அமெரிக்காவின் இரட்டை வேடம்

முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை

Nageswari_Annamalaiஅமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி 1960இன் கடைசியில் தேர்தெடுக்கப்பட்டபோது நான் கத்தோலிக்க கன்னிமார் நடத்திய கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். அந்தக் கன்னிமார்களில் நிறையப் பேர் அமெரிக்காவிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கு ஜான் கென்னடி ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும். மாணவிகள் எல்லோரிடமும் “முதல் முதலாக ஒரு கத்தோலிக்க ஐரிஷ்காரர், அதிலும் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லா ஜனாதிபதிகளையும் விட வயதில் இளையவர் தேர்தெடுக்கப்பட்டிருக்கிறார்” என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதிலிருந்து ஜனாதிபதி கென்னடியிடம் எனக்கு ஒரு மதிப்புப் பிறந்தது.  எனக்கு மட்டுமல்ல, இந்தியாவில் பலரிடம் கென்னடி மீது மதிப்பும் பிரியமும் ஏற்பட்டது. அவர் இந்தியாவின் நண்பர் என்று கருதப்பட்டார். பல இடங்களிலும் கென்னடியின் படம் சுவர்களை அலங்கரிக்கத் தொடங்கியது. அவரையும் அவர் மனைவி ஜாக்குலினையும் வள்ளுவன் வாசுகி தம்பதிகள் என்று எழுத்தாளர் மணியன் வர்ணித்தார்.

ஆனால் அமெரிக்கா வந்த பிறகுதான் அவர் பெரிய மகான் அல்ல என்பதும் அவருக்கும் அவர் மனைவிக்கும் இடையே இருந்தது அப்படி ஒன்றும் தூய காதல் இல்லை என்பதும் தெரிய வந்தது.  திருமணத்திற்கு முன்பு இவருக்கு நிறைய தோழிகள் (girl friends) இருந்திருக்கிறார்கள். அவர் மனைவி ஜாக்குலின் இவரை விட ஒரு படி மேல். ஜாக்குலினும் இன்னொருவரும் பல நாட்கள் பழகி, ஒருவரையொருவர் பிடித்துப் போய் திருமணம் செய்துகொள்வதாக முடிவுசெய்து திருமண நிச்சயமும் செய்துகொண்டார்கள். ஆனால் திருமணம் செய்துகொள்வதற்கு முன்னால் கென்னடியைச் சந்திக்கப் போய், ஏற்கனவே தான் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தவரை விட கென்னடி மேல் என்று முடிவு செய்து, ஏற்கனவே செய்திருந்த ஒப்பந்தத்தை முறித்துவிட்டு புதியவரோடு பழக ஆரம்பித்து, முடிவில் அவரையே திருமணம் செய்துகொண்டார்.

John F. Kennedy2011 ஜனவரி இருபதாம் தேதி கென்னடி பதிவியேற்று ஐம்பது வருடங்கள் ஆகியதை நினைவுகூர, அவருடைய பெயர்பெற்ற பதவியேற்பு உரையைப் பல பத்திரிகைகள் வெளியிட்டன. அந்த உரையில், அவர் அமெரிக்கா உலக மக்களுக்கெல்லாம் நண்பன் என்றும் அடக்குமுறையில் சிக்கித் தவிக்கும் மக்களை விடுவிப்பதே அமெரிக்காவின் கொள்கை என்றும் உலகில் அடக்குமுறையை ஒழிக்க அமெரிக்கா எந்தக் காரியமும் செய்யும், எந்த சுமையையும் தாங்கும், யாரையும் எதிர்க்கத் துணியும் என்றும் பேசியிருக்கிறார். அப்போதைய அமெரிக்காவின் பரம எதிரியான சோவியத் யூனியனுக்குப் பூடகமாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அப்போது அமெரிக்காவிற்கு கம்யூனிஸம் என்றால் வேப்பங்காய். (இப்போதும் அப்படித்தான். ஆனால் இப்போது ரஷ்யா அமெரிக்காவின் முதல் எதிரி அல்ல. அமெரிக்காவின் கைக்குள் அடங்காத முஸ்லீம் நாடுகள்தான் அமெரிக்காவின் முதல் எதிரிகள்.)

காங்கோவின் தலைவர் கொல்லப்பட்டு ஐம்பது ஆண்டுகள் ஆனதை உலகம் நினைவுகூர்வதும் இந்த ஆண்டில்தான். கென்னடி இப்படிப் பேசிய மூன்று நாட்களுக்கு முன்னால்தான், காங்கோ நாட்டைக் காங்கோ நாட்டு மக்களே ஆள வேண்டும், காங்கோ நாட்டின் இயற்கை வளங்கள் அந்த மக்களுக்கே சேர வேண்டும் என்பதற்காகப் போராடிய அந்த நாட்டுத் தேசியத் தலைவர்களுள் ஒருவரான பேட்ரிக் லுமும்பாவை (Patrice Lumumba), அவர் சோவியத் யூனியனோடு சேர்ந்து காங்கோவையும் கம்யுனிஸ்ட் நாடாக்கி விடுவார் என்று பயந்து, அமெரிக்க சி.ஐ.ஏ. (Central Intelligence Agency) பெல்ஜிய நாட்டோடு சேர்ந்து கொன்று, அமெரிக்காவின் சொல்படி கேட்கத் தயாராக இருந்த தலைவரைப் பதவியில் அமர்த்தியது. அந்த நாடு அதன் பிறகு 26 ஆண்டுகள் ஒரு சர்வாதிகாரியின் பிடியில் சிக்கி தவித்தது. இப்போதும் அந்த நாட்டில் திடநிலை இல்லை.

பல நூற்றாண்டுகளாகக் காங்கோ, பெல்ஜியத்தின் ஆதிக்கத்தில் இருந்து வந்தது. லுமும்பா போன்ற தேசியவாதிகள், காலனீய ஆதிக்கத்திலிருந்து பல நாடுகள் தங்களை விடுவித்துக்கொள்வதைப் பார்த்து, தங்களுக்கும் விடுதலை வேண்டும் என்று பெல்ஜியத்திடம் கேட்டபோது பெல்ஜியத்தால் அதை மறுக்க முடியவில்லை. ஆனால் அதே சமயம் பெல்ஜிய, அமெரிக்க, ஐரோப்பிய கம்பெனிகள் காங்கோவின் கனிவளங்களைச் சுரண்டுவதையும் நிறுத்த விரும்பவில்லை. இந்தக் கம்பெனிகள் தங்கள் நாட்டின் கனிவளங்களைச் சுரண்டுவதை விரும்பாத லுமும்பா, காங்கோ நாட்டவரே சுரங்கங்களை நடத்துவதற்கு இந்த நாடுகள் உதவ மறுத்ததால் சோவியத் யூனியனின் உதவியை நாடினார். தங்கள் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நாடுகளில் தோன்றிய பல தேசியவாதிகளை ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் கம்யூனிஸ்டுகள் என்று பட்டம் கட்டி, அவர்களைத் தீர்த்துக் கட்ட முயன்று வெற்றியும் கண்டிருக்கின்றன. இப்படி அவர்கள் தீர்த்துக் கட்டியவர்களில் லுமும்பாவும் ஒருவர்.

P.Lumumbaஒன்றரைக் கோடி மக்கள் அடங்கிய காங்கோ, பெல்ஜியத்திலிருந்து விடுதலை பெற்றபோது அங்கு முப்பது பேர்கள்தான் பட்டதாரிகள். 5000 பேர் அடங்கிய அரசாங்க அதிகாரிகளில் மூன்றே பேர்தான் காங்கோ நாட்டவர். காங்கோவின் கஜானாவைக் காலி செய்துவிட்டு ஆளும் பயிற்சியையும் காங்கோலியர்களுக்கு அளிக்காமல் காங்கோவிற்குப் பெல்ஜியம் சுதந்திரம் அளித்தபோது ஆற்றிய உரையில் அந்த நாட்டு மன்னர் “காங்கோலியர்களே, இப்போது உங்களுக்கு நாங்கள் சுதந்திரம் வழங்கியிருக்கிறோம். அந்த நம்பிக்கைக்குத் தகுந்தாற்போல் நடந்துகொள்ளுங்கள்” என்றாராம்!

காங்கோவிற்கு சுதந்திரம் கொடுத்தாலும், தொடர்ந்து அந்த நாட்டின்  கனிவளங்களை அமெரிக்க, ஐரோப்பிய கம்பெனிகள் அனுபவித்து வரும் என்று அவர்கள் கணக்குப் போட்டனர். ஆனால், இந்தப் பேச்சைக் கேட்டு வெகுண்டெழுந்த லுமும்பா, காலனிய ஆதிக்கவாதிகள் காலனியவாசிகளை எப்படிக் கொடுமைப்படுத்தினார்கள்; எப்படி அவர்களை இழிவு செய்தார்கள் என்பதைப் பற்றி எல்லாம் ஆவேசமாகப் பேசியிருக்கிறார். அப்போதே லுமும்பாவைக் காங்கோவின் தேசிய அரங்கில் விட்டுவைக்கக் கூடாது என்ற எண்ணம் அமெரிக்க, பெல்ஜிய அதிகாரிகளுக்கு ஏற்பட்டுவிட்டது. அதற்கு மேல் அவர் சோவியத் யூனியனிடம் உதவி பெறுவதற்காகச் சென்றதும் அவரைத் தீர்த்துக் கட்டிவிடுவது என்று முடிவு. “காங்கோவில் கியூபாவில்போல் இன்னொரு காஸ்ட்ரோவா?” என்று அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஐஸன்ஹோவர் கூறினாராம்!

அமெரிக்கா கொடுத்த பணத்திற்காகவும் ஆதரவிற்காகவும் நாட்டு மக்களின் நலன்களை விட்டுக் கொடுக்கத் தயாராக இருந்த சில ஆப்பிரிக்கத் தலைவர்கள் போல் காங்கோவிலும் இருந்திருக்கிறார்கள். அமெரிக்க சி.ஐ.ஏ., காங்கோவின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் மூலம் காங்கோவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட லுமும்பாவைச் சட்ட விரோதமாகப் பதவியிலிருந்து இறக்கவைத்தது. அவரைக் கொல்வதற்கு அமெரிக்க சி.ஐ.ஏ. ஒரு தூதரிடம் விஷம் கொடுத்து காங்கோவிற்கு அனுப்பியது. ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை. கடைசியில் காங்கோவிலிருந்து தனிநாடு கேட்டுக்கொண்டிருந்த லுமும்பாவின் எதிரிகளின் இடத்திற்கு லுமும்பாவை அனுப்பி, அவர்கள் மூலம் லுமும்பாவைச் சித்திரவதை செய்து கொன்றது.

2001இல் பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒருவர் ஆராய்ச்சி செய்து, லுமும்பாவின் கொலையில் பெல்ஜியமும் அமெரிக்க சி.ஐ.ஏ.வும் ஈடுபட்டிருந்ததைக் கண்டு அறிவித்தார். பெல்ஜிய அரசு, காங்கோவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, அவருக்குக் காங்கோவில் நினைவாலயம் எழுப்பியது. ஆனால் இன்று வரை அமெரிக்கா தன் பங்கு பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

உலகில் மனித உரிமைகளுக்காகப் பாடுபடுவதாகக் கூறிக்கொள்ளும் அமெரிக்கா, தன் நலன்களுக்கு முரண்பாடாக எந்த நாட்டுத் தேசியவாதியும் நடந்துகொண்டால் அவருக்குக் கம்யூனிஸ்ட் என்று பட்டம் சூட்டி, அவரை அரசியலிலிருந்தே விலக்கிவிடுவது அல்லது கொன்றுவிட்டு, தன் நலன்களுக்கு அனுகூலமாக இருக்கும், தன் சொல்படி கேட்கும் தலையாட்டி பொம்மைகளைப் பதவியில் அமர்த்தி, தன் நன்மைகளைக் கவனித்துக்கொள்வதைத்தான் அமெரிக்கா இதுவரை செய்துவந்திருக்கிறது.

ஈரான், கௌதமாலா, நிகராகுவா என்று அமெரிக்கா தலையிட்ட நாடுகளின் பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம். உலக நாடுகளில் ஜனநாயகத்தைப் பரப்புவதாகக் கூறிக்கொள்ளும் அமெரிக்கா, தன் நலன்களுக்குப் பாதகம் ஏற்பட்டால் அந்த நாடுகளில் சர்வாதிகார ஆட்சியை நிலைநாட்டத் தயங்குவதில்லை. அதுமட்டுமல்ல, மனித உரிமைகளுக்காக அமெரிக்கா பாடுபடுவதாகக் கென்னடி உரையாற்றும்போதே அமெரிக்காவிற்குள்ளேயே கருப்பர்களுக்கு முழுக்  குடிமையுரிமையும் வழங்கப்படவில்லை. அதற்குப் பிறகு பல வருடங்கள் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் போராடித்தான் சட்டப்படி கருப்பர்கள் முழுக் குடிமையுரிமையும் பெற்றார்கள். கருப்பர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த அடக்குமுறையை ஒழிப்பது பற்றிக் கென்னடி தன் உரையில் குறிப்பாக ஒன்றும் சொல்லவில்லை.

அமெரிக்கா என்றாலே இரட்டை வேடம்தானா?

==========================

படங்களுக்கு நன்றி: விக்கிப்பீடியா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *