திரை கடல் ஓடியும் அனுபவம் தேடு (பகுதி-5)

1

விஜயகுமார்

முந்தைய பகுதியை வாசிக்க

தாய்பேய்

என்னடா.. இந்தப் பயணக் கட்டுரை ஒரு விதமான திகில் கட்டுரையாக மாறி விட்டதோ என்று யாரும் அஞ்ச வேண்டாம். ஏனெனில் களம் மாறி விட்டது- ஒரே பாய்ச்சலில் தென்கிழக்கு ஆசியாவின் வடக்குக் கோடியில் இருக்கும் ஒரு அற்புத நாட்டுக்கு செல்கிறோம்- அது தான் தாய்வான்.

எனது வேலையும் மாறி விட்டது- சரக்கு/கப்பல் போக்குவரத்துக் கம்பெனியில் அப்போது எனக்குப் பணி. அந்நாளில் இம்மாதிரிக் கம்பெனிகள் பொதுவாக அனைவரும் இந்திய ஏற்றுமதிகளையே மையமாய்க் கொண்டு தான் இயங்கினோம். இறக்குமதி இன்கோ டெர்ம்ஸ் (INCO Terms) படி சொல்ல வேண்டும் என்றால் சி.ஐ.எப் (CIF) முறை என்பதால் எல்லா வேலையும் லோட் போர்டில் தான். அதாவது ஏற்றுமதி செய்யும் கம்பெனியே பார்த்துக் கொள்ளும். எங்களுக்கும் அதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்றுதான் இருந்தோம். இப்படி இருக்கையில் பல கார்மென்ட்ஸ் பாக்டரிகள் அமெரிக்க லேபெல்ஸ் வேலையை மிகப் பெரிய அளவில் எடுத்தனர். திருப்பூர்-நிட் வியர், பெங்களூர் வோவ்வேன் வியர் போன்ற சில நிறுவனங்கள் இதில் அடங்கும். இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் அமெரிக்காவில் பல கடைகளில் விற்பனை ஆகும் இந்த லேபல்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பல இடங்களில் உற்பத்தி ஆகும். இதனை அமெரிக்கா இந்தந்த நாட்டுக்கு இவ்வளவு என்று கோட்டா முறையில் உற்பத்தியைக் கட்டுப்படுத்தியது. எனினும் எங்கோ வியட்நாமில் உருவாகும் ஷர்ட் இல் துணி, நூல், ஜிப், பொத்தான் என்று அனைத்தும் இந்தியாவில் உற்பத்தி ஆகும் ஷர்ட்டுடன் ஒத்துப்போக வேண்டும்.

இதனால் அவர்கள் அனைத்து “ஆக்சசரி” ஆர்டர்களையும் ஒன்று சேர்த்து ஒரே பாக்டரியில் தயார் செய்யும் முறையாகக் கொடுத்தார்கள். இதன்படி ஜிப், பொத்தான் ஹாங்காங், லைனிங், ப்ளீட்ஸ் போன்றவை தாய்பேய், சீனா, தாய்லாந்து, கொரியா போன்ற நாடுகளில் பெரிய பெரிய பாக்டரிகள், இந்த மெகா ஆர்டர்கள் செய்து கொடுக்கும். நமது இந்திய பாக்டரிகள் நம் கண்ணுக்குப் பெரிதாகத் தெரிந்தாலும் அங்கே இருந்தவையுடன் ஒப்பிட்டால் மிகவும் சிறியவை. அதனால் அந்த மெகா பாக்டரிகள் நமது இந்திய ஆர்டர்களின் மீது பெரிதாய் அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை.

அது வரை லாஜிஸ்டிக் துறையில் நம் நாட்டில் பெரிய அளவிற்கு வளர்ச்சியோ, படித்துத் தெரிந்து கொள்ள முறையான தேர்வுகளோ இல்லை. (லாஜிஸ்டிக்ஸ் என்றால் இன்னமும் பல பேருக்கு அர்த்தமே தெரியாது, அதே போல ‘சப்ளை செயின்’ (சாமான்களைச் சரிவரக் கொண்டு போய் அந்தந்த நாடுகளுக்குக் கொடுக்கும் சேவை) என்ற வார்த்தையே ஒரு சில நுனி நாக்கில் மட்டுமே இருந்தது. அப்படி இருக்கையில் தாய்பேய் நகரத்தில் ஒரு லாஜிஸ்டிக் கம்பனியின் சரக்குகளை எங்கள் நிறுவனம் கையாண்டது. அதில் ஏற்பட்ட ஒரு சின்ன சந்தேகம் காரணமாகப் பல மின்னஞ்சல்கள் செய்தும் சரியான விளக்கம் கிடைக்காமல் தொலைபேசி எண்ணைச் சுற்றினேன்.

‘ஷி பிநிங் சின் ஷா ஹோ. ……’ என்று ஏதோ தெரியாத பாஷையில் ஆட்டோமாடிக் ஆபரேட்டரின் ’கிளி’ குரல். ஒரு வேளை மத்திய உணவு நேரமோ என்று ஒரு மணி நேரம் விட்டு மீண்டும் சுழற்றினேன்.

‘ ஷி பிநிங் சின் ஷா ஹோ. ……’

மீண்டும் அதே குரல். இன்னும் இரு முறை முயற்சி செய்தும் அதே குரல் கேட்டதும் என்ன செய்வது என்று திகைத்தேன். சரிதான் அப்படி என்ன தான் சொல்கிறாள் இவள் என மீண்டும் கேட்டேன். பிறகு முடிவில் ஏதோ ஒரு வார்த்தை, சர்வீஸ் என்பது போலப் பட்டது.

மீண்டும் சுழற்றினேன். ‘ஷி பிநிங் சின் ஷா ஹோ. …… இங்கிலீஷ் சர்வீஸ்.” என்றது. இன்னும் ஒரு முறை கேட்டேன். அடடே: ‘ஷி பிநிங் சின் ஷா ஹோ. …… ப்ளீஸ் டயல் ஒன் போர் இங்கிலீஷ் சர்வீஸ் ‘ என்றது அந்த குரல். அடடே இது ஆங்கிலம் தான். முதலில் வந்த தொடர் சீன மொழி, ஆனால் அடுத்து வந்த ஆங்கிலமும் அதே உச்சரிப்புடன் வந்ததால் ஏற்பட்ட குழப்பம். அப்பாடா என்று ஒன்றாம் நம்பரை அழுத்தினேன்

‘ஹலோ, ஐ எம் எரிக்கா. ஹொவ் கேன் ஐ ஹெல்ப் யு’ என்று நல்ல ஆங்கிலத்தில் வந்த குரலைக் கேட்டதும் ஒரு ஆனந்தம். பிறகு மள மள என்று கேள்விகளுக்குப் பதில் வந்தன. அந்த நிறுவனத்தின் ஓனர் அந்தப் பெண்ணையே இந்தியா குறித்த அனைத்துத் தொடர்புக்கும் நியமனம் செய்தார். எரிக்கா மூலம் எங்கள் வேலைகள் எளிதில் முடிந்தன. அவள் மூலம் சில சீன வார்த்தைகளையும் தெரிந்துக் கொண்டேன். முடிவில் நம் இரு கம்பெனிகள் எப்படி ஒன்றாக வேலை செய்து பயன் பெறலாம் என்று ஆராய தாய்பேய் வர எனக்கு அழைப்பு விடுத்தார்கள்.

கடவுச் சீட்டை தாய்வான் விசா பெற அனுப்பினேன். வந்ததும் ஒரே அதிர்ச்சி- அதில் ரிபாப்லிக் அப் சீனா என்று இருந்தது. ஒன்றும் புரியவில்லை. அப்புறம் தான் தாய்வானைப் பற்றி நமக்கு எவ்வளவு குறைவாகத் தெரியும் என்று உணர்ந்தேன். இந்தியா என்றவுடன் அம்மணமாகத் திரியும் குழந்தைகள், தெருவின் நடுவில் மாடுகள், வீதிகளின் ஓரத்தில் பாம்பாட்டிகள், எங்கும் ஏழ்மை, பிச்சைக்காரர்கள் என்று “மேலை” நாடுகளின் கண்ணோட்டத்தைக் குறை கூறிக்கொண்டிருந்த எனக்கு இது ஒரு நல்ல பாடம். நமக்கு மற்ற நாடுகளைப் பற்றி எவ்வளவு தெரியும் என்ற கேள்வி அன்றுதான் உரைத்தது.

தாய்வானுக்கும் சீனாவுக்கும் உள்ள சர்ச்சை பற்றி மேலும் படித்துத் தெரிந்து கொண்டேன். அந்தத் தீவின் மீது மேலும் மதிப்புக் கூடியது. அங்கே உள்ள பல கம்பெனிகள் ஏன் போர்மோசா என்ற பெயரை வைத்துள்ளனர் என்றும் அறிந்தேன்.

ஒரு சனிக்கிழமை விமானத்தில் புறப்பட்டேன். பல மணிநேரம் பயணம் – பின்னர் விமானம் கீழே இறங்கியது. வானத்தில் இருந்து எட்டிப் பார்க்கும் போதே பச்சைப் பசேர் என்று நல்ல நீர் வளம் மிக்க நிலம் என்பதைப் பல வயல்கள் காட்டின. தலைநகர் தாய்பேயில் இறங்கியதும் பெரிய அதிர்ச்சி. எவ்வளவு பெரிய விமான நிலையம். அனைவரும் – ஆண்களும் பெண்களும் – கோட் சூட் அணிந்திருந்தனர். விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்ததும் ஒரு பெரிய கூட்டமே எனக்காகக் காத்து இருந்தது. வார விடுமுறை என்பதால் என்னை வரவேற்க ஒரு பெரும் படை திரண்டு இருந்தது. ஒரே ராஜ மரியாதை. விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்தால் பள பளவென பளிச்சிடும் கார்கள், அதற்கு மேலே பளிச்சிடும் சாலைகள். முதல் முறை பென்ஸ் காரில் பயணம்!! நகரை நெருங்க கட்டிடங்களின் உயரம் கூடிக்கொண்டே போனது.

அடுத்த நாள் அவர்கள் அலுவலகம் சென்றேன். ஒரு முழுக் கட்டிடமே அவர்களது. உள்ளே சென்றால் ஏதோ பள்ளிக்கூடத்தினுள் நுழைவது போல இருந்தது. ஒரு பெரிய அறையில் சுமார் இரு நூறு பேர் அமரும் அளவிற்கு மேஜை நாற்காலிகள். ஒவ்வொருவருக்கும் ஒரு கம்ப்யூட்டர். எல்லோரும் பெண்கள் !!!! மேலதிகாரி, கிளார்க் என்ற பாகுபாடே இல்லை. அனைவரும் அதே பெரிய அறையில் காபின் ஒன்றுமே இல்லாமல் சரி சமமாக இருந்தனர். மேஜை மட்டும் சிலருக்குப் பெரிதாக இருந்தது. எதிர் எதிரில் அமர்ந்து வேலை பார்த்தனர். மிகவும் வித்தியாசமாக இருந்தது. ஏதாவது பேச வேண்டும் என்றால் எப்படிப் பேசுவீர்கள் என்று கேட்டேன். ஒரு பக்கத்தில் பல அறைகளைக் காட்டி அதோ அந்தக் கான்ஃபரென்ஸ் ரூம் உபயோகம் செய்வோம் என்றார்கள். ஆஹா, நம்ம ஊரில் ஒவ்வொருவரும் எதிரில் இரண்டு நாற்காலி போட்டு, இடத்தை அடைப்பதை விட இந்த முறை நன்றாக உள்ளதே என்று நினைத்துக் கொண்டே பலரிடம் அறிமுகம் ஆனேன்.

அப்போது என்னுடன் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டவர்களின் பெயர் எதுவுமே தென்படவில்லை – எரிக்கா மட்டுமே ஆங்கிலத்தில் பேசியதால் அவளிடம் கேட்டேன். உடனே சிரித்துக்கொண்டே உங்களுக்கு யாருடன் பேச வேண்டும் என்றதும். மேரி யார் என்று கேட்டேன். அவள் உடனே திரும்பி அந்த அறையில் யார் மேரி என்று கேட்டால், நான்கு பேர் எழுந்து நின்றனர். ஒன்றுமே புரியவில்லை. அவர்களுக்கே அவர்கள் சக நண்பர்களின் பெயர் தெரியவில்லையே என்று ஸ்தம்பித்து நின்ற போது எரிக்கா விளக்கினாள். எங்கள் அனைவருக்கும் சீனப் பெயர் உண்டு. ஆனால் உங்களைப் போல ஆங்கிலம் பேசும் நாடுகளுடன் தொடர்பு கொள்ளும் போது நாங்கள் ஆங்கிலப் பெயர்களை நாங்களே வைத்துக்கொள்வோம் என்றாள். அப்போது அது விநோதமாகவே இருந்தாலும் இந்நாளில் நமது கால் சென்டர்கள் வழங்கும் அருண்மொழி ” ரிச்சர்ட் “, ஆனந்த ” பீட்டர் “, கமலா ” காத்தரின்” போன்றே தான் அவர்களின் பெயர்கள்.

சிறிது நேரம், பிறகு அடுத்த மாடிகளுக்கும் அழைத்துச் சென்றார்கள். மிகவும் விநோதமாக இருந்தது. அந்த முழு அலுவலகமும் அவர்கள் கையாளும் இடம் வாரியாக பிரிந்து இருந்தது – அதாவது ஐரோப்பா, வடக்கு அமெரிக்கா, தெற்கு அமெரிக்கா மற்றும் மெக்சிகோ, ஆஸ்திரேலியா, இந்தியத் துணைக்கண்டம், இப்படிப் பிரிந்து இருந்தன அவர்களது டிபார்ட்மென்ட்.

அடுத்து அவர்களது மிகப் பெரிய காஸ்ட்யூம் பாக்டரி பார்க்க அழைத்து சென்றார்கள். விரைவுச்சாலையில் பறந்தது கார். அப்போது திடீரென ஓட்டுனர் இருக்கையின் அடியில் இருந்து ஏதோ ஒரு சத்தம் கேட்டது. உடனே அவர் வண்டியின் வேகத்தைக் குறைத்தார். சிறிது நேரம் கழித்து மீண்டும் பறந்தார். இதே போல இன்னும் இரண்டு முறை நடந்ததும் என்ன அது என்று கேட்டேன். அதுவா என்று ஒரு விஷமச் சிரிப்பு சிரித்தார். இங்கே சாலையில் ஸ்பீட் லிமிட் உண்டு. ஓவர் ஸ்பீடிங் பிடிக்க ஆங்காங்கே மறைத்து வைக்கப்பட்ட காமெராக்கள் இருக்கும். அதில் உள்ள ராடார் நமது ஸ்பீடைத் தெரிந்து கொள்ள வரும் காரின் மீது ராடார் சமிக்ஞை வீசும். அது திரும்பும் நேரத்தைக் கொண்டு நமது வேகத்தைக் கண்டறிந்து லிமிட் மேலே இருந்தால் படம் எடுக்கும். அதற்குப் பெரிய ஃபைன் உண்டு.

அதைத் தவிர்க்கக் கள்ள மார்கெட்டில் ஒரு கருவி தயார் செய்துள்ளனர். இதை வண்டியின் முன்னால் பொருத்தி விட்டால், அது ராடார் சமிக்ஞை அருகில் வரும் போதே எச்சரிக்கை செய்யும். வேகத்தை குறைத்துக்கொள்ளலாம் என்றார்!!

ஒரு எக்சிட் எடுத்தவுடன் வண்டி நின்றது. உடனே அருகில் கோட் சூட் போட்ட இளைஞன் ஒருவன் எங்களுடன் ஏறிக்கொண்டான். இவன்தான் இந்தக் கஸ்டமர் அக்கௌன்ட் பார்க்கும் சேல்ஸ்மேன் என்று அறிமுகம் செய்தார்கள். அப்பாடா, ஒரு வழியாக ஒரு ஆண்மகன் இந்தக் கம்பெனியில் என்று சிரித்தேன். பிறகு பல சேல்ஸ் கால் செய்த பிறகு அதைக் கேள்வியாகவே எரிக்காவிடம் கேட்டேன்.

அவள், இங்கே ஆண் பெண் எல்லாருமே வேலை செய்வார்கள். பொதுவாக ஆபீஸ் உள்ளே, கஸ்டமர் சர்வீஸ், அக்கௌன்ட்ஸ் போன்ற வேலைகளைப் பெண்களும், சேல்ஸ் வேலைகளை ஆண்களும் பார்ப்பார்கள் என்றும் கூறினாள். நம் நாட்டில் பெண்கள் பலரும் நன்கு படித்தும் நான்கு சுவற்றுக்குள் முடங்கி இருப்பதால் நமது பொருளாதாரத்துக்குப் பெரும் பங்கை ஆற்றும் பலரின் பலம் இல்லாமல் போகிறது என்பதை உணர்ந்தேன். இருந்தும் அடுத்த கேள்வி வந்தது – பெண்கள் அனைவரும் வேலை பார்த்தால் யார் வீட்டைப் பார்ப்பது, சமைப்பது என்று கேட்டேன். நாங்கள் மூன்று வேளைகளிலும் வெளியில் தான் சாப்பிடுவோம், எஞ்சிய வீட்டு வேலையை ஆண் பெண் இருவரும் பகிர்ந்து செய்து கொள்வோம் என்றாள்.

அப்போது சின்னதாக ஒரு நடுக்கம். எனக்கு இல்லை. அந்தக் கட்டடத்திற்கு..

தொடரும்..

 

படத்திற்கு நன்றி:http://justpaste.it/5ko

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “திரை கடல் ஓடியும் அனுபவம் தேடு (பகுதி-5)

  1. first overseas assignment in shipping (tai pei ) that too with all gopikas , only thing is u could have carried flute and peacock feather…. 

    so interesting and looks refreshing… makes me write similar ones.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *