ஹோலிப்பண்டிகை
சாந்தி மாரியப்பன்
ஹோலி வடநாட்டுப் பண்டிகையா??.. இருக்கலாம்.. இல்லாமலும் இருக்கலாம். ஏனென்றால் தமிழ்நாட்டிலும் கொண்டாடப் படுகிறதே! சமீப காலங்களில் கொண்டாடப் படுவதைச் சொல்லவில்லை. நாம் காமன் பண்டிகை என்று கொண்டாடுகிறோமே. அந்தப் பண்டிகைதான் நம்மூர் ஹோலி. ஹோலி என்ற சொல்லுக்கு எரித்தல் என்று அர்த்தமாம். இதுதான் இந்த இரண்டு பண்டிகைகளுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை. வடக்கே ஹோலிகா எரிக்கப்பட்டதைக் குறிக்கும் ஹோலிப்பண்டிகை தெற்கே மன்மதன் எரிக்கப்பட்டதைக் குறிக்கிறது.
திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளின் கோபத்திற்கு ஆளான மன்மதன் ஈசனின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்டுச் சாம்பலானதும், ரதியின் வேண்டுகோளுக்கிணங்கி அவனை உயிர்ப்பித்தபின், “இனி இவன் உன் கண்களுக்கு மட்டுமே தெரிவான்” என்று அருளியதும் காலங்காலமாக வழங்கப்பட்டு வரும் கதைகள். இதன் ஞாபகமாகவே நம் ஊர்ப்புறங்களில் மன்மதனின் உருவப் பொம்மையை எரித்து விழா கொண்டாடுவது வழக்கம்.
வட இந்தியாவில் இந்தப் பண்டிகை பிரகலாதனுடன் சம்பந்தப்பட்டது. பிரகலாதன் தன்னை விட்டு விட்டு, ஹரி நாமத்தை ஜபித்ததால் அவன் தந்தை ஹிரண்யகஷ்புக்கு கோபம் வந்து விட்டது. பின்னே.. வராதா! ‘அது எப்படி நீ என்னை விட்டுவிட்டு இன்னொருத்தரை உயர்வாகச் சொல்லலாம்” என்று கோபித்துக் கொண்ட தந்தை, மகனுக்கு அறிவுரை சொன்னார், பயமுறுத்திப் பார்த்தார். ஆனாலும் மகன் விஷ்ணுவின் நாமத்தை உச்சரிப்பதை நிறுத்துவதாக இல்லை.
பொதுவாக இளம்பிள்ளைகள் தங்கள் பேச்சைக் கேட்கவில்லையென்றால் அவர்கள் யார் பேச்சைக் கேட்பார்களோ அவர்களை அறிவுரை சொல்லச்செய்து, குழந்தைகளைத் தங்கள் வழிக்குக் கொண்டு வருவது பெற்றோரின் இயல்பு. ஹிரண்ய கசிபுவும் இதற்கு விதிவிலக்கில்லையே. ஆகவே, சான்றோர்களைக் கொண்டு அறிவுரை கூறச் செய்தார். அவர்களும் ‘தம்பி, உங்கப்பா, நல்லவரு… நாலும் தெரிஞ்ச வல்லவரு, அவரை ஏன் மனக் கஷ்டப்படுத்துகிறாய். தந்தையின் சொல் கேட்டு ‘ஹிரண்ய கஷ்புவாய நமஹ’ என்று உச்சரிக்கக் கூடாதா என்றெல்லாம் கூறிப்பார்த்தார்கள். விஷ்ணுவின் பெயரை உச்சரித்த வாய் இன்னொருவரின் பெயரை உச்சரிக்கத் தயாராக இல்லாதபோது எந்த அறிவுரையும் பலன் தராதே.
உயிர்ப் பயத்திலாவது பிள்ளை..”ஹிரண்யகஷ்பாய நமஹ” ன்னு சொல்லி விட மாட்டானா என்ற ஒரு நப்பாசையில் பெற்ற மகனென்றும் பாராமல், பிரகலாதனின் உயிருக்கே ஆபத்து விளைவித்தும் பார்த்தார். பிள்ளை அப்பொழுதும் ‘நாராயணாய நமஹ’ என்றே உச்சரித்து அந்த ஆசையில் ஒரு வண்டி மண்ணைக் கொட்டியது! மனம் நொந்த தந்தையார், ‘தங்கையுடையான் எதற்கும் அஞ்சான்’ என்றெண்ணித் தன் தங்கையான ஹோலிகாவுக்கு ஓலை அனுப்பினார்.
‘ஹோலிகா’வும் ‘அண்ணே.. கூப்பிட்டு விட்டியாமே? ஓலை வந்தது’ என்றபடி வந்து சேர்ந்தாள். அப்பாடா!!!..பண்டிகைக்கு பெயர்க்காரணம் வந்து விட்டது. தங்கையிடம் விபரத்தைச் சொல்லி ‘ நீயாவது புத்தி சொல்லும்மா’ என்று அண்ணன் வேண்டுகோள் வைக்க, அவளுக்கும் தோல்வியே கிடைத்தது. எல்லா வாய்ப்புகளிலும் தோல்வியடைந்ததும் கோபமுற்ற தந்தை மகனைக் கொல்லவும் முடிவெடுத்தார். ஆனால், நாராயணனின் அருளால் பிரகலாதன் ஒவ்வொரு முறையும் உயிர் தப்பியதுடன், அவனைக் கொல்ல அனுப்பப் பட்டவர்கள் உயிரிழக்கும்படியும் ஆனது. கடைசி முயற்சியாக ஒரு முடிவெடுத்து ‘தங்கச்சி, உனக்குக் கிடைச்ச வரம் இன்னும் நிலுவையில்தானே இருக்கு’ என்று உறுதி செய்து கொண்டு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தார் ஹிரண்யகஷ்பு.
ஹோலிகாவுக்குக் கிடைத்த அனேக வரங்களில் அவளை தீ எரிக்காது என்ற வரமும் அடங்கும். இதைப் பயன்படுத்தி, சிறுவனென்றும் பாராமல் பிரகலாதனை எரித்துக் கொன்று விடத் திட்டம் தீட்டப்பட்டது. தயாராக்கப்பட்ட சிதையில், அவனை மடியில் வைத்துக் கொண்டு, ஹோலிகா உட்கார்ந்து கொள்ள, நெருப்பு மூட்டப்பட்டது. ‘ஐயோ.. அம்மா’ என்ற அலறல் குரல் கேட்டது. அலறல் வளர்ந்து, திசையெங்கும் எதிரொலித்து, பின் தேய்ந்து மறைந்தது. நெருப்பும், புகை மண்டலமும் மெல்ல மெல்லக் குறைந்த பின் பார்த்தால், இதென்ன!!!… பிரகலாதன் நெருப்பால் எந்த விதச் சேதாரமுமில்லாமல், நாராயண நாமத்தை உச்சரித்துக் கொண்டு நிற்கிறான். ஹோலிகாவோ சாம்பலாகிக் கிடக்கிறாள். ஹோலிகாவுக்குக் கிடைத்த வரத்தின் படி, நெருப்புக்கு அவளை மட்டும் தனியே எரிக்கும் சக்தி கிடையாதே தவிர அவள் இன்னொரு நபருடன் இருந்தால் அந்த வரம் வேலை செய்யாது. வரம் வாங்கும்போதே நிபந்தனைகளைச் சரியாகக் கேட்டு வாங்காததன் பலனாக, வரமும் ஹோலிகாவும் காலாவதியாகிப் போனார்கள்.
இதுதான் ஹோலியும்,பெயரும் வந்த கதை. ஹோலி வடக்கே இரண்டு நாள் பண்டிகையாகக் கொண்டாடப் படுகிறது. முதல் நாள் ச்சோட்டி ஹோலி எனவும், இரண்டாம் நாள் படீ ஹோலி எனவும் வழங்கப் படுகிறது. முதல் நாள் காலையிலேயே ஒவ்வொரு குடியிருப்புகளிலுமோ, தெருக்களிலுமோ ஏற்பாடுகள் ஆரம்பித்து விடும். தோகையுடன் கூடிய கரும்பும், இலைகளுடன் கூடிய சின்ன மரக்கிளை ஒன்றும் முதலில் நடப்படும். பச்சை மரம் ஹோலிகா உயிரோடு எரிந்ததைக் குறிக்குமாம். அதன் பின் அதைச் சுற்றிலும், பெரிய பெரிய மரத்துண்டுகள், விறகுகள், வரட்டி, எல்லாம் அடுக்கப்படும். கடைசியாகப் பூமாலையொன்றும், ஹோலிக்கென்றே கிடைக்கும் சர்க்கரை மாலை ஒன்றும் போடப்படும்.
ஹோலிக்கு நைவேத்தியமாகப் பூரண்போளி, பாப்டி, குஜியா மற்றும் அவரவர்க்கு வசதிப்பட்டதைச் செய்து, ஆரத்தித் தட்டில் அடுக்கி கொண்டு சென்று பூஜை செய்வார்கள். சில இடங்களில் சத்ய நாராயண பூஜை செய்வதுமுண்டு. பின் கலசத்திலிருக்கும் நீரை அடுக்கப்பட்டிருக்கும் மரத்துண்டுகளைச் சுற்றி வலம் வந்து கொண்டே, தரையில் ஊற்றிக் கொண்டு வருவார்கள். கடைசியாகத் தட்டிலிருக்கும் தேங்காயையும் அதில் போட்டு விடுவார்கள். கூட்டத்தில் வயதில் பெரியவரை அழைத்து, அவர் கையாலே நெருப்பிடச்செய்வார்கள். இந்த நிகழ்ச்சிக்கு ‘ஹோலிகா தகன்’ என்று பெயர். நெருப்பு எரியும் போது, எல்லோரும் ஒருவரை ஒருவர்,’ஹோலி ஹை’ என்று சொல்லி வாழ்த்திக் கொள்வார்கள். ஆரத்தி தட்டிலிருக்கும் மஞ்சள், குங்குமம், குலால், போன்றவற்றை ஒருவருக்கொருவர் இட்டுக் கொள்வார்கள். இன்று கலர்ப் பொடியைச் சின்னக் குழந்தைகள் மட்டும் பூசிக்கொள்வார்கள். நெருப்பிலிடப்பட்ட சுட்ட தேங்காய் துண்டுகளாக்கப் பட்டு மறுநாள் எல்லோருக்கும் பிரசாதமாகக் கொடுக்கப்படும்.
மறுநாள் எப்போது விடியுமென்று காத்துக் கொண்டிருந்தவர்களெல்லாம் காலைச்சிற்றுண்டி முடித்ததும், கிளம்பி விடுவோம். முகம்,கை கால்களில் தேங்காயெண்ணெய் தேய்த்துக் கொண்டால் நம்மீது பூசப்படும் கலர்ப்பொடிகள் ஒரு அளவுக்கு மேல் ஒட்டாது. இப்போதெல்லாம் மாசு ஏற்படுத்தாத இயற்கைச் சாயம் கலந்த கலர்ப்பொடிகள் வழக்கத்தில் வந்து விட்டன. ஒருவர் வீட்டிலிருந்து புறப்பட்டு, இன்னொருவர் வீட்டுக்குப்போய் அவரை அழைத்துக் கொண்டு அடுத்தவரை அழைக்கச் செல்லும் காட்சி நம் ஆண்டாளம்மா மார்கழி நீராடக் கிளம்பிய மாதிரியே தோன்றும்.
குடியிருப்புகளில் எல்லோருக்கும் பொதுவான முறையில் கலர்ப்பொடிகள், சிற்றுண்டிகளெல்லாம் தயார் செய்யப் பட்டிருக்கும். பண்டிகைக்குப் பொருத்தமான பாடல்கள் ஒரு பக்கம் ஒலிபெருக்கி மூலம் கசிந்து கொண்டிருக்கும். இன்றைக்கு கையில் யார் அகப்பட்டாலும் அவர்களுக்கு வண்ணம் பூசி விடுவார்கள். சில சமயங்களில் நம் பிள்ளைகளையே குரலை வைத்துத்தான் அடையாளம் காண வேண்டியிருக்கும். மிகையாக இருந்தாலும் இதுதான் உண்மை. சில இடங்களில் ஹோலிப்பண்டிகையின் போது ஸ்பெஷலாக ‘தண்டாய்’ என்ற பானத்தையும், ‘பாங்’ என்று சொல்லப்படும் ஒரு வகை பானத்தை சில ஆண்களும், அருந்துவார்கள். ‘பாங்க்’க்கைக் குடித்தவர்கள் போதை தலைக்கேறிய நிலையில் செய்வதையோ இல்லையெனில் சொல்வதையோ திரும்பத்திரும்ப செய்து கொண்டே இருப்பார்கள். உதாரணமாக சிரிக்க ஆரம்பித்தால் அன்று முழுவதும் சிரித்துக் கொண்டே இருப்பார்களாம்.
சுற்றுப்புறச் சூழலை மாசு படுத்தாத முறையில் சமீப காலமாக ஹோலி கொண்டாடப் பட்டு வருகிறது. ஹோலிகா தகனுக்காக நிறைய மரங்கள் வெட்டப்படுவதால் மரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இப்பொழுது இருக்கும் மாசுபட்ட சூழலுக்கு, இன்னும் மரங்கள் குறைந்தால் ஆபத்தாயிற்றே!. ஆகவே நன்றாக இருக்கும் மரங்களை வெட்டாமல், காய்ந்த, முறிந்த மரங்களைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. எங்கள் குடியிருப்பிலும் மழைக்காலத்தின் பின் அதிக வளர்ச்சியின் காரணமாக நறுக்கியும், வெட்டியும் விடப்படும் மரக்கிளைகள் ஹோலிப்பண்டிகையின் போது எரிக்கப் படுவதற்காகக் காய வைக்கப்பட்டு, சேமித்து வைக்கப்பட்டு ஹோலியின் போது உபயோகப் படுத்தப் பட்டன. பொதுத்தேர்வு நேரமாதலால் அலறும் ஒலி பெருக்கிகளைத் தவிர்த்தும், இயற்கைச் சாயங்களைக் கலந்து தயாரிக்கப் பட்ட வண்ணப்பொடிகளை உபயோகப்படுத்தியும் சுற்றுப்புறத்துக்கு ஊறு விளைவிக்கா வண்ணம் கொண்டாடினோம்.
வண்ணம் பூசும் படத்திற்கு நன்றி:http://www.4to40.com/greetings/Holi.asp?counter=10
தமிழ் நாட்டு ஹோலிபண்டிகை பார்த்திருக்கிறீர்களோ? நான் பார்த்திருக்கிறேன்.இன்னம்பூரான்10 02 2012
வாங்க இன்னம்பூரான் ஐயா,
தாங்கள் கண்ட தமிழ்நாட்டு ஹோலிப்பண்டிகையைப் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொண்டால் நாங்களும் கண்டு இன்புறுவோமில்லையா..