பாஸ்கர பாரதி

முத்துமாரி – உள்ளத்தில் கள்ளமில்லா கிராமத்து மக்களின் காவல் தேவதையாய் இருந்து மறம் அழித்து அறம் வளர்க்கும் கலியுக தெய்வம். காசு பணம் செலவில்லை. கையெடுத்துக் கும்பிட்டாலே போதும். ஆசார அனுஷ்டானங்கள் எதுவும் அவள் கேட்பதில்லை.

பாமரர்கள் கேட்பதெல்லாம் அவள் தருவாள். அவளை வழிபடுவதில்தான் எவ்வளவு ஆனந்தம்! ஆடல், பாடல், கொண்டாட்டம்! உலகத்து நாயகியான முத்துமாரி, உலகில் உண்மை நிலை பெற, தேச முத்து மாரியாய் நின்று அருள்மழை பொழிவதை வேண்டி நிற்பதே ஒரு சுகானுபவம்தானே?

தன்னைச் சரண் அடைந்தோர்க்குத் தீங்கு எதுவும் நேராமல் காத்து, கேட்கும் வரங்களைத் தருவாள். பந்தபாசக் கட்டுகளைக் களைந்து, குறைகளெல்லாம் தீர்த்து நலங்களைக் கொண்டு குவிக்கிறாள்.

அண்டங்கள் அனைத்தையும் அடக்கியாளும் ஆகர்ஷண சக்தியைப் போற்றிப் பாடுகிற பொழுதில் அச்சங்கள் அழிந்து போகின்றன. வினைகளுக்கெல்லாம் அவளே மூலாதாரம். செய்யப்படும் தொழில்கள் யாவும் அவளே. அவளை அண்டினோர்க்கு யாதும் குறைவில்லை.

துன்பம் தொலைந்து போகிறது. இன்பம் மட்டுமே எந்நாளும் பல்கிப் பெருகுகிறது. யாவற்றையும் படைப்பவள்-அவள் யாதொன்றையும் இயக்குகிறவள். அம்பிகையின் மீது பற்று கொள்வோம்; அவளின் பாதங்களை இறுகப் பற்றிக் கொள்வோம்.

அவளையே நம்பியிருப்போம். ஆம். நம்பிக்கை – அதுவே சர்வ ரோக நிவாரணி. நம்முடைய துன்பங்களையும் துயரங்களையும் நம்பிக்கையொன்றே நசுங்கச் செய்யும். நம்பிக்கை – வளமான வருங்காலத்துக்குத் திறவுகோல். இருளைக் கிழிக்கும் ஒளிக்கீற்று. இதுவே நான்கு மறைகளின் கூற்று.

சஞ்சலம் போக்கும் மகாகவியின் கவிதை வரிகளைப் படித்து மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். உள்ளுக்குள் உற்சாகம் ஊற்றெடுக்கும். உலகம் இன்ப மயமாகும்.

இதோ அப்பாடல்..

தேச முத்துமாரி

தேடியுனைச் சரணடைந்தேன்,தேச முத்து மாரி!
கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந் தருவாய்

பாடியுனைச் சரணடைந்தேன் பாசமெல்லாங் களைவாய்;
கோடிநலஞ் செய்திடுவாய்,குறைகளெல்லாந் தீர்ப்பாய்

எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பான் பாவி;
ஒப்பியுன தேவல்செய்வேன் உனதருளால் வாழ்வேன்

சக்தி யென்று நேர மெல்லாந் தமிழ்க் கவிதை பாடி,
பக்தியுடன் போற்றி நின்றால் பயமனைத்துந் தீரும்

ஆதாரம் சக்தி யென்றே அருமறைகள் கூறும்;
யாதானுந் தொழில் புரிவோம்;யாதுமவள் தொரிலாம்

துன்பமே இயற்கையெனும் சொல்லைமறந் திடுவோம்;
இன்பமே வேண்டி நிற்போம்;யாவுமவள் தருவாள்

நம்பினார் கெடுவ தில்லை;நான்கு மறைத் தீர்ப்பு;
அம்பி கையைச் சரண் புகுந்தால் அதிகவரம் பெறலாம்

 

படத்திற்கு நன்றி:http://www.marinabeach.info/blog/statues/maha-kavi-subramania-bharathiar-national-poet%E2%80%99-of-india

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க