பங்காளிகளே!
பிச்சினிக்காடு இளங்கோ
பங்காளிகளே வாருங்கள்
பங்குபோட்டுக்கொள்ள வந்தோம்
சண்டைபோட்டுக்கொள்ள அல்ல
உங்களுக்கானது உங்களுக்கே
எங்களுக்கானது எங்களுக்கே
நீங்கள் தேடவேண்டியிருக்கிறது
நாங்கள் உழைக்கவேண்டியிருக்கிறது
உங்கள் தேடலில்
எங்களுக்கு இழப்பில்லை
எங்கள் தேடலில்
உங்களுக்கு இழப்பு
இந்த
மண்ணுக்குப் பேரிழப்பு
நீங்கள் காப்பாற்றுகிறீர்கள்
நாங்கள் கபளீகரம் செய்கிறோம்
ஒரு முடிவுக்கு வருவோம்
அவரவர் தேவைக்காக
பிறர்நலம் கெடுவதை தவிர்ப்போம்
மண்ணில் உயிர்கள்வாழ
மண்ணைச்சிதைக்காது எடுப்போம்
மண்ணுக்கும்கொடுப்போம்
வானத்துக்கூரையின்
ஓட்டை அடைக்க
ஒருதுளி நேரமேனும் உழைப்போம்
பங்காளிகளாய் வாழ்ந்து பங்களித்தால்
பங்கமிலா வாழ்வு
அனைவர்க்கும் உறுதி
படத்திற்கு நன்றி:
http://www.mccullagh.org/photo/vietnam/men-working-rice-fields