திரை கடல் ஓடியும் அனுபவம் தேடு (பகுதி-3)

விஜயகுமார்

முந்தைய பகுதியை வாசிக்க:

“சந்தனம் தேச்சாச்சு மாமா” ன்னு பாட்டு. ஆனால் அதனால் வந்தது சண்டை !!. ராஜ்கிரண் மற்றும் வனிதா விஜயகுமார் நடித்த ‘மாணிக்கம்’ படத்தில் வரும் இந்தப் பாடலால் இப்படி ஒரு பிரச்சனை வரும் என்று யாராவது சொன்னால் நம்புவீங்களா?

மாலத்தீவில் நான் பணியாற்றிய ஃபாக்டரி இருந்த தீவு மிகவும் சிறியது. தலைநகரையே இரண்டு மணி நேரத்தில் சுற்றி வந்து விடலாம் என்றால் இங்கே ஒரு பக்கம் நின்றால் அந்த பக்கம் கரை தெரியும்! இரண்டே இரண்டு நிறுவனங்கள் தான் இருந்தன – ஒன்று எங்கள் கார்மெண்ட்ஸ், மற்றொன்று அலங்காரக் கடல் மீன்களைப் பிடித்து அவைகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனம். இதைத் தவிர அந்த தீவின் மக்கள் மற்றும் அவர்களது இருபது சிறு குடிசைகள் கொண்ட குடியிருப்பு மட்டுமே. இப்படி இருக்கும் தீவுகளுக்கு அடொல் என்று பெயர். ஒவ்வொரு அடொலுக்கும் ஒரு தலைவன் இருப்பான்.

கார்மெண்ட்ஸ் பாக்டரி என்றவுடன் உற்பத்தி சம்பந்தமான சவால்களைத்தான் சந்திக்க நேரிடும் என்று எதிர்பார்த்துச் சென்றேன். ஆனால் அங்கெ நான் எதிர்நோக்கிய சவால்கள் மேலோட்டமாகப் பார்க்கும்போது இந்தப் பாடல் சண்டையெல்லாம் வீண் சண்டை, அர்த்தமற்றவை என்றுதான் தோன்றும். என்னடா ஒரு பாடலால், அதுவும் இப்படி ஒரு பாட்டுக்காக அடி தடி கலவரம் வெடிக்கும் நிலைமை வரத் தேவையா என்று மட்டும் பார்க்காமல், அதன் பின்னால் இருந்த காரணத்தை அறிய நான் முயற்சி செய்யும்போது அவை பல ஆழ்ந்த உண்மைகளை எனக்குக் கற்றுக்கொடுத்தன.

அது நாள் வரை ஏறத்தாழப் பதினாறு ஆண்டுகள் கடைக்குட்டி என்று செல்லமாய் வளர்த்த பெற்றோரின் அறிவுரைகளையும் விட, நான்கு சுவருக்குள் பல கை தேர்ந்த ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்த பாடங்களை விட அந்த முதல் இரண்டு வாரங்களில் அந்தச் சிறிய தீவில் நானூறு மனிதர்கள் வகுப்பறையே இல்லாமல் சொல்லிக்கொடுத்த வாழ்க்கைப்பாடம் எத்தனையோ வலியது. அவை உண்டாக்கிய தாக்கம் இன்றும் நிலைத்து நிற்கின்றன.

சாதாரணமாக எப்போதுமே கோபிக்காத அம்மா, சேட்டை வலுக்கும்போது மட்டும் லேசாக அறிவுரை செய்யும் பாட்டி தாத்தா, பரீட்சை ரிப்போர்ட் கார்டு வரும்போது மட்டும் கண்டிக்கும் அப்பா, எதையும் எனக்கு விட்டுக் கொடுக்கும் அண்ணன், விளையாட்டில் செய்த சாகசங்களை ஏதோ பெரிய சாதனையை போலப் போற்றி புகழும் நண்பர் கூட்டம் என்று தொட்டிச் செடியாகவே “உலகம்” தெரியாத சராசரி இளைஞனாக வளர்ந்தவன் நான். கண்டிப்பாகப் பணத்தின் அருமை அறவே தெரியாத சினிமாவில் வரும் பணக்கார பார்ட்டி இல்லை. நான்கு பேர் இடுக்கி ஒரே லாம்ப்ரட்டா ஸ்கூட்டரில் சண்டே மாங்காடு போவதில் இருந்து, முடிந்தவரை ஹோட்டல்களில் சாப்பிடுவதை காட்டிலும் வீட்டிலேயே சாப்பிடுவோம் என்று சிக்கனத்தைக் கடைப்பிடித்த குடும்பம் தான் எங்களுடைய குடும்பம். வங்கிப் பணியில் அப்பாவும் அம்மாவும் இருந்ததால் டபுள் என்ஜின், என்றாலும் ஆடம்பர வாழ்க்கை இல்லை. அதே சமயம் எதற்கும் குறை இல்லாத வாழ்க்கை என்று தான் சொல்ல வேண்டும்.

அரசு வங்கியில் வேலை என்பதால் வேலைப்பளு, ஸ்ட்ரெஸ் என்ற வார்த்தைகளை வீட்டில் கேட்டது கூட கிடையாது. வசித்தது வங்கிக் குடியிருப்பு, அதனால் அனைவரையும் அனைவருக்கும் தெரியும். அந்தக் குடியிருப்பின் நான்கு வேலிக்குள்ளேயே கிணற்றுத் தவளையாகத்தான் பலரும் வளர்ந்தனர் – நான் உட்பட. அவ்வப்போது கிரிக்கெட் விளையாட அடுத்த குடியிருப்புக்கோ, மீனவ நண்பர்களுடனோ போட்டி போடுவதற்காக வெளியில் சென்றால் தான் உண்டு.

அப்பா ஏன் புதிய பேட் (bat) வாங்கித் தர இவ்வளவு யோசிக்கிறார், இரண்டு மணி நேரம் அழுது அடம் பிடித்தும் ஏன் கடையில் இருந்து தர தர வென இழுத்து சென்றார், பேட் (bad) அப்பா என்றெல்லாம் தோன்றும். ஆனாலும் பணம் என்பதன் முக்கியத்துவம் தெரியாமலேயே வளர்ந்தோம் என்று தான் சொல்ல வேண்டும். நிறையப் பணம் இருந்தால் ஆல் இன் ஒன் – பாய் கடையில் புதிய பந்து வாங்கலாம், கம்மியாக இருந்தால் நாடார் கடையில் கமர்கட் வாங்கலாம். அப்போது இந்தக் கடைப் பெயர் எல்லாம் அந்தக் கடையின் அடையாளமாகவே பார்த்தேன். ஜாதி , மதம் , மொழி , தகுதி , வசதி என்ற வேறுபாடுகள் என்னுடைய எண்ணத்தில் கூடத் தோன்றியதாக நினைவில்லை. கல்லூரியில் கொடுக்கும் பாக்கெட் மணி அனைத்தும் பெங்களூர் ஐயங்கார் பேக்கரி மற்றும் கான்டீன் ஒன்-பை-டூ தேனீர் வாங்கவே பத்தாது. காசு தேவை, அது அப்பாவிடம் கிடைக்கும், அவருக்கு மாதா மாதம் ஆபீசில் சம்பளமாக கொடுப்பார்கள், அதை அவர் ஒரு கால் கிலோ அல்வாவுடன் வாங்கி வருவார் என்பதுடன் அதன் ஆதிக்கம் நின்றது. இத்தகையச் சூழலிலிருந்து முதன்முறையாக உலகம் தெளிவதற்காக வெளியுலகம் சென்றவன் நான்.

அப்படி என்ன தான் நடந்தது அந்தப் பாக்டரியில், அந்தப் பாடலில். இப்படி ஒரு பில்ட் அப் கொடுக்கிறேனே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது . அங்கே வேலைபார்க்கும் பெரும்பாலானோர் டெய்லர்கள் தான் என்றாலும் – தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள், கேரளத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் இலங்கையில் இருந்து வந்தவர்கள் என்று மூன்று பெரும் பிரிவாக அவர்கள் இருந்தனர்.

பத்து மணிநேர ஷிஃப்ட் முறையில் வேலை. எய்ட்-டு-எய்ட். பாக்டரி ப்ளோரில் ஒலிபெருக்கி மூலம் வேலைப்பளு தெரியாமல் இருக்க சினிமாப்பாட்டு ஓடும். அதில் வந்தது பிரச்சனை. பத்து மணிநேரத்தைச் சரியாக மூன்றாகப் பிரிக்க வேண்டும், அதில் மாற்றி மாற்றி மூன்று பிரிவுகள் தேர்வு செய்யும் பாடல்களைக் குறிப்பிட்ட நேரம் போட வேண்டும். இதில் அவர்கள் ஏற்கனவே ஒரு அண்டர்-ஸ்டான்டிங்கில் இருந்தனர். ஆனால் பிரச்சனை ஓவர் டைம் செய்யும்போது வந்தது. இரண்டு மணி நேரம் ஓவர் டைம். அதில் தொடர்ந்த இரண்டாவது ஹவர் தமிழ் பாட்டு ” சந்தனம் தேச்சாச்சு மாமா” ஓடியது தான் பிரச்சனை ! அங்கே துவங்கியது வாக்கு வாதம்.

ஒரு மனிதன் விடாமல் பத்து மணி நேரம் வேலை பார்க்க முடியும் என்பதே அங்கே சென்ற பிறகு தான் தெரிந்தது. அதுவும் லைனில் இருந்தால் உட்கார்ந்தவுடன் தலை தூக்கஜ கூட நேரம் இருக்காது. வங்கியில் கையெழுத்து போட்டுவிட்டு ஹாய்யாக சென்று ஒரு டீ சாப்பிட்டு விட்டு நண்பர்களுடன் அரட்டை அடித்துவிட்டு சீட்டுக்கு வந்து குமுதம், கல்கி, ஆனந்தவிகடன் , ஜூவி என்று தான் இது வரை ” பணி” செய்வதை பார்த்திருந்தேன். ஆனால் இங்கோ தையல் இயந்திரங்களுக்கு போட்டியாக மனிதர்கள் வேலை பார்த்தனர். ஓய்வு என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. ஒவ்வொரு லைனுக்கும் ஒரு டார்கெட் கொடுக்கப்படும். அத்தனை துணி தைத்தாக வேண்டும். அதுவும் ஆர்டர் முடிக்கவில்லை என்றால் எல் சி முடிந்துவிடும். அப்புறம் கப்பல் மூலமாக அனுப்பாமல் பத்து மடங்கு அதிக விலையில் விமானம் மூலம் சரக்கை அனுப்பவேண்டும். முதலாளிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும். அதற்காக ஒவ்வொரு லைனுக்கும் ஒரு மேல் அதிகாரி இருப்பார். சர்கஸ் ரிங் மாஸ்டர் வேலை தான், கையில் சவுக்கு இல்லாதது தான் குறைச்சல். பொதுவாக இப்படி வேலை செய்யும் ஒருத்தருக்கு வீடு திரும்பியதும் அன்பான மனைவியை பார்த்தவுடனோ , குழந்தையுடன் விளையாடியதுமே சோர்வு நீங்கிவிடும். ஆனால் அந்த தீவில் நிலைமை வேறு. வீடுகளுக்குத் திரும்பினால் பெட்டி பெட்டியாக சுவரில் சாரம் கட்டியது போல படுக்கைகள், ஒரு சூட்கேஸ் – தர்ட் கிளாஸ் ஸ்லீப்பர் கோச்சில் பயணிப்பது போலவே இருக்கும்.

இப்படிப்பட்ட நிலையில் உள்ள அவர்களுக்கு இப்படி வேலை பார்க்கும்போது காதில் விழும் அந்த மெல்லிய இசை, அந்த இசை தட்டி எழுப்பும் நினைவுகள் அவர்களின் உடல் சோர்வை மட்டும் அல்ல மனச்சோர்வுக்கும் சேர்த்து மருந்து போட்டது. டெய்ல்ர்கள் என்பதால் அனைவர் கையிலும் ஒரு பெரிய கத்தரி இருந்தது …விட்டால் அங்கே என்ன நடந்திருக்கும் என்று நினைக்கவே இன்றும் பயமாக இருக்கிறது . பிரச்சனை சூடு பிடிக்கும் முன்னர் பேசி தீர்ப்பது நல்லது என்று உள்ளே சென்றேன். இப்படி கும்பல் கோஷ்டி சேரும்போது அதில் தலைவர்களை தனியாக விலக்க வேண்டும் என்று புரிந்தது. அப்படி மூவரை விலக்கி என் அறைக்குக் கூட்டிச் சென்றேன் .
மனச் சோர்வு அவ்வளவு இருக்குமா என்று நீங்கள் கேட்கலாம். நானும் கேட்டேன். அவர்களில் பலர் வீடு, வாசல், மனைவி , கணவன், குழந்தைகள் அனைத்தையும் விட்டு விட்டு பணம் திரட்ட அங்கு வந்த இரண்டு வருட ஒப்பந்த தொழிலாளிகள்.

முடிந்தவரை பல்லை கடித்துக்கொண்டு உதிரத்தை வியர்வையாக சிந்தி திரும்பிச் செல்லும்போது எடுத்துச் செல்லும் செல்வத்தால் முன்னம் இருந்ததை விட தங்களது வாழ்க்கைத்தரம் உயரும் என்ற நம்பிக்கையில் கடல் கடந்து வந்தவர்கள். போதாக்குறைக்கு அந்தத் தீவில் தொலைபேசி வசதி கிடையாது. பாக்டரி முழுவதற்கும் ஒரே ஒரு பாக்ஸ் லைன். அதில் வெள்ளிக் கிழமை அன்று மட்டும் (இஸ்லாமிய நாடு ஆதலால் வெள்ளிக் கிழமை விடுமுறை நாள் ) – உறவினர்கள் அழைக்கலாம். ஒருவருக்கு ஒரு மாதத்துக்கு ஒரு கால் மட்டுமே)!

என் மேஜைக்கு அருகில் அந்த லைன் இருந்தது. யாருக்காவது போன் வந்தால் சொல்லி அனுப்பி வரவழைப்பேன். சிலர் விடுமுறை என்றாலும் ஓவர் டைம் வேலை பார்ப்பார்கள். அப்படி அவர்கள் அங்கு வந்த அந்த ஒரு சில நிமிடங்கள் தங்கள் உணர்ச்சிகளை – ஒரு காதலன் தன் காதலியுடன் “சீக்கிரம் வந்து விடுகிறேன், நீ தைரியமாக இரு ” என்றும், ஒரு அம்மா தன் பிள்ளை அடுத்த வகுப்பு பாஸ் ஆகி விட்டான் என்ற செய்தியைக் கேட்டுப் பரவசப்படுவது, ஒரு கணவன் தன் மனைவியிடத்தில்.. இப்படிப் பல வகை உணர்ச்சிகள். எல்லாப் போன்கால்’ களும் நல்ல செய்தியாக இருக்காது. அதுவும் இலங்கையில் இருந்து கால் என்றாலே ஓடி வரும் மக்களின் இதயத் துடிப்பு, அப்பப்பா. இந்தப் பாழாய்ப் போன பணத்தைச் சம்பாதிக்க என்னவெல்லாம் தியாகம் செய்கிறார்கள் இவர்கள் என பணத்தின் மேலே ஒரு புதிய புரிதல் வர ஆரம்பித்தது. வெறும் பண்ட மாற்றுக் கருவியாக அவதரித்த இந்த மனிதனின் கண்டுபிடிப்பு அவனையே ஆட்டிப் படைப்பதை அங்கு அதிகமாக உணர்ந்தேன்.

அப்படி அவர்களின் துயரை மறக்கடிக்கவும், உடனடியாக அவர்கள் கவனத்தைத் திசை திருப்ப என்னடா வழி என்று யோசித்தேன். அப்போது சடக் என்று ஒரு ஐடியா. அவர்கள் தங்கும் விடுதி ஆண் பெண் என தனித் தனியாக இருக்கும். அவ்வப்போது அங்கு சென்று எல்லாம் சரியாக உள்ளதா என்று பார்க்க வேண்டும். மகளிர் விடுதி – பெரும்பாலும் கடவுள் படங்கள், தாய் தந்தையர் படங்கள், பிள்ளை குட்டி , கணவன் படங்கள் சுவர்களில் ஒட்டி இருக்கும். பசங்க விடுதியில் ரஜினிக்கும் மம்மூட்டிக்கும் போட்டி இருந்தாலும் வெற்றி பெற்றவர் என்னவோ ’ஷகீலா’ சேச்சி தான். வெறும் பாடலுக்கே இப்படி ஆடும் இவர்களை மயக்க சினிமா படம் தான் ஒரே வழி என்று தோன்றியது.

வெள்ளிக்கிழமை தோறும் மாதம் மூன்று படங்கள் போட்டுக் காட்டச் செய்கிறேன் என்று வாக்குறுதி அளித்தேன். செய்தி தீ போல பரவியது. என்ன படம் என்று பட்டியல் இட பிரிந்தது கூட்டம். அப்பாடா என்று பெரு மூச்சு விட்டோம்.

அப்படிப் போடப்பட்டதுதான் இந்த முதல் படம் “மாணிக்கம்”. படத்தைப் பார்த்து விட்டு இந்தப் பாட்டுக்கா இப்படி என்று சிரிக்கும் முன்னர் அடுத்த பிரச்சனை. “மீன் குழம்புக்கு தேங்காய் போடணுமா கூடாதா” என்று மெஸ்ஸில் இருந்து பெரிதாகக் கேட்டது ஒரு கூக்குரல்.

 

படத்திற்கு நன்றி:http://www.travel2abroad.com/CountryInfo/18/10/travel/Indian-Subcontinent/Maldives