மராட்டியப் புத்தாண்டு – குடி பாட்வா

சாந்தி மாரியப்பன்

தமிழ்நாட்டில் விஷூ என்றும், ஆந்திராவில் யுகாதி என்றும் கொண்டாடப்படுவது போல் மஹாராஷ்டிராவில் “குடி பாட்வா” என்ற பெயரில் புது வருஷம் கொண்டாடப்படுகிறது. மராட்டியர்களும் வருடத்தின் முதல் மாதத்தை ‘சைத்ர’ என்றே அழைக்கிறார்கள்.

குடிபாட்வா(Gudi Padwa) இங்கே வசந்தத்தின் முதல் தினத்தைக் குறிக்கிறது. ராவணனை அழித்தபின் ராமன் அயோத்திக்கு வந்த நாள்தான் இது என்று சிலர் சொல்கிறார்கள். இல்லை.. இன்றைய தினம் ராமன் முடி சூட்டிய நாள் என்று சிலர் சொல்கிறார்கள். அதெல்லாம் இல்லை பிரம்மா இன்றைக்குத்தான் உலகத்தைப் படைக்க ஆரம்பித்தார் என்று இங்கே உள்ளவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். சிவாஜி மஹராஜ் சாலிவாகனர்களை வெற்றி கொண்ட தினம்தான் இன்றைய தினம் என்று மஹாராஜாவை தெய்வமாக வணங்கி வழிபடும் மராட்டிய மக்கள் விட்டுக் கொடுக்காமல் சொல்கிறார்கள். காரணம் எதுவாக இருந்தால் என்ன?.. பண்டிகையை சந்தோஷமாகக் கொண்டாட வேண்டும். அதுதானே முக்கியம்.

அமாவாசைக்கு அடுத்து வரும் முதல் தினத்தை இங்கே பாட்வா என்று சொல்லுவார்கள். வடக்கே இரண்டு பாட்வா தினங்கள் ரொம்பவும் முக்கியம் வாய்ந்தவை. தீபாவளிப் பண்டிகையின்போது கிருஷ்ண பட்சத்தில் வரும் பாட்வாவும், சைத்ர மாதம் சுக்ல பட்சத்தில் வந்திருக்கும் இன்றைய பாட்வாவும் கொண்டாட்டத்துக்கான தினங்கள். பண்டிகைக்கு முன்னாடியே வீடு வாசல் எல்லாம் சுத்தம் செய்து வைப்பார்கள். கிராமங்களைப் பொறுத்த வரை இன்று வீட்டு முற்றத்தில் சாணமிட்டு மெழுகி வைத்திருப்பர்.

பாட்வா அன்று காலை தீபாவளி தினத்தைப் போலவே அப்யங்க ஸ்நானம் செய்து புதுத்துணி போட்டுக்கொள்வார்கள். வாசலில் அலங்காரத்தோரணம், மாவிலைத்தோரணம், ரங்கோலி என்று பண்டிகை களை கட்டி விடும்.

Gudi-ஐ வீட்டுத்தலைவர் தயார் செய்வார். ஒரு நீளமான மூங்கில் கம்பை எடுத்துக்கொண்டு அதன் ஒரு நுனியில் அழகான ஜரிகை போட்ட புதுத்துணியைக் கட்டி வைப்பார்கள். சில வீடுகளில் நல்ல அழகான துப்பட்டாவையோ அல்லது புதுப்புடவையையோ கட்டி விடுவதும் உண்டு. சில புத்திசாலிப்பெண்கள் இதற்கென்றே விலை கூடிய புடவையாக எடுத்துக் கொள்வர். எப்படியும் அது அவர்கள் கைக்குத்தானே போய்ச் சேரப்போகிறது.

நன்றாகப் பளபளவென்று பொன் போலத் துலக்கி வைத்திருக்கும் தாமிரச்சொம்பைக் கம்பு நுனியில் கவிழ்த்து வைப்பார்கள். சில வீடுகளில் வெள்ளிச்சொம்பையும் வைப்பதுண்டு. பின் பூமாலை, சர்க்கரை மாலை எல்லாம் போட்டு அலங்கரித்ததுமே, பார்ப்பதற்கு ஒரு தனி அழகு வந்து விடும். அந்தக் கலசத்துக்கு மஞ்சள் குங்குமமிட்டு, அட்சதை போட்டு தூப தீபம் காட்டி ஆராதனை செய்வார்கள். இதனை வீட்டின் முன்வாசலில் வலப்பக்கம் வீட்டுத்தலைவர் வைப்பார்.

இதை பிரம்மாவின் கொடி என்றும் குறிப்பிடுவதுண்டு. உயரமான கட்டிடங்களில் மூங்கில் கம்பின் நுனியில் பறக்கும் சரிகைத்துணியைப் பார்க்கும்போது ஒரு கொடி பறப்பது போலவே இருக்கும். காலையில் ஏற்றப்படும் இந்தக்கொடி மாலையில் சூரியன் மறையும் போது எடுக்கப்பட்டு விடும்.

சாமி கும்பிட்டு, முடிந்ததும் வீட்டில் செய்த இனிப்பை நைவேத்தியமாகப் படைப்பதுண்டு. இன்றைய தினம் பூரி, ஸ்ரீகண்ட், பூரண்போளி என்று விருந்து அமர்க்களப்படும். சில வீடுகளில் சேமியா கீர் செய்வதுண்டு.

குடி பாட்வா அன்று எந்த ஒரு சுபகாரியம் ஆரம்பித்தாலும் அது பன்மடங்காகப் பெருகும் என்று ஒரு நம்பிக்கை உண்டு. நம்மூர் அட்சய திருதியை மாதிரியே இந்தப் பண்டிகையன்றும் பொருட்கள், தங்கம் வாங்குவதுண்டு. புது வீட்டுக்கான பத்திரப் பதிவுகள், முன் பணம் கொடுத்து வீடுகள் பதிவு செய்தல் என்று ரியல் எஸ்டேட் காரர்கள் காட்டில் ஒரே அடைமழைதான். நான்கைந்து நாட்களுக்கு முன்பிருந்தே வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக செய்தித்தாள்களில் தள்ளுபடிக்கான விளம்பரங்கள் பக்கங்களை அடைத்துக்கொண்டு வர ஆரம்பித்து விட்டன. கவர்ச்சிகரமான பரிசுகள், சதுர அடிக்கான விலையில் குறிப்பிட்ட அளவு தள்ளுபடி என்று அவர்கள் வியாபாரம் களை கட்ட ஆரம்பித்து விட்டது.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க