வார ராசி பலன்: 09.04.2012 முதல் 15..04-2012 வரை
காயத்ரி பாலசுப்ரமணியன்
மேஷம்: மாணவர்களுக்குச் சில பிரச்னைகள் இருந்தாலும், வாரக் கடைசியில் கிரகங்கள் சாதகமான சூழலை உருவாக்கும். வேலை செய்யும் போது பணியில் இருப்பவர்கள் மறதிக்கும், அஜாக்கிரதைக்கும் இடம் கொடுத்தால், அவர்கள் தீட்டிய திட்டங்களில் சிறிது தாமதம் உண்டாகும். சக கலைஞர்களுடன் கலைஞர்கள் இணக்கமாகப் பழகினால், வேலைகளை நிம்மதியாகச் செய்ய இயலும். வேலை செய்யும் இடங்களில், பெண்கள் சில மாற்றங்களைச் சந்திக்க வேண்டி இருக்கும். எனவே தன்னுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. போட்டிகளில் வியாபாரிகள் புது யுக்திகளைக் கையாள்வது மூலம் வெற்றி பெறலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் வார்த்தைகளை விட, செயலில் வேகம் காட்டுவது நல்லது என்பதை நினவில் கொண்டு செயல்பட்டால் அவர்களின் முன்னேற்றம் வளமாக இருக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு, வங்கிக் கடன் தொடர்பாக இருந்த நீண்ட நாள் பிரச்னைகள் ஒரு முடிவுக்கு வரும்.
ரிஷபம்: மாணவர்கள் அனுசரித்து நடக்கவும், பொறுமையாகவும் இருக்கவும் கற்றுக் கொண்டால் வாழ்க்கை அவர்களுக்குப் பல நன்மைகளை அள்ளித் தரும். வேலையில் கவனம் செலுத்துவது நல்லதுதான். எனினும் பணியில் இருப்பவர்கள் குடும்பத்தினரின் தேவைகளைக் கவனித்து விட்டால், இல்லத்தில் அமைதி நிலவும். மனதைக் கவலைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கலைஞர்கள் யோகா, தியானம் ஆகிவற்றில் ஈடுபடுவது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள் பணம் சம்பந்தமான வாக்குறுதிகள் கொடுக்கும் முன் யோசித்துச் செயல்படவும். தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பதற்காக, இந்த வாரம் பொறுப்பில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும், கடன்களைக் குறைக்க, வியாபாரிகள் வீண் செலவுகளைக் குறைப்பது அவசியம். வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புபவர், தகுந்த வாய்ப்பு வரும் வரை காத்திருந்தால், பண நஷ்டம் மனக் கஷ்டம் இரண்டையும் தவிர்த்து விடலாம்.
மிதுனம்: வேலைகள் தொய்வின்றி நடைபெற, கலைஞர்கள், தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருக்கவும். மாணவர்கள் போடும் உழைப்பு அவர்களை உயர்வான நிலைக்குக் கொண்டு செல்லும். பெண்கள் பண விவகாரங்களில் கவனமாகச் செயல்பட்டால், குடும்ப அமைதிக்குப் பங்கம் உண்டாகாமலிருக்கும். இந்த வாரம் வியாபாரிகளுக்குப் பொருளாதார வகையில் முன்னேற்றமும், தேவைக்கேற்ற பண வரவும் உண்டாகும். எனினும் சரக்குப் போக்குவரத்தில் விழிப்புடன் இருப்பது அவசியம். பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் சலுகைகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவும். சுய தொழில் புரிபவர்கள், தங்கள் இலக்கை அடையும் வரை விடாமுயற்சியை மேற்கொண்டால், வெற்றியைத் தன் பக்கம் வைத்துக் கொள்ள முடியும். வியாபாரிகள் கொடுக்கல்- வாங்கல் ஆகியவற்றில் நம்பிக்கையோடு சிறிது புத்திசாலித் தனத்தையும் சேர்த்துக் கொள்வது முக்கியம்.
கடகம்: இந்த வாரம் வியாபாரிகளுக்குப் பயணங்களால் அலைச்சலும், ஆயாசமும் அவ்வப்போது வந்து போகும். புதிதாகப் பணியில் சேர்ந்துள்ளவர்கள், எவ்வளவு நெருக்கமான நண்பரென்றாலும், பண விஷயங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்வதை தவிர்த்தல் நலம். நிர்வாகத் திறமை கொண்டவர்கள் பேச்சிலும் நிதானமாக இருந்தால், உடன் இருப்பவர்களின் உதவி எப்போதும் இருக்கும். பெண்கள் உறவுகளோடு வீண் வாக்கு வாதத்தில் இறங்காமலிருந்தால் தங்கள் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்வது எளிது. பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு வழக்கு விவகாரங்களில் நேரடிக் கவனம் தேவை. பணியில் இருப்பவர்கள், பிறரின் நிறை குறைகளை அலசாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. கடன் தொல்லைகளினால் சுய தொழில் புரிபவர்களின் மனதில், சிறிது மனச் சஞ்சலம் ஏற்படலாம்.
சிம்மம்: இந்த வாரம் வியாபாரிகளுக்கு உடன் இருப்பவர்கள் தரும் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். பொறுமையைக் கடைப்பிடித்தால், பெண்களுக்குக் குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். சரியான நேரத்தில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மகிழ்வார்கள். புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால், பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு உள்ள பிரச்னைகள் நீங்கும். தங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துவதில் கலைஞர்கள் கவனமாக இல்லை என்றால், கடன் தொல்லைகள் அவர்களை அலைக்கழிக்கக் கூடும். பெண்கள் விலை உயர்ந்த ஆபரணங்களையும், பொருள்களையும் தக்க விதத்தில் பராமரித்து வந்தால், வீண் செலவுகளைக் கட்டுக்குள் வைத்து விட முடியும். புதிதாகப் பணியில் சேர்ந்துள்ளவர்கள் நண்பர்களைக் கண் மூடித்தனமாக நம்ப வேண்டாம். பணியில் இருப்பவர்கள் கடன் வாங்கி ஆடம்பரச் செலவுகள் செய்வதைக் குறைத்துக் கொண்டால், சேமிப்பு தானே உயரும்.
கன்னி: பெண்கள் குடும்பத்தில் சச்சரவு, கருத்து வேறுபாடு ஆகியவை நுழையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். மாணவர்கள் பாடங்களைக் கவனமாகப் பயில்வதன் மூலம் கடைசி நேரப் பதற்றத்தையும், பரபரப்பையும் குறைத்துக் கொள்ளலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் சோம்பலையும், பணிகளைத் தள்ளிப் போடுதலையும் தவிர்த்தால், வாய்ப்பும், அதிர்ஷ்டமும் உங்களைத் தேடி வரும். வியாபாரிகள் குற்றம் குறைகளைப் பெரிது படுத்தாமலிருந்தால், கூட்டு முயற்சிகள் மூலம் அதிக லாபமும், நல்ல பெயரும் பெற முடியும். கலைஞர்கள் கவனமாக இல்லையென்றால் சில தொந்தரவுகள் தோன்றும். பெற்றோர்கள் பிள்ளைகளின் போக்கை அவ்வப்போது கவனித்து வாருங்கள். அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும். பணியில் இருப்பவர்கள் உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெற, பொறுமையாகச் செயல்படுவது முக்கியம்.
துலாம்: பெண்களுக்கு இந்த வாரம் வீட்டை விரிவுபடுத்துவதில் அதிகப் பணம் முடங்கும். மாணவர்கள் அவசரப்பட்டு அடுத்தவர் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். கலைஞர்கள் வேண்டாத தொல்லைகளிலிருந்து விடுபட எல்லாவற்றிலும் கவனமாக இருப்பதோடு பணம் செலவு செய்வதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. உயர் படிப்பிற்காக வெளியிடம் செல்பவர்கள் எதிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பது நன்மை தரும். மாணவர்கள் சேமிப்பைக் கரைக்கும் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். வீண் கவலைகள் தானே குறையும். பொறுப்பில் இருப்பவர்கள் வழக்கு விவகாரங்களை நேரடியாக கவனித்துக் கொண்டால், நஷ்டங்களைத் தவிர்த்து விடலாம். இந்த வாரம், கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களையும், அதன் மூலம் வெற்றிகளையும் பெற்று மகிழ்வர். வியாபாரிகள் பணியாளர்கள் கொடுத்த பொறுப்புக்களைச் சரிவரச் செய்கிறார்களா என்று கவனித்துக் கொள்ளவும்.
விருச்சிகம்: பெண்களுக்கு இல்லத்தில் மகிழ்ச்சியும், பரபரப்பும் நிறைந்திருக்கும். கலைஞர்களுக்குப் புதிய நட்புகள் கிடைக்கும். எனினும் தராதரமறிந்து அளவோடு பழகுதல் நல்லது. பணியில் இருப்பவர்கள் கவனக் குறைவிற்கு இடம் கொடாமல், உங்கள் பணியில் விழிப்பாய் இருங்கள். உங்களுக்கு நல்ல யோசனை சொல்பவர்களின் மனம் நோகாமல் நடந்து கொள்வதன் மூலம் அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ளலாம். வியாபாரம், தொழிலிடங்களில் உங்களின் சொல்லுக்குத் தனி மதிப்பிருக்கும். மாணவர்கள் தங்கள், வாகனங்களைத் தகுந்த விதத்தில் பராமரித்து வந்தால், வீண் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் விழிப்புணர்வோடு இருந்தால், வீண் சஞ்சலங்களிலிருந்து தப்பிக்கலாம். வியாபாரிகளுக்குத் தொழிலில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். வழக்குகளில் நீங்கள் எதிர்பார்த்த நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
தனுசு: கலைஞர்கள் தொல்லை தந்து கொண்டிருப்பவர்களிடமிருந்து தள்ளியே இருப்பது நலம். நம்பிக்கையுடன் செயல்படும் குணத்தால் மாணவர்கள் தொட்ட காரியம் யாவிலும் எளிதான வெற்றி கிடைக்கும். பெண்கள் பக்குவமாக நடந்து கொண்டால், குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் தானே நீங்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள், அடுத்தவர்க்கு உதவி செய்கையில் உங்கள் இரக்க குணத்தைப் பிறர் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம். வியாபாரிகளின் வரவு செலவுகள் கட்டுக்குள் இருந்தால், பொருளாதார ஏற்ற இறக்கங்களுக்கு இடமிராது. சுய தொழில் புரிபவர்கள் வாழ்க்கையில் உயர, வரும் வாய்ப்பை நல்லபடியாகப் பயன்படுத்திக் கொள்வது உங்கள் கையில் உள்ளது. பணியில் உள்ளவர்கள் தங்கள் இல்லக்கடமைகள், அலுவலக பொறுப்பு இரண்டும் மோதாமல் பார்த்துக் கொண்டால், மன அமைதி குலையாமலிருக்கும்.
மகரம்: இந்த ராசிக் காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில், கூட்டு முயற்சி முலம் புதிய முயற்சிகளை மேற்கொண்டால் அதிக லாபம் பெறலாம். கல்வியில் மேற்படிப்புக்கான வாய்ப்புகளுக்கு மாணவர்கள் எதிர்பார்த்த வங்கி உதவி கிட்டும். எளிய உடற்பயிற்சிகளை செய்வது உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள், சுய தொழில் புரிபவர்கள் கடுமையாக உழைத்து ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். தேவையில்லாத பிரச்னைகளைக் கட்டுக்குள் வைக்க, தொழிலதிபர்கள் பண விஷயங்களைத் தங்கள் நேரடிக் கண்காணிப்பில் வைப்பது அவசியம். பெண்கள் குடும்பப்பிரச்னைகளைய்த் தீர்ப்பதில் பக்குவமாக நடந்து கொண்டால், இல்லத்தில் அமைதி குடியிருக்கும். நண்பர்களுக்கு எவ்வளவுதான் உதவி செய்தாலும் நல்ல பெயர் பெறுவது என்பது சற்றுச் சிரமமாக இருக்கும். வேலையில் இருப்பவர்கள் அலுவலக அளவில் சிறப்பான மரியாதை பெறுவார்கள்.
கும்பம்; இந்த வாரம் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்கள் போராடி உயர்கல்வியில் இடம் பிடிப்பார்கள். வியாபாரிகள் கவனமாகச் செயலாற்றினால், அரசு சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் கலகலப்பு இருந்தாலும், கூடவே பெண்களுக்குச் சில சிறு பிரச்னைகளும் வந்து போகும். இந்த வாரம் பொது வாழ்வில் இருப்பவர்களுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாதபடி சோதனைகள் ஏற்படலாம். எனவே பிறருக்கு வாக்குக் கொடுக்கும் முன் யோசனை செய்வது நல்லது. சுய தொழில் புரிபவர்கள் உழைப்புக்கேற்ற லாபம் பெற முடியவில்லையே என்ற நிலையில் இருப்பார்கள். சக கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது என்பது கடினமே. எனவே மிகுந்த முயற்சியின் பெயரில் கலைஞர்கள் வேலைகளைச் செய்து முடிப்பார்கள். கூட்டுக் குடும்பமாக இருப்பவர்களுக்குக் குடும்பத் தொல்லைகள் மனதைச் சஞ்சலப்படுத்தலாம். எனவே பக்குவமாகச் செயல்படவும்.
மீனம்: இந்த வாரம் வியாபாரிகள் அதிக முதலீடு செய்யும் போது கவனமாக இருக்கவும். ஆசிரியர்கள் காட்டும் வழியை மாணவர்கள் பின்பற்றினால் மாணவர்களுக்கு மதிப்பெண்களைப் பெறுவது சுலபமாக இருக்கும். புதிய இடங்களில் கலைஞர்கள் இனிமையாகப் பேசினால் சிறந்த நட்பு வட்டத்தைப் பெறலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் வரவு செலவு கணக்கைச் சரியாக வைத்துக் கொள்ளவும். பெண்கள் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு வருமானம் திருப்தி தரும் விதமாக இருக்கும். குழந்தைகள் பெறும் பெருமையால் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். மாணவர்கள் சுறுசுறுப்பாகச் செயல் படுவார்கள். வேலையில் இருப்போர், நிர்வாகத்தினரின் அதிருப்திக்கு ஆட்படும் வாய்ப்பிருப்பதால், வீண் அரட்டை, விவாதம் ஆகியவற்றில் கலந்து கொள்ளாதிருப்பது நல்லது.