மறவன்புலவு க. சச்சிதானந்தன்

மலேசியாவில் இருபந்தைந்து இலட்சம் தமிழர். (2012இல் மலேசிய மொத்த மக்கள் தொகை 3 கோடியில் 8% தமிழர்) ஐந்து இலட்சம் தமிழ் இல்லங்கள். மலேசியாவின் ஒவ்வொரு தமிழர் இல்லத்திலும் ஏதாவது ஒரு திருமுறைப் பாடலை மனனம் செய்து இசைத்துப் பாடக்கூடிய ஒருவராவது உருவாக வேண்டும் என்பது மலேசிய இந்துச் சங்கத்தின் நோக்கம். அதுவும் 2015 மார்கழிக்குள் இந்த நோக்கம் நிறைவேற வேண்டும். அதற்காக மலேசிய இந்துச் சங்கத்தினர் கடுமையாக உழைக்கிறார்கள்.

160 வட்டார அமைப்புகளைக் கொண்ட வலுவான நிறுவனம். மலேசியாவின் 13 மாநிலங்கள், 3 கூட்டரசு ஆள்புலங்கள் யாவிலும் உள்ள ஒவ்வொரு வட்டாரத்திலும் மலேசிய இந்துச் சங்கத்துக்கு அமைப்பு உண்டு. அலுவலகம் உண்டு. ஆண்டுக் கூட்டத்தில் தேர்தல் நடத்தித் தெரிவாகும் ஆட்சிமன்றம் உண்டு. மாநில அவை, தேசிய அவை என அவ்வட்டார அமைப்புகள் தேர்வு செய்து, வலுவான தேசியத் தலைமையைத் தருகின்றன.
குவலாலம்பூரில் உள்ள தேசியத் தலைமை அலுவலகம், அதன் தலைவர் திரு. மோகன் சண், செயலாளர் திரு. கணேசுபாபு, பொருளாளர் திரு. சண்முகநாதன், ஆட்சியர் திரு. யுவராசர் யாவரும் திருமுறையில் ஈடுபாடுடையோர். பன்னிரு திருமுறை மின்னம்பலத்தில் தேவாரம் தளத்தைப் பரப்புரைக்க மலேசியாவின் வட மேற்கில் மூன்று மாநிலங்களுக்குச் செல்ல ஏற்பாடு செய்தனர்.

பேராக்கு, பினாங்கு, கெடா ஆகிய மாநிலங்களில் உள்ள ஒன்பது நகரங்களுக்குப் பயணித்தேன். பன்னிரு திருமுறைத் தளத்தை விளக்கினேன். பன்னிரண்டு நிகழ்ச்சிகளில் தோராயமாக ஓராயிரம் மக்களிடையே செய்தி சொன்னேன்

பேராக்கு மாநிலம்:

மலேசியாவின் பேராக்கு மாநிலம், இருபத்தோராயிரம் சகிமீ. பரப்பளவு. தோராயமாக 2012இல் இருபத்தைந்து இலட்சம் மக்கள், அவர்களுள் மூன்று இலட்சம் தமிழர், ஏழு இலட்சம் சீனர், பதினைந்து இலட்சம் மலாய் மக்கள் உள்ளிட்ட மண்ணின் மைந்தர். மலாக்கா நீரிணையைத் தழுவும் மேற்குக் கரையோரம். கடற்கரையில் இருந்து உயரும் மலைத் தொடர்கள், தகரம், ஈயம் கலந்த மண் வளம். அந்தக் கனிம வளமே பேராக்கு மாநிலத்தின் பெரும் செல்வம். பேராக்கின் பத்து மாவட்டங்கள், தலைநகர் ஈப்போ, அங்கே ஓர் இலட்சம் தமிழர்.
தேவாரம் தெரியாத தமிழர் இல்லை. கோயில் இல்லாத தமிழர் குடியிருப்பு இல்லை. ஈப்போ கல்லுமலை அருள்மிகு முருகன் கோயிலில் தைப்பூசம் மிகச் சிறப்பான திருவிழா மலேசிய இந்துச் சங்கத் தலைவர் திரு. மோகன் சண் அவர்கள் ஆலோசனைக்கமைய ஆறு நாள்கள் (14.2.2012 தொடக்கம் 19.12.2012 வரை) பேராக்கு மாநிலத்தில் பன்னிரு திருமுறைப் பரப்புரைப் பயணம்.
குவலாலம்பூருக்கு வடக்கே, செலங்கூர் மாநில எல்லையில் பேராக்கு மாநிலத்தின் பெரணாம் ஆற்றின் அருகே தஞ்சோம் மாலிம் நகரத்திற்கு 14.2.12 மாலை வந்தேன். மலேசிய இந்து சங்க வட்டாரத் தலைவர் திரு. சந்திரமோகன் அவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தந்தார். மாலை வந்திருந்த பெரியவர்கள் நடுவே விளக்கினேன். மறுநாள் காலை தேசிய வகைப் பள்ளிக்குத் தொக்கு குரு விருதாளர் திரு. ஆறுமுகம் அவர்கள் அழைத்துச் சென்றார். அங்கு மாணவர்களிடையே உரை.
15.2.12 மதியம் வடக்காகப் புறப்பட்டுக் காம்பார் நகரை வந்தடைந்தேன். மலேசிய இந்து சங்க வட்டாரத் தலைவர் திரு. ஞானசேகரன் அவர்கள் அழைத்துச் சென்றார். சங்கத்தின் கட்டடத்திலேயே தங்கினேன், சங்க அரங்கில் மாலை விளக்க உரை. மறுநாள் மதியம் தேசிய வகைப் பள்ளியில் மாணவர்களுக்கு உரை.
16.2.12 மாலை வடக்காகப் புறப்பட்டு ஈப்போ நகர் வந்தேன். மலேசிய இந்து சங்க வட்டாரப் பொருளாளர் திரு. வி. எம். தியாகராசன் அவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, பிள்ளையார் கோயிலுக்கு மாலையில் சென்று, அங்கிருந்து சங்க மண்டபத்தில் விளக்க உரை.

17.2.12 மதியம் திரு. சுந்தர் அவர்கள் அழைத்துச் சென்றார். மலேசிய இந்துச் சங்கத்தின் பேராக்கு மாநிலச் செயலாளர் திரு. சுந்தர். மாநிலச் செயலகம் சென்றோம். அங்கிருந்து தஞ்சோம் இரம்புட்டான் சென்றோம். அருள்மிகு மகாமாரியம்மன் கோயில் மண்டபத்தில் அறங்காவலர் குழுத் தலைவர் திரு முருகையா அவர்கள் தலைமையில் விளக்க உரை. அங்கிருந்து தேசிய வகைப் பள்ளி சென்று அங்கு பயிற்சி முகாமில் இருந்த மாணவர்களுக்கு விளக்க உரை.

18.2.12 காலை ஈப்போ வழியாகத் தென் மேற்காகச் சித்தியவான் சென்றேன். மலேசிய இந்து சங்க வட்டாரத் தலைவர் திரு. தனசேகரன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். சனாதன தரும ஆசிரமத்தில் தங்கினேன். மலாயாப் பல்கலைக் கழகக் கடலியல் மாணவர், ஆசிரம மாணவர், சித்தியவான் அடியார்கள் கூட்டத்தில் விளக்க உரை. சனாதன தரும ஆசிரமத் தலைவர் திரு. ஏகாம்பரன் அவர்கள் பசே பாஞ்சான் கடற்கரையில் உள்ள சீனக் கோயிலுக்கு அழைத்துச் சென்றார், ஆசிரம மாணவரும் வந்திருந்தனர். சீனப் பெருமக்கள் வழங்கிய விருந்தில் கலந்து கொண்டோம்.

19.2.12 காலை வடக்கு நோக்கிக் கடற்கரை ஓரமாகப் பயணித்துப் பண்டல் இரேமிசு வழியாகத் தாய்ப்பேங்கு வந்தேன். கெரியான் வட்டார மலேசிய இந்து சங்கத் தலைவர் திரு. முருகன் அவர்களுடன் பகான் செராய் வந்தேன். மாலை அருள்மிகு பட்டாபிராமர் கோயிலில் தேவாரப் பாடசாலை மாணவர்களுக்கும் பெரியவர்களுக்கும் விளக்க உரை. தேவாரப் பாடசாலை ஆசிரியர் திரு. துரைசாமி அவர்களுடன் தங்கினேன்.

20.2.12 மதியம் பினாங்கு மாநிலம் பட்டர்வர்த்து நகரை நோக்கி வடக்கே பயணித்தேன். ஆறு நாள்கள் ஒன்பது விளக்க உரைகள். பேராக்கு மாநிலப் பயணம் நிறைவெய்தியது.

பினாங்கு மாநிலம்:

மலேசியாவின் பினாங்கு மாநிலம், 1048 சகிமீ. பரப்பளவு. பதினேழு இலட்சம் மக்கள், ஒன்றேமுக்கால் இலட்சம் தமிழர், ஆறேமுக்கால் இலட்சம் மலாய் மக்கள், ஏழு இலட்சம் சீனர் என மக்கள் தொகுப்பு.
மலாக்கா நீரிணையத் தழுவும் மேற்குக் கரையோரத்தில் 259 சகிமீ. பரப்பளவு கொண்ட பினாங்குத் தீவு. மலேசிய இந்துச் சங்கத் தேசியப் பொருளாளர் சண்முகநாதன் என்னை வரவேற்றார். 20.2.12 அன்று மகா சிவராத்திரி நாள். பட்டர்வர்த்தில் அருள்மிகு கெங்காதரன் சிவன்கோயிலில் விழா. இரவு 1 மணி தொடக்கம் விளக்க உரை. மறு நாள் காலை தாங்குபாதையில் கடலைக் கடந்தேன். பினாங்குத் தீவில் ஊட்லண்ட்சு உணவகத்தில் காலை உணவு.

21.2.12 மதியம் சுங்கைப் பட்டாணி புறப்பட்டேன். மலேசிய இந்துச் சங்கத் தேசியத் தலைவர் திரு. மோகன்சண் அங்கே வந்திருந்தார். என்னை அழைத்துச் சென்றார்.

கெடா மாநிலம்:

பட்டினப்பாலை சொல்லும் கடாரமே, கிபி. 1025இல் இராசேந்திர சோழன் கைப்பற்றிய கடாரமே இன்றைய கெடா மாநிலம். 

11 மாவட்டங்கள். தலைநகர் அலோ செத்தார். மாநிலப் பரப்பளவு 9,500 சகிமீ. மக்கள் தொகை இருபது இலட்சம். பதினைந்து இலட்சம் மண்ணின் மைந்தர், மூன்று இலட்சம் சீனர், இரண்டு லட்சம் தமிழர்.

மலேசிய இந்துச் சங்கத் தேசியத் தலைவர் திரு. மோகன் சண் என்னைப் பட்டர்வர்த்தில் இருந்து அழைத்துச் சென்றார். மலேசிய இந்துச் சங்கச் சுங்கைப் பட்டாணிக் கிளை அலுவலகத்தில் விளக்க உரை. அன்று இரவு திரு. மோகன் சண் இல்லத்தில் தங்கினேன்.

1969 மார்கழியில் சுங்கைப்பட்டாணிக்கு வந்திருந்தேன். மலேசிய இந்து இளைஞர் பேரவையின் மாநாடு சுங்கைப்பட்டாணியில். திரு. விசயரத்தினம், திரு. வைத்தியலிங்கம், திரு. இராசரத்தினம் ஆகியோர் அழைத்து மலேசியாவுக்கு வந்திருந்தேன். 43 ஆண்டுகளின் பின்னர் சுங்கைப் பட்டாணி புதுப்பொலிவுடன் தெரிந்தது. காலை புறப்பட்டுப் புசாங்குப் பள்ளத்தாக்குக்குத் திரு. மோகன் சண்ணுடன் போனேன். சிவன், பிள்ளையார், நந்தி, துர்க்கை சிலைகள், புத்தர் சிலைகள், கைவிட்ட செங்கல் கட்டக் கோயில்கள் என கிமு. 100ஆம் ஆண்டில் இருந்து கிபி. 1400 வரை அங்கு செழித்த நாகரிகச் சின்னங்கள். தென்கிழக்காசியாவின் மிகப் பழமையான தொல்நகர் இதுவரை புசாங்கு தவிர வேறெதுவுமில்லை.

அங்கு ஓர் மலை. அதன் உச்சியில் கலங்கரை விளக்கம். இரவில் சுவாலை விடும் தீ, மேற்கே கடலில் நெடுந்தொலைவு வரை மாலுமிகளுக்கு வழிகாட்டும். பகலில் அதே தீயை அணைத்து, வெண்புகை கிளம்ப, அதுவே மாலுமிகளுக்கு வழிகாட்டி. அந்தக் கலங்கரை விளக்கத்தை நோக்கி வருவோரில் பெரும்பாலோர், பட்டினப்பாலை, மணிமேகலை, சோழரின் கல்வெட்டு வரிகள் காட்டும் தமிழ் வணிக மாலுமிகள்.

மதியம் பேருந்தில் புறப்பட்டு அலோ செத்தார் பயணித்தேன், மாலை மலேசிய இந்துச் சங்கப் பணிமனையில் விளக்க உரை.

இரவு பேருந்தில் புறப்பட்டுக் குவலாலம்பூர் பயணமானேன். வழியில் சுங்கைப்பட்டாணியில் மலேசிய இந்துச் சங்கத் தேசியத் தலைவர் திரு. மோகன் சண் என்னுடன் சேர்ந்தார். புலர்காலை குவலாலம்பூர் வந்தடைந்தோம்.

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “மலேசியாவில் ஒன்பது நாள்கள்!

  1. வணக்கம் திரு. சச்சிதானந்தம் அவர்களுக்கு, வாழ்த்துக்களுடன், தங்கள் பணி மேன் மேலும் வளர என்றும் எம்பெருமான் துணை நிற்பாராக! 

  2. ஐயா, உலகம் முடிந்தாலும் உங்கள் சேவை முடியாது. உலகம் எங்ஙனும் நடை பயிலும் இளைஞனை ஆயிரமாயிரம் மக்களுக்கு சமய அறிவுட்டும் அற்புத மனிதரை உள்ளன்போடு வரவேற்கிறேன். தொடரட்டும் உங்கள் பணி. தொண்டர்கள் தொடர்வார் பின்னாலே. வாழ்க வளமுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.