நிலவொளியில் ஒரு குளியல் – 14

6

ஸ்ரீஜா வெங்கடேஷ்

Srija_venkateshஏற்கனவே ஒரு முறை என் பள்ளி நாள் நாடக அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொண்டிருக்கிறேன். அதைப் படித்து விட்டு என் நண்பர் ஒரிஸ்ஸா பாலு அவர்கள், ஏன் நீங்கள் நாம் ஒரிஸ்ஸாவில் போட்ட முதல் நாடக அனுபவங்களைப் பற்றி எழுதக் கூடாது? என்று கேட்டார். அப்போதே முடிவு செய்தேன், உங்களோடு அவற்றைப் பகிர்ந்துகொண்டு உங்களையும் வயிற்று வலி மாத்திரை வாங்க வைப்பது என்று.

1999ஆம் வருடம் என நினைக்கிறேன். நாங்கள் ஒரிஸ்ஸா தலைநகர் புவனேஸ்வர் வந்து, சுமார் இரண்டு வருடங்கள் ஆகியிருந்த நிலை. எங்களுக்கு முதன்முதலில் புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத்தை அறிமுகம் செய்தவர் ஒரிஸ்ஸா பாலுதான். அவர் ஒரிஸ்ஸாவிற்கும் (அப்போதைய கலிங்கம்) பண்டைத் தமிழ் நாட்டுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்தவர் என்பதால் அவருக்கு அந்தப் பெயர். அவருக்கு நான் எழுதுவேன் என்பது தெரியும். ஒரு நாள் அவரும் அவருடன் திரு.ஜி.வி.கண்ணன் என்பவரும் எங்கள் வீட்டுக்கு வந்து ஒரு முழு நீள நாடகம் ஒன்று எழுதித் தாருங்கள், வரும் தமிழ்ச் சங்க ஆண்டு விழாவின் போது அரங்கேற்றலாம் என்றனர். எனக்கு திக்கென்றது. உங்களுக்குத்தான் தெரியுமே என்னுடைய நாடக அனுபவம். மீண்டும் நாடகமா? நானா? என்று பயமாக இருந்தது. என் கணவரும் அவர்களோடு சேர்ந்து மிகவும் வற்புறுத்தவே, எழுதுவதாக ஒப்புக்கொண்டேன் (வேறு வழியில்லாமல்). கதையை ஜி.வி. கண்ணன் சொன்னார். அதைச் சிறிது மாற்றி இப்படி எழுதலாமா? என்று கேட்டேன். உடனே அவர்களும் ஒப்புக்கொள்ள, எழுத உட்கார்ந்தேன்.

அரங்கேற்றத்திற்கு மிகச் சரியாகப் பத்து நாட்களே இருந்தன. எனக்கு நாடகம் எழுத அளிக்கப்பட்ட அவகாசம் ஒன்றரை நாள். சரிதான்! ஆழ்வார்குறிச்சியில் நண்பர்களோடு பட்ட அவமானத்தை இம்முறை கணவரோடு படப் போகிறோம் என்ற பயத்துடனே எழுதினேன். கதை இது தான். கணவன், மனைவி இருவரும் மருத்துவர்கள். மனைவி தனியே மருத்துவமனை கட்டுமளவு பெரும் புகழ் மற்றும் பணத்தோடு இருக்க, கணவனின் கிளினிக்கில் ஈயடிக்கிறது. அதனால் இருவருக்கும் ஈகோ பிரச்சனை. ஒரு கட்டத்தில் கணவன் சிறந்தவனா? மனைவி சிறந்தவளா? என்ற கேள்வி எழுகிறது. இருவருமே தான் தான் சிறந்தவர் என நிரூபிக்கப் போராடுகிறார்கள். இறுதியில் இருவருக்கும் இடையயான அன்பு ஜெயிக்கிறது. அவர்கள் இருவருக்கும் நடக்கும் போராட்டங்களை நகைச்சுவையுடன் சொல்லியிருந்தேன்.

ஒத்திகை ஆரம்பித்தாகி விட்டது. வேடத்திற்கேற்ற ஆட்கள் என்றில்லாமல் ஆட்களுக்கேற்ற வேடம் கொடுக்க வேண்டியதாயிற்று. நடித்தவர்களில் யாருமே இதற்கு முன்பு மேடையேறியதில்லை, ஜி.வி.கண்ணன் அவர்களைத் தவிர. என் கணவருக்கு கம்பவுண்டர் வேடம். இதில் தமாஷ் என்னவென்றால் ஒரிஸ்ஸா பாலு அவர்களுக்கு இரண்டு வேடங்கள். நன்றாகக் கவனியுங்கள் இரண்டு வேடங்கள், இரட்டை வேடம் இல்லை. ஆள் பற்றாக்குறை காரணமாக பாலுவே எட்டாவது காட்சியில் ரவுடியாகவும், பத்தாவது காட்சியில் போலிச் சாமியாராகவும் நடிக்க ஒப்புக் கொண்டார்.

ஒத்திகையின் போது நடந்த கூத்துகளை எழுதுவதென்றால் அதற்குத் தனியான பத்தி ஒதுக்க வேண்டும். கதாநாயகியாக நடித்த திருமதி புவனாவின் வீட்டில்தான் ஒத்திகை நடந்தது. சி.ஆர்.பி.எஃப்.இல் வேலையிலிருந்த சுதந்திர குமார் அவர்களுக்கு முரட்டுப் பைத்தியம் வேடம். அதை அவரே விரும்பிக் கேட்டார். ஏனெனில் அந்தக் காட்சி மிகவும் நகைச்சுவை நிரம்பியது. அதனால் அது மிகுந்த பாரட்டைப் பெறும், தனக்கும் பெயர் வரும் என்பது அவர் எண்ணம். அதற்கேற்ப அவரும் அற்புதமாக நடித்தார். அவர் தான் நடிக்கும் காட்சியையே திருப்பித் திருப்பி ஒத்திகை பார்க்க விரும்புவார். தொலைவிலிருந்து வருபவர்கள் எல்லோரும் தங்கள் காட்சியை முதலில் முடித்து, தங்களை அனுப்பி விடுமாறு கேட்டுக்கொள்வார்கள். அதனால் ஒரு நாளாவது ஒத்திகைக் காட்சி ஒன்றில் தொடங்கி வரிசைக்கிரமமாக நடந்தது என்ற பேச்சே இல்லை.

அரங்கேற்ற நாளும் வந்தது. இந்த நாடகத்திற்கு இசைக் குழுவை வேறு ஏற்பாடு செய்திருந்தார் ஜி.வி.கண்ணன். மாலையில் அரங்கேற்றம். காலையில் முதன் முதலாக இசையோடு வரிசைக்கிரமமாக அப்போது தான் ஒத்திகை பார்த்தோம். ஒருவரும் தங்கள் வசனத்தை மறக்கவில்லை என்பது சந்தோஷமான் சமாசாரம்தான். ஆனால் எந்த நடிகருக்கும் தங்கள் காட்சி, எப்போது வரும் என்றே தெரியவில்லை. அவரவர் இஷ்டத்திற்கு நடுநடுவே சென்று குழப்பிக்கொண்டிருந்தனர். இந்தக் குழப்பைத்தைத் தீர்க்க, எனக்கு ஒரே ஒரு யோசனை தான் தோன்றியது. மேடையின் ஓரத்தில் (உடை மாற்று அறை வாசலில்) நின்றுகொண்டு நான் அந்தந்த நடிகரை அவரவர் காட்சியின் போது அனுப்ப வேண்டும் என்பதே அது. அந்த யோசனையை எல்லோரும் ஆமோதிக்கவே செயல்படுத்தினோம்.

Orissa_Baluசாயங்காலம் மணி ஆறு. விழாவுக்கு வர வேண்டியவர்கள் எல்லாரும் வந்தாயிற்று. குழந்தகளுக்கான போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசளிப்பும் முடிந்தது. எனக்கு இங்கே நாடி எக்ஸ்பிரெஸையெலாம் மிஞ்சி விமான வேகத்தில் அடித்துக்கொண்டிருந்தது. நாடக நடிகர்கள் ஒவ்வொருவருடைய முகமும் பலியாடு போல இருந்தது. எனக்குச் சிறு வயதில் ஏற்பட்ட அதே யோசனை. அதுதான் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு கடையத்திற்குப் பேருந்து பிடிப்பது, அந்த எண்ணம் மீண்டும் தலை தூக்கியது. அதைச் செய்ய முடியாமல் இரண்டு தடைகள் இருந்தன. ஒன்று ஒரிஸ்ஸாவிலிருந்து கடையத்திற்குப் பேருந்து கிடையாது. இரண்டாவது நான் அந்த நாடகத்தில் நடிக்கவேயில்லை. இருப்பினும் பயம் நீங்கவில்லை. அரங்கம் நிறைந்து காணப்பட்டது. பெரிய பெரிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனைவரும் வந்திருந்தனர். தெரிந்தவர்கள், நண்பர்கள் எனப் பெரிய கூட்டம். நாடக நடிகர்களின் நிலயைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை பார்க்கவே பரிதாபமாக இருந்தனர்.

நாடகம் சரியாக ஆறே காலுக்குத் தொடங்கியது. முதல் இரண்டு காட்சிகள் நல்லபடியாக முடிந்ததும் எங்களுக்குச் சற்று தைரியம் வந்தது. மூன்றாவது காட்சி, பெண் பார்ப்பபது போன்ற ஒரு காட்சி. அதில் என் கணவரும் நடித்தார். அப்போது என் மகள் ஜனனி இரண்டே வயதான குழந்தை. முன்பே நான் சொல்லியிருந்தபடி மேடையின் ஓரத்தில் எனக்கு வேலையிருந்ததால் என் மகளை என் தோழியிடம் ஒப்படைத்திருந்தேன். நாடகத்தின் மூன்றாவது காட்சியில் என் மகள் தன் தந்தையைப் பார்த்த சந்தோஷத்தில் நேரே மேடைக்கே “அப்பா” என்று அழைத்தபடி ஓடி வந்துவிட்டாள். அவளை முதல் வரிசையில் மற்ற குழந்தைகளோடு அமர்த்தியிருக்கிறார்கள். அதைப் பார்த்த எனக்கு பயத்தில் ஜுரமே வந்து விட்டது. மேடைக்குப் போய், குழந்தையைத் தூக்கலாம் என்றால் எல்லா விளக்குகளும் போடப்பட்டு, மேடை ஜெகஜ்ஜோதியாக இருந்தது. ஆனால் என் கணவர் சமயோஜிதமாக “அட! அடுத்த வீட்டுப் பாப்பா இங்கே வந்திருச்சே? நல்ல பாப்பால்ல உனக்கு சாக்லேட் வாங்கித் தரேன்” என்று சொல்லி, மேடையின் ஓரத்திற்கு வந்து குழந்தையை என்னிடம் கொடுத்துவிட்டார். நல்ல வேளை! யாருக்கும் எந்தச் சந்தேகமும் வரவில்லை.

நாடகம் தொடர்ந்தது. குழந்தையை என்னிடமே வைத்துக்கொண்டேன். இனிமேல் எதுவும் அசாதாரணமாக நடக்காது என்று சற்றே ஆசுவாசமாக இருந்தது. நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும் என்பது எங்கள் நாடகத்தைப் பொறுத்தவரை ரொம்ப சரி. விவரமாகச் சொல்லுகிறேன். ஒரிஸ்ஸா பாலு அவர்கள் இரண்டு வேடத்தில் நடித்தார் என்று சொன்னேன் அல்லவா? அதில் அவர் ரவுடி வேஷத்தில் வரும் காட்சி முடிந்தது. அதற்கு அடுத்து சுதந்திர குமார், பைத்தியமாக வரும் காட்சி. அதற்கும் அடுத்து பாலு போலிச் சாமியாராக வரும் காட்சி. சுதந்திர குமார் வரும் காட்சியில் ஒரு மேஜை இருக்கும். அதில் டேபிள் கிளாத் போட வேண்டும் என்று கடைசி நிமிடத்தில்தான் தோன்றியது அவருக்கு. திரையை உயர்த்தி விட்டார்கள். நல்லவேளையாக லைட் எதுவும் போடவில்லை. அந்த நேரத்தில் சுதந்திர குமார் உடை மாற்றும் அறைக்குள் பாய்ந்து (அங்கு சுத்தமாக வெளிச்சம் இல்லை) கைக்குக் கிடைத்த துணியை உருவி மேடைக்கு வந்து மேஜையில் போட்டு விட்டார். காட்சி தொடங்கிவிட்டது.

இது ஒரு புறம் என்றால் உடை மாற்றும் அறையிலிருந்து பாலு அவர்கள் “ஐயோ! என் வேட்டி! என் சாமியார் வேட்டிய யாரோ உருவிட்டாங்க! யாராவது வேட்டி கொண்டு வாங்களேன்” என்று அலறிக்கொண்டிருந்தார். வேறு வேட்டியை எடுத்துக் கொடுக்க, ஆண்கள் யாருமில்லை. அனைவரும் மேடையில். நான் என்ன செய்வேன்? எனக்குச் சிரிப்பு ஒரு பக்கம், அடுத்த காட்சியில் அவர் எப்படி வருவார்? என்ற கவலை ஒரு புறம்.

ஒரு வழியாக அந்தக் காட்சி பலத்த கைதட்டல்களோடு முடிந்தது. பின்னரே அனைவருக்கும் பாலு அவர்கள் துகிலுரியப் பட்ட விவரம் தெரிய வந்தது. சிரிப்போ சிரிப்பென்று மற்றவர்கள் சிரிக்க, பாலு அவசர அவசரமாக வேட்டியைக் கட்டிக்கொண்டு அடுத்த காட்சிக்கு ஓடினார். நாடகம் நல்லபடியாக முடிந்து, எங்களுக்கு மிகவும் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. நாடகம் முடிந்து சாப்பிடச் செல்லும்போது நாங்கள் சிரித்த சிரிப்பில் மண்டபமே குலுங்கியது. அனைவரும் எங்களைப் பாராட்டினார்கள். நாடகம் மிகச் சிறந்த முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்றும் நிர்வாகம் அதாவது மேனேஜ்மெண்ட் மிகச் சிறப்பாக இருந்தது என்றும் பார்வையாளர்கள் பாராட்டியபோது பொங்கி வந்த சிரிப்பை நாங்கள் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டோம்.

அன்று தொடங்கி, புவனேஸ்வரில் எட்டு ஆண்டுகளில் ஐந்து நாடகங்கள் போட்டுவிட்டோம். அனைத்திந்திய நாடக விழாவில் கூட நல்ல பெயர் வாங்கிவிட்டோம். ஆனால் இந்த முதல் நாடக அனுபவம் என் நினைவுகளில் பசுமையாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் பாலுவைச் சந்திக்கும் போது, இந்த நிகழ்ச்சியைப் பற்றிப் பேசாமல் இருந்ததில்லை. சென்னையிலும் நாடகம் போட, எனக்கு ஆசைதான். கதையெல்லாம் கூட தயாராக இருக்கிறது. ஆனால் இங்கு நாடகம் அரங்கேறுவது என்பது மிகவும் கடினமான விஷயம் என்பதோடு மிகுந்த பணச் செலவும் ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள். இருந்தாலும் முயன்று பார்க்கலாம் என்றிருக்கிறேன். பார்ப்போம்! அதுவரை புவனேஸ்வர் நாடக நினைவுகளில் மூழ்கியபடி நிலவொளியில் ஒரு குளியல்.

(மேலும் நனைவோம்…

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “நிலவொளியில் ஒரு குளியல் – 14

  1. ஸ்ரீஜா வெங்கடேஷ் அவர்களே! மிகவும் நன்றாக எழுதி உள்ளீர்கள். ஒத்திகையின் (rehearsal) பொழுது நடிகர்கள் படுத்திய பாடு, ரசிக்கும்படி இருந்தது. வாழ்த்துகள்.

  2. வீட்டைக் கட்டிப் பார். கல்யாணம் பண்ணிப் பார் என்று சொல்வார்கள். அதை போல் நாடகம் போட்டுப் பார் என்று சொல்ல வேண்டும். நாடகம் போடும் முன் அதன் ஒத்திகை பார்ப்பது என்பது லேசுபட்ட விஷயம் அல்ல. முதலில் கதையைக் காட்சிகளாகப் பிரிக்க வேண்டும். பின்னர் நடிகர் நடிகைகளை வைத்து ஒத்திகை பார்க்க வேண்டும். சுமார் பத்திலிருந்து பதினைத்து முறை ஒத்திகை பார்த்தால்தான் ஒரு அளவுக்குத் தைரியம் வரும். இதைத் தவிர மியூசிக் troupe உடன் சேர்ந்து மறுபடியும் ஒன்னு அல்லது இரண்டு ஒத்திகையாவது செய்ய வேண்டும். இதைத் தவிர நாடக மேடையில் ஒலி மற்றும் ஒளியுடன் மறுபடியும் ஒரு ஒத்திகை. அப்பப்பா…… கேட்கும் பொழுதே மூச்சு முட்டுகிறதா? இத்தனை சமாசாரம் இருக்கு. இதை மீறி நடிகர்கள் வசனங்களை மறக்காமல் நடிக்க வேண்டும்.

    நன்றாக எழுதியதற்கு ஸ்ரீஜா வெங்கடேஷ் அவர்களுக்குப் பாராட்டுகள்.

  3. தமிழ் நாடக துறையே மங்கி கொண்டு இருக்கும் இந்த நிலையில் தாங்கள் ஒரிசாவில் தமிழ் நாடகம் நடத்தியது குறித்து மிக்க மகிழ்ச்சி. இப்பொழுது வரும் நாடகங்களில் வெறும் அறுவை ஜோக்ஸ் மற்றும் தற்பொழுது உள்ள அரசியலையும் தாக்கும் விதமாக உள்ளன (இதில் ஒரு சில நாடகங்கள் விதி விலக்கு). காரணம் கேட்டால் மக்கள் நகைச்சுவை நாடகங்களையே விரும்புகிறார்கள் என்ற பதில். இவர்களின் சுயநலத்திற்கும் பணம் சம்பாதிப்பதற்குமே இந்த நாடகங்கள் நடத்தப்படுகின்றன. இந்த லட்சணத்தில் டிக்கெட் விலைகள் வேறு ரூபாய் 100 முதல் ரூபாய் 500, 1000 வரை. கலையை வளர்ப்பதற்காக, ஒரு காலத்தில் நல்ல நாடகங்கள் போடப்பட்டன.

    நாடகத் துறையை வளர்ப்பதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதையும் ஒழுங்கான வழியில் செய்ய வேண்டும். பெயருக்காக இயல் இசை மன்றம் வைத்து, பிரயோஜனம் ஒன்றும் இல்லை. அதில் ஊழல் செய்யாமல், உண்மையிலேயே தகுதியான நாடகக் கலைஞர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இதிலும் லஞ்சம் வந்தது என்றால் நாடகக் கலை சுத்தமாக அழிந்து விடும்.

    தங்கள் நினைத்தபடி தங்களின் நல்ல நாடகம், சென்னையில் அரங்கேற எனது வாழ்த்துகள்.

  4. Nobody watches drama nowadays. Everybody is busy watching serials. that’s why the dramas of today are boring. This experience took me to the world of drama. Good work madam. Good luck.

  5. நன்றி ஸ்ரீஜா அவர்களே.

    நாடகம் நடந்த வருடம் 2000. பொங்கல் விழாவுக்காக ஞாயிறு ஆரம்பித்து, ஞாயிறு அரங்கேற்றினோம்.

    பழைய ஞாபகத்தைக் கிளறி விட்டீர்

    ஒரிசா புவனேஸ்வர் நினைவுகள் நம்மைப் போல் அயல் மாநிலங்களில் வாழ்ந்து திரும்பியவர்களுக்கு அவர்களுடைய நினைவுகளை அசை போட வைக்கும்.

    சிவ பாலசுப்ரமணி B+ve

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *