வாசி…வாசியென்று….!
முகில் தினகரன்
“த பாரு தம்பி…. ‘படிச்சவன்‘னு சொல்ற… ‘ஏதாச்சும் வேலை போட்டுக் குடுங்க‘ன்னு கேட்கறே. இந்த பங்களாவுல உனக்கு ஏத்த வேலைன்னு பாத்தா எதுவுமே இல்லையேப்பா. இருந்ததுன்னா குடுக்கறதுக்கென்ன?” சிதம்பரம் தாடையைத் தேய்த்தவாறே சொல்ல,
“அய்யா… உங்க பங்களா முன்னாடி… பசியால மயங்கிக் கெடந்த என்னைத் தூக்கிட்டு வந்து, சாப்பாடு போட்டீங்க. அத்தோட நில்லாம கைல கொஞ்சம் பணத்தையும் “ரெண்டு மூணு நாளைக்கு சாப்பாட்டுக்கு வெச்சுக்க”ன்னும் சொன்னீங்க!. அய்யா… ரோட்டுல ஒருத்தன் மயங்கிக் கெடந்தா அதைப் பார்த்தும் பார்க்காத மாதிரிப் போற ஜனங்க வாழுற இந்தக் காலத்துல இப்படியொரு மனிதரா?…ன்னு உங்களைப் பார்த்து வியந்து போய், உங்க காலடியிலேயே கெடந்து உங்களுக்குச் சேவை செய்யணும்னுதான் வேலை கேட்டேன். ப்ச்… பரவாயில்லைங்கய்யா…. நான் வர்றேன்!” அந்த இளைஞன் எழுந்து நடந்து கதவு வரை சென்றதும் சிதம்பரம் அழைத்தார்.
“தம்பீ”
திரும்பினான்.
“உன் பேரு என்னன்னு சொன்னே?”
“நடராஜன்” என்றான் அவன்.
“ஆஹா…. இந்த சிதம்பரத்துகிட்ட வந்து சேர்ந்த நடராஜனை நான் திருப்பியனுப்பினா அது தெய்வக்குத்தம். அதனால நீ என்ன பண்றே….”
முக மலர்ச்சியுடன் அந்த நடராஜன் அவர் முகத்தையே பார்க்க,
“என் கூட வா!” என்றபடி சிதம்பரம் முன் நடக்க, அவன் பின் தொடர்ந்தான்.
வீட்டின் இடது புறத்திலிருந்த அந்தக் கடைசி அறை முன் வந்து நின்ற சிதம்பரம் கதவை லேசாய்த் திறந்து உள்ளே புகுந்தார்.
உள்ளே! பழுத்த முதியவரொருவர் கட்டிலில் படுத்திருந்தார்.
நடராஜனின் கணிப்பில் அந்த முதியவருக்கு எப்படியும் எண்பத்தி ஒன்பது… தொண்ணூறு வயதிருக்கும்.
“தம்பி…. இவரு என்னோட தகப்பனார். இவருக்கு…. “பக்திக் கதைகள், புராணக் கதைகள், ஆன்மீக கட்டுரைகள்”ன்னா ரொம்ப இஷ்டம்!. ஒரு காலத்துல புத்தகங்களை வாங்கிக் குவிச்சு… அதுகளுக்குள்ளாரவே விழுந்து கெடப்பாரு!. தூங்காம… சாப்பிடாம அதுகளை வாசிச்சிட்டே இருப்பாரு!. இப்பச் சுத்தமா படிக்க முடியறதில்லை. கண் பார்வை மங்கிடுத்து. அதனால நீங்கதான் இனிமே இவருக்குத் தெனமும் அந்தப் புத்தகங்களை வாசிச்சுக் காட்டப் போறீங்க!.. அதுதான் உங்களுக்கான வேலை!”
நடராஜன் அவனையுமறியாமல் கை கூப்பினான்.
“என்னென்ன புத்தகங்கள் வேணுமோ அதுகளை நீங்களே போய் கடை வீதில வாங்கிக்கங்க!….ம்…ம்…ம்…இன்னிக்கு என்ன கிழமை?…புதன்….வெள்ளிக் கிழமையிலிருந்து நீங்க உங்க வேலைய ஆரம்பிங்க!. என்ன திருப்திதானே?”
கண்களில் நீர் மல்க நின்றவனின் முதுகில் தட்டிக் கொடுத்து, “வாழ்க்கை ரொம்ப ஈஸிப்பா…” சொல்லியபடியே நகர்ந்தார் சிதம்பரம்.
எந்தவொரு இலக்குமின்றி எந்தவொரு பிடிப்புமின்றி… எங்கோ போய்க் கொண்டிருந்த தன் வாழ்க்கை வீணாகிப் போய் விடுமோ என்கிற அச்சத்தில் இது நாள் வரை உழன்று கொண்டிருந்த நடராஜனுக்கு அந்த வேலை மிகவும் திருப்திகரமாய் அமைந்து விட, மகிழ்ச்சியில் திளைத்தான்.
முதல் சம்பளத்தை சிதம்பரத்தின் கால்களில் விழுந்து ஆசியுடன் பெற்றுக் கொண்டான்.
ஆனால், அந்த முதல் சம்பளமே தனது கடைசி சம்பளமாகவும் ஆகி விடும் என்று அவன் கனவில் கூட நினைக்கவில்லை.
ஒரு துரதிர்ஷ்ட விடியலில், அறைக்குள் படுத்துக் கிடந்த சிதம்பரத்தின் தகப்பனார் தன் சுவாசத்தை நிறுத்திக் கொண்ட போது, நடராஜனுக்கு இருதயமே நின்று விட்டதைப் போலானது. “கடவுளே!… சோதனைகளை மட்டும் எனக்குச் சொந்தமாக்கி, வேதனைகளை மட்டும் வரமாக்குகின்றாயே. நான் எந்தப் பிறவியில் என்ன பாவத்தைச் செய்து தொலைத்தேன்?”
சாவுக் கூட்டத்தில் ஒரு மூலையில் இடிந்து போய் உட்கார்ந்திருந்த நடராஜன் காதுகளில் அங்கிருந்த இருவர் பேசிக் கொண்டது அப்படியே விழ, அதிர்ச்சிக்குள்ளானான்.
“காது கேட்காமலேயே இருபது…. இருபத்தியஞ்சு வருஷத்தை மனுசன் ஓட்டியிருக்கார்ன்னா… உண்மையிலேயே பெரிய விஷயம்தான்யா!”
“அப்படியா?”
“பின்னே… அவருக்குத்தான்… அறுபது… அறுபத்தியஞ்சிலேயே… காது டமாரம் ஆயிடிச்சில்ல?”
நெகிழ்ந்து போனான் நடராஜன். “அப்படின்னா…. எனக்கு ஏதோ ஒரு வேலை போட்டுக் குடுக்கணும்… சம்பளம் குடுத்து உதவணும்கற ஒரே நல்லெண்ணத்துல அந்த வேலைய எனக்குக் குடுத்திருக்கார் சிதம்பரம் அய்யா!”
எழுந்தான். சிதம்பரத்தைத் தேடிச் சென்று வாய் விட்டே கேட்டான்.
மெலிதாய் முறுவலித்தவர், “தம்பி… நீயும் வேலை வேணும்னு வாய் விட்டுக் கேட்டுட்ட… எனக்கும் உனக்கு உதவணும்…. சாப்பாட்டுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணித் தரணும்னு தோணிடுச்சு. அதான் பார்த்தேன்…. படிச்ச பையனை எடுபிடியாக்கி அவனோட எதிர்காலத்தைப் பாழாக்கிடக்கூடாதுன்னு அந்த வேலையைச் செய்யச் சொன்னேன். இப்ப அதுலேயும் வில்லங்கம் ஆயிடுச்சு… ப்ச்… பரவாயில்லை… நீ கவலைப் படாதே. நிச்சயம் உனக்குத் தகுந்த இன்னொரு வேலையைப் போட்டுக் குடுப்பேன்”
கடந்த ஒரு மாதத்தில் தான் வாசித்த ஆன்மீக கதைகளில் தான் வாசித்தறிந்த தெய்வங்களின் வரிசையில் சிதம்பரம் அய்யாவையும் கொண்டு நிறுத்தினான் நடராஜன்.
(முற்றும்)
படத்திற்கு நன்றி:http://www.guardian.co.uk/books/booksblog/2009/mar/23/life-changing-books