பாஸ்கர பாரதி

நாடு – மனிதன் வகுத்துக் கொண்ட பூகோளக் கோடு.

கோட்டுக்கு அந்தப் பக்கமும் மனிதர்கள்தாம்.

நம் போலவேதாம்-

பசிக்கும், வலிக்கும், இனிக்கும், கசக்கும். ஆனாலும்.. ஒவ்வொருவருக்கும் தாய் தந்தை போல, தனக்கே தனதான மொழியுண்டு; ஊருண்டு; இவ்விரண்டும் அடங்கிய நாடுண்டு.

எல்லாரும் உறவினரே; நாடு கடந்தும் நண்பர்களே;

ஆயிரந்தான் இருந்தாலும், அன்னை தந்தை போலாகுமா..?

உயிர் கொடுத்தோரும் உடன் பழகியோரும் ஒன்றாகுமா?

எல்லோரும் சமம்தான். தாய் தந்தையர் – சற்றே ‘அதிகச் சமம்’. அவ்வளவே.

அப்படித்தான் அவரவரின் தாய் மொழியும் தாய் நாடும்.

தாயிற் சிறந்த கோயில் ஏது? தாய்நாட்டை வணங்குதலிலும் மேன்மையானது எது?

தாய் நாடு என்பது வெறும் கல்லும் மண்ணும் சேர்ந்த கட்டாந்தரையா? அது – எமது தாயும் தந்தையும், அவரது தாயும் தந்தையும், அவரது தாயும் தந்தையுமாய்ப் பல நூறு வம்சங்கள் வாழ்ந்து விளையாடி இன்புற்றிருந்த ஆனந்த உலகம் இது.

அவர்களின் சிந்தனைகள் ஈன்றெடுத்த அற்புத தத்துவங்கள் வேரூன்றிய பூமி இது. இந்தத் தனிமை, தடாகம், தண்ணிலவு எல்லாமே எமது மூதாதையர் வாழ்ந்து கழித்தன. அல்ல, அல்ல; வாழ்ந்து களித்தன.

அவர்கள் மழலை பேசியதும்,மாந்தராய்க் கூடிக் களித்ததும், பிள்ளைகள் ஈன்றதும், அவர்களைப் பேணிக் காத்ததும் இம் மண்ணிலேதான்.

இந்தப் புண்ணிய பூமியை நான் ‘வாழ்க எம் மாதா’ என்று வாழ்த்த மறப்பேனா? வணங்க மறப்பேனா?

உணர்ச்சிகளுக்கு வடிகாலிட்ட உன்னதக் கவிதை இதோ..

நாட்டு வணக்கம்

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே-அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே-அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே-இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி, என்
வாயுற வாழ்த்தேனோ-இதை
‘வந்தே மாதரம், வந்தே மாதரம்’
என்று வணங்கேனோ? 1

இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள்
ஈந்ததும் இந்நாடே- எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே- அவர்
கன்னிய ராகி நிலவினி லாடிக்
களித்ததும் இந்நாடே-தங்கள்
பொன்னுடல் இன்புற நீர்விளை யாடி, இல்
போந்ததும் இந்நாடே-இதை
‘வந்தே மாதரம், வந்தே மாதரம்’
என்று வணங்கேனோ? 2

மங்கைய ராயவர் இல்லறம் நன்கு
வளர்த்ததும் இந்நாடே-அவர்
தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித்
தழுவிய திந்நாடே-மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே-பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
ஆர்ந்ததும் இந்நாடே-இதை
‘வந்தே மாதரம், வந்தே மாதரம்’
என்று வணங்கேனோ?

 

படத்திற்கு நன்றி:http://itgoatnp.blogspot.in/2011/09/remembering-great-national-poet.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *