அவ்வை மகள்

கசாப்புக் கடையைப் போல–கருவாட்டுக் கடையைப் போல

மூன்றே வயதான, எல்.கே.ஜி வகுப்பில் உள்ள, குழந்தை ஐந்து என்கிற ஒரு எண்ணைக் கண்ணாடி பிம்பமாக (mirror image) எழுதி இருப்பதைக் குற்றமாகக் கருதியதோடு மட்டுமல்லாது, இவ்வாறு மாற்றி எழுதியதால் குழந்தை சொல் பேச்சு கேட்காத அடங்காப் பிடாரி என்றும் படிப்பிலே வீக் என்றும் குழந்தைக்குப் பட்டம் சூட்டி, அவனை டியூஷனில் போட வேண்டும் என்று ஆணையிட்டதோடு மட்டுமல்லாது, “டியூஷனில் வேறு விதமாகச் சொல்லித் தருவீர்களா” என நான் கேட்டதை, ஏதோ கேட்கக்கூடாத கேள்வி கேட்டதாக உருவகம் செய்து கொண்டு எனது தோற்றத்தை இளக்காரம் செய்ததோடல்லாது தற்குறிப்பேற்றம் செய்து என்னை இட்லிக்கடை வைத்திருக்கும் பொம்பளையாக முடிவு செய்து விட்டு வாயார வைத அந்த டீச்சரை, அவரது போக்கை மனமார எண்ணியபடி நான் பள்ளியை விட்டு வெளியேறிய அந்தக் காட்சியை மீண்டும் அசை போட்டுப் பார்க்கும் போது–பெற்றோர்களையும் மாணாக்கர்களையும் பள்ளிகள் எவ்வாறு எடை போட்டுப் பார்த்து நடத்துகின்றன என்பது புரியும்.

இட்லிக்கார அம்மாவிற்கும் அவரது குழந்தைக்கும் ஒரு விதமான மரியாதை (?) ஒரு விதமான ட்ரீட்மெண்ட் டீச்சரின் குழந்தைக்கு வேறு விதமான மரியாதை வேறு ஒரு ட்ரீட்மெண்ட், அரசியல்வாதியின் குழந்தைக்கு வேறு விதமான தனி மரியாதை தனி ட்ரீட்மெண்ட், நடிகையின் குழந்தைக்கு முற்றிலும் வேறு விதமான ஒரு மரியாதை வேறு ட்ரீட்மெண்ட்!

ஆக பள்ளிக்கூடங்கள் என்றால் – அங்கே மாணாக்கர்கள் ரெண்டாம் பட்சம் தான்!

சரி விஷயத்திற்கு வருவோம்

உண்மையில் பார்க்கப்போனால், ஒரு வடிவத்தைக் கண்ணாடி பிம்பமாக எழுதுவது என்பது சுலபமான செயலல்ல, சாதாரணமாகப் பெரியவர்களே கூட சட்டென எதையும் கண்ணாடி பிம்பமாக எழுத முடியாது. அப்படியிருக்கும் பட்சத்தில் ஒரு குழந்தை தப்பில்லாமல் ஐந்தைக் கண்ணாடி பிம்பமாக எழுதுகிறது என்றால் அது எத்தனைப் பெரிய விஷயம்!!

ஐந்தைக் கண்ணாடி பிம்பமாக எழுதிய குழந்தை ,டீச்சருக்கு ஒரு சேதியைத் தருகிறது ,“டீச்சர்! எனது மூளை ஐந்தை வேறு விதமாகப் ப்ராசஸ் செய்கிறது!” என்று. இது ஒரு முக்கியமான அபூர்வமான சேதி ,ஒரு பதினைந்து – இருபது குழந்தைகள் உள்ள வகுப்பில் ஒரு நூறு ,நூற்றைம்பது குழந்தைகள் பயில்கிற ஒரு கிண்டர்கார்டன் பள்ளியில் ஒரு குழந்தை ஐந்தை அனாயசமாகக் கண்ணாடி பிம்பமாக வரைகிறது என்றால் அது அந்தப் பள்ளிக்கூடமே வியந்து நோக்கி அணுகி ஆய்ந்து, ஆராதிக்க வேண்டிய விஷயமல்லவா?

அக்குழந்தை உள்ள அந்த வகுப்பின் ஆசிரியருக்கு ஐந்தைக் கண்ணாடி பிம்பமாய்க் குழந்தை எழுதியதன் கற்றல் நிலைப் பின்னணி தெரியாது எனும் பட்சத்தில் அது தலைமை ஆசிரியருக்கு உடனே தெரிவிக்கப் பட்டிருக்க வேண்டுமல்லவா? அன்று மாலை பள்ளி முடிந்தவுடன் அனைவரும் ஒரு சிறு ஸ்டாப் மீட்டிங்கிற்கு வந்து செல்லுமாறு தலைமை ஆசிரியர் சுற்றறிக்கை அனுப்பி இருக்க வேண்டுமல்லவா? அன்று மாலை நடந்த அந்த அவசரத் துரித மீட்டிங்கில், குழந்தை வரைந்த கண்ணாடி பிம்ப ஐந்தைக் காட்டி “கற்றலில் ஒரு புது நிலையை இந்தக் குழந்தை காட்டுகிறதே ,இதிலிருந்து ஆசிரியர்களாகிய நீங்கள் கற்றுக் கொள்வதென்ன?” என்கிற கேள்வியை அந்தத் தலைமை ஆசிரியை/ஆசிரியர் அப்பள்ளி ஆசிரியர்களின் உள்ளத்திலே உரைக்கும் படியாகக் கேட்டிருக்க வேண்டுமல்லவா?

“உங்கள் கற்பித்தல் எனது கற்றலுக்கு நேரெதிராக இருக்கிறது. உங்கள் கற்பித்தல் எனக்கு ஒத்தாசை செய்யவில்லை என்றல்லவா இந்தக் குழந்தை சொல்கிறது, இதில் மாற வேண்டியது நம் போதனா முறைகளல்லவா. மாற வேண்டியது நம் மனோபாவமல்லவா என்று சிந்திக்கவேண்டிய கடமை நம் முன்னே இருக்கிறது! நீங்கள் அனைவரும் இன்று சென்று இது பற்றிப் படித்து விட்டு வருகிறீர்கள். இது பற்றிய விவரங்கள் அறிய, இவ்விதத் தரவுகள் இருக்கின்றன, நாளைக் காலை வரும் போது நீங்கள் இந்தப் பட்டியலில் உள்ள கேள்விகளுக்கெல்லாம் பதில் கொண்டு வரவேண்டும். பள்ளி துவங்கும் முன் நான் ஒரு குறுகிய கால அளவேயான ஸ்டாப் மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன் ,அதில் சில முக்கியமான விஷயங்கள் பற்றிப் பேசப் போகிறேன் – அதற்குப் பின்பு மட்டுமே நாம் வகுப்புக்களைத் துவக்கப் போகிறோம்.ஸ்டாப் மீட்டிங் தாமதமாகும் பட்சத்தில், அனைத்துக் குழந்தைகளுக்கும் அசெம்ப்ளியில் சில நிகழ்ச்சிகளை நடத்தி அவர்களைக் கொஞ்சநேரம் தக்க வைத்துக்கொள்ள உதவி தலைமை ஆசிரியருக்கும், பி.டி ஆசிரியருக்கும் சொல்லியிருக்கிறேன். இது மிக மிக முக்கியமான விஷயம்” என்று உறுதியான சேதி சொல்லப்பட்டு, நெறிப்படுத்தப்பட்ட நிலையில் மட்டுமே அன்று அப்பள்ளியின் ஆசிரியர்கள் பள்ளி முடிந்து சென்றிருக்க வேண்டும்!!

அடுத்த நாள் காலை நடந்த ஸ்டாப் மீட்டிங், ஒரு வலுவான தெளிவு நிலையினை அனைத்து ஆசிரியர்களின் மனதிலேயும் உருவாகியிருக்க வேண்டும். ஆசிரியர் ஒருவரைச் சிறப்புப் பயிற்சிக்குச் சென்று வர உடனடி ஏற்பாடு செய்திருக்கவேண்டும், அவர் அவ்வாறு சிறப்புப் பயிற்சி பெற்று வந்து, பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியருக்கும் பயிற்சி அளிக்க வேண்டும் என்கிற கடப்பாட்டையும் சொல்லி அப்பள்ளியின் ஆசிரியர்களின் மனதிலேயும் ஒரு விதப் புது உற்சாகத்தையும், தெம்பையும், சுறுசுறுப்பையும் உருவாக்கியிருக்க வேண்டும்!

ஆனால் ஐயகோ! நடப்பதெல்லாம் வேறு! கல்விக்கூடங்கள், இயற்கையாக குழந்தைகளுக்கு அமைந்துள்ள நுட்பமான மென்மையான அற்புதமான கற்றல் திறனை, அறிவுக்கூர்மையைக் குற்றம் கண்டு குற்றம் கண்டே, தங்களது வறட்டு முரட்டுத் தனத்தால் அந்த நுண்ணிய ஆற்றலைச் சின்னா பின்னமாக்கி விடுகின்றன.

மூன்றே வயதுக் குழந்தையைப் பள்ளிக்குப் பின் நிறுத்தி டியூஷன் என்ற பெயரில் விரல் ஒடியும்படி, படியும்படி இம்சை பண்ணிக் கட்டாயப்படுத்தி அக்குழந்தையின் கற்றலுக்கு நேரிடையாக அக்குழந்தையை எழுத வைக்கும் போது அது அக்குழந்தையின் இயல்பை, அறிவுக்கூர்மையை எவ்வாறு பாதிக்கும் என்று எண்ணிப் பார்க்கக் கூடத் திராணி இல்லாத அந்தக் கல்வி கூடங்கள், அந்த ஆசிரியர்கள், இவர்கள் – “நடு ஊருள் நச்சுமரம் பழுத்தற்று” என்பனவே!

நன் மரம் பழுக்காமல் போகாலாம், அதனால் தப்பு நிகழ்ந்து விடாது, ஆனால் கவர்ச்சியான நிறங்களுடன், வனப்புடன், தளதளவெனக் கொத்து கொத்தாய்ப் பழங்கள் கனிந்து தொங்க ஒரு நச்சுமரம், உள்ளூரில் இருந்ததென்றால், என்னவாகும்? சிந்தித்துப் பாருங்கள்!

இந்தப் படத்தில் நீங்கள் காணும் தாவரம் நிலாக்கொட்டை (moon seed) மரம். அந்த மரம் அத்தனை அழகு! அதன் கனிகளின் வசீகரம் பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும். பறித்து, முகர்ந்து, ருசிக்கவும் வைக்கும் ஆனால் நஞ்சு! கொடிய நஞ்சு – ஆசை காட்டி உண்ண வைத்து மோசடி செய்யும் சாக்காட்டுக் கனிகள் இவை!

வெளிப்புறக் கவர்ச்சியில் மயங்கி, வனப்பில் கவரப்பட்டு மட்டுமே இம்மரத்தை மக்கள் நாடுவர். அதன் புதிரான மணம் வேறு ஏதோ சிந்தனையைக் கிறங்க வைக்கும். அந்த மதி மயக்கத்தில் கனியைக் கொய்து, அக்கனியின் நிறத்தில், வழுவழுப்பில், வடிவத்தில்-வண்ணத்தில், வாசனையில் – மனதைப் பறி கொடுத்து, கடித்து விழுங்கும் போது மக்கள் நஞ்சுண்ட பரிதாபம் நிகழுகின்றது!

சொல்லப்போனால் பல கல்விக்கூடங்களின் நிலையும் இவ்வாறானதே! அணுகி – நுகர்ந்து அனுபவித்தாலொழிய அறிய மாட்டாத கொடுமையை – தீமையைப் பல கல்வி நிறுவனங்கள் இவ்வாறுதான் சுலபமாக விநியோகம் செய்து விடுகின்றன.

இங்கு கல்விக்கூடங்களின் தரத்தைப் பரிசோதித்து எல்லாம் சரியாக நடக்கின்றனவா என்று பார்க்க எவருமில்லை எதுவுமில்லை. திடீர்ப் பரிசோதனைகள் இல்லை, ஆனால் எல்லாம் சரி பார்க்கப்பட்டதாக, சரி பார்க்கப் படுவதாக ஆவணங்கள் தயார் செய்யப் பட்டிருக்கும்!

இங்கு எவர் வேண்டுமானாலும் கல்விக்கூடங்களை உருவாக்கலாம், மளிகைக்கடையைப் போல, கறிகாய்க் கடையைப் போல, விறகுத் தொட்டியைப் போல, கசாப்புக் கடையைப்போல, கருவாட்டுக் கடையைப்போல பள்ளிகளை, கல்லூரிகளை ஆசிரியப் பயிற்சி நிறுவனங்களை இங்கே சுலபமாக உருவாக்க முடியும்! ஒரு இடம் பிடித்து ,ரேட் பேசி, உரிமம் வாங்கி விட்டால் போதும். இது ஒரு லாபகரமான தொழில். இது சேவை என்று வேறு வாய்க்கூசாமல் தைரியமாக வெளியே போய்ப் பொய் சொல்லவும் முடியும்!

சீரியல் லைட் போட்டு நியான் விளம்பரப் பலகை நிறுத்தி போஸ்டர் ஒட்டிக் கவர்ச்சி காட்டப்பட்டு நடத்தப்படும் வியாபாரம் போன்று, வாசலில் வளைவுகள் அமைத்து, ஒரு சிலை வைத்து பில்டிங்கை ஒப்பனை செய்து விட வேண்டும். ஒரு நடிகரையோ அல்லது ஒரு அரசியல்வாதியோ வந்து போகுமாறு ஏதோ ஒரு நிகழ்ச்சி அவ்வப்போது ஏற்பாடு செய்து விட வேண்டும்! இது போன்று எத்தனையோ கவர்ச்சித் தந்திரங்கள்!

போதாக்குறைக்குச் சொற்ப சம்பளத்திற்கு வேலை செய்ய ஆசிரியர்களை வேறு சுலபமாக அமர்த்திக் கொள்ளலாம்! பின்பு வேறென்ன வேண்டும்? முதல் இரண்டு வருடங்களில் போட்ட முதலை மீட்டு விட முடியும் என்பதோடு, ஒரு நிதி நிறுவனத்தையும் தொடங்க முடியும்!

ஒரு நான்கு வயதுக் குழந்தை கீழ்க்காணும் படங்களை வகுப்பின் சுவற்றில் வரைந்து வைத்திருந்தாள். அவளுக்குக் கிடைத்த பரிசு என்ன தெரியுமா? காது திருகல், கன்னத்தில் அடி!

இவ்வாறு நான் சொல்லுகிறபோது பல பேர் சொல்லலாம், நமது பள்ளிக் கூடங்களில் காப்போரல் பனிஷ்மென்ட் எனப்படும் “அடித்தல்” இல்லை என. ஆனால், உண்மையில் பல இடங்களில் ஆசிரியர்கள் மாணவர்களை அனாவசியமாகவும் கூட அடிக்கிற சம்பவங்கள் நிகழத்தான் செய்கின்றன.

படத்தில் காட்டப்பட்டுள்ள குழந்தையின் விரிவு வரைவு ஒரு மாபெரும் போதனா முறை, தனக்குத் தெரிந்த எண்களின், எழுத்துக்களின் வடிவங்களுக்கிடையே உள்ள தொடர்பை ஒற்றுமை வேற்றுமைகளை இக்குழந்தை வரைந்து காட்டியிருக்கிறாள்! இக்குழந்தை ஒரு ஆசிரியர் நிலையிலே நின்று ஜொலிக்கிறாள். ஒரு கல்வி நிபுணராக அறிவு நிலை செறிந்து அவள் காணப்படுகிறாள்.

தமிழ் சொல்லிக் கொடுக்கும் போது 2-க்கும் விற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆசிரியர்கள் திறம்பட எடுத்தோதுவதில்லை. 2-ஐ இருவேறு விதமாக எழுதலாம் என்பதையும் ஆசிரியர்கள் தெளிவு படுத்துவதில்லை. அதனை இக்குழந்தை அழகுறச் சித்தரிக்கிறாள்! (பலநாடுகளில் மக்கள் இரண்டை இவ்வாறு தான் எழுதுகிறார்கள்: )
அது போன்றே ஐந்து என்ற எழுத்தை எழுதுவதிலே குழந்தைகள் சிரமப்படுகின்றன என்பதையும் இக்குழந்தை போதிக்கிறாள்.

ஐந்தை எழுத வேண்டுமென்றால்,ஒரு படுக்கைக்கோடு போட்டு, கையை விடுத்து மீண்டும் எதிர்த் திசையில் கையைக் கொண்டுவந்து, ஒரு குறுகிய நெடுக்குக்கோடு வரைந்து அதன் பின்னே அரிவாள் வளைவைப் போட வேண்டியிருக்கிறது! மொத்தத்தில் மூன்று நிலைகள் சாதாரண ஐந்தை எழுத! இது சிரமமான வேலை!!

மாறாக ,ஐந்தைக் கண்ணாடி பிம்பமாக எழுதுகிற போது கையை எடுக்காமல் ஒரே வீச்சில் தொடர்ச்சியாய் வரைய முடிகிறது!

இங்கு இந்தக் குழந்தை காட்டுவது அற்புதமான ஒரு கல்வி உளப்பாங்கு (psychopedagogy) என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா?!

உண்மையில், மற்ற எண்களுக்கு இல்லாத தனித்துவம் ஐந்தில் உள்ளது. ஐந்து எழுதுவதற்குக் கடினமான எண் – ஐந்தைக் கற்கும் போது குழந்தைகள் கண்ணாடி பிம்பநிலையை எண்ணிப் பார்த்து அதன் பின்னர் மட்டுமே சாதாரண ஐந்து வடிவ நிலையை அடைகின்றனர் என்கிற கற்றல் சூட்சுமத்தை இக்குழந்தை போதிக்கிறாள்!

அப்படி என்றால் ஐந்து என்கிற எழுத்தை எழுதச் சொல்லித் தருகிறபோது கண்ணாடி பிம்ப நிலையைப் போட்டுத் தெளிவுற விளக்கி, இப்படிப் போடக் கூடாது, இப்படிப் போட வேண்டும் என்று சொல்லி, ஐந்தைப் படிப்படியாய் மூன்று நிலைகளில் நிறுத்தி எழுதப் பழக வைக்க வேண்டும்! ஐந்தைப் பழகுவதற்கு நிறைய நேரம் ஒதுக்க வேண்டும்.

ஏனெனில் இது ஒரு உயர்நிலைத் திறன் (higher order skill) குழந்தைகளை அவசரப்படுத்தக் கூடாது என்பதெல்லாம் ஆசிரியருக்கு இக்குழந்தை காட்டும் குறிப்புக்கள்!

இந்தக் குறிப்புக்களைப் புரிந்து கொள்ள ஆசிரியர்கள் நேரம் ஒதுக்குவதில்லை. மாறாக அவர்கள் குழந்தையைத் தண்டிக்கத் துவங்கி விடுகிறார்கள். கண்ணாடிப் பிம்ப நிலையில் ஐந்தை எழுதுகின்ற ஒரு குழந்தையை நிந்திப்பதும் டியூஷனில் போட்டு அக்குழந்தையின் விரல்களை ஒடிப்பதும், குழந்தையின் நுட்பமான திறன்களை அழித்து விடும்.
இந்த இணைப்பில் பாருங்கள், ஒரு பள்ளி மாணவி பிறர் சொல்லும் எந்த ஒரு சொல்லையும் கண்ணாடி பிம்ப ரீதியில் நேரெதிராகத் திருப்பிச் சொல்கிறாள். இது ஒரு அற்புதமான ஆற்றல் அல்லவா? சிறு வயதில் இவளுக்கும் கூட ஐந்தைக் கண்ணாடி பிம்பமாக எழுதிக் காட்டும் ஆற்றல் இருந்தது! அவளை அன்று மட்டம் தட்டி அவளது நுட்ப அறிவை மழுக்கியிருந்தால் அவளுக்குள் இருக்கும் இத்திறன் வெளிவராமலேயே போயிருக்கும் அல்லவா?

http://www.thesun.co.uk/sol/homepage/news/4099993/YouTube-news-Backwards-talking-girl-is-a-real-mouthful.html

சென்ற பகுதியில் நான் குறிப்பிட்டிருந்த வீடியோக்களைப் பார்த்திருப்பீர்கள் ,ஒரு வேளை பார்க்க இயலாமல் போனது என்றால் நீங்கள் காண்பதற்கு வசதியாக இணைப்புக்களை இங்கு மீண்டும் தருகிறேன். காண்க:

http://www.youtube.com/watch?v=dtmrXsWRKZE&feature=related
http://www.youtube.com/watch?v=IEpBujdee8M&feature=related
http://www.youtube.com/watch?v=0XsJXyJWuzY&feature=related
http://www.youtube.com/watch?v=rhygmurIgG0&feature=related

இந்த வீடியோக்களைக் கண்ட மாத்திரம் பின்வருவனவற்றை நீங்கள் நன்றாய்ப் புரிந்து கொள்வீர்கள்:

இடத்தை வலமாகவும், வலத்தை இடமாகவும் மட்டுமே சில குழந்தைகளால் பார்க்க முடியும், புரிந்து கொள்ள முடியும். கூட்டல் குறி, பெருக்கல் குறி போலவும் பெருக்கல் குறி கூட்டல் குறி போலவும் மட்டுமே அவர்களுக்குத் தெரியும், புரியும். மேல் நோக்கிய அம்புக்குறி கீழ் நோக்கிய அம்புக்குறியாகத் தெரியும்! கீழ் நோக்கிய அம்புக்குறி மேல் நோக்கிய அம்புக்குறியாகத் தெரியும் அது போன்றே ஏறு வரிசை இறங்கு வரிசையாகவும் இறங்கு வரிசை ஏறு வரிசையாகவும் தெரியும்.

இவையாவற்றையும், கல்வியாளர்கள் ஏற்கனவே அடையாளம் கண்டு பதிவு செய்திருக்கிறார்கள். கல்வியாளர்களே கூட இவற்றைக் கற்றலில் கஷ்டங்கள் (Learning Difficulties) என்று தான் சொல்லியிருக்கிறார்களே தவிர இவற்றைக் கற்றல் குறைபாடுகள் என்று சொல்லவில்லை! மூளைத்திறன் குறைவு என்று சொல்லவில்லை.

ஆக, கற்றல் பற்றிய போதிய அறிவு இல்லாமல் பற்றாக்குறை நாயகர்களாக, பற்றாக்குறை நாயகிகளாக இருப்பவர்கள் ஆசிரியர்களே! ஆசிரியைகளே!

மேலும் பேசுவோம் .

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *