பர்வதவர்தினி 

வித்யா அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்றாள். அவரைக் கண்டதும் வயிற்றிலிருந்து குடல் எழும்பி மார்பில் வந்து அடைத்துக் கொண்டது போல் தோன்றியது. இவர் அவரே தானா? திரும்பவும் உற்றுக் கவனித்தாள். சந்தேகமே இல்லை. அவரே தான். தன் அப்பாவேதான். அவளுடைய மனதில் பழைய நினைவுகள் எல்லாம் அப்படியே வலம் வந்தன. மறக்கக் கூடியவையா அவை.. எதிரிக்கும் வரக்கூடாதே அந்த நிலைமை..

வித்யாவிற்கு அப்பொழுது பத்து வயது இருக்கும். வித்யாவின் குடும்பம் ஒரு அழகிய சிறிய குடும்பம், அம்மா வரலக்ஷ்மி, அப்பா கந்தசாமி, இவளும் இவள் அண்ணா சேகரும்தான். கந்தசாமி ஒரு தனியார் நிறுவனத்தில் குமாஸ்தாவாக இருந்தார். அம்மாவோ இல்லத்தரசி. இரு குழந்தைகளையும் அருகில் இருந்த ஒரு மெட்ரிகுலேஷுன் பள்ளியில் படிக்க வைத்தனர். இருவரும் நன்றாகப் படித்து வகுப்பில் முன்னணியில் இருந்தனர். அந்தக் காலம் வரை வாழ்க்கை நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.. ஆனால் பாழும் விதி இவர்கள் வாழ்க்கையில் விளையாடியது. நண்பர்கள் சிலரின் துர்போதனையால் எப்போது அப்பா கந்தசாமி குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆனாரோ அப்போதிலிருந்துதான், அமைதியாக இருந்த குடும்பத்தில் புயல் வீசத் துவங்கியது. முதலில், கொஞ்சமாகக் குடிப்பது என்ற பழக்கம் நாளடைவில் தினம் தினம் அதிகமாகத் தொடர்ந்ததால் வித்யா அம்மா எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் செவியில் விழவில்லைதான். நாள் செல்லச் செல்ல, கணவன் மனைவி இடையே எந்நேரமும் சண்டையும் சச்சரவுமாகக் கழிந்தன. சம்பாதிக்கும் பணம் எல்லாம் குடிப்பதற்கே செல்ல, குடும்பம் நடத்துவதே கடினமாகிப் போனது. குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்திற்கும், குடும்பம் நடத்தவும் வரலக்ஷ்மி அக்கம்பக்கத்தில் கடன் வாங்கும் நிலை ஏற்பட்டது. குழந்தைகள் இருவரும் வீட்டில் நடக்கும் சண்டைகளைக் கண்டு பயந்து ஒடுங்கினர்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் கந்தசாமி நன்றாகக் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அச்சமயம் சேகர் நண்பர்களுடன் விளையாடப் போயிருந்தான். வித்யாவோ வீட்டின் திண்ணையில் அமர்ந்து வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருந்தாள். உள்ளே நுழைந்த சற்று நேரத்திலேயே கந்தசாமிக்கும் வரலக்ஷ்மிக்கும் வாக்குவாதம் துவங்கியது. வாக்குவாதம் முற்றிப் பலத்த சண்டை துவங்கியது. குழந்தை வித்யா பயந்தபடி வாசலிலிருந்த தூணைப் பிடித்துக் கொண்டே உள்ளே நடக்கும் சண்டையைக் கண்டாள். கோபம் முற்றிய நிலையில் கந்தசாமி சமையலறைக்குள் சென்றார். உச்சக்கட்டக் கோபத்துடன், கையில் மண்ணெண்ணெய் எடுத்து வந்து வரலக்ஷ்மியின் மீது ஊற்றி அவள் சுதாரிப்பதற்குள் தீக்குச்சியால் பற்ற வைத்தார். உடல் பற்றி எரிய அலறிக்கொண்டே வரலக்ஷ்மி வாசலுக்கு ஓடி வந்தாள். என்ன செய்வதென்று தெரியாமல் பயத்தில் உறைந்து போய் நின்றாள் வித்யா. அலறித் துடித்தபடி வரலக்ஷ்மியின் உயிர் ஊசலாடியது. அதற்குள் இந்த அக்கம்பக்க ஜனங்கள் எல்லாம் அரக்கப் பரக்க ஓடிவந்தனர். தான் செய்த காரியத்தின் தீவிரத்தை உணர்ந்தோ அல்லது ஊருக்காக நடிப்பதற்கோ, கந்தசாமி ஒரு கம்பளியை எடுத்து அவளுக்குப் போர்த்தி விட்டு, வாசல் கேட்டைத் தாண்டி ஓடிப் போய் அவசரமாக ஒரு ஆட்டோ பிடித்து வந்தார். அதற்குள் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், தண்ணீரை அவள் மீது ஊற்றி, அவள் உயிரைக் காப்பாற்ற முயன்றார்கள். ஆட்டோவில் அமர்ந்தபடியே, “அவளைத் தூக்கி வாருங்கள்” என்று அப்பா கட்டளையிட, அந்த மனிதரை வெறுப்போடு கண்டது மக்கள் கூட்டம். பிறகு அவளை அவசர அவசரமாக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவளது உயிர் பிரிந்தது.

இது ஒரு போலீஸ் கேஸ் ஆக, கந்தசாமியைக் கைது செய்தனர். வித்யாவும் சேகரும் அநாதைகளானார்கள். அவர்களது ஒன்றுவிட்ட மாமா மாசிலாமணி அவர்களை அழைத்துச் சென்றார். இருவரையும் ஒரு கார்ப்பரேஷன் பள்ளியில் சேர்த்து விட்டார். வரலக்ஷ்மியின் தந்தை முன்பு தனக்குச் செய்த உதவிகளை மனதில் கொண்டு, இந்தக் குழந்தைகளை அழைத்து வந்தாரே தவிர, அவரும் சொல்லும்படியான பெரிய நிலையில் இல்லை. வறுமையில் வாடிக் கொண்டிருந்த அவர், இவர்களையும் அழைத்து வந்தது அவரது குடும்ப நிலைக்குப் பாரமாகவே இருந்தது. பிறகு வேறு வழி இன்றி, சேகரை ஒரு மெக்கானிக் கடையில் வேலைக்குச் சேர்த்து விட்டார். வித்யாவை ஒரு அநாதை ஆசிரமத்தில் சேர்த்து விட்டார்.

சேகர் அந்தக் கடையில் வேலை கற்றுக்கொண்டு வளர்ந்தான். வித்யாவோ ஆசிரமத்தின் உதவியால் ஓரளவு படிக்கும் வாய்ப்பு பெற்றாள். ஆண்டுகள் பல சென்றன. சேகர் நல்ல கை தேர்ந்த மெக்கானிக் ஆனான். வித்யா ஒரு இளங்கலைப் பட்டதாரியாக ஒரு சிறிய நிறுவனத்தில் வேலைக்கும் சேர்ந்தாள். அங்கே தான் அவள் இளங்கோவைச் சந்தித்தாள். இளங்கோவின் துடிப்பான பேச்சும் எதையும் பாசிட்டிவாக அணுகும் அவனது குணமும் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தன. அவளிடம் இருக்கும் திறமையை வெளிக் கொணர்ந்ததே இளங்கோ தான். சிறுவயதில் இருந்தே கைவினைப் பொருட்கள் செய்வதில் ஆர்வமுடைய வித்யா, தன் வாழ்வில் ஏற்பட்ட சங்கடங்களால், அவற்றை மறந்தே இருந்தாள். ஒரு முறை ஒரு தோழிக்குப் பரிசளிக்க அவள் தானே செய்திருந்த அழகிய எம்பிராய்டரி செய்யப்பட்ட கைப்பையைக் கண்டதும் இளங்கோ அவளை மேலும் உற்சாகமூட்டினான். அவனுடைய உந்துதலினால், வீட்டில் இருந்த மிச்ச நேரங்களில், கைவினைப் பொருட்கள் செய்யத் துவங்கினாள். அவளது வேலைப்பாட்டில் உள்ள அழகு மற்றும் தரம் கண்டு அவளுக்கு நிறைய வாடிக்கையாளர்கள் தோன்றினார்கள். கைப்பை, தலையணை உறைகள், சோபா உறைகள், மணி வேலைகள், அழகிய காதணிகள், கழுத்தணிகள் என அவள் செய்யும் கைவினைப் பொருட்களுக்கு அதிக மவுசு சேர்ந்தது. எனவே, தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு, இதையே முழுநேரத் தொழிலாக மாற்றிக் கொண்டாள். ஆர்வமுடைய பெண்களுக்குக் கற்றும் கொடுத்தாள்.

சேகரும் ஒரு நல்ல மெக்கானிக் என்ற பெயருடன் தன்னுடைய உழைப்பினால் சொந்தக் கடை வைத்தான். சேகரின் அனுமதியுடனும் ஆசியுடனும் வித்யா இளங்கோவைத் தன் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்தாள்.

இத்தகைய இந்த நிலையில்தான் அன்று வெளியில் செல்லும்போது அவரை அவள் கண்டாள். கண்டு அதிர்ந்தாள். ஆம். சந்தேகமே இல்லை. தன்னுடைய தாயைத் தீயிட்டுக் கொளுத்தித் தங்களை அனாதைகளாக்கிச் சென்ற தன் சொந்தத் தந்தை தான் அவர். ஆனால் அவருடைய நிலையும் காணச் சகிக்காததாகவே இருந்தது. தேனாம்பேட்டையில் ஒரு சிற்றுண்டி வாசலில் நின்று அவர்களை ஏதாவது உணவு தரும்படி கேட்டுக் கெஞ்சிக் கொண்டிருந்தார். அழுக்கடைந்து கிழிந்து போன வேட்டியும், பரட்டைத் தலையும், பல நாட்கள் சவரம் செய்யாத தாடியும் மீசையும் என அவரது நிலையை அவரது தோற்றமே காட்டிக் கொடுத்தது.

அவரைக் கண்டதில் இருந்து அவள் மனம் பழைய நினைவுகளில் தத்தளித்தது. தன் தாய் நெருப்பில் எரிந்து கொண்டே அலறும் காட்சி மனக்கண் முன் திரும்பத் திரும்பத் தோன்றியது. இது நாள் வரை தன் தந்தையைப் பற்றிய நினைவே தனக்கு வரக்கூடாது என்று முடிவு கட்டி இருந்தவள், அவரைக் கண்டதும் செய்வதறியாது திகைத்தாள். அவரை அந்நிலையில் கண்டது மனதை ஏதோ செய்தது. இருப்பினும், அவர் செய்த தீங்கை மன்னிக்கவும் மனம் இடம் தரவில்லை.

வீடு வந்து சேர்ந்த பிறகு, மெதுவாக இளங்கோவிடம் தன் தந்தையைக் கண்டதைப் பற்றிக் கூறினாள். அவனும் சிறிது நேரம் யோசித்து விட்டு, ‘நீ எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு அதில் சம்மதமே. என்ன இருந்தாலும் அவர் உன் தந்தை. நீ என்ன செய்யப் போகிறாய் என்று நீயே தீர்மானம் செய்’ என்றான். உடனடியாக சேகருக்கும் போன் செய்து கூறினாள். அவனும் ஒரு கணம் திகைத்தான். பிறகு, ‘நன்றாகப் படிக்க வேண்டிய நான் படிப்பின்றி இந்தத் தொழில் செய்யக் காரணமானவர், நீ அநாதை விடுதியில் யாருமின்றி வளரக் காரணமானவர், அவரைப் பற்றி எனக்கேதும் அக்கறை இல்லை’ என்று கோபமாகக் கூறி போனை வைத்தான்.

வித்யா நாள் முழுவதும் சிந்தித்தாள். அவளுக்கு எந்த வேலையும் ஓடவில்லை. மறுபடி அடுத்தநாள் சேகருக்குப் போன் செய்து உடனே வரும்படி கூறினாள். சேகர் வந்ததும் அவனிடம் தன் முடிவைக் கூறினாள். முதலில் மிகவும் கோபம் கொண்டான் சேகர். ஆனால்,வித்யாவும் இளங்கோவும் இணைந்து அவனைச் சமாதானப்படுத்தி அவனைச் சம்மதிக்க வைத்தனர்.

மறுநாள் மூவருமாகச் சேர்ந்து தேனாம்பேட்டை சென்று அவர் இருக்கும் இடத்தை அடைந்தனர். அவரால் அவர்களை யார் என்று அறிந்து கொள்ள முடியவில்லை.

‘அம்மா தாயீ, தர்மம் பண்ணும்மா, அய்யா ராசா, தர்மம் பண்ணுங்க சாமி’ என்று அவர்களை நோக்கிக் கூறினார். இதைக் கேட்டதும், வித்யாவின் கண்களில் பொலபொலவென்று கண்ணீர் வழிந்தது.

“எங்களை உங்களுக்கு அடையாளம் தெரியலியா அப்பா?

“அப்பா” என்ற வார்த்தை அவரைத் திகைக்கச் செய்தது.

“நான் தான் வித்யா, இது சேகர்” என்று அவளே அறிமுகம் செய்தாள். அவர்களைக் கண்ட கந்தசாமியின் கண்களிலும் கண்ணீர் பெருகியது.

“உங்களை அனாதைகளாக்கினேனே, இந்தப் பாவி. இன்னைக்கு நானே அனாதையா பிச்சைக்காரனா நிக்கறேனே. நான் செய்த பாவத்துக்கு இன்னும் எவ்வளவு அனுபவிக்கப் போறேனோ தெரியலையே. என்னை மன்னிச்சுடும்மா”   அவள் கரங்களைப் பற்றிக் கொண்டு கதறினார். “என்னாலே நீங்க எவ்வளவோ எழந்திருப்பீங்க. வயசுக் காலத்தில் பண்ண தப்புக்கெல்லாம் வயசான காலத்திலே எனக்கு தண்டனை கெடைச்சிடிச்சு.என்னை மன்னிச்சிடு சேகர்” என்று புலம்பினார்.

சேகரின் கண்களிலும் கண்ணீர் முத்துக்கள் தோன்றின. வித்யா நிதானமாக, அன்புடன் அவர் கையைப் பிடித்தாள்.

‘”அப்பா, இப்போ எங்களோட நீங்க கெளம்புங்க. இனியும் இங்கே இந்த நிலைமைல நீங்க இருக்க வேண்டாம்”

“இல்லைமா. உங்க ரெண்டு பேரையும் என்னைக்காவது சந்திச்சு மன்னிப்பு கேக்கணும்னு தான் கடவுள்கிட்ட பிரார்த்தனை பண்ணிட்டு இருந்தேன். இன்னைக்கு அது நிறைவேறிடிச்சு. எனக்கு அதுவே போதும். என்னை இப்படியே விட்டுடுங்க. நான் செய்த கொடுமைக்கெல்லாம் தண்டனை அனுபவிக்கறது தான் நியாயம்”

“அப்பா, நீங்க எங்களுக்கு செய்ததும் அம்மாவுக்கும் செய்ததும் பெரிய கொடுமை தான். இத்தனை காலமா நாங்க உங்களை மன்னிக்கத் தயாரா இல்லை. ஆனா, நேத்து உங்களை இந்த நிலைமையிலே பார்த்ததும் மனசு கேக்கலை. எங்களோட வர உங்களுக்கு விருப்பம் இல்லேன்னா, நாங்க உங்களை ஒரு இடத்துல சேர்த்து விடறோம். அங்கே இருக்கறவங்களுக்கு ஒத்தாசையா இருந்து உங்க மீதிக் காலத்தை கழிங்க. உங்க பாவத்துக்குச் செய்த பரிகாரமாகவும் இருக்கும். உங்களுக்கும் மனசு ஆறுதலா இருக்கும்” நிதானமாகச் சொன்னாள் வித்யா.

அவள் கனிவான வார்த்தைகள் அவர் மனதையும் மாற்ற அவர்களுடன் சேர்ந்து புறப்பட்டார். வித்யா அவரை ஊனமுற்ற குழந்தைகள் காப்பகத்திற்கு அழைத்துச் சென்றாள். அங்கே அவரை ஒரு உதவியாளராகச் சேர்த்து விட்டாள்.

இப்பொழுது அவள் மனதிலும் சேகர் மனதிலும் என்றுமில்லாத நிம்மதி. கந்தசாமி மனதிலோ ஒரு நிர்மலமான அமைதி!!

 

படத்திற்கு நன்றி:http://www.guardian.co.uk/money/work-blog/2011/nov/28/dear-jeremy-work-advice-have-your-say

2 thoughts on “வித்யா

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க