பாஸ்கர பாரதி

விண்ணையும் மண்ணையும் அடக்கியாளும், விள்ளுதற்கரிய மஹாசக்தியிடம் விண்ணப்பம் அளிப்பதெனில், பெரும்பாலோனோர் பதிவு செய்யும் கோரிக்கைகள் என்னவாக இருக்கும்?

உண்ண உணவு வேண்டும், உடுக்கப் பல வண்ண உடைகள் வேண்டும், குடியிருக்க மாளிகை வேண்டும், நகைகள் வேண்டும், நன்செய்- புன்செய் ஏராளமாய் வேண்டும், பணத்தில் புரள வேண்டும், ரோகங்கள் நீங்கி போகங்கள் பெருக வேண்டும், தொட்டது துலங்க வேண்டும், பாதம் பட்ட இடம் எல்லாம் பாலும் தேனும் ஆறாய் ஓட வேண்டும் – இப்படித்தானே இருக்கும்? இயல்புதான்.

ஆனால், சராசரிக்கும் மிகக் கீழே-மிக வறிய வாழ்க்கை நடத்திக் கொண்டு-வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கிற காலத்திலும் ஒரு மனிதன் இறைவனிடம், தனக்குப் பொருட்செல்வம் வேண்டி முறையிடுதலைத் தவிர்க்க இயலுமா? இல்லை, தவிர்க்கக் கூட இல்லை. அத்தகைய நினைப்பே இல்லாமல் வாழ்ந்திருக்கிறான்.

மகாசக்தியிடம் விண்ணப்பிக்கிற மகாகவிக்குத் தனது பொருளாதாரம் முன்னேற வேண்டுமே என்கிற கவலையில்லை. பிறகு..?

மோகம், மனிதனை மூர்க்கனாக்கி விடும். எனவே, அதனைக் கொன்று விட வேண்டுமாம். இல்லையேல், மூச்சே நின்று விட வேண்டுமாம். எப்போதும் எண்ண அலைகளில் சிக்கிக்கொண்டு அலையும் உடல் அழிந்து பட வேண்டும்.

அல்லது முடிவின்றித் தொடரும் எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வேண்டும். பந்தம் என்கிற பாரம் நீங்க வேண்டும். சிந்தையில் தெளிவு பிறக்க வேண்டும்.

ஒன்றுக்கும் உதவாத பதர்களை, உயர் ரக நெல் என்று எண்ணிச் செயல்படும் மடமை மாற வேண்டும்.

மமதை மாய வேண்டும். அருள் மழை பொழிய வேண்டும். அதிலே நெடுநாள் தாகம் தீர வேண்டும்.

நம்மையெல்லாம், மிக உயரிய சிந்தனைகளுக்கு இட்டுச் செல்லும் இப்பாடலில், ஒரு மனிதன்,

மகாத்மாவாக உயர்வதற்கான உபாயம் ஒளிந்திருப்பதை உணர முடிகிறதா?
இதோ அப் பாடல்…

மஹாசக்திக்கு விண்ணப்பம்

மோகத்தைக் கொன்றுவிடு – அல்லா லென்றன்
மூச்சை நிறுத்திவிடு,
தேகத்தைச் சாய்த்துவிடு – அல்லா லதில்
சிந்தனை மாய்த்துவிடு,
யோகத் திருத்திவிடு – அல்லாலென்றன்
ஊனைச் சிதைத்துவிடு,
ஏகத் திருந்துலகம் – இங்குள்ள
யாவையும் செய்பவளே!

பந்தத்தை நீக்கிவிடு – அல்லா லுயிர்ப்
பாரத்தைப் போக்கிவிடு,
சிந்தை தெளிவாக்கு – அல்லா லிதைச்
செத்த உடலாக்கு,
இந்தப் பதர்களையே – நெல்லா மென
எண்ணி இருப்பேனோ?
எந்தப் பொருளிலுமே – உள்ளே நின்று
இயங்கி யிருப்பவளே!

உள்ளம் குளிராதோ? பொய்யாணவ
ஊனம் ஒழியாதோ?
கள்ளம் உருகாதோ? – அம்மா! பக்திக்
கண்ணீர் பெருகாதோ?
வெள்ளக் கருணையிலே – இந்நாய் சிறு
வேட்கை தவிராதோ?
விள்ளற் கரியவளே – அனைத்திலும்
மேவி யிருப்பவளே!

 

படத்திற்கு நன்றி:http://bhaarathi.blogspot.in/2009/08/blog-post_22.html

Leave a Reply

Your email address will not be published.