பொன் மலை முருகன்

விசாலம்

“பத்து வருஷமாக ஒரு பிரமோஷனும் இல்லை. வேலை மட்டும் செக்கிழுக்கும் மாடு போல செய்ய வேண்டிருக்கு. என்ன ஜன்மமோ” அலுத்துக் கொண்டான் சுந்தர்.

“ஏன் இப்படி சலிச்சுப் போறே! கவலப்படாதே எனக்கு ஒரு கோயில் தெரியும். அங்கு போய் சுவாமியைத் தரிசனம் செஞ்சாக்க நல்ல வேலை, பிரமோஷன் எல்லாம் கிடைச்சுடும். ஆனா மனசார நம்பணும் நீ”

“எங்க இருக்கு அது. சொல்லுங்கோ அம்மா. போய்ப் பார்த்து என்னவெல்லாம் செய்யணுமோ அதை எல்லாம் செய்யறேன்”

“அதுவா…. அதுதான் “கோல்டன் ராக்னு”சொல்லப்படும் பொன்மலை. இந்த மலையின் மேல் முத்துக்குமார சுவாமி என்ற பேரில் முருகன் அமர்ந்து அருள் புரிகிறார். இவருடன் வள்ளி தெய்வானையும் அமர்ந்து காட்சியளிக்கின்றனர். முன் காலத்துல அந்த மலை பொன் கலர்ல இருந்தது. அதனால அந்த மலையைப் பொன்மலைன்னு சொன்னார்களாம். இப்பப் பார்த்தாக்க அந்த மலை செந்நிறமா இருக்கு. உனக்கு இதப் பத்தின கதை தெரியுமோ?”

“இல்லம்மா இப்பத்தான் இதப்பத்தியே கேக்கறேன். அது என்ன கதை? சொல்லு”

“இந்த மலைல இருந்த குகையில ஒரு சிறுத்தைப் புலி இருந்ததாம். திருச்சிப்பக்கம் இருந்த ஒரு இங்கிலீஷ் அதிகாரி அடிக்கடி வேட்டை ஆடுவாராம். அவனுக்கு இந்தப் புலியின் மேல் ஒரு கண்ணாம். ஒரு நாளைக்குத் தைரியமா அந்தக் குகைப் பக்கம் போய் டுமீல் டுமீல்னு சுட்டாராம். சத்தம் கேட்டு சிறுத்தையும் குகைலேந்து வெளில வர இன்னொரு டுமீல். அவ்வளவுதான் திரும்பவும் குகைக்குள்ள ஓடி உயிரை விட்டது. அந்தப்புலிய எடுத்துண்டு வெளியே வர முயற்சி செஞ்சார். அங்க நிறைய தங்கக்காசுகள் இருந்ததாம், அதனால அந்த மலயை “கோல்டன் ராக்”ன்னு அழைச்சாராம். இதுவே தமிழ்ல பொன்மலைன்னு வந்துடுத்து.”

“ஆமாம் நீங்க இந்த இடத்துக்குப் போய்ப் பாத்து இருக்கேளா என்ன!’

“ஆமாண்டா. இங்க இருக்கும் நான்கு பக்கமும் நிறையக் கோயில். வடக்குப்பக்கம் உச்சிப் பிள்ளையார் கோயில். மலை பேரு சிராமலை. அப்பறம் கிழக்குல எறும்பீஸ்வரர் அருள் புரியும் கோயில் திருவெறும்பூர் மலை. தெற்கில் நார்த்தாமலை. இங்க வந்து பராசக்தி அருள் புரியறா. மேற்கில முனீஸ்வரர் காவல் தெய்வமா நிக்கறார், இந்த மலை பேரு ரெட்டைமலை’. ரொம்பப் பழமையான கோயில். இங்க இருந்தவா எல்லாரும் அம்மனுக்குன்னு மல அடிவாரத்தல ஒரு கோயில் கட்டி அந்த அம்மனுக்குப் பொன்னேஸ்வரின்னு பேரு வச்சுப் பூஜை செய்ய ஆரம்பிச்சா. அப்பறம் மலை உச்சிலே முருகனுக்கு வள்ளி தேவானையோட ஒரு கோவில் கட்டி முத்துக்குமர சுவாமின்னு அழைச்சார்கள்.”

“இந்தக்கோயில்ல ஐய்யப்பன் இருக்காரா”

“ஓ.. ஐயப்பனும் இருக்கார், மதுரை வீரன், கருப்பண்ணசாமி, இடும்பன் எல்லாரும் அங்க இருக்கா. பொன்னேஸ்வரி அம்மன் கீழே இருக்கா. அங்க ஒரு தீர்த்தக்கிணறும் இருக்கு. முதல்ல கன்னி மூல கணபதியைப் பாத்துண்டு அப்பறம் அம்மனை வழிபடணும். இங்கேயும் துர்கை, மாரியம்மன், சப்த கன்னிகை, வேணுகோபாலன், சிவலிங்கம்னு நிறைய அங்க இருக்கு.”

“அங்க பெருமாள் கோயில் இல்லையா அம்மா?’

“இருக்கே. பொன்னேஸ்வரி கோயில் எதிரேயே விஜயராகவ பெருமாள் இருக்கார். அவரோட ராமபிரான் சீதாலட்சுமண சமேதராக அருள் புரியறார்.”

“இதெல்லாம் இருக்கட்டும். உங்களுக்கு யார் சொன்னா, இங்க வந்து பூஜை செஞ்சா பிரமோஷன் கிடைக்கும்னுட்டு”

“அதாண்டா நம்ம சுப்புணி இருக்கானோல்லியோ. அவனோட அம்மா தான் சொன்னா. இங்க போய்ட்டு வேண்டிண்டு வந்தானாம்.ஒரு மாசத்தல ஆபீசர் ஆய்த்தானாம்”

“அம்மா இந்தப் பொன்மலை எத்தனை அடி உயரம் இருக்கும்?”

“இதுவா, சுமார் ஆயிரம் அடி இருக்கும்டா. உச்சிப்பிள்ளையார் கோயில் இந்த உச்சிலேந்து தெரியும். கீழே இருக்கும் எண்கோண வடிவுக் கிணத்தில ஸ்னானம் செஞ்சுட்டு, பொன்னேச்வரி அம்மனைப் பாத்து வேண்டிண்டு, அப்பறம் முத்துகுமார சுவாமிட்ட மனமாரப் பிரார்த்தனை செஞ்சா கை மேல் பலன் கிடைக்கும். வேலை தேடறவாளுக்குப் புது வேலையும், பதவி பிரமோஷன் கேக்கறவாளுக்குப் பிரமோஷனும் கிடைக்குமாம். என்ன சொல்ற நீ?.. ஒரு நடை போய்ட்டு வரலாமா?”

“இதோ போய் டிக்கட் புக் செஞ்சுட்டு வரேன்மா. என் உழைப்புக்கு நிச்சயம் பிரமோஷன் கொடுப்பான் அந்த முருகன்”

 

படத்திற்கு நன்றி:http://thiruthalam.com/gallery_AA.php?page=5

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.