தி.சுபாஷிணி

கதையல்ல நிஜம்!

உலகெங்கும் காதலை அதன் முழுப்பரிமாணத்திலும் கொண்டாடிக் கொண்டாடிக் கழித்த பின், அதன் எச்சமாய்க் காதல் வழிந்து கொண்டிருந்த மறுதினம் காதல் காலை வேளையில், காபி போட சமையலறையில் நுழைகின்றேன். காதலும் காபியும் என்றும் இணைந்ததுதானே! காதலர்களின் முதல் அழைப்பே காண்டீனுக்குச் சென்று காபி குடிக்கலாம் என்றுதானே! அடுப்பில் பாத்திரத்தை ஏற்றித் தண்ணீர் ஊற்ற அடுப்பைப் பற்ற வைத்தேன். பூஜை அறையின் விளக்கை ஏற்றிவிட்டு மீண்டும் அடுப்பின் அருகில் வந்தேன். தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும் ‘தளதள’ வென்னும் சப்தமும், வெடிக்கும் குமிழ்நீர்த் தெறிப்புகளும் மிகவும் அழகாக இருக்கின்றது. இந்தத் தளதளப்பிற்கும் குமிழ்நீர்த் தெறிப்பிற்கும் இடையில் ‘சர சர’ வென்னும் சத்தம் சுருதி சேர்க்கின்றது. கொஞ்சம் உற்றுக் கவனிக்கின்றேன். என் காலடியில் அச்சத்தம் கேட்கின்றது. மெதுவாக காஸ் சிலிண்டர் இருக்கும் அலமாரிக் கதவைத் திறக்கின்றேன். அதன் எதிர்பக்கத்தில் உள்ள காகிதம் உண்டாக்கும் ஓசைதான் அது. நான் பார்க்கும்போது அக்காகிதம் அசைந்தது. அங்கு காற்று காகிதத்தோடு உரசிச் சரசமாட வாய்ப்பில்லை. எலியார் அவர்களின் வேலையாக இருக்கலாம். எலியார் அவ்வாறு மெதுவாக ஓசையெழுப்புவாரா? ஐயம்தான். மெதுவாக அலமாரிக் கதவை மூடுகின்றேன்.

அடுப்பில் கொதிக்கும் தண்ணீரை பில்டரில் காப்பிப் பொடியின் மேல் மெதுவாக, அதன் நிலை மாறாது சுற்றிச்சுற்றி விடுகின்றேன். அப்பா? நல்ல வாசனை. காபிப் பொடியின் மணத்தில் சமையலறையையே கமகமக்கின்றது. பாலை இரு முறை பொங்கி நுரை வரும்வரை காய்ச்சுகின்றேன். பின், பில்டரில் இறங்கிய காபி டிகாக்ஷனில், சரியான அளவு எடுத்து, அதற்கு ஏற்றாற்போல் பால் கலந்து, இலேசான கசப்புடன் இருக்குமளவு சர்க்கரைச் சேர்த்துச் சூடாகக் காபியைத் தயாரிக்கின்றேன். டம்ளரிலிருந்து காபி மணம் பொங்கிக் காற்றில் கலந்து அன்றைய தினத்தை அழகாய் ஆரம்பித்து வைக்கின்றது. காபி மணத்தோடு ஒரு காதல் மணம் சுழன்று சுழன்று வந்து கொண்டிருக்கின்றது. அது மீண்டும் அடுப்பு மேடையின் கீழுள்ள அலமாரியை நோக்கி அடிக்கின்றது. இம்முறை காஸ் சிலிண்டர் தாண்டி, சாமான்கள் வைத்திருக்கும் அலமாரிக் கதவை மெதுவாகத் திறக்கின்றேன். மெல்ல மெல்ல அங்குள்ள பச்சை நிறப் பிளாஸ்டிக் பக்கெட்டை இழுத்து வெளியில் வைக்கின்றேன். பின் கார்த்திகைக்கு ஏற்றிய அகல் விளக்குகள் நிரம்பிய வாளியைச் சத்தமில்லாது எடுப்பதாக நினைத்துச் சத்தத்துடன் விலக்கி வைக்கின்றேன்.

‘ஆ’! ஒரு நீண்ட அடர் கருப்பு வால் ஒன்று வளைந்து நெளிந்து செல்கிறது. ‘ஓ’ வென மனம் விரிகிறது. அது மெதுவாய் அறிவைத் தட்டி எழுப்புகிறது. இந்த வளைந்து நெளிந்து சென்றது எதுவாக இருக்கலாம்? எலியாரது வால் என்றால் இவ்வளவு கனமாக இருக்காது. அவருக்கு வளைவு நெளிவு எல்லாம் கிடையாது. அவர் ‘விருட்’டென்று செல்பவரல்லவா? வால் மட்டும் தனியாகச் செல்ல முடியுமா? மேலும் அங்குள்ள பெரிய அட்டைப் பெட்டியை மெதுவாக இழுக்கின்றேன். அப்பாடா! அதனுள் எந்த ஜீவராசியும் இல்லை. தேவைப்பட்டால் பயன்படட்டும் என்று வைத்திருக்கும் பிளாஸ்டிக் டப்பாக்கள் பெரிய தட்டுக்கள் அதற்குள் இருக்கின்றன. பெட்டியை இழுத்து வெளியில் எடுத்து சாப்பிடும் மேசையருகே கொணர்ந்து விடுகின்றேன். மேன்மேலும் ஆராயாது மீண்டும் அலமாரிக் கதவுகளை மூடுகின்றேன். காஸ் சிலிண்டர் வைத்திருக்கும் அலமாரியின் கீழ் தரையை ஒட்டி ஒரு பெரிய ஓட்டை உண்டு. அதை மட்டும் டர்க்கி டவலை வைத்து அடைத்து விடுகின்றேன். இனி, அவ்வலமாரியில் எந்தவிதப் பிராணி இருந்தாலும் வெளியில் வர வாய்ப்பில்லை.

என் வீட்டு வேலைக்கு உதவ செல்வி வந்து விடுகிறாள். வந்தவளிடம், அந்தத் துணியை எடுத்து விடாதே. பாம்பு மாதிரி ஒன்று அலமாரிக்குள் இருக்கின்றது என்று கூறுகிறேன். ‘ஹா’ அம்மா! நான் இன்று வேலைக்கு விடுமுறை என்று வெளியில் ஓடயத்தனிக்கிறவளை நானா விடுவேன்! பாம்பு மாதிரி என்றுதானே கூறினேன். அது பெரிய பல்லியாகவும் அல்லது அரணையாகவும் இருக்கலாம் என்கின்றேன். என்னம்மா! காலை வேளையில் விளையாடுகிறீர்கள் என்று சிணுங்குகிறாள். நான் அவசர அவசரமாகச் சமையலை முடிக்கின்றேன். என்ன நிலை என் நிலை என்று கூற இயலவில்லை. சாத்துக்குடியைச் சாறு பிழிவதற்காக உரிப்பதற்குக் கத்தியின் உதவியை நாடினேன். அதுவோ ஆழமாகத் தன் முத்தத்தை என் கட்டைவிரலில் பதித்து விடுகிறது. இரத்தம் சொட்டச்சொட்ட…. (அப்பொழுது ஆரம்பித்த இரத்த அருவி மாலை மணி மூன்றிற்குத்தான் நின்றது) ம்…ம்… பஞ்சு எடுத்துத் தடுக்கின்றேன்.

இதற்குள் மருமகன் எழுந்து வரவே, முதலில் சுடச்சுடக் காபியைக் கொடுத்து விட்டு, மெதுவாக ‘ஹரி! பாம்பு ஒன்று நம் வீட்டு அடுப்படி அலமாரியில் புகுந்திருக்கின்றது. என்ன பண்ணலாம்’ என கேட்டுவிட்டுப் பதிலுக்குக் காத்திராது நகர்ந்து வருகின்றேன்.

என்னுடைய மருமகனது விளம்பரக் கம்பெனி மானேஜர் அன்பு வருகிறார். செல்வி அவரிடம் விஷயத்தைச் சொல்லவும், “அக்கா! நிஜமாகவா?” என்று பயத்தில் உடம்பு குலுங்குகிறது. அதற்குள் தண்ணீர் கொடுப்பவர் பாம்பெனில் அடித்து விடுங்கள். நேற்று இரவு பக்கத்து வீட்டு வாசலில் அடித்து எரித்து விட்டார்கள் என்கின்றார்.  இஸ்திரிக்காகத் துணியை எடுத்துச் செல்ல வந்த குமார், “அம்மா! அழகான பூஜையறை அவ்வளவு சாமியும் இருக்கு.  கற்பூரம் ஏற்றி வையுங்கள். தானே அமைதியாகச் சென்று விடும்”  என ஆலோசனை வழங்குகிறான்.

முதலில், எனது இரண்டாவது மகள் புனேவிற்குச் செல்ல வேண்டும். அவளுக்கு வேண்டியவற்றைக் கவனித்து, அவளை அனுப்பி வைக்கின்றேன். பின் அவள் விட்டுச் சென்ற சாமான்களையெல்லாம் அவள் அறைக் கட்டிலில் அடுக்கி வைக்கின்றேன்.

ஆலோசனை வழங்கியவர்களிடம், என் மூத்த மகள் கருத்தரித்திருப்பதால் எந்த ஜீவனையும் அடிக்கவோ துன்புறுத்தவோ கூடாது என்று அவர்கள் ஏற்கும் வகையில் கூறியதும் அவர்கள் அமைதியானார்கள்.

இதற்குமுன் மருமகன் ஹரி, ‘ஜஸ்ட் டயல்’ மூலம் வண்டலூர் விலங்கியல் பூங்கா எண் கிடைக்கப் பெற்று அவர்களுடன் பேசுகிறார். அவர்கள் கிண்டி பாம்புப் பண்ணை, வன இலாகாவின் தொலைபேசி எண் கொடுக்கிறார்கள்.  உடனே ஹரி அவர்களுடன் தொடர்பு கொள்கிறார். அரை மணி நேரத்தில் வந்து விடுவதாக அம்முனையில் கூற, ஹரியும், நேரம் தாழ்த்த வேண்டாம். ஆட்டோ பிடித்து வந்து விடுங்கள் எனக் கூறுகிறார்.

என் கையில் வழிந்தோடும் இரத்தம், செல்வியின் மகள் கீழே விழுந்து கல்லூரியில் அடிபட்டதால், வரும் அலைபேசி அழைப்பு, இரண்டாவது மகளை ஊருக்கு அனுப்பிய ஆயாசம், காலை ஆகாரம் அனைவருக்கும் அளித்தல், மகளுக்கும் மருமகனுக்கும் மதிய உணவைக் கட்டி வைத்தல் என எல்லாவற்றையும் தாண்டி சமையறையில் புகுந்திருப்பது பாம்பா? அரணையா? (பளபளப்பைப் பார்த்தால் இரண்டில் ஒன்றாக இருக்கலாம்) பெரிய பல்லியாக இருக்கலாமோ? எனத் தெரியாத குழப்பத்தில் இருக்கின்றேன். பல்லியென்றால் பாம்பு பிடிக்க வரும் ஸ்னேக் பாபு (நான் வருபவருக்கு இட்ட பெயர்) நம்மைத் திட்டி விடுவாரோ! என்கின்ற அச்சம் ஆகிய அனைத்தும் என் வீட்டு முன்னறையில் குவிந்து கிடந்தாலும், ஒரு அமைதி மணம் கிளம்பி என் வீட்டை நிரப்பிக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிகின்றது.

அதோ! ஸ்னேக் பாபு வந்து விட்டார். இருபது வயது நிரம்பிய பாலகனாய்த் தெரிகிறார். அவரைச் சமையலறைக்கு அழைத்துச் செல்ல யத்தனிக்கின்றேன். அதற்குள் மருமகன் என்னையும் என் மூத்த மகளையும் வீட்டின் ஹாலுக்குள் இருக்கச் சொல்கிறார். அதற்குள் செல்வியும் அன்பும் பாம்பு அல்லது பல்லி இருக்கும்? அலமாரியைக் காண்பிக்கின்றனர்.

மருமகன் ‘ஐ பேட்’ உடன் விரைந்து உள்ளே செல்கிறார். ஸ்னேக் பாபு தரையில் அமர்ந்து, அலமாரியைத் திறக்கிறார். “மூலையில் வளையமாய்ச் சுருண்டு பாம்புதான் இருக்கின்றது. ஒன்றல்ல இரண்டு இருக்கின்றன” என்று கூறினார். அந்த விஷயம் வீட்டு ஹால் வரை அனுப்பப்படுகிறது. ‘ஹா! இரண்டா’ என நானும் மகளும் வியக்கின்றோம்.

அலமாரிக்குள் சென்ற ஸ்னேக் பாபு, தன் அலைபேசியிலிருந்து வெளிச்சம் செலுத்தி அவர்கள் இருவரது தலைகளையும் அழுத்திப் பிடித்துத் தான் கொணர்ந்திருந்த பாம்பு பிடிக்கும் சுருக்குப்பையில் போட்டு விடுகிறார்.  பின் வெற்றிகரமாக மெதுவாகத் தன் உடலை வெளியில் எடுத்து, வீட்டு முன்னறைக்கு வருகிறார். எங்களது கண்ணுக்கு அவர் ஒரு வந்தியத் தேவனாய், விஜயகாந்தாக, ரஜினியாகத் தெரிகிறார். ஹரி அந்தப் பையிலிருக்கும் பாம்புகளைத் திறந்து காண்பிக்கச் சொல்கிறார். அப்பப்பா! நல்ல அடர்ந்த கருமை கலந்த ப்ரவுன் நிறம். இரண்டடி நீளம் உள்ள இரண்டு பாம்புகள் பளபளப்பாய் வளைந்து நெளிந்து கொண்டிருக்கின்றன. ஹரி ‘ஐ பாட்’க்குள் பிடித்துக் கொள்கிறார். பத்திரமாக பையைச் சுருக்கிட்டு கட்டினார் ஸ்னேக் பாபு. பின் நம் அழையா விருந்தாளியான இப்பாம்புகளின் பண்புகளை பாபு ஒவ்வொன்றாக விவரிக்கின்றார்.

“இப்பாம்பு மைக்ரோ விரியன் வகையைச் சார்ந்தது. இது ஆணும் பெண்ணுமாக ஜோடியாக வந்திருக்கின்றது. இவைகளின் “மேட்டிங் டைம்!” என்றார். அந்த மயக்கத்தில் இருந்ததால் பிடிக்க எளிதாயிற்று. மேலும் பகல் வேளையில் பாம்பிற்குக் கண் தெரியாது. அதனால் கூடுதல் வசதியாயிற்று. இப்பாம்பு மிகவும் விஷமுள்ள வகையைச் சார்ந்தது. இவை கடித்தால் சிற்றெறும்பு ஒன்று கடித்தாற்போன்று இருக்கும். பாம்புக்கடி என்னும் அடையாளம் இருக்காது. அதனால் நம்மால் உடனடிச் சிகிச்சை செய்ய இயலாது போய் விடும். இவை கடித்த ஒரு மணி நேரத்தில் மரணம் சம்பவிக்கும்”அவர் சொல்லச் சொல்ல அனைவரின் முகத்திலும் கலவரம் நிகழ்கிறது. முகங்கள் மெதுமெதுவாக இறுகிக் கொண்டு வருகின்றன.

ஒருவாறு அனைவரும் தன்னிலை அடைந்ததும், எனது மகள், பூக்கள் நிறைந்த கடிதத் தாளில், அவர்கள் காலத்தே செய்த உதவிக்கு வன இலாகாவிற்கு மிகவும் மகிழ்ச்சியாய் நன்றிக் கடிதம் தந்தாள்.

இவர்கள் இருவரும் எங்கள் அழையா விருந்தாளி ஆவார்கள். ஸ்னேக் பாபு கூற்றுப்படி குறைந்தது மூன்று நாட்கள் முன்பே அவர்கள் எங்கள் வீடு வந்திருக்க வேண்டும். மேலும் அவர்கள் அழகாய் சுவர் ஏறுவர் என்றும் கூறினார். அதனால்தான் எங்கள் வீடு முதல் மாடியில் இருந்தும் அவர்களால் வர முடிந்திருக்கின்றது. எங்கள் வீட்டு அருகே உள்ள இரயில்வே பாதை, அல்லது கல்லூரி வளாகத்திலிருந்து வந்திருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது.  அப்படியென்றால் பாம்புகளுடன் நாம் மூன்று நாட்கள் இருந்திருக்கின்றோம். அவைகள் என்ன சாப்பிட்டு கிடந்து இருக்கும்? இந்த வீட்டில் அவைகளுக்கு முட்டை கூடக் கிடைக்காதே என்கின்றார் செல்வி.

இதற்கு பாபு “இரவில் வெளியில் வந்திருக்கக் கூடும்” என்கிறார். இதைக் கேட்ட என் மூத்த மகள் ஆரபியின் முகம் மாறுகிறது. ஏனெனில் 3 அல்லது 4 நாட்களாக அவள் இரவில் பாட்டு கேட்டுக்கொண்டு ஹாலுக்கும் சமையலறைக்குமாக வெகுநேரம் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தாள். எப்படியோ எதுவும் விபரீதம் நடக்கவில்லை.

ஸ்னேக் பாபு, நன்றிக் கடிதத்துடன் பாம்புகளுடன் வந்த ஆட்டோவில் திரும்பிச் சென்றுவிடுகிறார். எங்கள் விருந்தாளியான காதல் ஜோடிகள் தங்கள் காதலர் தினத்தை எங்கள் வீட்டில் கொண்டாடிய மகிழ்ச்சியில், தங்கள் காதல் மணத்தை வீட்டில் விட்டுச் சென்று இருக்கின்றன. பாம்பிற்கு வாசம் இருப்பதுபோல் அவைகளின் காதலுக்கும் வாசம் உண்டு போலும். வாசம் நிரம்பிய வீடாகிறது. அதில் நாங்கள் மெதுமெதுவே கரைந்து விடுகிறோம்.

 

படத்திற்கு நன்றி:http://en.wikipedia.org/wiki/Common_Krait

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “ஞாயும் யாயும் யாராகியரோ

  1. யாதினும் உயர்ந்த எம் காதல் எனக் கவிதை எழுதி அதில்
    சுபாஷினி – காலியாய் விட்டபோதே தெரியும் 
    ஏதோ விழுங்கப்பட்டிருக்கிறது என்று!
    அதையும் தான் சொல்லியும் வைத்தேனே!
    அரவுக் காதல் என வாய்திறக்கமுடியாது போனது! 
    போதாக்குறைக்கு அ(றி)ரிந்து வேறு கொண்டீர்கள்! 
    சுபாஷினி, 
    யாதினும் உயர்ந்த எம் காதல் என நீங்கள் தலைப்பிட்டது சரியே சரியே சரியே!
    அரவுக்காதல் ஒன்றுதான் உலகத்தில் முதன்மையான முழுமையான காதல். மனிதர்களின் காதல் சுத்த வேஸ்ட்! 
    வேறு எந்த ஜீவராசியாலும் பாம்புகளைப் போல் காதல் செய்யமுடியாது!
    அடிமுதல் நுனிவரை – முன்புறம் – பின்புறம் யாதினும் பரந்து – பறந்து பறந்து – உயர்ந்து உயர்ந்து – பின்னிப்பின்னி – பிணைந்து பிணைந்து – தேகம் யாங்கும் ஆலிங்கனம் செய்யும் பாக்கியம் பெற்ற ஒரே உயிரி பாம்பு மட்டுமே! இந்த ஒப்பற்றக் காட்சியைக் காணுக இங்கு http://www.youtube.com/watch?v=f3f9SiTcZIM  
    எங்களது தாயாரின் பாரம்பரிய வீட்டில் வந்து போகும் மனைப் பாம்புடன் என் அம்மாவின் பாட்டி உரையாடுவதை மிகச்சிறு வயதில் பார்த்தேன்: “நாக ராஜா! வீட்டுக்கு மனுஷாள் வந்திருக்காங்க; ஒருவாரத்துக்கு சித்த வீட்டுக்குள்ள வராம இருந்துக்கறியா! ஒன்னப் பாத்து கொழந்தைங்க பயப்படப்போகுது – தெரியாம ஒம்மேல எதயவாது வீசிப்புடப் போறாங்க – ஒனக்கு எதுவும் ஆயிடுமோன்னு வேற பயமா இருக்கு!” “இதப் பாரு இந்த ஒருவாரத்துக்கு நான் வீட்டை பத்திரமா பாத்துக்கறேன்! பின்னாடி ரேழியத் தாண்டாதேடா!” 
    கையில் சிலவற்றை எடுத்துக் கொண்டு சமையலறையிலிருந்து பாட்டி நகர்ந்து போக அந்தப் பாம்பு பாட்டிக்கு முன்னால் நகர்ந்து போனது புழக்கடை நோக்கி! 
    சித்த இருடா! நின்றது பாம்பு! 
    இங்கப் பாருடா! பாம்பு பார்த்தது! 
    ஒனக்கு வேணுங்கிகிறது இங்க இருக்கும்! ஒரு வாரத்துக்கு இதுதான் ஏற்பாடு! மரத்தட்டை வைக்கிறாள்! பால் வார்க்கிறாள்! இன்னமும் ஏதோ ஊற்றிய பாலின் மீது இடுகிறாள்! எனக்கு அப்போது ஐந்து வயது – 
    ரகசியமாய்ப் பாட்டியைப் பின்பற்றி நான் அறிந்து கொண்ட பரம ரகசியம் அது! – 
    ஓடிச் சென்று என் அம்மாவிடம் ரகசியமாய்ச் சொன்னேன்! 
    “வெளியே மூச்சு விடாதே! அது மனைப் பாம்பு! சாமி மேல இருக்கிற பாம்பு! அதுபத்திப் பேசினா சாமி தண்டனை கொடுக்கும் என்றாள்!” எவரிடமும் சொல்லவில்லை.    
    அன்றிலிருந்து மூன்றாம் நாள் – புலர்ந்தும் புலராப் பொழுது – புழக்கடைக்குப் போகிறேன் தனியாக (அப்போதே அத்தனை தைரியம்) மதிற்சுவற்றின் உட்புறம் பாம்புச் சருகு வெள்ளையாய் – கிட்டே போகிறேன் அச்சசல் பாம்பு ஆனால் பாம்பு இல்லை – சுளை இல்லாத தோல் போல – ஓடிப்போனேன் – வீட்டிற்குள்ளே – சமையலறையில் அம்மாவின் பாட்டி – அவரைத் தர தரவென இழுத்தபடிக் கூட்டிவந்து காட்டினேன் – 
    ஐந்த காட்சியைக் கண்டதும் பாட்டி பேசினாள்:
    “நாகராஜா சட்டை கழற்றியிருக்கான்! அவன மாதிரி சொல் பேச்சு கேக்க யாராலுமே முடியாது – நீயும் அந்த மாதிரி சமத்தா இருக்கணும்! 
    என்ன பாட்டி சொல்றீங்க? 
    பொதுவா செரப்பட்டையிலதான் சட்டையைக் கழட்டுவான் – ஒருவாரத்துக்கு வீட்டுக்குள்ள வராதேன்னம்பாரு –– “ஏ பாட்டி! நீ சொன்னபடி நான் வீட்டுக்குள்ள வரலுன்னு!” இங்க உரிச்சு வெச்சுக் காட்டறான்!”
    அது எப்படிப் பாட்டி நீங்க சொன்னா அந்த பாம்பு கேட்குது!   
    மனுஷாளுக்கும் பாம்புக்கும் அதுதாம்மா வித்யாசம்!
    மற்ற குழந்தைகள் எல்லாம் எழுந்த பிறகு அம்மாவின் பாட்டியின் சொல்படி – குழ்ந்தைகள் யாவரும் ஒருவர் பின் ஒருவராக நின்றோம். பாடி சொல்லித் தந்த படியே, ““பாம்புத் தோல் கண்டேன் – பச்சரிசி கண்டேன் – சொல்லாதப் பசங்களை சுறுக்குன்னு கடி – நாகாராஜா!” என்று வாய்விட்டுப் பிரார்த்தித்தோம். ஒவ்வொருவராக     பாம்பு உரித்த அந்த சட்டைக்கு நமஸ்காரம் செய்தோம். 
    என்னால் என்றும் மறக்கமுடியாத நிகழ்வுகள்!
    பாட்டி ராசியோ அல்லது எங்கள் மனைப்பாம்பைக் கண்ட தோஷமோ தெரியாது சிறுவயதிலிருந்தே எனக்கும் பாம்புக்கும் எவ்வகையிலேனும் ஒரு தொடர்பு ஏற்படும் – முதலில் எல்லாம் எதேச்சையாகவே நிகழ்கிறது என்றுதான் எண்ணி வந்தேன்! 
    ஆனால் போகப் போகத் தெரிந்தது உண்மையிலேயே பாம்புக்கும் எனக்கும் ஏதோ ராசிஎன்று
    அந்த இறைவன் கொடுத்த பாக்கியத்தினால் பாம்புகளுடன் (மனிதப் பாம்புகளைப் பற்றிச் சொல்லவில்லை) வேலை செய்திருக்கிறேன் – அதாவது நான் வேலை பார்த்த ஒவ்வொரு இடத்திலும் பாம்பு – எந்த டிராயரில் எந்தப் பாம்பு என்று தான் என் ஆய்வக மேசையைத் திறக்க முடியும் – பாம்புகளுடன் அப்படிப் பழகியிருக்கிறேன் – அப்படி வாசம் செய்திருக்கிறேன்! 
    பக்கத்து சீட்டில் வைத்து- சுருண்டமர்ந்த பெரிய கருநாகத்துடன் பேசியிருக்கிறேன் – ஸ்பரிசித்திருக்கிறேன் பழகியிருக்கிறேன் – (ம் ம் முழுவதாய் – காதல் செய்ய முடியவில்லை – சினிமாக்களில் காட்டுவதைப் போல் கொஞ்ச நேரத்திற்குப் பெண்பாம்பாய் மாறி கற்பனையில் ஈடுபட்டேன் – உடம்பெல்லாம் புல்லரித்தது). 
    ஒருமுறை – தரையிலிருந்து என் தலைமேல் ஏறி விண்ணில் பறந்த பாம்பு ஒன்றைப் பார்த்த – ஸ்பரிசித்த என் வாய் மூட பலமணி நேரம் ஆனது! காரணம் அத்தனை வேகம் – போகிற போக்கில் வாலால் என் கன்னத்திலும் கழுத்திலும் வருடிய சாட்டையடி குணமாக – மாதக் கணக்கானது!
    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எங்கள் வீட்டில் என் அம்மா நேர்ந்து கொண்டபடி திருபாம்பரம் (திருப் பாம்பு புரம்) சென்று அபிஷேகம் செய்தார்கள் – 
    அரசமரமும் வேம்பும் பிணைந்த மேடைமீது அமைந்திருந்த நாகர் கோயிலில் நாகப் பிரதிஷ்டை செய்து, பிரீதி செய்தார்கள்.
    நாகப் பிரதிஷ்டை செய்து முடித்த அன்று மாலையே சாலையில் என் டூவீலரின் முன்னால் நாகம் குறுக்கே போனது! 
    நாகதோஷம் விலகியதற்கான அறிகுறி என்றார்கள்! அவர்கள் கூற்று உண்மை என்பதைப் போல கொஞ்ச நாள் ஸ்னேக் என்கவுண்டர் எதுவும் இல்லை!           
    அமரிக்கா வந்தால் – பாம்புப் பிரச்சனை இருக்காது எனதான் நம்பினேன் – 
    வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் – என்பக்கத்து அறைக்குள் புகுந்து அங்குள்ள பேராசிரியரிடம் என்னை அறிமுகப் படுத்திக் கொள்ளலாமென நுழைந்தேன்! 
    என் பெயர் சொன்னேன் – வேலைக்கு சேர்ந்திருப்பதாய்ச் சொன்னேன் – கை நீட்டினேன் சீட்டிலிருந்து எழுந்தவர் –ப்ரெட் பாக்ஸ் மாதிரி ஒரு பெட்டியில் ஒரு வினாடி கைவிட்டார் – டிஷ்யூவைத் தொட்ட மாதிரி இருந்தது – கையைச் சுத்தம் செய்து கொண்டு கைகொடுக்கவருகிறார் என அவரது சுகாதார உணர்வை மனதிற்குள்  பாராட்டியபடியே என் முன் நீண்ட அவரது கைகளைப் பற்றினேன் – 
    கைத்தலம் பற்றிய நாழி – உள்ளங்கை நடுவில் வழுவழுவென்று நெளிந்தது – வெப்பமான உள்ளங்கையில் ஒரு குளிர்ச்சி ஜந்து – சுருள் விரிந்து மணிக்கட்டுவரை கீழேயும் ஆள்காட்டிவிரலின் நுனிவரை மேலேயுமாய் அந்தக்  குளிர்ச்சி நெளிந்து வளைந்து ஊர்ந்தது – நீண்டது. 
    கைகளுக்குள் ஒரு பயோகெமிகல் மாற்றம் நிகழ்ந்தவாறிருக்க – அவர் என்னைப் பார்த்துப் புன்முறுவல் பூக்கிறார் – எனக்கோ வயிற்றில் புளிகரைத்தது –  என் உள்ளங்கையில் அது ஊர்கிறது – கையிடுக்கிலிருந்து வெளிவர எத்தனிக்கின்றது! இது கற்பனையா – “ரேனு – என்னடா இது?” இடுக்கண் வருங்கால் எனக்குள் நானே கேட்கும் அந்தக் கேள்வி வெளிப்பட்டது   
    இங்கும் பாம்பா? – அதுவும் எப்படி முதல் நாள்! அதுவும் நான் வேலை பார்க்க வந்திருக்கும் இடத்தில்! பக்கத்து அறையிலேயே! 
    என் முகத்தை இறக்காமல் கண்களை மட்டும் இறக்கி – கோர்த்து நின்ற எங்கள் இருவர் கரங்களுக்குள் பார்க்கிறேன் – அது அதுவே தான் – நெளிகிறது 
    நித்ர்சனமாய்ப் பார்த்த மாத்திரம் – 
    பாம்பு எனக் குமுற எத்தனித்தவள் பாபு எனக் கதறினேன்.
    ஆர யு ஆல்ரைட் என என்னை அப்படியே அணைத்துக்கொண்டவர் – ஐ ஆம் ப்ரொபசர் மேசி – என்றார் – இல்லை இல்லை நீங்கள் ப்ரொபசர் மேசி இல்லை ஸ்னேக் பாபு என்று கத்தினேன்!        
    பாம்பு வளர்க்கிறாராம் – செல்லப் பிராணியாம் – மைக்ரோவிரியன் தான் அவரது பேவரைட்டுக்களாம் – சொன்னார் – 
    புதியவர்களை குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் புதியவர்களை முறைப்படி வரவேற்பதிலே மிகுந்த அக்கறை கொண்டவராம் – சொன்னார் தோளைக் குலுக்கியபடியே – அப்படியே காலரைப் பிடிக்கலாமா என ஒரு கணம் தோன்றியது 
    “இது ஏன் எனக்குப் பிடிக்கும் தெரியுமா – உலகின் நம்பர் ஒன் விஷப் பாம்பான இந்திய நாகத்தையே இது கொன்றுவிடும்!” என்றார்! 
    பாம்பை தனது தோள்மீது போட்டுக்கொண்டார் அது அவரது காதுக்கு மேலே ஏறிக் கொண்டிருந்தது!  
    எனக்கோ பாம்பு கையில் ஊர்ந்த படபடப்பு இன்னமும் அடங்கவில்லை – இங்கு நான் பாம்பை சுத்தமாய் எதிர்ப் பார்க்கவே இல்லை – எனக்கு இது புரியாதப் புதிராகத் தெரிந்தது – “ஏன் என்னைப் பாம்பு தொடர்கிறது?” என எனக்குள் நான் வினாத் தொடுக்க-  
    மேசி தொடர்கிறார் –  “நீங்கள் ரொம்பவும் அதிர்ஷ்டசாலி இப்போதுதான் இது தோலுரித்து முடித்தது! அதன் மேனி  எத்தனை வழு வழுப்பாய் இருந்தது என்று நீங்களே உணர்ந்திருப்பீர்களே – இந்த ஸ்பரிசம் கிடைக்க இன்னமும் இருபத்தி எட்டு நாட்கள் தவம் இருக்கவேண்டும் – பெண்களின் பீரியட்ஸ் போன்ற கணக்கு இது!”
    ஏதடா சாமி! இந்த லெக்ச்சரிலிருந்து விடுதலை கிடைக்குமா என எண்ணியபடி  கண்களைத் திருப்பினேன் அந்த டப்பாவில் பாம்புத் தோல் தெரிந்தது,  “பாம்புத் தோல் கண்டேன் – பச்சரிசி கண்டேன் – சொல்லாதப் பசங்களை சுறுக்குன்னு கடி – நாகாராஜா!” என்று வாய்விட்டுப் பிரார்த்தித்தேன். 
    “என்ன சொன்னீர்கள்” என்றார் –
    “ஒன்றும் இல்லை இந்தப் பாம்பு இங்கே தினந்தோறும் இருக்குமா” என்றேன்” – என்று சமாளித்தேன்
    “ஒ ஷ்யூர் நிச்சயமாக! ஒவ்வொருநாளும் இந்தப் பாம்பு தரிசனம் உங்களுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும் – பட் ஒன் திங் நான் கொண்டு வருவது எல்லாம் – மைக்ரோவிரியன் தான் – டப்பாவில் போட்டு கைக்கடக்கமாய்க் கொண்டுவர மைக்ரோவிரியன்களை விட்டால் வேற  சாய்ஸ் ஏது?” என்றார். 
    ஒ! என்றபடி விடைபெறலானேன் – மேசி – விட்டாரில்லை 
    கட்டாயம் வாருங்கள் உங்கள் தரிசனத்திற்காய் – நான் காத்திருப்பேன் – என் பாம்பும் தான் – ஆனால் – ஒரு நாளைக்கு ஒரு பாம்புதான் என்னுடன் வரும்! வீட்டிற்கு வந்தால் நெறைய காணலாம். – கார்டை நீட்டுகிறார் – பாம்பின் வழுவழுப்பைப்போல அந்த கார்டும் வழுக்கி கீழே விழ அதை நான் எடுக்கவேண்டி – குனிய – ஒத்தாசைக்கு அவர் குனிய – அந்நேரம் பார்த்து – அவர் தோள் மீதிருந்த பாம்பு என் தலைமீது தாவ “ஆலிங்கனங்கள் பரவசம் இங்கு அனுமதி இலவசம்” என்பதாக ஒரு சர்பயோக சுபதினத்தில் – பாம்பு சங்கல்பம் செய்து கொண்டு – திவ்யமான –பரிபூரணமான “பாம்பு ஆசிர்வாதத்துடன்” சகல ஸௌபயங்களுடன் என் பணி இங்கு தொடங்கியது.
    சுபாஷினி, இதிலே உமக்கும் எனக்கும் உள்ள பாம்புப் பாசம் என்னை சிந்திக்க வைக்கிறது – நான் ஸ்னேக் பாபு என ப்ரொபசர் மேசியை அழைத்ததைப் போல நீங்களும் உங்கள் என்கவுன்டரில் – இனிமேல் வரப் போகும் பாம்புபிடி நபருக்கு ஸ்னேக் பாபு எனப் பெயர் சூட்டி இருக்கிறீர்கள்! 
    எனது சுவாரசியமான ஸ்னேக் என்கவுண்டர் மைக்ரோவிரியனுடன் தான் உங்களுக்கும் மைக்ரோவிரியனுடன் தான் என்கவுண்டர். ஆக – இருவருக்கும் மைக்ரோவிரியனுடைய காட்சியும் ஆசியும் கிடைத்திருக்கிறது. 
    இது நல்ல சர்ப சகுனம் தான் – நமக்குப் பூர்வ ஜென்மப் பாம்புத் தொடர்பு இருந்திருக்கிறது என்று  கொள்ளலாமோ? 
    பாம்பறியும் பாம்பின் கால் என்பது போல உங்கள் கவிதையில் “மிஸ்” ஆனது மாந்தர்களின் காதலல்ல என்றேன் – அதுவும் இப்போது என்ன என அப்பட்டமாய்த்  தெரிந்து விட்டது.
    பாம்புகள் இனச்சேர்க்கை செய்வததை தெய்வீகக் காட்சியாகக் காணும் மரபு உண்டு. இது வழிவழியே வரும் உயரிய வழிபாடாகக் கருதப் படுகிற நடைமுறை உண்டு – ஒருமுறை மதுரையில் – தார் டின்னுக்குள் கலவி செய்தபடி சென்று மாட்டிக்கொண்ட பாம்பு ஜோடியை அக்கம் பக்கம் கிராமங்கள் எல்லாம் திரண்டு வந்து வழிபட்ட காட்சியை நான் கண்டிருக்கிறேன். 
    நான் என் அனுபவத்தில் கண்ட பாம்பு இயக்கங்களில் பலபல அற்புதங்கள் உண்டு. அவற்றை நூலாக வெளியிடுவேண்டும் என்றும் கூட அவ்வப்போது தோன்றும். “மனுஷாளுக்கும் பாம்புக்கும் அதுதாம்மா வித்யாசம்!” என அம்மாவின் பாட்டி சொன்ன வாக்கியத்தைத் தத்ரூபமாக உணர்ந்திருக்கின்றேன்.

    நாடு விட்டு நாடு – கண்டம் விட்டு – கண்டம் – என் இருந்தும் நாம் இருவரும் தமிழ்ப் பேசி – தமிழ் எழுதி இணைந்தாமோ இல்லையோ – அரவுக் காதலர்களாய் – இணைந்திருக்கிறோம் – நாம் – அறிவுக் காதலர்களே!
    பாம்புகள் பற்றி நான் பெண்கள் கருத்தரங்கு ஒன்றிற்காக நான் தயாரித்து வெளியிட்ட ஒரு ஸ்லைட் ஷோ இங்கு காண்க http://www.slideshare.net/rekharajaseran/woman-speaker-conference-paper-1966308  

    அது சரி கொஞ்சம் பாம்பு பாஷையைக் கற்றுக் கொள்ளலாமென நினைக்கிறேன் – உங்கள் விருப்பம் எப்படியோ?   
        

        

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *