தூள் கிளப்பிய ‘தூஸ்ரா’ நாடகம்

5

அண்ணாகண்ணன்

சிரத்தா நாடக அமைப்பின் சார்பில், ஆனந்த் ராகவ் ஆக்கத்தில் ‘தூஸ்ரா’ என்ற நாடகத்தை 27.01.2011 அன்று சென்னை, நாரத கான சபாவில் பார்த்தேன்.

doosra

‘தூஸ்ரா’ (கிரிக்கெட்டின் கதை) என்ற தலைப்பே இது ஒரு வித்தியாசமான நாடகம் என்பதை உணர்த்தியது. ஆனந்த விகடனில் தான் எழுதிய ஒரு கதையைத் தானே இயக்கி, நாடகமாக ஆனந்த் ராகவ் மேடையேற்றினார். இது, இவர் இயக்கிய முதல் நாடகம்.

கணேஷ் விஸ்வநாத் என்ற வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரன், உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி, படிப்படியாக முன்னேறி, இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெறுகிறான். சில ஆண்டுகளில் இந்திய அணித் தலைவனாகவும் மாறுகிறான். இந்தப் பாத்திரத்தின் வாயிலாக, கிரிக்கெட் என்ற விளையாட்டு, தன் கதையைத் தானே சொல்வது போல் கதை அமைந்துள்ளது.

ஒரு நல்ல விளையாட்டு, எப்படி பணம், புகழ், தேசப் பற்று…. போன்ற பல அம்சங்களால் பாதிக்கப்பெறுகிறது? எனத் தொடங்கி, கிரிக்கெட் வீரர்களை மது, புகை, மாது, பணம், புகழ்  ஆகியவவை எவ்வாறு பாதிக்கின்றன? கிரிக்கெட் சூதாட்டம் எப்படி நிகழ்கிறது? அதன் வணிக முகம் எப்படிப்பட்டது? ஆட்டத்தில் தோற்றால், வீரர்கள் எவ்வாறு தூக்கி எறியப்படுகிறார்கள்? எனப் பலவற்றையும் மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.

மின்னணுக் கருவிகளின் ஒத்துழைப்புடன் மேடையே ஒரு சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியமாய் ஆகிவிட்டது. நாடகப் பாத்திரமான கணேஷ், புகழ் பெற்ற ஆட்டக்காரர்களுடன் இணைந்து கிரிக்கெட் ஆடுகிறார். அவர் வீசும் ஒவ்வொரு பந்துக்கும் மக்களின் கரவொலியும் கூக்குரலும் கேட்கின்றன. அவர் மட்டை பிடித்து, பந்துகளை 4, 6 என விளாசுகிறார். டபிள்யு.வி.ராமன், நாடகப் பாத்திரமான கணேஷைத் தொலைக்காட்சியில் பேட்டி எடுக்கிறார். இவை அனைத்தும் மேடையில் நிஜமாகவே நிகழ்கின்றன. அந்த அளவுக்குப் பல்லூடக நுட்பங்களைச் சிறப்பாக இயக்குநர் பயன்படுத்தியுள்ளார். இது, கணேஷ் என்ற பாத்திரத்தை உண்மையான விளையாட்டு வீரராகப் பார்வையாளர்கள் நம்பும்படி காட்டிவிட்டது.

doosra

இரண்டு ஓவர்களுக்கு நடுவில் தொலைக்காட்சியில் விளம்பரம் ஓட்டுவது போல், மேடையிலும் கணேஷ் ஆடும்போது இடையிடையே விளம்பரங்கள் தலை காட்டின. இது, மிகப் புத்திசாலித்தனமான, இயல்பான காட்சியமைப்பு. நாடகத் துறை நலிவடைந்துள்ள நிலையில், அதனை வணிக ரீதியாக வெற்றிகரமாக நடத்திட, இந்த உத்தி மிகவும் உதவும்.

கிரிக்கெட் வீரர் கணேஷ் விஸ்வநாத்தாக கிரீஷ், கணேஷின் தந்தையாக டெல்லி கணேஷ், விளையாட்டுத் துறை அமைச்சராகக் காத்தாடி ராமமூர்த்தி, தேர்வுக் குழுத் தலைவராக ஆனந்த் ராகவ் ஆகியோர் மிகச் சிறப்பாக நடித்திருந்தனர். நாடகத்தில் பங்கேற்ற ஒவ்வொருவரும் சிறப்பான பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.

doosra

வசனங்கள் மிக அருமை. நகைச்சுவையாகவும் ஆழமான கருத்துகள் கொண்டவையாகவும் இருந்தன. கிரிக்கெட் ஆட்டத்துக்கும் தோசைக்குமான ஒப்பீடு, சுவையானது. பல நேரங்களில் கைத்தட்டல் தாராளமாகவே கிடைத்தது.

ஐ.பி.எல். டுவென்டி 20 ஆட்டங்களை அறிமுகப்படுத்துவதற்காக விளையாட்டுத் துறை அமைச்சருக்கு, அந்த யோசனையைத் தெரிவிப்பவர்கள் ‘அன்பளிப்பு’ வழங்குகிறார்கள். இரண்டு பெட்டிகளில் அமெரிக்க டாலர்களாக இந்திய மதிப்பில் 10 கோடியைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் காட்டுகிறார்கள். அதைக் கண்டு அமைச்சர் புளகாங்கிதம் அடைகிறார். ‘இதுவரை லட்சங்களில் வாங்கிக்கொண்டிருந்தேன். எனக்குக் கோடிகளைக் கொடுக்கிறீர்கள்’ என்றும் சொல்கிறார். இந்திய அமைச்சர்களுக்குக் கோடிகளே மிக மலிவான தொகையாக, எப்போதோ ஆகிவிட்டன. இந்நிலையில் சாதாரண 10 கோடிக்கு அமைச்சர் இவ்வளவு வியப்பு அடைவது, யதார்த்த நிலையைப் பார்க்கையில் பொருந்தவில்லை.

இந்தியன் பிரீமியர் லீக் என்பதற்குப் பதிலாக, இந்தியன் பிரைமரி லீக் என்ற பெயரைப் பயன்படுத்தியிருந்தபோதும் ஐபிஎல் ஆட்டங்களின் படக் காட்சிகள் சில, மேடையில் திரையிடப்பெற்றன. இந்தப் பின்னணியில் ஐபிஎல் உருவான போது, எப்படி கருப்புப் பணம், வெள்ளையாக மாறியது? எவரெவர் பினாமியாக அணிகள் உருவாயின? எப்படி பணம் வெள்ளமெனப் பாய்ந்தது? என்பதற்குப் பல குறிப்புகளை நாடகம் தருகிறது. இது, துணிச்சலான காட்சி என்றாலும் சட்டரீதியான சிக்கல்களை முழுவதும் கடந்தது எனச் சொல்ல முடியாது.

புதிய கருவையும் களத்தையும் எடுத்துக்கொண்டு, சுவையான நாடகமாக மேடையேற்றியதன் மூலமாகச் சிரத்தா ஒரு சிக்ஸர் அடித்திருக்கிறது. ஆனந்த் ராகவ், ‘சுருதி பேதம்’, ‘தனிமை’ ஆகியவற்றைத் தொடர்ந்து, தன் ‘தூஸ்ரா’ மூலமாக ஹாட்ரிக் சாதனை புரிந்துள்ளார்.

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “தூள் கிளப்பிய ‘தூஸ்ரா’ நாடகம்

  1. நல்ல விமர்சனத்துக்கு நன்றி.

    1. ஒலி ஒளி காட்சிகளை தொகுத்து , கணேஷாக நடித்தவரை படம்பிடித்து அவற்றை அதனுடன் இணைத்து வழங்கியது, டெஸ்ட் மேட்ச் நடப்பதை ஆயிரக்கணக்கானோர் உட்கார்ந்து பார்ப்பதைப் போல் மேடையில் காண்பித்தது போன்ற தொழில் நுட்பக் காட்சிகளுக்கான பாராட்டுதல்கள் “மாயாபுரி” யின் கிருஷ்ணமூர்த்திக்கு உரித்தானவை.

    2. அமைச்சர் 10 கோடி தந்ததற்கு வியப்பு அடையவில்லை. “இவ்வளதான் தூக்கிட்டுவர முடிஞ்சது. மீதியை கார்ல வச்சிருக்கோம்” என்று தொழிலதிபர் சொன்னதற்கு தான் வியப்பு அடைகிறார். காரில் எவ்வளவு இருந்தது என்று நாங்கள் சொல்லவில்லை.

    ஒவ்வொரு காட்சியும் அரங்கு நிறைந்த காட்சிகளாய் நடைபெற்றது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்தது. ஆதரவு தந்த ரசிகர்களுக்கு நன்றி.

    அன்புடன்

    ஆனந்த் ராகவ்

  2. விமர்சனமே நாடகத்தைப் பார்க்கத் தூண்டும் விதமாக இருந்தது. அடுத்த முறை நடக்கும்போது தெரிவிக்கவும். திரு.ஆனந்த் ராகவ் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் பாராட்டுக்கள். நன்றி. சிரிப்பானந்தா

  3. Many people have appreciated the “Doosra” Drama. I am also longing to see the same; Many have appreciated regarding the sets in the stage. Good work. Keep it up

  4. i had the pleasure of seeing DOOSRA in NGS on the third day and was bowled first ball. I was amazed at the all round success the play demonstrated with intelligence and a rare boldness in script and performance.
    Congrats to the team.
    V.Thiruvengadam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *