நாடக அனுபவங்கள் – 6


திவாகர்

ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியும் தாஸும் பார்வதியின் வீட்டுக்கே போய் அவளை பெண் பார்ப்பதற்காகவும் அதே சமயம் இந்தப் பெண் தாஸின் கோரிக்கைக்கு ஒப்புக்கொள்கிறாளா என சோதிக்கவும் செல்கிறார்கள். அந்தச் சமயம் வீட்டில் பார்வதியும் தனியே இருக்கிறாள். இந்த தாஸுக்கு ஒரு வேண்டுதல் உண்டு. கலியாணம் செய்துகொண்டால், காதலித்து அந்தக் காதலை நன்றாக அனுபவித்து காதலில் ஒருவரை ஒருவர் நன்றாகப்புரிந்த பின் மணம் செய்து கொள்ளவேண்டும் என்பது அவன் வாழ்நாள் விருப்பம். அவன் துரதிருஷ்டம் அவனுக்கு இந்த காதல் செய்யும் பெண்ணே கிடைக்கவில்லை. இப்படித் தோல்வி மேல் தோல்வி கண்ட தன் பக்தனான இந்த தாஸுக்கு இரங்கி, புவி மீதும் இறங்கி, தானே துணை நின்று நல்லதொரு காதல் செய்யும் பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதாக வரம் அளித்த ஸ்ரீராமர் அவனுடன் கூடவே பார்வதி வீட்டுக்கும் வந்துவிடுகிறார்.

அத்துடன் ஏற்கனவே ஒரு கண்டிஷன் உண்டு. தன் சக்தியாலோ, மாயை செய்தோ எந்தப் பெண்ணையும் இவனுக்குக் காதலியாக கிடைக்க வழிசெய்யமாட்டேன், ஆனால் பக்தனின் நல்ல நல்ல குணங்களை சரியான விதத்தில் எடுத்துரைத்து அதன் மூலம் அந்தப் பெண்ணுக்கு இவன் மேல் காதல் வரச்செய்து அந்தக் காதல் கனிந்து கலியாணத்திலும் முடியும் வரை அவனுக்குத் துணை இருப்பதாக ஸ்ரீராமரின் வரம் அவனுக்கு வாய்க்கிறது. ’சரி, அப்ப வா, பக்கத்துத் தெருவில் ஜானகி என்றொரு அழகான பெண் இருக்கிறாள். அவள் என்னைக் காதல் செய்ய வழிவகை செய், என்கிறான் தாஸ்.. இராமருக்குக் கோபம் வருகிறது.. இதோ பார்.. ஜானகி, மைதிலி, சீதா எனும் பெயருள்ள பெண்களையெல்லாம் தேர்வு செய்தால் நான் உனக்கு உதவமாட்டேன்.. ஏனெனில் அவர்களெல்லாம் என் மனைவியின் பெயர்கள்’ என்கிறார். தாஸுக்கும் மனவருத்தம்.. ’என்னது இது, இனிமே காதலிக்கணும்னா கூட பெண்ணோட பேரையும் எச்சரிக்கையாகக் கேட்டு அது சரியானு பார்த்து காதல் செய்ய வேணுமோ’ என்கிறான். கடைசியில் ’பார்வதி ந்னு எங்க குடும்பத்துக்குத் தெரிஞ்ச பொண்ணு மூணாவது தெருவிலே மூக்கும் முழியும் அழகா இருப்பா.. அவள் பேர் பரவாயில்லையா?’ தயங்கித் தயங்கிக் கேட்கிறான்.. ராமர் ‘பார்வதி என் தங்கையின் பெயர்.. வா.. அந்தப் பெண்ணைக் கண்டு வருவோம்’ என்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் பார்வதியின் வீட்டுக்கு இவர்கள் செல்கிறார்கள். பார்வதிக்கும் கலியாணம் செய்ய அவர்கள் பெற்றவர்கள் ஜாதகங்களை ஏற்கனவே பறிமாறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்தக் காதல் கண்டிஷனுக்கு பார்வதி ஒத்து வந்தால் மட்டுமே கலியாணம் என்ற நம் தாஸின் சீரிய கொள்கையை முடித்து வைக்க முயல்கிறார் ஸ்ரீராமர். முதலில் சாதாரணமாக தான் யார் என்பதைச் சொன்னவுடன் தாஸ் தன்னுடன் வந்த ஸ்ரீராமரையும் அவளுக்கு அறிமுகம் செய்து வைக்கிறான்.

பார்வதி: நீங்க ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியா.. சார், ராமர் வேஷம் போட்டாக்கூட நல்லாதான் போட்டிருக்கீங்க.. ஆனால் இந்த வில்லுதான் இடிக்குது.. ராமர்னா பொதுவா வில்லும் கூடவே வேணும்.. ஆனா இப்போ எதுக்கு வில்.. யுத்தம் செய்யறதுக்குதானே வில்லும் அம்பும் வேணும்.. இவர் இங்கே என்ன யுத்தம் செய்யவா வந்தார்…

ஸ்ரீராமர்: பெண்ணே, மிகச் சரியாகப் பேசுகிறாய். நீ புத்திசாலி.

தாஸ்: அய்யோ.. இவர் சாட்சாத் ஸ்ரீராமச்சந்திரமூர்த்திதான்..

பார்வதி: நான் இல்லேனு சொல்லலையே.. ஸ்ரீராமச் சந்திரமூர்த்தின்னா சாதாரண தெய்வமா.. மனிதன் எப்படில்லாம் வாழ வேணும்னு மனிதனுக்கு எடுத்துக் காட்டிய உயர்ந்த தெய்வம் அவர். இல்லையா ராமர் சார்..

இப்படிப் பேசிக்கொண்டே போகும் பார்வதியை ஸ்ரீராமனுக்கு மிகவும் பிடித்து விடுகிறது.. தன் தங்கையைப் போலவே இவளும் அன்பில் மிகக் கெட்டி என உருகுகிறார். தாஸ் இராமரை நெருக்குகிறான். ‘இப்படியே பேசிக்கொண்டிருந்தால் எப்படி.. என் காதலைப் பற்றி ஏதாவது பேசி அவளோட சம்மதத்தை வாங்கப் பார்’ என நெருக்குகிறான். ‘சடாரென இவளிடம் காதல் என்று சொன்னால் அது எதிர்மறையாகப் போய்விடக்கூடும். அதனால்தான் சற்று விட்டுப்பிடித்துப் பிறகு பேசுகிறேன், என்கிறார் ராமர்.. ‘ம்ஹூம்.. இப்படியெல்லாம் பேசினால் காரியம் ஆகாது.. இப்போ நானே ஆரம்பிக்கிறேன் பார்..; இப்படி ராமரிடம் சொல்லிவிட்டு பார்வதியிடம் சென்று தாஸ் பீடிகை போடுகிறான்.

தாஸ்: பார்வதி.. அது சரி, இந்தக் காதல், அது, இது பற்றியெல்லாம் என்ன நினைக்கிறே?

பார்வதி: ஆஹா.. காதல்.. எனக்கு ரொம்ப பிடித்த சப்ஜக்ட் இந்தக் காதல்தான் தாஸ். காதல்னாலே அப்படியே உருகிடுவேன்.

தாஸ்: அப்படியா.. (ராமரிடம்) பார்த்தியா.. எவ்வளோ சாமர்த்தியமா பேசி, போட்டு வாங்கினேன்.. இப்படித்தான் பேசணும்.. இனிமே பாரு.. சக்ஸஸ்தான்.. நானே ஹேண்டில் பண்ணிக்கிறேன்.. (பார்வதியிடம்) காதல் பற்றி பேசப் பேச ஜாலியா இருக்கு.. உனக்கு இன்னும் என்னவெல்லாம் தெரியும் இந்தக் காதல் பற்றி..

பார்வதி: என்ன தாஸ் இப்படி சொல்லிட்டீங்க… இதோ ராமர் இருக்காரே.. இவரோட காதலையே எடுத்துக்குங்களேன்.. பாருங்க.. ’அண்ணலும் நோக்கினான்.. அவளும் நோக்கினாள்’ ந்னு ஒரே வரியிலேயே காதல் காவியமே இவங்களாலே உருவாச்சே.. காதல்னாலே எனக்கு சீதா ராமர் காதல்தான் உடனே ஞாபகம் வரும்.. ஏன் தெரியுமா..

ராமர்: அடாடா.. எத்தனை அருமையாகப் பேசுகிறாய் பார்வதி.. நீ வாழ்க!!

தாஸ்: ஐய்யோ பார்வதி, சீதையும் ராமரும் எங்கே காதல் பண்ணிக் கிழிச்சாங்க.. அந்த விசுவாமித்திர முனிவர் பார்த்து செஞ்சுவெச்ச கலியாணம் அது..

பார்வதி: தாஸ் ஸார்.. சீதா ராமர் காதல் பத்தி உங்களுக்கு நிறைய தெரியாது போல.. நல்லா யோசிச்சுப்பார்த்தீங்கன்னா அவங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் உள்ளுக்குள்ளேயே ரொம்ப வருஷம் காதலிச்சிருக்கணும்.. அதனாலதான் அந்த மிதிலாபுரில கல்யாணம் செய்யற வேளைல ஒருத்தருக்கொருத்தர் பார்த்துக்கறச்சே எப்படியெல்லாம் உணர்வுகள் பொங்கி வழிஞ்சதோ.. கடைசில சீதையை ராவணன் தூக்கிண்டு போன அந்தக் கடைசி வருஷம் ராமர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கார், அவருக்கோசம் சீதையும் உட்கார்ந்த இடத்திலேயே எப்படில்லாம் வருத்தப்பட்டுண்டே இருந்தா.. இதுவல்லவா காதல்.. என்ன ராமர் சார்.. நான் சொல்றது சரியா?

ராம்ர்: ஆஹா பார்வதி, என்னை எங்கேயோ அழைத்துக் கொண்டுபோய்விட்டாய்..

பார்வதி: ஐய்யோ. நானா சார்..

ராமர்: நீ அந்த பழைய நினைவுகளை கிளப்பிவிட்டாய் பார்வதி.. எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கிவிட்டாய்..: தங்காய்.. பார்வதி.. என்னைக் கவர்ந்தவளே.. கேள்.. உனக்கு என்ன வரம் வேண்டும்? அது சாதாரணமாக நடக்க முடியாத விஷயமானாலும் மாயம் செய்தோ, என் சக்தியைக் கொண்டோ அது உனக்குக் கிடைக்கச் செய்வது என் பொறுப்பு..

தாஸ்: (ராமரிடம் நெருங்கி) இதென்ன நியாயம் ராமா.. எனக்கு மட்டும் மாயம் செய்யாமல், சக்தியைக் காட்டாமல், பேசித் தீர்த்தே உதவி செய்வேன் என்று சொல்லிவிட்டு, பார்வதிக்கு மட்டும் இப்படி ஒரேயடியாக மாற்றிச் சொல்கிறாயே..

ராமர்: பக்தா!.. பொறு.. பொறு.. அவள் என்னைக் கவர்ந்து விட்டாள்.. அவளுக்கு வரம் கொடுப்பது என் பொறுப்பு

பார்வதி (அருகே வந்து) ரொம்ப தேங்ஸ் ராமா! எனக்குக் கூட ஒரு வரம் கேட்கணும்னு ஆசை..

ராமர்: கேள் தங்காய்! ஏன் தயக்கம்.. என்னை உன் அண்ணனாக நினைத்துக் கேள்!

பார்வதி: வேற ஒண்ணுமில்லே.. எங்க ஆபிஸ்ல ஒரு முசுடு மேனேஜர்.. ஆனா ரொம்ப நல்ல மனசு.. இவரைக் கலியாணம் பண்ணிக்கணும்னு ஆசை.. ஆனா எப்படிச் சொல்றதுன்னு தெரியலே.. பாருங்க, இவரைக் கலியாணம் பண்ணினா பல சௌகரியங்கள் இருக்கு, மாமனார், மாமியார், நாத்தனார் தொல்லை இல்லே.. நல்ல மனசுங்கிறதனாலே வாழ்நாள் பூரா நம்ம காலடியிலேயே கிடப்பார். ஆனா இந்த மனுஷன் என்னை ஏறெடுத்தும் பார்க்க மாடேங்கறார் ராமா.. நீதான் ஏதாவது செஞ்சு.. எப்படியாவது அந்த மானேஜரை எனக்கே கலியாணம்..

ராமர்: இவ்வளவுதானே.. அப்படியே உன் எண்ணப்படி ஆகுக! நாளை காலை உன் அலுவலகம் செல். அந்த மனிதன் உனக்காகவே தவம் கிடப்பது போலச் செய்து காட்டுகிறேன்.. உனக்கு உதவுவது என் கடமை சகோதரி..

தாஸுக்குப் புரிந்து விட்டது.. வெளியே ராமருடன் வரும்போது வருத்தப்பட்டுக்கொள்கிறான்.

தாஸ்: ம்ம்.. எல்லாத்துக்கும் கொடுத்து வெச்சுருக்கவேணும்.. நாம ஒண்ணு நினைச்சா தெய்வம் வேறு ஒண்ணு நினைக்குது..

ராமர்: (சிரித்துக் கொண்டே) தவறு பக்தா.. நீயும் தெய்வமும் ஒன்றைத்தான் நினைத்தோம். ஆனால் அந்தப் பார்வதிதான் வேறொன்றை நினைத்துவிட்டாள்.
********
இது ’காதல் கடிதம்’ நாடகத்தின் ஒருபகுதி.. அதென்ன ’காதல் கடிதம்’ என்று நாடகத்துக்குப் பெயர் என்றுதானே கேட்கிறீர்கள்.. விசேஷம் வேறொன்றுமில்லை.. நம் கதாநாயகன் தாஸ் இருக்கிறானே கைராசிக்காரன் என்று பெயர் எடுத்தவன்.. இவன் எந்தப் பெண்ணுக்குக் காதல் கடிதம் கொடுக்கிறானே அந்தப் பெண்ணுக்கு அடுத்த நல்ல முகூர்த்தத்தில் நல்ல இடமாக மாப்பிள்ளை அமைந்து கலியாணம் ஆகிவிடுவதுதான் அவன் கைராசி.. இதன் ரகசியத்தை அறிந்த சில பெண்கள் வாலண்டியராக அவனிடம் சென்று காதல் கடிதம் கேட்டதுண்டு. (இதை அவனே வருத்தப்பட்டுக்கொண்டு நண்பனிடம் சொல்வான்) ஆனாலும் நம் கதாநாயகன் ஓய்ந்ததில்லை.. அவன் வாழ்க்கை லட்சியம் காதலித்துதான் கலியாண்ம்.. அதற்காக ரொம்பவே முயற்சி செய்தும் யாரேனும் சிக்கினால்தானே.. இந்தக் காதல் கடிதம் எழுதும் நம் கதாநாயகனுக்கு இன்னொரு பழக்கமும் உண்டு. தினமும் இரவு தூங்கும்போது ஆயிரம் முறையாவது ராமநாமம் எழுதுவதுதான்.. ஒருநாள் இதையும் குறை சொல்லிக்கொண்டே முடித்து வைக்கிறான் – ’ராமா, ராமா..ராமா.. ஆமாம்.. எத்தனை தடவை உன் பேர் எழுதினா என்ன.. நீ வரவா போற? இல்லே.. வந்து என் காதலுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணப் போறியா?.. ஏதோ இந்த காபி குடிக்கிறமாதிரி, இதுவும் வழக்கமா போயிடுச்சு.. அவ்வளவுதான்’ – எனச் சொல்லி முடிக்குமுன் அந்த ஸ்ரீராமரே அவன் முன் பிரத்யட்சமாகிறார்.. தாஸ் ஆச்சரியமாகப் பார்க்கிறான்.. முதலில் அவனுக்குப் பயமாக இருந்தது. ஆனால் போகப்போக தெளிவு வருகிறது..

தாஸ்: நீ.. நீங்க..

ராமர்: நானேதான் பக்தா.. நீ அலுத்துக் கொண்டாயே.. ‘கூப்பிட்டால் வரவா போகிறாய்’ என.. உன் சந்தேகத்தைத் தீர்க்க வந்த தசரதபுத்திரன் நானேதான்.. என்ன அப்படிப் பார்க்கிறாய்.. என்னை ஸ்ரீராமச்சந்திரன் என பூவுலகில் அழைப்பார்கள்.

தாஸ்: அட, ஸ்ரீராமர் போல வேஷம் போட்டு இந்த நைட் நேரத்துல வந்து ஏன்யா பயமுறுத்தறே?

ராமர்: வேஷம் நான் ஏன் போடவேண்டும் பக்தா? உண்மையிலே நான் ஸ்ரீராமன் தான்..

தாஸ்: இந்தமாதிரி சுத்தத் தமிழ்லலாம் பேசினா நான் ஏமாந்துடுவேன்னு நினைச்சியா..

ராமர்: தெய்வங்கள் மனிதரிடம் பேசும்போது இப்படி சுத்தத்தமிழில்தான் பேசவேண்டும். சிவனாராக நடித்த சிவாஜியின் திருவிளையாடல் திரைப்படம் பார்த்திருக்கிறாய் அல்லவா.. அதில் தமிழ் இப்படித்தான் பேசப்படும்.

தாஸ்: அய்யோ.. ஒண்ணுமே புரியலே.. தெய்வம்கிறே.. சிவாஜிங்கிறே.. திருவிளையாடல்ங்கிறே..

ராமர்: சரி, வேண்டுமானால் என்னை பரீட்சித்துப் பாரேன். உன் சந்தேகம் தீரும் வரை..

தாஸ்: எதுக்குப்பா. நான் எந்தப் பரிட்சையுமே சரியா எழுதி பாஸ் பண்ணலே.. ஆளை விடு..

ராமர்: சரி, விடு.. நீ ஏதோ கூப்பிட்டாயே என்றுதான் வந்தேன்.. உன் காதல் நிறைவேற உதவி செய்யலாம் என வந்தேன். வேண்டாமென்றால் போய்விடுகிறேன்..

தாஸ்: இரு.. இரு.. என் காதல் நிறைவேத்திவைக்க வந்தியா.. அப்ப நீ நீங்க நிஜமாவே ஸ்ரீராமச்ச்சந்திர மூர்த்திதானா..

ராமர்: ஆமப்பா.. நீ இதுவரை எழுதிய 187 காதல் கடிதங்கள் மேல் ஆணை.. நான் நானேதான்.. போதுமா..

தாஸ்: ஆஹா! 187 கடிதங்கள்.. ஆமாம்.. எவ்வளோ சரியாச் சொல்லறே!

ராமர்: வேண்டுமானால் உன் முதல் காதல் கடிதம் கொடுத்த போது உன் முகத்தில் அறை கொடுத்த முத்தம்மாவிலிருந்து க்டைசியில் சென்ற மாதம் உன் கையால் சந்தோஷமாகக் கடிதம் வாங்கிக்கொண்ட நித்யா அடுத்தவாரமே அவள் கல்யாணப் பத்திரிக்கையோடு தித்திப்புப் பெட்டியும் கொடுத்தாளே.. இவர்கள் அத்தனை பேர் மீதும் ஆணையாகச் சொல்கிறேன்.. நான் ராமனேதான்

தாஸ் அப்படியே ராமர் காலிலே விழுந்து எழுகிறான்.. ராமா.. நீ ராமனேதான்.. ராமனேதான்.. இவ்வளோ சரியா என் சரித்திரத்தையே புட்டுப் புட்டு வெக்கறியே.. நீ ராமன் தான்.. (அப்படியும் கொஞ்சம் உற்றுப்பார்த்து) அது சரி, இந்த வில்லும் அம்பும் இல்லாம நான் ராமரை எந்தப் படத்துலேயும் பார்த்ததில்லையே..

ராமர் (சிரித்து விட்டு) வில்லும் அம்பும் இங்கு எதற்கப்பா.. நான் என்ன போர் செய்யவா வந்தேன்.. உனக்கு உதவி புரிய அல்லவா வந்தேன்..

தாஸ்: உதவியா.. என்ன உதவி..

ராமர்: அட என்னப்பா நீதானே சந்தேகமாய் கேட்டாய்.. இந்த ராமர் வந்து உதவி செய்யவா போகிறார்’ என்று.. அதனால்தானே வந்தேன்.. உதவியென்றால் உனக்கு ஒரு நல்ல பெண்ணைப் பார்த்து அவளுக்கு உன் மேல் காதல் வருமாறுச் செய்து.. பிறகு அவளே உன்னை மணமுடிக்கவும் வைக்க உதவி செய்வதாக உள்ளேன்..

தாஸ்: ஆஹா.. ராமர் என்றால் ராமர்தான்.. எத்தனை பெரிய உதவி.. நானும்தான் 187 காதல் கடிதம் எல்லாம் எழுதி எவ்வளோ முயற்சி செய்யறேன்.. பதிலுக்கு ஒரேயொரு காதல் கடிதம்.. ஊம்ஹூம்.. யாரும் தரமாட்டேங்கிறாங்கப்பா.. அப்படி ஒரு காதல் கடிதம் வாங்கிக்கொடுத்து எங்க காதலையும் நிறைவேத்தி வெச்சேன்னா.. உனக்கு 108 தேங்காய் உடைக்கிறேன்ப்பா.. ஓ.. சாரி.. அது பிள்ளையாருக்கு இல்லே..

ராமர்: (சிரித்து விட்டு) பக்தா.. பிள்ளையாருக்கு உடைத்தாலும் அது எனக்கே வந்து சேரும். அதைப் பற்றி கவலை வேண்டாம்..

******
இப்படித்தான் ஆரம்பமாகிறது நம் கதாநாயகனின் காதலி வேட்டை.. ஆனால் தாஸின் தலையெழுத்து வேறு மாதிரி அமைந்ததோ என்னவோ.. ராமருடனே இவன் போனாலும் இவனுக்குக் கிடைத்தது என்னவோ தியாகப்பட்டம்தான்.. போகும் இடத்திலெல்லாம் இந்த ராமர் அந்தப் பெண்களுக்கு வரங்களும் கொடுத்து ஆனந்தமடைகிறார். சரி, எப்படித்தான் ராமர் இவன் கோரிக்கையை நிறைவேற்றி வைக்கிறார்.. அதையும் பார்த்துவிடுவோமே..

(என் நாடகப் புகைப்படங்கள் தற்சமயம் கைவசமில்லை. ஆதலால் வில்லுடன் ராமரையும் வில்லில்லாத ராமரான என். டி. ராமாராவையும் பதிப்பித்துள்ளேன்.)

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “காதல் கடிதம்

 1. அருமை அருமை…மிகவும் சுவாரசியமாக செல்கிறது.

  முடிவுதான் என்ன சார்?

 2. NTR garu place swami. avar aathma ungalai vazhthattum. rasiththu padiththom. continue pleass.

 3. SARI SAR, MARUPADI YEPPA NADAGAM PODALAM VIZAG LE . SEEKARAM SOLLUNGA.

  KARPANAIYE KARPANAIYE………………..WITH BEST REGARDS
  …RAJENDRAN

 4. Raman Eththanai Ramanadi.
  Sir, Sri Rama Navami approaching.
  Your Drama also suits to the time.
  Hey Ram Hare Ram
  Devan

 5. இந்த நாடகத்தில் தாஸாக நடித்த பெருமை எனக்குண்டு. வாழ்க திவாகர்.

  ராஜேந்திரன் : வேறு நாடகமா? இப்பெல்லாம் நாடகம் எழுத திவாவிற்கு நேரமில்லை. சரித்திர நாவலாசிரியராகிவிட்டார். நாடகம் பார்க்க கூட்டம் வராது என்று நமது சங்கமும் கூறி விட்டது. பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *