எஸ்.நெடுஞ்செழியன்

அன்புத் தோழியே !

யாராலும் மறக்க முடியாது தாய்ப் பாசத்தை
யாராலும் மறுக்க முடியாது அவள் கேட்பதை
மறக்க முடியுமா? அல்ல மறுக்க முடியுமா?
குழந்தையாக இருந்த
என்னை எடுத்துத்
தன் இடுப்பில் வைத்து
மொட்டை மாடிக்குச் சென்று
நிலவைக் காட்டி
பால் சாதம்
ஊட்டி விடுவாளே.. என் தாய்
அந்தப் பாசத்தை …. அன்பை… சுகத்தை
மறக்க முடிமா?
அறியாப் பருவத்திலே
படுக்கையிலே
அசிங்கம் செய்த போது
அருவருப்புக் காட்டாமல்
அதைச் சுத்தம் செய்து
இரக்கத்தோடு
என்னை எடுத்து
முத்தம் கொடுத்து
இடுப்பில் வைத்து கொள்வாளே
அந்தப் பரிவை மறக்க முடிமா ?
தூளியில் படுக்க வைத்து
நான் தூங்கும் வரை
கை வலிக்க ஆட்டி
வாய் வலிக்க
தாலாட்டுப் பாடுவாளே
அந்தத் தாலாட்டிலே
வருமே ஒரு மயக்கம்
அதை….. மறக்க முடியுமா ?

எனக்கு
உடல் நலமில்லாமல்
போனால்
மடி மீது கிடத்தி
முடி கோதி
என் கண்ணே! தங்கமே!
என்னம்மா செய்கிறது …
அழாதே,
எனக்கேட்டு
கண்ணீர் கண்களில் காட்டுவாளே
அதை மறக்க முடியுமா?
பண்டிகைத் தினங்களில்
புத்தாடை அணிவித்து, என் கையில்
இனிப்பு கொடுத்து…… அவள் முகத்தில்
இனிப்பு காட்டி
எனக்கு முத்தம் கொடுப்பாளே
அதை….. மறக்க முடியுமா?
வெளியே செல்லும் போது
எதிர்பாராமல்
மழை வந்து விட்டால்
என்
தலையை
அவள் முந்தானையில் மூடி
அவள் உடலோடு
எனை இறுக்கக் கட்டிக் கொண்டு
நான் நனையாமல் இருக்க – ஆனால்
தான் நனைவது
நினையாமல்
என்னைக் கொண்டு செல்வாளே
அதைத்தான் மறக்க முடியுமா?
தம்பியும் – தங்கையும்
பிறந்த போது
என்னை மறக்காமல்
பாசத்தையும் – பண்டங்களையும்
பகிர்ந்து கொடுத்தாளே
அந்த உள்ளத்தை
மறக்க முடியுமா?
என்
மண நாளன்று
நானும் , என் மனைவியும்
வாழ்த்துப் பெற
அவள் காலில்
விழுந்து வணங்கி
எழுந்து நின்ற போது
கண்களில்
ஆனந்தக் கண்ணீர்
காட்டினாளே
அந்த முகத்தை மறக்கவும் முடியுமா?
இன்று ….
வயதாகி
வாழ்க்கையின் முடிவில்
கட்டிலிலே
கயிறோடு கயிறாக
ஆனால் ….. உயிரோடு
கிடக்கும் அவள்
என்னைப் பார்த்து
வெளியே கொண்டு போய்
உட்கார வை என்னைக் கொஞ்ச நேரம்
என்கிறாளே ……
இதை ….. மறுக்க முடியுமா ?
படுக்கையிலே
முடை நாற்றத்திலே,
அசையாமல்
பசையால் ஒட்டியது போல
படுத்துக் கிடக்கிறாள்.
என்னைப் பார்க்கும் போது
திருப்பிப் படுக்க வை -என
திரும்பத் திரும்பக்
கேட்கிறாளே
அதை மறுக்க முடியுமா?
அவள்
வாயில் ஊற்றும்
பாலும்-கஞ்சியும்
உள்ளே செல்ல மறுத்து
எதிர் கொண்டு
வெளியே வந்து
என் மேல்
சிதறும் போது
அதை மறுக்க முடியுமா? நான்.
இரவு முடியும் வரை
சுவர்க் கோழிக்குப்
போட்டியாக
இருமிக் கொண்டு
தான் இருப்பதை
நினைவு படுத்துகிறாள் .
அவள் வாயால்
தாலாட்டு கேட்ட
என் காது
இன்று அவள் இருமுவதை
மறுக்க முடியுமா?
என் உள்ளம்
தன் அன்பை
தாய், மனைவி
மகன்,மகள்
எனப் பிரிக்கப்படுவதை
மறுக்க முடியுமா?
என்னை
என் மனைவி , மக்களை
நலம் விசாரிக்க
நடுக்கும் கரங்களோடு
உடல் தடவி
உச்சி மோந்து
உடலைக் கட்டி
‘இளைத்து விட்டாயே அப்பா’
எனப் பாசத்தோடு
பதறுவாளே…
இதை மறுக்க முடியுமா?
இன்று
சுவரிலே
படமாகத் தங்கி
என்னைப் பார்க்கிறாளே
தாயே!
நீ
காட்டிய பாசத்தை
கொட்டிய பரிவை
எந்த மகனாலும்
நெஞ்சிருக்கும் வரை
மறக்கவும் முடியுமா ?
அல்ல
மறுக்கவும் முடியுமா?

 

படத்திற்கு நன்றி:http://wakeup-world.com/2012/02/02/how-a-mothers-love-alters-a-childs-brain

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *