வெண்ணிலவில் ஒரு கருமுகில்! (32)

0

 

பவள சங்கரி

பரிசுப் பொருட்கள் தேர்ந்தெடுப்பது என்பது ஒரு கலை. கொடுக்கப் போகும் மனிதரின் உள்ளம் அறிந்து, அவர் விருப்பம் அறிந்து, தேவையறிந்து அளிக்கப்படும் அந்த பரிசு கொடுப்பவருக்கும், பெறுபவருக்கும் இடையே நெருக்கத்தை அதிகரிக்கும். அதன் விலை மதிப்போ அல்லது தரமோ பேசுவதில்லை. காலம் அறிந்து சூழலுக்கேற்றவாறு கொடுக்கக்கூடிய பரிசுப் பொருள் காலத்திற்கும் நினைவில் நிற்கக் கூடியவை. சில நேரங்களில் இது வேடிக்கையாக மாறிவிடுவதும் உண்டு. தன் தோழிக்கு காதல் பறவைகள் என்றால் பிடிக்கும் என்பதால் அத்துனை நண்பர்களும் விதவிதமாக, பார்க்கும் இடங்களிலிருந்தெல்லாம் வாங்கிக் கொண்டுவந்து குவிக்க வீடே காதல் பறவைகளால் நிறைந்து போய் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவித்துப் போனவர்களின் கதையும் உண்டு.

ரம்யா ஊருக்குக் கிளம்ப ஆயத்தமாகும் வேளையில் அனுவிற்கு ஏதேனும் நல்ல பரிசுப் பொருள் கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும் என்று தோன்றியது. இரண்டு, மூன்று நாட்கள் பல வேலைகளுக்கிடையில் இந்த எண்ணமும் ஓடிக்கொண்டே இருந்தது. திடீரென பொறிதட்டியது. ஆம்.. அனுவிற்கு ஏற்ற பரிசு என்று அவள் முடிவு செய்த மறுகணம், அதற்கான வேலையிலும் ஈடுபட்டாள். ஆம், பல நேரங்களில், பாதிக்கப்பட்ட இதயங்களை குளிரச்செய்யும் களிம்பாக பணிபுரியக்கூடும், சரியான தேர்விலான அந்த பரிசுப் பொருள். நட்பின் உன்னதத்தையும் நொடிகளில் உணர்த்திவிடும் அந்த தேர்வு….

வியன்னாவின் புகழ்பெற்ற கலைஞர் குஸ்ட்டவ் க்ளிம்ட், வாசகர்கள் மத்தியில் பிரபலமாக இவருடைய கதை போய்க் கொண்டிருக்கிறது. அதில் மிக உணர்வுப்பூர்வமான ஒரு காதல் பிணைப்பில், சம்பந்தப்பட்ட அப்பெண்ணிடம், அவள் மனம் நோகாத வகையில் அந்தக் காதல் முறிபடப்போவதை விளக்க வேண்டும்… இதற்கான தீர்வாக க்ளிம்ட் தேர்ந்தெடுத்த அந்த பரிசுப் பொருள் பற்றிய நினைவே வந்தது ரம்யாவிற்கு… அதே வடிவமுள்ள ஒரு பரிசை தயார் செய்து கொடுப்பது மிகச் சிறந்த தேர்வாக இருக்கும் என்று கருதி, அதற்கான வேலையும் துவங்கினாள்… அலங்கரிக்கப்பட்ட ஒரு மின்சாரக் காற்றாடி. அதன் காலியான உட்பகுதியில் அந்த கதாநாயகனின் ரொமாண்டிக் படம் ஒட்டப்பட்டிருக்கும். அந்தப் படத்தினுள் ஒரு வாசகம்… அதுதான் ஹைலைட்டே.. “ Better an ending with pain, than pain without end”. அதாவது, முடிவடையாத வேதனையைவிட, வேதனையுடனான அந்த முடிவு தேவலாம். இது சரியான அந்த சூழலுக்குத் தோதான ஒரு வாசகம் அல்லவா…. இதைவிடச் சிறப்பான ஒரு பரிசு அந்த நேரத்தில் அனுவிற்கு வேறு எது கொடுக்க முடியும்?

அத்தனை வலியும், வேதனையும் உடனே மறக்கச் செய்ய இயலாவிட்டாலும் ஓரளவிற்கு ஆறுதலாவது அளிக்கக்கூடும் இந்த பரிசு என்று எண்ணியது வீண் போகவில்லை. ஆம் அனுவின் கண்களில் லேசான கண்ணீர் முத்துக்கள் பளபளத்தாலும், மிக விரைவாக அது இருந்த இடம் தெரியாமல் மறைந்தும் போனது. தனக்காக மாமா பார்த்திருக்கும் வரன் குறித்தும், பெற்றோருக்கு திருப்தியளிப்பதாக இருப்பதாகவும் அவள் சொன்ன தகவல் ரம்யாவின் மனதில் இருந்த மிகப் பெரிய பாரத்தை இறக்கி வைப்பதாக இருந்தது. மாறனும் மகிழ்ச்சியடைவான் என்று நினக்கத் தோன்றியது. மாறனின் பெற்றோரையும் சந்தித்து ஊருக்குக் கிளம்புவதைச் சொல்லிவிட்டு, மாறனின் தாய் மகனுக்காகச் செய்து கொடுத்த பலகாரங்களையும், வாங்கிக் கொண்டு விடைபெற்றுக் கிளம்பினாள். முதல் முறை மாறனின் வீட்டிற்கு வந்தபோது இருந்த மனநிலைக்கும், தற்போது கிளம்பும்போது உள்ள மனநிலைக்கும் உள்ள வேறுபாட்டை எண்ணி அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. எல்லாம் நல்லபடியாக முடிந்த திருப்தியில் ரிஷி மற்றும் வந்தனாவையும் சந்தித்துவிட்டு வந்தாள். வந்தனா விரைவில் குணமடைந்து விடுவாள் என்ற நம்பிக்கையும், அதற்கான பிரார்த்தனைகளும் முடித்துவிட்டு அமைதியான நித்சலமான மனதுடன் கிளம்பினாள். இந்த முறை ஊருக்கு வந்து சென்றதில் ஒரு மனநிறைவு இருப்பதை உணர்ந்தாள்.

அம்மாவிற்குத்தான் பாவம் சற்று வருத்தம். மகள் தன்னுடன் முழுமையாக இருக்க முடியவில்லையே என்று. தம்பியையும் மருத்துவரிடம் கூட்டிச் சென்று மனநலம் குறித்து விசாரித்து வந்தாள். விரைவில் குணமாகிவிடும் என்ற நம்பிக்கையை மட்டும் துணைக்கொண்டு போராட்டத்துடன் வாழும் நிலையில் உள்ள பெற்றோரின் நிலையைக் காணும் போது இருதயம் இரத்தம் வடிப்பதை உணரமுடிந்தாலும், அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்த நம்பிக்கை வேருக்கு ஊக்கம் எனும் நீர் வார்த்துவிட்டு வாளாவிருப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை அவளுக்கு.

ராமச்சந்திரனுக்கு ஆரம்பத்தில் ரம்யா மீது சற்று கோபம் இருந்தாலும், இவளுக்கு ஏன் இந்த அதிகப்பிரசங்கித்தனம் என்று தோன்றினாலும், தன் மகனின் நன்மைகாக ஒரு நல்ல தோழியாகத்தன் கடமையைச் செய்த ரம்யாவின் மீது ஒரு மதிப்பும் வந்தது. பின்னாளில் தெரிந்து வேதனைப்படுவதைவிட, முன்பே அதை சரிசெய்ததன் மூலமாக இரண்டு பேரின் வாழ்க்கையையும் காப்பாற்றி விட்டதாக மனநிறைவும் இருந்தது…. நல்லபடியாக இரண்டு திருமணமும் நடக்க வேண்டும் என்ற கவலையும் இல்லாமல் இல்லை. ஜோசியர் சொன்ன பரிகாரங்களை குலதெய்வம் கோவிலில் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்துவிட்டு, அதற்குப் பிறகு திருமண வேலைகளை ஆரம்பிக்கலாம் என்று இருந்தார். அவந்திகாவின் பெற்றோரும் உற்சாகமாகப் பேசியது மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது.

பாட்லக் பார்ட்டி முடிந்து மாறனும், அவந்திகாவும் கிளம்பினார்கள். இந்த மூன்று மாதத்தில் பல முறை மாறனுடன் தனியாக காரில் பயணம் செய்திருந்தாலும், அன்று என்னவோ தன்னையறியாமல் உள்ளத்தில் ஏதோ ஓர் கிளுகிளுப்பான உணர்வை உணர்ந்தாள் அவள்… மாறனுக்கும் இதே நிலைதான். காதல் என்ற ஒரு விசயம் உள்ளே புகுந்து விட்டால் ஏற்கனவே பல முறை பார்த்துப் பழகிய முகங்கள் கூட புதுமையாகவும், கண்ணைக் கூசச் செய்யும் புத்தொளியுடனும் இருப்பதாகத் தோன்றும் போல. அப்படித்தான் அவர்களின் செய்கையும் இருந்தது. ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்திக்க முடியாமல், கண்களை தாழ்த்திக் கொண்டு, நாணம் பொங்க ஓரிரு வார்த்தைகளுடன் தடுமாறுவதைக் கண்டு மற்ற நண்பர்களுக்கு கேலியும், கிண்டலுக்குமான விசயமாகப் போய்விட்டது மேலும் இருவரையும் தர்மசங்கடப்படுத்தியது. அந்த இடத்தைவிட்டு விரைவாக நகர்ந்தால் போதும் என்றாகிவிட்டது. அவந்திகாவும் அதற்கு ஒப்புதல் அளிப்பது போல மணிக்கட்டைத் திருப்பி மணியைப் பார்த்தாள். முழுமையாக தன்னைச் சரணடையச் செய்த காதல் கொடுத்த மனநிறைவின் சுகத்தை முதன்முதலில் அனுபவிக்க ஆரம்பித்த அந்த நேரத்தில் தனிமையை மனம் நாடியது. மேற்கொண்டு ஏதும் பேசத் தோன்றாதவர்களாக இருவரும் நண்பர்களிடம் விடைபெற்றுக் கிளம்பினார்கள்.

 

உன் முகத்தைப் பார்க்கவே
என் விழிகள் வாழுதே……
காதல் வளர்த்தேன்…காதல் வளர்த்தேன்
என் உசிருக்குள்ளே கூடுகட்டி காதல் வளர்த்தேன்
இதயத்தினுள்ளே பெண்ணே நான் செடிவச்சு வளர்த்தேன்
இன்று அதில் பூவாய் நீயேதான் பூத்தவுடன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்….

சிடியில் தென்றலாய் தவழ்ந்து வந்த பாடல் சூழலை மேலும் ரம்மியமாக்கியது… வார்த்தைகளற்ற மெளனம் மட்டும் பலப்பல கதைகள் பேசி அர்த்தமுள்ள பார்வைகளின் பரிமாற்றம் மட்டும் அவ்வப்போது நடந்து கொண்டிருந்தது. இந்தப்பயணம் இப்படியே முடிவற்று தொடர்ந்து கொண்டே இருந்தாலும் தேவலாம் போன்றே இருந்தது இருவருக்கும்…. காலம் இந்த கிறுக்குக் காதலர்களுக்காக நின்று விடாதே…. அதுதன் கடமையில் சரியாகத்தானே இருக்கும்…. ரம்யாவின் வீடு வந்துவிட்டது. அவந்திகா இறங்க வேண்டிய இடமல்லவா…. அவளுடைய கண்களிலும் அந்த மயக்கம் வெளிப்படையாகத் தெரிந்ததை அவளால் மறைக்க இயலவில்லை. லேசாக சிவந்த கண்களும், கலங்கிய நீரும், ரோசா வண்ணத்தில் பளபளத்த கன்னமும் அவளுடைய அழகிற்கு மேலும் அழகு சேர்த்ததை தன்னை மறந்த நிலையில் நின்று இரசித்துக் கொண்டிருந்தான் மாறன்…. சில மணித்துளிகள்….. பளிச்சென அடுத்த வீட்டு காரின் ஹெட்லைட் மின்ன சுய நினைவிற்குத் திரும்பிய அந்த இளம் சிட்டுகள் பிரிய வேண்டிய நேரத்தை உணர்ந்து வலியுடன் தளர்ந்த நடையை எட்டிப் போட்டன…..

வீட்டிற்குள் நுழைந்த மாறன் துணி மாற்றும் எண்ணம் கூட இல்லாமல் அப்படியேச் சென்று படுக்கையில் விழுந்தான்… சன்னலைத் திறந்தவன் கண்களில் வண்ண மலர்களின் காட்சி அவந்திகாவின் நினைவை ஏனோ மேலும் கூட்டியது… தலையணையை அணைத்துக் கொண்டு கற்பனைச் சிறகை விரிக்கவும் கைபேசி சிணுங்கவும், எடுத்துப் பார்த்தவனுக்கு , அவந்தி… என்ற அந்த பெயர் கூட அன்று தங்க எழுத்தில் பொறித்தது போன்று மின்னுவதாகத் தெரிந்தது.!

“ ஹலோ………’

‘ஹாய்….. அவந்திகா… சொல்லுங்க”

“ம்ம்ம்… ஒன்னுமில்ல பத்திரமா வந்து சேர்ந்தாச்சான்னு கேட்கலாம்னு…”

“ஓ… அப்படியா…. ஏன் இன்று மட்டும்… ”என்று மென்று முழுங்கினான்…..

”இல்லை… இன்னைக்கி…..”

ம்ம்ம்ம்…. மௌனம் மெல்ல, மெல்ல வார்த்தைகளாய் உருப் பெற்ற நேரம், இனிய இரவின் நீட்சியாய் மலர்ந்து மணம் வீச…. பொழுதும் புலர…. வழக்கமான காதலர்களின் நிலையை எட்டிய அந்த கிளிகள் வானில் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்த வேளை வசந்தமும், சுகந்தமாய் வீசத் தொடங்கிய நேரமானது..

தொடரும்

படத்திற்கு நன்றி :

http://www.meteorites-for-sale-meteorite-sales.com/Meteorite-Jewelry/Meteorite-Rings/

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *