பாஸ்கர பாரதி

சென்ற பல நூற்றாண்டுகளில் மனித இனம் எதிர் நோக்கியிராத மிகப் பெரிய ஆபத்து இன்று நம் கண்முன் விரிகிறது. உலகின் பல்வேறு பாகங்களிலும் வன்முறை கோர தாண்டவம் ஆடுவதை வேதனையுடன் கண்டு கொண்டு இருக்கிறோம்.

மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், ஜாதி, மொழி, நிறம் மற்றும் அரசியல் அதிகாரம் என்கிற பெயரால் – மதம் பிடித்த யானையாய் வன்முறை வெறியாட்டம் விலை மதிப்பற்ற மனித உயிர்களைச் சகட்டு மேனிக்குச் சவக் குழிக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது.

தனக்குப் பசி வந்தால் மட்டுமே இரை வேண்டி வேட்டையாடும் காட்டு மிருகங்களை விடவும் கேவலமாய் கண்மூடித் தனமாய், பால் மணம் மாறாப் பாலகர்கள் முதல், வாழ்க்கையின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கும் முதியவர் வரை, முன் பின் அறியா அப்பாவிகளைப் பலி கொள்வதற்கு இரத்த வெறி பிடித்து அலையும் வன்முறைப் பேய்க்கு விலங்கு மாட்டுவது யார்? எப்பொழுது? எப்படி?

பலியான உயிருக்கு மற்றொரு பலி பதிலாக முடியாது. கத்திக்குக் கத்தி, ரத்தத்துக்கு ரத்தம் என்பதெல்லாம் உருப்படியான தீர்வுக்கு ஒரு போதும் உதவாது. ஆம். வன்முறைக்கு வன்முறையே மாற்றாக முடியாது.

வன்முறைக்கான விடை, தீர்வு, முடிவு வேறெங்கோதான் ஒளிந்து கிடக்கிறது. உலகத்தோர் காதுகளை உண்மைகள் சென்று சேர்ந்திடா வண்ணம் ஓயாமல் எழும்பும் வேட்டுச் சத்தம் தடுத்து விடுகிறது.

வேங்கையின் உறுமல்கள், வெண்புறாக்களின் விசும்பல்களை விழுங்கி விடுகின்றன. இந்நிலையில், வன்முறைக்கு ஒரு முடிவு காண்பதுதான் எப்படி?

உள்ளத்தில் விரோதம் பாராட்டுகிற வரைதான் விரோதி. சிந்தையிலே குரோதம் இல்லாத போழ்து, செயலிலே மட்டும் எப்படி சாத்தியமாகும்?

மனமாற்றம் – இதுதான், மாச்சர்யங்களுக்கெல்லாம் மாமருந்து. காயங்களையும் தழும்புகளையும் ஆறச் செய்யும் களிம்பு அது ஒன்றுதான். பகமை மறப்போம்; பகைவனுக்கு அருளுவோம்.

நெருப்பில்லாமல் புகையேது? அன்பில்லாது பகையேது? கேட்கவே விநோதமாக இல்லை?

பகைமையானாலும் சரி, அதற்கும் அன்புதான் மையப் புள்ளி. தேக பலம் கூட்டும் தேன் ஒரு குடம் நிரம்ப எடுத்து, அதில் ஒருதுளி நஞ்சைக் கலந்தபின், அந்தத் தேனைப் பருக மனம் ஒப்புமோ? தூய சிந்தனை, தெளிந்த நல்லெண்ணங்கள் நிரம்பிய ஓர் உத்தம உள்ளத்தில் பகையுணர்ச்சி ஒரு சிறிது கலந்திடினும், அத்தனையும் பாழ்பட்டுப் போய்விடும் அன்றோ?

உள்ளத்தில் பகைமை, பல கள்ள வழிகளைக் கைக்கொள்ளச் செய்கிறது. தன் உயர்வுக்கு உழைப்பதைத் தடுத்து நிறுத்தி, பிறாரின் தாழ்வுக்குப் பாடுபடும் கேட்டினையே கண்ணுக்குக் காட்டுகிறது. இதன் விளைவுதான் என்ன? கெடுவான் கேடு நினைப்பான் எனும் முதுமொழிக்கேற்பப் பிறர்க்குக் குழி பறிக்க முனைந்து, முடிவில் தானே அதில் விழுந்து அவதிப்பட நேர்கிறது. ஏன் இத்தனைக் குளறுபடிகள்? எதன் பொருட்டு இத்தனைக் குழப்பங்கள்? – பகைமை.

பகைமைத்தீ வளர்வதனால் சுய சிந்தை கருகிப் போகிறது. பகைமையை மாய்த்து விட்டால்..?

வாழ்வில் வசந்த மலர்கள் வாசம் வீசும்.

பகைவனுக்கு அருளச் செய்யும் பாரதியின் இப்பாடல், வாழ்க்கையில் நாம் பின்பற்ற வேண்டிய ஓர் ஆரோக்கியமான அணுகுமுறையை அழகுறச் சொல்கிறது.

பாரதியின் பாடல் இதோ..

பகைவனுக்கருள்வாய் 

பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!
பகைவனுக் கருள்வாய்!

புகை நடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோமே-நன்னெஞ்சே!
பூமியிற் கண்டோமே.
பகைநடுவினில் அன்புரு வானநம்
பரமன் வாழ்கின்றான்-நன்னெஞ்சே!
பரமன் வாழ்கின்றான்.

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தியறியாயோ?-நன்னெஞ்சே!
குப்பையிலேமலர் கொஞ்சுங் குரக்கத்திக்
கொடி வளராதோ?-நன்னெஞ்சே!

உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ?-நன்னெஞ்சே
தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனாமோ?-நன்னெஞ்சே!

வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ?-நன்னெஞ்சே!
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற
சாதிரங் கேளாயோ?-நன்னெஞ்சே!

போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்
போலவந் தானுமவன்-நன்னெஞ்சே!
நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டு
நின்றதுங் கண்ணனன்றோ?-நன்னெஞ்சே!

தின்ன வரும்புலி தன்னையும அன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே!
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
அவளைக் கும்பிடுவாய்-நன்னெஞ்சே!

படத்திற்கு நன்றி:http://withfriendship.com/user/dvivel/mahakavi-bharathiar.php

1 thought on “பாரதிப் பெருங்கடல் – 6

  1. போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்
    போலவந் தானுமவன்-நன்னெஞ்சே!
    நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டு
    நின்றதுங் கண்ணனன்றோ?-நன்னெஞ்சே!

    அரு்சுனனுக்குச் சாரதியாகக் கையில் கசை தாங்கி நின்றவன் மட்டும் தான் கண்ணன் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  கவுரவர் வடிவத்தில் போர்க்களத்தில் நின்றவனும் கண்ணனே என்று பாரதி சொல்கிறார். ஒரே கண்ணன் இப்படி எதிர் எதிர் அணிகளில் நின்று கொண்டு போர் என்னும் மாயத்தை விளைவிக்கிறான். எதிரி என்று நாம் நினைப்பவர் எல்லாம் எதிரி அல்ல. அவரும் இறைவனின் மற்றொரு தோற்றம் என்ற அத்வைதக் கோட்பாட்டைக் கூறி, பகைவனுக்கு ஏன் அருளவேண்டும் என்பதைப் பாரதி விளக்கும் விதம் அருமை.  

Leave a Reply

Your email address will not be published.