சக்தி சக்திதாசன்

சொல்லாமல் புதையும் சோகங்களை சொல்லிப்போகும் வரிகளவை. நில்லாமல் துள்ளும் இதயத்தின் ஆனந்தப் பொழுதுகளை ஆராதித்திடும் வாசகங்கள். புரியாத உணர்வுகளுக்கு வடிகால் அமைத்து அவற்றை நெஞ்சமெனும் தோட்டத்திற்கு நீரூற்ற வைக்கின்ற அற்புத ஆற்றல்.

இவைகளனைத்தையும் தன்னுள்ளே பெட்டகமாய்ப் பூட்டி வைத்த இயற்கை தந்த அற்புதத் தமிழ்க் கவிஞரே எமது கவியரசர். இவரின் ஆக்கங்கள் எவற்றை எடுத்தாலும் இகத்தை மறந்து நான் அதனுள் புதைந்து போவதென் வழக்கம்.

தமிழ் இலக்கியம் என்னும் வற்றாத ஜீவநதியினுள் மூழ்கி தான் கண்டெடுத்த அதிசயங்களை அழகாய் பாமரனுக்கும் புரியும் வகையில் எளிய தமிழில் புனைந்து எமக்கும் விருந்தாக்கிய வித்தகரல்லவா அவர் ?

இதோ அவரது படைப்புகளில் புதைந்து போய் மீண்டும் நான் வெளிவர முயற்சித்த போது தெறித்த துளிகளை என் அன்புநிறை நெஞ்சங்களாம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அவாவினால் வடித்த துளிகளிவை.

கவியரசர் தனது வாழ்வில் படைத்த படைப்புக்களில் அனுபவங்களினால் செழித்தவை பல. பார்க்கக் கூடாதவைகளைப் பார்த்தார், கேட்கக்கூடாதவைகளைக் கேட்டார், செய்யக்கூடாதவைகளைச் செய்தார். அப்படியென்றால் எமது கவியரசரின் சிறப்பம்சம் தான் என்ன?

தான் விட்ட தவறுகளை சுயவிசாரணை மூலம், சுய அலசல் மூலம் எமக்குக் கூறி எம்மை அறிவால் உணர்ந்து விடுங்கள் என்று கூறினார்.

அவர் தனது வாழ்வில் சம்பவித்த மாற்றங்கள் அனைத்துக்கும் அனுபவங்கள் என்று ஒரே தலைப்பை இட்டு விடுகிறார்.

இதோ ,

கடவுளை ஒருநாள் கல்லென்றவனும்
கல்லை ஒருநாள் கடவுளென்றவனும்
உண்டென்றதனை இல்லையென்றவனும்
இல்லையென்றதனை உண்டென்றவனும்
உயர்பெரும் தரணியில் ஒருவன் ஒருவனே
நானே என்பதை நன்றாய் அறிவேன்

ஆத்திகனாக இருந்து நாத்திகனாக மாறிப் பின்பு ஆத்திகனாகத் தான் மாறியதை இதைவிடத் துல்லியமாக, நேர்மையாக யாரால் கூறி விட முடியும் ?

ஆற்றிலும் குளித்தேன் சேற்றிலும் குளித்தேன்
காற்றில் பறந்தேன் கல்லிலும் நடந்தேன்
ஊற்றுப் புனலில் ஒளியினைக் கண்டேன்
மாற்றுப் பொன்னிலும் மாசினைப் பார்த்தேன்
பார்த்தது கோடி பட்டது கோடி
சேர்ந்தது என்ன ? சிறந்த அனுபவம்.

அப்பப்பா ! கவியரசரின் அனுபவச் செழிப்பினால் எழுந்த அருமையான கவிதைகளுக்க்கு இதைவிடச் சிறந்த உதாரணம் இருக்க முடியுமா? தான் சேரக்கூடாதவர்களுடன் சேர்ந்து போகக் கூடாத இடங்களுக்குப் போய் படக்கூடாத துயரங்களைப் பட்டு பெற வேண்டிய அனுபவ ஞானத்தைப் பெற்றதை எத்தனை அழகாய் நம் கவியர்சர் கூறுகிறார் பாருங்கள்.

இறைவன் இருக்கிறானா? இல்லையா? அவன் யார், அவனைக் காண முடியுமா? எத்தனை கேள்விகள் எம்முள் எத்தனை விதமான விவாதங்களைக் கிளப்பி விடுகிறது.

எளிமையான் வரிகளில், அனைவருக்கும் புரியக்கூடிய விதத்தில் கவிய்ரசர் தரும் விளக்கத்தைப் பாருங்கள்,

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்துபார் என இறைவன் பணித்தான்
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்துபார் என இறைவன் பணித்தான்
இறப்பின் பின் யாதெனக் கேட்டேன்
இறந்துபார் என இறைவன் பணித்தான்
அனுபவித்தேதான் அறிவது வாழ்வெனின்
ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
அனுபவம் என்பதே நான்தான் என்றான்

ஆண்டவன் என்றால் வேறெதுவும் இல்லை அனுபவமே ஆண்டவன் என்கிறாரே எமது கவியரசர். உண்மைதானே எமக்கு நடக்கும் பல விடயங்கள் ஏன் எமக்கு நடக்கின்றன என்று பல சமயங்களில் நம்மில் பலரும் விசனப்படுவதுண்டு ஆனால் நடக்கும் அந்நிகழ்வுகளினால் நாம் அடைவது தானே அனுபவம்? அப்படியாகில் அந்நிகழ்வுகளின் காரணகர்த்தா யாரென்று தெரியாவிட்டாலும் அதன்மூலம் அடைந்த அனுபவம் ஆண்டவன் வடிவெடுக்கலாம் இல்லையா?

எட்டாம் வகுப்புவரை படித்த ஒருவரால் இத்தகைய அரிய வாழ்க்கைத் தத்துவங்களை எமக்கு இடையறாமல் அள்ளித்தர முடியும் என்று நிரூபித்தவர் அல்லவா தமிழன்னையின் அன்புப் புதல்வர்.

சரி, தான் வாழ்வில் பட்ட துன்பங்களை எளிமையான சில இனிய தமிழ் வரிகளுக்குள் புதைத்து விட்டார் பாருங்கள்,

நானிடறி விழ்ந்த இடம்
நாலாயிரம் அதிலும்
நான் போட்ட முட்கள் பதியும்

நடைபாதை வணிகனென
நான் கூவி விற்ற பொருள்
நல்ல பொருள் இல்லையதிகம்

ஊர்நெடுக என்பாட்டை
உளமுருகப் பாடுகையில்
ஓர்துயரம் என்துயர் வருமே !

வாழ்வில் தான் சறுக்கி விழுந்த தருணங்களில் அந்நிகழ்வுகளுக்கு தனது நடவடிக்கைகளும் காரணமாயிருந்தன என்பதை எத்தனை அழகாய்ச் சொல்லியிருக்கிறார் இக்கவிவேந்தன். அதுமட்டுமா? சினிமா எனும் வியாபாரச் சந்தைக்காக தான் எழுதி விற்ற பாடல்கள் பல பணத்திற்காக எழுதப்பட்டனவேயன்றி மனதுக்காக அல்ல என்பதையும் அழகாய்ச் சொல்லியிருக்கிறார். தான் தனது வாழ்வின் சோக அனுபவங்களின் அடிப்படையில் எழுதிய பாடல்களை ஊர் விரும்பிப் பாடும் போது அதில் தனது துயர் தொனித்திருக்கும் எனபதையும் அழகாய்ச் சொல்லியிருக்கிறார் அல்லவா நம் கவியரசர்?

விட்டாரா அத்துடன் ? துயரத்தை எத்தனைச் சுவையாகச் சொல்ல முடியும் என்பதை இவரன்றி யார் இப்படிக் கூற முடியும் ?

பிறப்பினும் அழுதேன் ! வந்து
பிறந்தபின் அழுதேன்! வாழ்க்கைச்
சிறப்பினும் அழுதேன்! ஒன்றிச்
சேர்ந்தவர் சிலரால் சுற்று
மறைப்பினும் அழுதேன்! உள்ளே
மனத்தினும் அழுதேன்! ஊரால்
இறப்பிலே அழுவதெல்லாம்
இதுவரை அழுது விட்டேன்

அழுகையில் இத்தனை வகைகளா? அழுகைக்கு இத்தனை காரணங்களா?

இத்தனை துயரங்களையும் சந்தித்து விட்டாய் மனிதா? நீ ஏன் கலங்குகிறாய். துயரத்தால் துஞ்சி விடாதே என்கிறாரோ !

வாழ்வை யறிந்தவன் சம்சாரி
வாழப் பயந்தவன் சந்நியாசி
கண்ணீர் வடிப்பவன் மூடனடா
காலத்தை வென்றவன் வீரனடா
நல்லின்பத்தைத் தேடி உறவாடு
நீ எழுந்திரு மனிதா விளையாடு

கவியரசர் ஒரு வானவில். பல வர்ணங்களைக் கொண்ட வானவில்லின் அத்தனை நிறங்களையும் ஒரு நிகழ்வில் சிலவேளைகளில் காண்கிறோம். அதேபோல் வாழ்வின் வெவ்வேறு உணர்ச்சிகளையும் தனது வெவ்வேறு படைப்புகளின் மூலம் காட்டி நிற்கும் கவியரசர் கண்ணாதாசனும் ஒரு வானவில்லே.

சராசரி மனிதர் கவியரசரைத் தமது மனங்களில் இருத்திக் கொண்டதின் காரணம் அவரின் படைப்புகள் அச்சராசரி மனிதரின் வாழ்வின் பிப்பங்களாக இருந்தமையே. அது மட்டுமன்றி வாழ்வின் அனுபவங்களை எளிமையான் தமிழில் பாமரனும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அமைத்துத் தந்த காரணத்தினால்.தான் சொல்வது உண்மை, தனது மனதின் சத்தியத்தை வடிக்கிறேன் என்பதில் தீராத நம்பிக்கை கொண்டிருந்தவர் கவியரசர்,

“தம்பி உன் நெஞ்சில் உண்மையிருந்தால் பேனாவை எடு, எழுது” என்றார் எம் தமிழ்க்கவி பாரதி.

அதை அழகாய் தனது எண்ணத்தில் இப்படிக் கூறுகிறார் என் உளம் கவர்ந்த கவியரசர்.

இவைசரி என்றால் இயம்புவது என் தொழில்
இவை தவறாயின் எதிர்ப்பது என் வேலை
வளமார் கவிகள் வாக்கு மூலங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்புகள்

வானவில்லின் வர்ணத்திற்கு யாரெழுதுவார் தீர்ப்பு. ரசிக்கத்தான் முடியும் தீர்ப்பு வழங்க முடியுமா?

வானவில் வந்து வந்து மறைந்தாலும் இந்த ஞாலம் இருக்கும் மட்டும் வானவில்லும் இருக்கும். அதுபோல இஞ்ஞாலத்தின் கடைசித் தமிழன் இருக்கும் மட்டும் கவியரசர் வாழ்ந்து கொண்டேயிருப்பார்.

மீண்டும் வருவேன்


http://www.thamilpoonga.com

http://www.facebook.com/sakthi.sakthithasan
http://www.ssakthi8.blogspot.com/

படங்களுக்கு நன்றி:

http://www.hindu.com/fr/2010/08/20/stories/2010082051090100.htm

 

1 thought on “கவியரசர் எனும் வானவில்

 1. போற்றுவோர் போற்றுதலையும்,
  புழுதிவாரித்
  தூற்றுவோர் தூற்றுதலையும்
  பொருட்படுத்தாது,
  பொக்கிஷமாம் கருத்துக்குவியலைப்
  பாமரனும் அறியும்வண்ணம்
  கவிதையில் சொன்ன
  கன்னித் தமிழன்னையின்
  ஞானக்குழந்தை கவியரசாம்
  வானவில்லின் வண்ணம்சொன்ன
  கவிஞருக்கு வாழ்த்துக்கள்…!

                     -செண்பக ஜெகதீசன்…

Leave a Reply

Your email address will not be published.