மோகன் குமார்

 

கொச்சின் மற்றும் திருவனந்தபுரத்துக்கு அடுத்து கேரளாவின் மிக பெரிய ஊர் திருச்சூர்.

திருச்சூரில் வெளியூர் செல்லும் பேருந்துகள் உள்ள பஸ் ஸ்டாண்ட் ரயில்வே நிலையத்துக்கு நேர் எதிரே உள்ளது. (இப்படி ரயில் நிலையமும் முக்கிய பேருந்து நிலையமும் அருகருகே அமைவது அரிது தான்..இல்லையா? ) உள்ளூர் பேருந்துகளுக்கென தனியே மற்றொரு பஸ் ஸ்டாண்ட் உள்ளது.

திருச்சூர் பொதுவாகவே நிறைய கிறித்துவர்கள் வாழும் ஊராக இருக்கிறது. திருச்சூரில் நிறைய சர்ச்சுகள் உண்டு.

தினம் காலை பத்து மணி போல் தான் கடைகள் திறக்கின்றன. இரவு ஏழு, எட்டு மணிகெல்லாம் பூட்டத் துவங்கி விடுகின்றனர். ஞாயிறு இன்னும் மோசம் ! முழு நாளும் திறப்பதில்லை. முக்கிய மார்க்கெட் போன்ற இடங்களில் ஞாயிறு மாலை வந்து கடை திறக்கிறார்கள்! கேரளத்தவர் நன்கு ஓய்வு எடுக்கவும், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை நன்கு பார்த்துக் கொள்ளவும் செய்கிறார்கள்

திருச்சூர் கல்விக்கு மிக புகழ் பெற்ற ஊராக இருக்கிறது. “கேரளாவின் எஜூகேஷனல் காபிட்டல்” என்று திருச்சூரை சொல்கிறார்கள். ஏகப்பட்ட கல்விக் கூடங்கள் ! ஒவ்வொன்றும் 100% தேர்ச்சி பெற்ற பள்ளி என்றும், அனைவரும் A + வாங்கி தேர்வு பெற்ற பள்ளி என்றும் விளம்பரம் செய்கின்றனர். இவ்விஷயத்தில் தமிழகத்தை ஒத்துள்ளது கேரளம்.

நான் தங்கிய லாட்ஜ் அருகில் ஒரு டீக்கடை இருந்தது. அங்கு அவ்வப்போது சென்று டீ அருந்தி வந்தேன். அங்கு இட்லி கடையும் கூடவே ஒரு
தொலைக்காட்சியும் கூட உண்டு. ஞாயிறு இரவு “டீலா நோ டீலா” நிகழ்ச்சி மலையாளத்தில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சி தமிழில் ரிஷி என்ற நடிகர் செய்து, கொஞ்ச நாளில் ஊத்தி மூடி விட்டனர். ஆனால் பல மாதம் ஆகியும் மலையாளத்தில் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியாக ஓடுவது ஏன் என்பது அன்று தெரிந்தது. விளையாடுபவர் ஜெயிப்பதை தான் ஜெயிப்பது மாதிரி கடையில் உள்ள அனைவரும் நினைக்கின்றனர். ஒவ்வொரு பெட்டி திறக்கும் போதும் இவர்கள் டென்ஷன் ஆகிறார்கள். அஞ்சு லட்சம் போச்சே; மூணு லட்சம் போச்சே என்று அடித்துக் கொள்கிறார்கள். இவர்களுடன் சேர்ந்து இந்த நிகழ்ச்சி பார்த்தது வித்தியாச அனுபவம்!

மலையாள எழுத்துகள் தெலுங்கு எழுத்து போல் தான் நமக்குத் தெரிகிறது. இரண்டுமே ஜிலேபியை திருப்பி போட்ட மாதிரி தான் உள்ளன

மலையாளம், தமிழர் கற்கவும், பேசவும் மிக எளிதாய் முடியும் என்பது இங்கு தங்கிய ஓரிரு நாட்களில் தெரிந்தது. உதாரணமாக நீங்கள் பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டுமெனில், யாரிடமாவது “பஸ் ஸ்டாண்ட் எவ்விட?” என்று கேட்டால், அவர் வழி சொல்வார். மலையாளத்தில் அவர் பதில் சொன்னாலும் அது நமக்கு நிச்சயம் புரியும் (பின்னே சின்ன வயசிலிருந்து எம்புட்டு மலையாள படம் பாத்துருக்கோம் ! தப்பா நினைக்காதீங்க. மம்மூட்டி, மோகன்லால் படத்தை சொன்னேன்).

இப்படி எந்த இடம் போகணும் என்றாலும் இடம் பெயர்+எவ்விட சேர்த்து, கேட்டுத்தான் வாழ்க்கையை ஓட்டினேன்.

பஸ்ஸில் செல்லும் போது கேட்ட பாடல் ஒன்று :

“நீலவான ஓடையில் நீந்திடும்ட சந்திரிகே
நான் ரசித்த கவிதைகள் நிண்ட விழியில் கண்டிட்டேன்
வராதே வந்த என் தேவி “

என்ன… பாட்டு எங்கோ கேட்ட மாதிரி இருக்கா?

“நீலவான ஓடையில் நீந்திடும் ஓர் வெண்ணிலா..
நான் ரசித்த பாடல்கள் உன் விழியில் காண்கிறேன்
வராது வந்த என் தேவி “

மீண்டும் அந்த மலையாள பாடலை படித்து பாருங்கள். தமிழர்கள் மலையாளம் கற்று கொள்வது எவ்வளவு எளிது என புரியும் !

கேரளாவில் கிரிக்கெட் மிக பிரபலமாக இருப்பது ஆச்சரியமாக இருந்தது. நிறைய ஒப்பன் ஸ்பேஸ் இருப்பதால் ஆங்காங்கு கிரிக்கெட் ஆடும் சிறுவர்களை பார்க்க முடிந்தது.

கேரளா முழுதுமே பெரும்பாலும் தனி வீடுகள் தான். அரிதாக திருச்சூரில் ஆங்காங்கு சில அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளது !

அரவான் படம் திருச்சூரில் ஓடிக் கொண்டிருந்தது. அதன் விளம்பர வாசகங்கள் “பரத் மற்றும் அஞ்சலி நடித்த அரவான்” என்றது! பரத் அந்த படத்தில் பிணமாத்தானே கொஞ்ச நேரம் நடிச்சார் ! பரத் அங்கு சற்று பிரபலம் போலும். அதான் “பரத் நடித்த” என்கிற விளம்பரம்!

ஐஸ்வர்யா ராயை அவர்களுக்கு மிகவும் பிடிக்கும் போலும் . பல கடை போர்டுகளிலும் விளம்பரங்களிலும் ஐஸ்வர்யா ராயைக் காண முடிந்தது.

ஒரு சின்ன சோகம்: நம் ஊரில் எல்லா கடையிலும் மலையாள செய்தித்தாள் கிடைக்கும் அல்லவா? ஆனால் அங்கு தமிழ் செய்தித்தாள் எந்த கடையிலும் பார்க்க முடியலை !

பேருந்து மிக அருகருகே மக்கள் சௌகரியத்துக்கு ஏற்ப நிற்கிறது. அநேகமாய் தத்தம் வீட்டின் வாசலில் இருந்தே பேருந்து ஏறிக்கொள்வார்கள் போலும்.

ஆங்காங்கு இருக்கும் மிகச் சிறு பாலங்கள் பற்றி விரிவாக தகவல் (நீள, அகலம் எவ்வளவு மீட்டர், போன்றவை ) பெரிய போர்டில் பாலத்துக்கு முன்னால் வைத்துள்ளனர்.

பேருந்தில் செல்லும் போது சுவாரஸ்யமான பல விஷயங்கள் பார்க்க முடிகிறது,

சந்தின் கடைசியில், வரப்பில், வீட்டின் வாசலில் இப்படி எங்கெங்கு நின்றாலும், அவ்வழியே எப்போதோ செல்லும் பேருந்து மக்களுக்கு, கை ஆட்டி டாட்டா காட்டி விட்டு விளையாட்டைத் தொடரும் குழந்தைகள்….

அம்மாவுடன் சர்ச் செல்லும் அழகிய பெண்கள். எந்த சர்ச் பார்த்தாலும் சிலுவை போட்டுக் கொள்ளும் அவர்களின் அம்மாக்கள்

சைக்கிளில் ஹாயாக சுற்றி வரும் பதின்ம வயதுப் பெண்கள்…

இப்படி கேரளாவில் ரசிக்க நிறையவே உண்டு.

திருச்சூரில் நடக்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் காரணமாய் இதனை கேரளாவின் ” கல்சுரல் காபிடல் ” என்கிறார்கள் ! பல வங்கிகளின் தலைமை அலுவலகங்கள் திருச்சூரில் இருப்பதால் இதனை பேங்கிங் காபிடல் ” என்றும் கூட சொல்கிறார்கள்.

*************************

அதிரப்பள்ளி மலையிலிருந்து சாலக்குடி என்கிற ஊருக்கு இறங்கும் போது உள்ள இடம் தும்பூர்முழி. இது ஒரு அழகான பூங்கா. இங்கு இறங்கி அங்குள்ள பூக்களையும் செடிகளையும் சற்று ரசித்தேன். வீட்டம்மா இருந்தால் இந்த இடத்தை மிக மிக ரசித்திருப்பார் என்ற வருத்தம் எட்டிப் பார்த்தது.

மிக வரிசையாக நூற்றுக்கணக்கான தொட்டிச் செடிகள்.. பார்க்க மிக ரம்மியமாக இருந்தது.

தும்பூர்முழிக்கு நேர் எதிரே ஒரு சிறு பெட்டிக் கடையுடன் கூடிய டீக்கடை இருந்தது. அங்குதான் சாலக்குடி செல்ல பேருந்துக்குக் காத்திருந்தேன். அது வீடு+கடை. இரு குட்டி பசங்க (ட்வின்ஸ்) ஞாயிறு என்பதால் கடை வேலையில் உதவிக் கொண்டிருந்தனர். ஐந்தாவது படிக்கும் சிறுவன் அருமையாக டீ போடுவது பார்க்க ஆச்சரியமாக இருந்தது ! இதெல்லாம் “அப்படியே வந்துரும் போலருக்கு!”

*****************

விளங்கன்குன்னு என்கிற சிறு மலை திருச்சூரிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

இங்கு மலையேறி அழகான திருசூரையும் அதன் பசுமையையும் ரசிக்கலாம் என சொன்னதால் மாலை கிளம்பினேன். அப்போது தான் சூரிய அஸ்தமனமும் பார்க்க நன்றாக இருக்கும் என்பதால்..!

இங்கு செல்ல சிறந்த வழி கார் எடுத்துக் கொண்டு போவதுதான். இந்த மலை இருக்கும் ஊர் வரை பஸ்ஸில் சென்று விட்டு பின் ஆட்டோ பிடிக்கலாம் என சிலர் சொன்னதால் அவ்வாறு சென்றேன். ஆட்டோக்காரர் மலைக்கு டிக்கட் தரும் இடம் வரை வந்து விட்டு அதன் பின் ரோடு சரியில்லை நடந்து போய் விடுங்கள் என கிளம்பி விட்டார். சரி நடக்கலாம் எனப் பார்த்தால் சில பல கிலோ மீட்டர்கள் இருக்கிறது. மலை வேறு. நாள் முழுதும் அலைந்து விட்டு மலை ஏற மிக சிரமம் ஆகி விட்டது.

பாதி வழியில் சிறுவர்கள் இருவர் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் மலைக்குச் செல்ல வழி கேட்டேன். நீங்கள் இப்போது போகும் வழியில் போனால் மேலே போக இன்னும் பத்து நிமிஷத்துக்கு மேலாகும்; வாங்க சுருக்கு வழியில் போகலாம் என சிறு குன்று மேல் ஏறி இரண்டே நிமிஷத்தில் அழைத்துப் போய்விட்டனர். நன்றி சொல்லி அவர்களை ஒரு புகைப்படம் எடுத்து, அவர்களிடம் காட்டிவிட்டு மலை மேல் வந்து சேர்ந்தேன்

நல்ல காற்று, அழகான ரம்மியமான சூழல், சிறுவர்கள் விளையாட சாதனங்கள் என அழகாக இருந்தது. சரியாக சூரிய அஸ்தமனம் முன் சென்று விட்டேன். பலரும் நின்று அந்த அழகிய அஸ்தமன காட்சியை ரசித்த வண்ணம் இருந்தனர்.

இறங்கும் போது எப்படி செல்வது என மறுபடி கவலை. எந்த ஆட்டோவும் இல்லை. ஒரு இளம் கணவன் மனைவி தங்கள் கைக்குழந்தையுடன் கீழே காரில் சென்றனர். அவர்களிடம் லிப்ட் கேட்க, கீழே கொண்டு வந்து சேர்த்தனர். நடந்து மட்டும் வந்திருந்தால்.. கால் வலி ஒரு பக்கம் இருக்கட்டும். இருட்டு.. காடு போன்ற சூழலில் கீழே ஏதும் பூசிகள் இருந்து மிதித்தாலும் தெரிந்திருக்காது !

சில நண்பர்கள் காய்கறி இங்கு வாங்கிப் போகலாம் என சொன்னதால் ரயில் ஏறும் முன் காய்கறி மார்கெட் சென்றேன். முருங்கைக்காய், பீன்ஸ், கேரட், பாகற்காய், காராமணி உள்ளிட்ட சில காய்கள் மிகச் செழிப்பாக குறைந்த விலையில் கிடைத்தது. பழங்கள் விலையை விசாரித்தால் சென்னையை விட அதிகமாய் இருந்தது. இதைச் சொன்னதும் கடைக்காரர் சொன்னது” தமிழ் நாட்டிலிருந்து தான் பழம் வருது. அப்போ உங்க ஊரை விட இங்கே கூடத்தானே இருக்கும் !”

பசுமையான ஊர், பழக இனிய மக்கள்.. எத்தனை முறை, கேரளத்தின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அலுப்பதே இல்லை !

*******

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *