பிழைத்துக் கிடக்கிறோம்

சாந்தி மாரியப்பன்

மனிதம் விற்று நடத்திய
சுயநல வியாபாரத்தில்
மிஞ்சியவை
மனிதனின் கணக்கில் லாபமாகவும்
இயற்கையின் கணக்கில் நட்டமாகவும்
வரவு வைக்கப்பட்டு விட.

கதிர்வீச்சு அழித்திட்ட
எங்கள் குழந்தைகளின் நினைவுகளைச்
சுமந்து கொண்டு..
சோலைகளிலும் வீட்டு முற்றங்களிலும்
விட்டு விடுதலையாய்த்திரிந்த
நாட்களை அசை போட்டபடி
அலைந்து திரிகின்றோம் அங்குமிங்கும்
பகடைகளாய்,
நீங்கள் ஆடும் சதுரங்கத்தில்..

சொந்த மண்ணிலேயே அகதிகளான
எங்கள் அபயக்குரல்கள்
எதிரொலிக்க வழியின்றி
எங்கள் அலகினுள்ளேயே
உங்கள் செவிகளை எட்டாவண்ணம்.
உறைந்து போய் விட

எங்களுக்கான வாழ்வாதாரங்கள்
கலைக்கப்பட்டு விட்ட பின்னும்
பிழைத்துக் கிடக்கிறோம்
ஒரு பிடி உணவிலும் ஒரு துளித் தண்ணீரிலும்
பச்சையம் மறந்த
இரும்புக்கிளைகளிலுமாக..

2 thoughts on “பிழைத்துக் கிடக்கிறோம்

 1. மனிதம் மறந்த செயல்களால்
  இயற்கை மறையும்
  அபாயம்.. நன்று.
  இனி,
  செல்போனில் மட்டும்-
  குக்கூ.. குக்கூ…!
        -செண்பக ஜெகதீசன்…

 2. தோழி கவிதை நன்று. தங்களது வலைப்பூவிலேயே பின்னூட்டம் அளிக்க முயன்று இயலாமல் போனதால் இவ்விடம் வந்தேன். குருவிகளின் குரலில் கவிதை ரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. ஆனால் ஒரு சிறு ஐயம்.
  “சொந்த மண்ணிலேயே அகதிகளான
  எங்கள் அபயக்குரல்கள்
  எதிரொலிக்க வழியின்றி
  என் அலகினுள்ளேயே
  உங்கள் செவிகளை எட்டாவண்ணம்.
  உறைந்து போய் விட”

  இவ்விடத்தில் கவிதையின் மொழி முழுவதும் பன்மையில் இருக்க “ என் அலகினுள்ளே” என்னும் இடத்தில் “ எங்கள் அலகினுள்ளே” என்றிருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்குமே !

  கவிதையை மிகவும் ரசித்தேன். ஆதலால் தான் சொல்லத் தோன்றிற்று.

  வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க