வெண்ணிலவில் ஒரு கருமுகில்! (30)
பவள சங்கரி
”புற்று நோய் என்பது வெறும் ஒரு வார்த்தைதான் வாழ்க்கையின் முற்றுப் புள்ளி அல்ல “ – ஜான் டைமண்ட்.
பச்சைப்பசேல் என்ற துளிர் இலைகள்! பூவும்,பிஞ்சுமாக நிறைமாத கர்பிணியாக மாமரம்! இதமான காலைத்தென்றலுடன், இனிமையாக மிதந்து வரும் அதன் மெல்லிய மணம். காய்க்கும் பருவமில்லாத இந்த, பனிக்காலத்தில் கூட இயற்கை அன்னையின் இன்ப ஊற்றாக அதிசயமான இந்த மரம்.. வருடம் முழுவதும் காய்க்கும் மரமாம். வாட்ச்மேன் ஐயா இந்த மரத்தைப் பற்றி ஒரு பெரிய கதையே சொல்லுவார். தப்பி வந்த தப்புச் செடியாம். அதனால்தான் இப்படி காய்க்கிறதாம்… அதில் காய் பறிக்கும் விதம் அதைவிட அழகு. கணவன் மரத்தின் மீது ஏறி, திரண்ட காய்களைப் பறித்துப் போட, அதை மனைவி கீழே நின்று கொண்டு, அக்காய்கள் தரையில் விழுந்து அடிபடாதவாறு ஒரு கோணிப்பையினுள் தம் இரு கைகளையும் நுழைத்துக் கொண்டு, அதை இயன்றவரை அகலமாக்கிக் கொண்டு வெகு லாவகமாக அந்தக் காய்களைப் பிடித்து, அடி படாமல் சர்வ ஜாக்கிரதையாக இன்னொரு பையில் மெதுவாக, போட்டுக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நேரம் போனதே தெரியவில்லை. மருத்துவமனை அறையின் சன்னல் வழியாக பார்த்து இரசித்துக் கொண்டிருந்ததில் தன்னையே மறந்த நிலை…
”வந்தனா.. என்னம்மா செய்கிறாய்?” முதுகில் தீண்டிய மெல்லிய ஸ்பரிசத்தில் மெதுவாகத் திரும்பியவள், கணவனின் சோர்ந்த முகம் கண்டு பதறியவளாக,
“ என்ன ஆச்சுங்க…. ஏன் இப்படி இவ்வளவு காலையில வந்திருக்கீங்க..?”
“ஒன்னுமில்லம்மா… ஏதோ கெட்ட கனவு வந்து இரவு பாதியில் முழிப்பு வந்து, பிறகு தூக்கமே இல்லை. அதான் சீக்கிரமே குளிச்சிட்டு வந்தேன். உன் கூட கொஞ்ச நேரம் இருந்துட்டு ஆபீஸ் போலாமேன்னுதான்…..”
“ தேவையில்லாமல் மனதை குழப்பிக் கொள்ளாதீங்க… விதிப்படிதான் எல்லாமே நடக்கும். நான் எல்லாத்துக்கும் தயாராத்தான் இருக்கேன் “
வந்தனாவின் முகத்தில் இருந்த அந்த அமைதியும், உறுதியான பேச்சும், சலனமற்ற பார்வையும் அவனுக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. ரம்யாவிடம் அவள் என்ன பேசியிருப்பாள் என்பதை கற்பனை செய்ய முடிந்த தன்னால் அதை வந்தனாவிடம் கேட்பதற்கு தயக்கமாக இருந்தது. என்னமோ பேசிவிட்டுப் போகட்டும் என்ற சலிப்பும் கூடவே வந்தது,, அன்று மாலை ஐந்து மணிக்கு மருத்துவர் தன்னை வந்து சந்திக்கச் சொன்னதை நினைத்தும் கொஞ்சம் டென்சன் இருப்பதும் உண்மை. வந்தனாவின் உடல்நிலை குறித்து என்ன சொல்லப் போகிறார்கள் என்று நினைத்து அச்சமாகவும் இருந்தது. அதே சமயம் வந்தனாவின் உறுதியான மனநிலையைப் பார்த்து கொஞ்சம் நிம்மதியாகவும் இருந்தது. தன் தாயைப் பார்த்து பழகிய அவளுக்கு, நோயின் தன்மையை ஓரளவிற்குப் புரிந்து கொள்ள முடிந்தாலும், அந்த மருந்துகளின் பின் விளைவுகள் இந்த தேவைதையின் அழகையும் கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளை கொண்டுவிடும் என்பதையும் அறிந்திருந்த போதும் ஆண்டவன் கொடுத்த வ்ரப்பிரசாதமாக அந்த மன உறுதியும், அதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் பக்குவமும், மிகவும் ஆச்சரியத்தைக் கொடுத்ததும் உண்மை.
அவளுக்குத் தேவையான ஒரு சில பணிவிடைகளைச் செய்து விட்டு, வெளியில் சற்று காலாற நடந்து வர உடன் சென்றான். மாலை மருத்துவரிடம் , வீட்டிற்கு அழைத்துப் போவதைப்பற்றிக் கேட்க வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டான். மற்றவர்களைப் போல தான் ஒரு நோயாளி என்ற தாழ்வு மனப்பானமை துளியும் இல்லாததுதான் அவளுடைய தனித்தன்மையே என்று அவளுடைய டாக்டர் அடிக்கடி அவளைப்பற்றி புகழ்ந்து சொல்வதும் நினைவிற்கு வந்தது அவனுக்கு. எத்துனை நல்ல குணங்கள் இவளுக்குள் என்று மேலும் மேலும் ஆச்சரியம்தான் வந்தது. இருவரும் மௌன மொழியில் ஒருவரைப் பற்றி ஒருவர் பேசிக் கொண்டே நடந்து கொண்டிருந்தனர். சொற்ப நேரமே நடக்க முடிந்தது அவளுக்கு. அதற்குள் லேசாக மூச்சு வாங்க ஆரம்பிக்க, திரும்ப ரூமிற்குப் போகலாம் என்று கூறியதால் அவனும் ஒன்றும் பேசாமல் பின்னாலேயே சென்றான்.
அலுவலகம் செல்ல நேரமானபடியால், மாலை டாக்டரைப் பார்க்க சீக்கிரம் வரவேண்டுமே என்று நினைத்துக் கொண்டே கிளம்பினான். .. மாலை மருத்துவரின் அறையின் முன் அமர்ந்திருக்கும் போது பல்வேறு எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. அடுத்து தன் பெயர் சொல்லி செவிலியர் அழைத்தது கூட தெரியாமல் யோசனையில் ஆழ்ந்திருந்தவனை அருகில் வந்து தட்டி அழைத்த பின்புதான் சுயநினைவு வந்தவனாக வேகமாக எழுந்து நடந்தான்.
இந்த இளம் வயதில் வந்தனாவிற்கு ஏன் இத்தனை கொடுமை என்று கண்கள் கலங்க கேட்டவனைப் பார்த்து மருத்துவரும் மனம் க்லங்கியதோடு, அதற்கான காரணமாக, இது பரம்பரையாக வந்த மரபணுப் பிறழ்வினால் வந்தது அதாவது இவர் தாய்க்கு இருந்த காரணத்தினாலேயே, வந்தனாவிற்கு முதலில் கருப்பையில் வந்த இந்த கொடிய புற்று, ஒருவ்ரும் எதிர்பார்க்காத நேரத்தில் இன்று மார்பகத்தையும் தாக்கி, சிகிச்சை எடுக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
”மேடம், வந்தனாவின் நோய் எந்த அளவில் இருக்கிறது என்று கேட்கும் போதே கண்கள் கலங்கி, தொண்டை அடைக்க அடுத்து பேச நா எழவில்லை ரிஷிக்கு.
”பொதுவாக 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பகப் புற்று நோய்க்கான பரிசோதனைகளைச் செய்து கொள்வது, ப்ரோபலிட்டிக் மாஸ்டெக்டோமிஸ் போன்ற தற்காப்பு பரிசோதனைகளைச் செய்து கொள்வது நல்லது. ஆனால் வந்தனாவிற்கு இந்த இளம் வயதிலேயே வந்தது மரபணுப் பிறழ்வினால் ஏற்பட்ட நோய். மார்பில் சதை முடிச்சு போல் இருந்ததை அவர் கண்டுபிடித்து சரியான நேரத்தில் வந்து சொன்னதால் எந்த ஆபத்தும் இல்லாமல் ஒரு சின்ன ஆபரேசன் மூலம் சரி செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தால் போதும். கவலை வேண்டாம் மிஸ்டர் ரிஷி”, என்று சொன்னது சற்று ஆறுதலளித்தாலும், மேற்கொண்டு செய்யப்போகும் வைத்திய முறைகளினால் உடற்சோர்வு அதிகம் ஏற்படும் என்று அவன் கேள்விப்பட்டிருந்ததால் வந்தனா அதைத்தாங்க வேண்டுமே என்ற கவலையும் உடன் வந்தது.
“மிஸ்டர் ரிஷி, நீங்கள் நினைப்பது புரிகிறது. பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. இப்போது மருத்துவம் மிகவும் முன்னேறியிருக்கிறது. முன்பு போல பாதிக்கப்பட்ட மார்பகத்தை முழுவதும் நீக்கவேண்டியத் தேவை இல்லை. நோயின் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டுள்ளதால் மார்பகத்தைப் பாதுகாக்கும் அறுவை சிகிச்சை – லம்பெக்டமி, செய்து உள்ளோம். பேரைக் கேட்டு பயப்படாதீங்க ரிஷி. இது மார்பகத்தை முழுவதும் நீக்காத அறுவை சிகிச்சை முறை. இதையெல்லாம் அன்றே அறுவைச் சிகிச்சை செய்வதற்கு முன்பே உங்களிடம் விளக்கமாகக் கூறியிருந்தேன். ஆனால் அன்றிருந்த மன நிலையில் உங்களால் அதைச் சரியாக புரிந்து கொண்டிருக்க முடியாது என்பதால்தான் திரும்பவும் விளக்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அதே இடத்தில் திரும்ப நோய் வராமல் தடுக்க, அல்லது வாய்ப்பைக் குறைக்க கதிர்வீச்சு சிகிச்சை (radiotherapy) தேவைப்படும். அறுவை சிகிச்சை முடிந்த பின்பு திசுக்களை திரும்பவும் பரிசோதனைக்கு அனுப்புவோம். பெறப்படும் முடிவுகளின் அடிப்படையில் கீமோதெரபி, ஹார்மோன் தெரபி மற்றும் சில மருந்துகள் தேவைப்படலாம். இவை ஊசி மூலமோ வாய் வழியாகவோ, அளிக்கப்படும். நோயின் நிலை, நோயாளியின் உடல்நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவரவர்க்கு ஏற்ப இந்த ட்ரீட்மெண்ட் செய்யப்படும். தவிர உங்களுடைய ஒத்துழைப்பு மிக முக்கியம். நோய் வராமல் இருப்பதையே எல்லோரும் மனதார விரும்புகிறோம். ஆனால் நோய் வந்த பின்பு அதனைச் சம்பந்தப்பட்டவர்கள் துணிச்சலுடன் எதிர்கொள்வது என்பதே மிக உன்னதமான நிலை. அந்த வகையில், தங்களைப் போன்று முழுமையாகப் புரிந்து கொண்ட ஒரு கணவராக இருப்பது வந்தனா செய்த புண்ணியம். நல்லதே நடக்கும். அமைதியாக இருங்கள். உங்கள் பொறுமையும், அமைதியும் சேர்ந்ததுதான் அவருடைய வைத்தியம். அதை மனதில் கொண்டு அவரிடம் அதற்கேற்றவாரு நடந்து கொள்ளுங்கள்”. என்று நம்பிக்கையூட்டும் விதமாக மருத்துவர் பேசினார்.
ஓரளவிற்கு நம்பிக்கையும், தெம்பும் வர ரிஷி, தன் முகத்தில் தெரிந்த சிறு சலனத்தையும் தூக்கி எறிந்துவிட்டு, உற்சாகமான முகமூடியை அணிந்து கொண்டு வெளியே வந்தான். டாக்டர் கூறியபடி வந்தனாவிற்கு தைரியம் சொல்லி அவளுடைய மேற்கொண்ட ட்ரீட்மெண்டிற்கு நன்கு ஒத்துழைக்கச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தான். ஆனால் அவளிடம் சென்று பேசிய போதுதான் தெரிந்தது, தான் நினைத்ததற்கும் அவளுடைய நடவடிக்கைக்கும் துளியும் சம்பந்தமில்லை என்று….
ஆம், வந்தனா ஒரு மருத்துவரின் எதிர்ப்பார்ப்பிற்கும் மேலான நேர்மறையான எண்ணங்கள் கொண்ட ஒரு அற்புதமான பிறவி என்றாலும் அது மிகையாகாது.தான் ஒரு நோயாளியான தன்னைப் பார்த்து எல்லோரும் பரிதாபப்படுவார்கள் என்கிற தாழ்வு மனப்பான்மை துளியும் இல்லாத ஒரு முன்மாதிரிப் பெண். தாம் வாழ்ப்போகும் ,ஒவ்வொரு நிமிடத்தையும், மகிழ்ச்சியாக வ்ரவேற்று, அடுத்தவரையும் உற்சாகப்படுத்தி வாழ வேண்டும் என்ற உயரிய கொள்கை உடையவள் என்பது தெளிவாகப் புரிந்தது. இந்த 28 வயதில் இத்துனை வேதனைகளுக்குப் பிறகும் அவள் பெற்றுள்ள பக்குவம் சொல்லில் விளங்க வைக்க இயலாத ஒன்று. ஒரு முறை சிகிச்சை மேற்கொண்டு , மீண்டும் இப்போது அதே நோய் தாக்கிய நிலையில் எந்தப் பெண்ணாலும் இயலாத ஒரு காரியமாக, பதட்டம், குழப்பம் இதெல்லாம் ஒதுக்கிவிட்டு, பச்சாதாபம், இரக்கம் இதில் எதையுமே துளியும் எதிர்பார்க்காமல், யதார்த்த நிலையை அப்படியே ஏற்றுக் கொள்ளும் அவளுடைய பக்குவம் கண்டு, ஆச்சரியப்படாமல் இருக்க இயலவில்லை ரிஷிக்கு என்பதே உண்மை! ஓர் எல்லையில் பாதிக்கப்பட்டவர்கள் கூட எந்த நிலையிலும் வாழ்க்கையை இரசிக்கும்படியான ஒரு ஓவியமாக அமைத்துக் கொள்ளலாம் என்பதற்கு ஒரு நல்ல முன் உதாரணம் வந்தனா!
அவந்திகா வரும் நேரம் நெருங்க, நெருங்க மனதில் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது மாறனுக்கு. எப்படி சமாளிக்கப் போகிறோம் என்றுதான் தெரியவில்லை. அம்மா சொன்ன விசயம், கொஞ்சம் உறுத்தலாகத்தான் இருந்தது. சில நம்பிக்கைகள் பல அற்புத்க் கனவுகளையும், கற்பனைகளையும் உருத்தெரியாமல் அழிக்க வல்லது. அந்த வகையில் அம்மா சொன்ன ஜாதகம் விசயம் சற்றே உறுத்திக் கொண்டிருந்தாலும், அவந்திகாவைப் பார்க்கப் போகிறோம் என்ற இனிய உணர்வு மட்டும் உற்சாகமளிக்காமலில்லை. இதுதானே காதலின் பலமும், பலவீனமும்! பல நேரங்களில் அந்த அசுரபலம், பலவீனத்தை எளிதாக வென்றுவிடத்தான் செய்கின்றன….
பொங்கல் விழாவும், புத்தாண்டு விழாவும் சேர்த்துக் கொண்டாடும் விதமாக நண்பர்கள் குழுமி இருந்தனர். முடிந்தவர்கள் அவரவர் வீட்டிலிருந்து ஒவ்வொரு ஐட்டம் சமைத்து, கொண்டு வந்திருந்தார்கள். பேச்சிலர் ஆண்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. முடிந்தவர்கள் மட்டும் செய்யலாம் என்று. மாறனுக்கு ஏனோ அன்று தானும் ஏதாவது சமையல் செய்து அனைவரையும் குறிப்பாக அவந்திகாவை அசத்த வேண்டும் என்ற ஆவலில்,தனக்குத் தெரிந்த சக்கரைப் பொங்கலையே முயற்சி செய்வது என்ற முடிவுடன், மளமளவென காரியத்தில் இறங்கினான். நல்ல வேளையாக அனைத்துப் பொருட்களும் வீட்டில் இருந்ததால் வேலை எளிதாக முடிந்தது… தன் அம்மாவிடம் சென்ற முறை எழுதி வாங்கி வந்த அக்காரஅடிசல் ரெசிப்பி இன்றும் கைகொடுக்க,சுவையும் பதமும் இனிமையாக அமைந்தது குறித்து அவன் மனம் துள்ள ஆரம்பித்தது. நல்ல சகுணமாகவும் மனதில் பட்டது. தன் கையால் சமைத்த உணவை தம் இளவரசி சுவைக்கப் போகும் சந்தர்ப்பம் எண்ணிக் காத்திருந்தான்.
தான் எதிர்பார்த்ததைவிட, மிகத்தெளிவான சிந்தனையுடன் இருந்தாள் அவந்திகா. ரம்யாவின் முயற்சி குறித்தும்,வெகு விரைவில் தன்னுடைய தந்தையை இது விசயமாக சந்திக்கப் போவதையும் சொல்லலாமா என்று யோசித்தான். அவள் பார்வையிலும், நடவடிக்கையிலும் பல மாற்றங்கள் தெரிந்தாலும், நேரிடையாக அவளுடன் பேசிவிடுவதே நல்லது என்று முடிவு செய்திருந்தான். ரம்யா அவள் பெற்றோரிடம் பேசுவதற்கு முன்பாக அவந்திகாவிற்கு விவரம் தெரிந்தால் தேவையில்லாத குழப்பத்திற்கு இடம் இருக்காது என்று அதற்கான தக்க தருணமும் அன்று அமையும் என்று நினைத்திருந்தான். அம்மா ஜாதகம் பற்றி சொன்ன விசயம் சிறு குழப்பம் ஏற்படுத்தினாலும், இறுதியாக மனப்பொருத்தம் இருந்தால் இந்த ஜாதகப் பொருத்தம் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்ற வார்த்தை கொடுத்த நம்பிக்கையே அவன் கற்பனையை மேலும் வளர்க்க உதவியாய் இருந்தது.
தான் எதிர்பார்த்ததைவிட,இவ்வளவு எளிதாக சந்தர்ப்பம் அமையும் என்று அவன் எண்ணவில்லைதான்.. சில நேரங்களில் நல்லது நடக்க வேண்டுமென்ற அருள் இருந்தால் சமயமும், சந்தர்ப்பமும் தானாக வாய்ப்பதில் ஆச்சரியமில்லையே….
தொடரும்.
படத்திற்கு நன்றி:
http://shari-chocolatebox.blogspot.in/2010_06_01_archive.html
http://www.ifood.tv/blog/easy-guide-on-how-to-host-a-potluck-party
அருமையான கட்டுரை. எனக்கு வந்தனா, ரிஷி, டயமண்ட் தம்பதி எல்லாரையும் தெரியும்.
அன்பின் ஐயா,
தாங்கள் அறிந்த டயமண்ட் தம்பதி, வந்தனா, ரிஷி பற்றி இங்கே பகிர்ந்து கொண்டால் நலம். மிக பயனுள்ளதாக இருக்கும்.
அன்புடன்
பவள சங்கரி.