்கள் மாநில அரசியல் சட்டங்களையே மாற்றி அமைத்திருக்கின்றன. காலப் போக்கில் இவையும் மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று (2012 பிப்ரவரி ஏழாம் தேதி) கலிஃபோர்னியா மாநிலத்தில் இருந்த ஓரினத் திருமணங்களுக்கான தடையை மத்திய முறையீடு நீதிமன்றம் (Federal Circuit Court) நீக்கியிருக்கிறது. இந்தத் தீர்ப்பைக் கேட்டு கலிஃபோர்னியா மாநில ஓரினச் சேர்க்கை ஜோடிகள் சந்தோஷத்தில் மூழ்கியிருக்கிறார்கள். ஆனால் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்குப் போகலாம். அங்கு என்ன நடக்கும் என்று இப்போதைக்கு யாராலும் சொல்ல முடியவில்லை. புஷ்ஷின் எட்டு ஆண்டு ஆட்சிக் காலத்தில் நாடு முழுவதும் இந்தத் திருமணங்களைத் தடை செய்ய மத்திய அரசு எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.

இந்த ஆண்டு நவம்பரில் நடக்கப் போகும் ஜனாதிபதித் தேர்தலில் இது ஒரு முக்கியமான பிரச்சினையாக விவாதிக்கப்படுகிறது. குடியரசுக் கட்சி வேட்பாளர் நியமனத்திற்குப் போட்டியிடும் எல்லா முதல்நிலை வேட்பாளர்களும் (primary candidates) இதைப் பற்றிப் பேசாமல் விடுவதில்லை. பொதுவாக குடியரசுக் கட்சியில் பழமைவாதிகள் பலர் இருக்கிறார்கள். இவர்களைப் பொறுத்த வரை இயேசுவை வழிபடும் கிறிஸ்தவ மதம்தான் உண்மையான மதம்; பைபிளில் இயேசு சொன்னதாக இவர்கள் கருதுவதுதான் இன்றைக்கும் நடைமுறைக்கு சாத்தியமானது; ஒரு ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாகக் குழந்தைகளோடு வாழ்வதுதான் உண்மையான குடும்பம்; இந்த மாதிரிக் கொள்கைகளில் நம்பிக்கை உடையவர்தான் அமெரிக்காவை சிறப்பாக வழிநடத்திச் செல்ல முடியும். இந்த வேட்பாளர்களுக்கு இந்தக் கொள்கைகளில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, ஆனால் இருப்பதாக ஜனங்களை நம்பவைத்து ஓட்டுக்களை வாங்க முயற்சிக்கிறார்கள்.

இவர்கள் ஓரினச் சேர்க்கைத் திருமணங்களை ஆதரிப்பதே இல்லை. அது இறைவனுக்கு எதிராகச் செய்யும் காரியம் என்று கூறுகிறார்கள். பழமைவாதிகள் இவர்களை ஆதரிக்கிறார்கள். தேர்தலில் இவர்களுக்கு ஓட்டுப் போட்டுவிடுவார்களோ என்று கூடப் பயப்படத் தோன்றுகிறது.

அமெரிக்காவில் சில வருடங்களுக்கு முன்பு வரை தாங்கள் ஓரினச் சேர்க்கையில் நாட்டமுடையவர்கள் என்று யாரும் தங்களை வெளிப்படையாகக் கூறிக்கொள்ளுவதில்லை. இப்போது இந்தத் தயக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. (இந்தியாவிலும் ஓரினச் சேக்கையில் நாட்டமுள்ளவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆனால் சமூகத்தில் அதற்கு அங்கீகாரம் இல்லாததோடு அப்படிப்பட்டவர்களை இகழ்ந்து கேலியும் செய்வார்கள் என்பதால்தான் அப்படிப்பட்டவர்கள் தங்களைப் பற்றி வெளியில் சொல்லிக் கொள்ளுவதில்லை என்கிறார்கள். இது சரியா என்று தெரியவில்லை. எனக்குத் தெரிந்த பலர் இன்னொரு பாலினத்தைச் சேர்ந்தவர்களை மணந்து கொண்டு குழந்தைகளும் பெற்றுக் கொள்கிறார்களே என்று கேட்டால் ‘இந்தியாவில் எல்லோருக்கும் திருமணத்தைப் பெற்றோர்களோ மற்றவர்களோ செய்து வைத்துவிடுகிறார்கள். அதனால் வேறு வழியில்லாமல் எல்லோரும் குடும்பம் நடத்துகிறார்கள்’ என்ற பதில் அமெரிக்காவில் கிடைக்கிறது.)

அமெரிக்காவில் இப்போது பலர் வெளிப்படையாகவே தங்களை ஓரினச் சேர்க்கையில் நாட்டமுடையவர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள். பல அரசியல் தலைவர்கள் தேர்தலில் தாங்கள் ஜெயிக்கும் வாய்ப்புக் குறைந்து விடுமோ என்று நினைத்து அந்த உண்மையை வெளியில் சொல்வதில்லை. ஆனால் அதிலும் இப்போது கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. 2004-ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதிக்கான தேர்தலில் அப்போது புஷ்ஷையும் அவருடைய துணை ஜனாதிபதி சேனியையும் எதிர்த்துப் பேசிய குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் கெரி சேனியின் மகளே ஓரினச் சேர்க்கையில் நாட்டமுடையவர் என்பதையும் அவர் இன்னொரு பெண்ணோடு வாழ்ந்து வருகிறார் என்பதையும் எடுத்துச் சொல்லி குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஓரினச் சேர்க்கையில் நாட்டமுடையவர்களை ஒதுக்குவது தவறு என்றும் ஒரு கூட்டத்தில் வெளிப்படையாகக் கூறியதை எல்லோரும் கண்டித்தனர். ஆனால் இப்போது அரசியல் தலைவர்கள் பலரே அரை மனதாக அப்படி இருப்பவர்களை ஏற்றுக் கொள்கிறார்கள்.

அமெரிக்காவில் எதற்கெடுத்தாலும் – வீட்டில் துர்நாற்றத்தைத் தடுக்க ஒரு கிருமிநாசினி, தண்ணீரில் இருக்கும் பாக்டீரியாக்களை ஒழிக்க இன்னொரு கிருமிநாசினி, தோட்டத்தில் காய்கறி பூச்செடிகளை நன்றாக வளரச் செய்ய இன்னொரு பூச்சிகொல்லி என்று – இராசாயனப் பொருள்களைத் தாறுமாறாக உபயோகிக்கிறார்கள். சுற்றுப்புறத்தில் இராசாயனப் பொருள்கள் நிறைய இருப்பதால் சிறு குழந்தைகளுக்கு அஸ்பெர்கர் (Asperger Syndrome) என்ற வியாதி வருவதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதே மாதிரிதான் மனிதனுடைய இனப்பெருக்க உறுப்புகளிலும் காலப் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்பது என் கணிப்பு.

அது தவிர இப்போது ஹென்னெ ப்ளேங் (Hanne Blank) என்பவர் தன்னுடைய ஸ்டெர்ய்ட் (Straight) என்னும் ஆராய்ச்சிப் புத்தகத்தில் இரு இனச் சேர்க்கை, ஓரினச் சேர்க்கை என்று மனிதனின் இனப் பெருக்க உணர்ச்சிகளை கருப்பு, வெள்ளை என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்க முடியாது. ஏனெனில் இரண்டிற்கும் இடையில் நிறைய கிரேடுகள் இருக்கின்றன என்று கூறியிருக்கிறார்.

இரண்டு பெண்கள் சேர்ந்து வாழும்போது பிள்ளை பெற்றுக் கொள்ள விரும்புகிறார்கள். அதனால் ஒருவர் செயற்கை முறையில் கருத்தரித்துக் கொண்டு பிள்ளை பெற்றுக் கொள்கிறார். இரண்டு ஆண்கள் சேர்ந்து வாழும் போது அவர்கள் பிள்ளைகளைத் தத்து எடுத்து வளர்க்கிறார்கள். இம்மாதிரி ஆண்கள் மட்டுமோ அல்லது பெண்கள் மட்டுமோ வாழும் குடும்பங்களில் பிள்ளைகள் வளர்ந்தால் அவர்களுக்கு முன்மாதிரியாகத் தகப்பனோ தாயோ இல்லாமல் போய் விடுவதால் அவர்களின் சராசரி வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்று வாதிப்பவர்களும் இருக்கிறார்கள்.

கிளிண்டன் காலத்திற்கு முன்னால் இப்படிப்பட்டவர்களை ராணுவத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்பதால் பலர் தங்களுடைய நிலையை வெளிப்படையாகக் கூறிக் கொள்வதில்லை. அந்த நிலையை ஜனாதிபதி கிளிண்டன் மாற்றி அவர்களுடைய அந்த நிலையைப் பற்றி யாரும் கேட்கவும் கூடாது, அவர்களும் அது பற்றி எதுவும் வேலைக்குச் சேரும்போது சொல்ல வேண்டியதில்லை என்றும் சட்டம் கொண்டு வந்தார். அதை விட ஒபாமா ஒரு படி மேலே போய் அவர்களுடைய அந்த நிலை ஒரு பிரச்சினையே இல்லை, அவர்கள் அது பற்றி வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டாலும் ராணுவத்தில் சேருவதற்கு எந்தத் தடையும் இல்லை என்ற சட்டத்தைக் கொண்டுவந்தார்.

இன்னும் சில வருடங்களில் இது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கலாம். இப்போது பார்னி ஃப்ரேங்க் (Barney Frank) என்னும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கீழவை உறுப்பினர் ஒருவர் 2012-இல் தான் மறுபடியும் கீழவைத் தேர்தலுக்கு நிற்கப் போவதில்லை என்று அறிவித்த சில மாதங்களிலேயே கடந்த ஐந்து வருடங்களாக தன்னுடைய ஓரினச் சேர்க்கைப் பார்ட்னராக இருக்கும் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறார். அவருக்கு வயது 71. அவர் பார்ட்னராகச் சேர்த்துக் கொள்ளப் போகும் நபருக்கு வயது 42. இவரை விட வயதில் 29 வருஷங்கள் இளையவர். 42 வயது ஆணும் 71 வயது ஆணும் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்ற அறிவிப்பு என் போன்ற இந்தியர்களுக்கு ஒரு வித வியப்பை அளித்திருக்கிறது. திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள், திருமணம் அடுத்த வருடம் நடக்கும், இன்னும் தேதி குறிப்பிடவில்லை என்ற அறிவிப்பு அடக்க முடியாத சிரிப்பை வரவழைத்தது. 71 வயதில் இவர் திருமணம் செய்து கொள்வதும் அதுவும் ஒரு ஆணைத் திருமணம் செய்து கொள்ளப் போவதும் அதற்கு ஒரு வருடம் முன்பே ஏற்பாடுகள் செய்வதும்தான் என் சிரிப்பிற்குக் காரணங்கள்.

படத்திற்கு நன்றி:

http://www.shropshirestar.com/news/2012/02/14/shrewsbury-bishop-is-against-gay-marriage-plan/ 

http://www.theglobeandmail.com/news/politics/in-pictures-milestones-of-same-sex-marriage-in-north-america/article2300160/ 

http://en.wikipedia.org/wiki/Hanne_Blank

 

1 thought on “ஓரினச் சேர்க்கையில் நாட்டம் உடையவர்களிடையே திருமணம்

  1. இது கலியுகத்தின் தொடக்கமே! நாகரீகத்தின் உச்சம் என்று மனிதன் இன்னும் என்ன என்ன செய்வானோ? அனால் எல்லாம் பணத்தினை மையமாக கொண்டு செயல்படுவதின் விளைவு. பணத்தின் நிஜப்பெயர் “கலி”.

Leave a Reply

Your email address will not be published.