பவள சங்கரி

வாழ்வியல் வண்ணங்கள்!

சுட்டும் விழி

தீபம் (4) – துணிந்து நில்! தொடர்ந்து செல்!

வாலிபப்பருவம் என்பது ஒவ்வொருவருக்கும் மிக இனிமையானதொரு காலகட்டம். அதில் ஆண், பெண் என்ற பாகுபாடிற்கு அப்பாற்பட்டு இனிமையான கற்பனைகளையும், சுகமான கனவுகளையும் இதமாக ஏந்திச்செல்லும் பருவம். இதே பருவத்தில்தான் எதிர்காலம் பற்றிய முக்கிய முடிவெடுக்க வேண்டிய பொறுப்புகளும் இருக்கும். என்னதான் பெற்றவர்களின் தலையீடு அதிகம் இருந்தாலும், தங்களுக்கென்று சில சுயவிருப்புகளும், திட்டங்களும் வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட சில இதமான, எளிமையான கனவுகளைக் கொண்டிருந்தாள் ஸ்ரீலதா.

சிறு வயதிலிருந்தே, தன் அம்மாவைப்போல நல்ல குடும்பத் தலைவியாக இருக்க வேண்டும் என்ற ஆசை மட்டுமே அவள் மனதில் இருந்தது. வீட்டு வேலைகளில் படுசுட்டி. சமையல் செய்வது அவளுடைய இன்பமான பொழுதுபோக்கு. இவளைக் கட்டிக்கொண்டு போகப்போகிற குடும்பத்திற்கு மிக யோகமான நேரம்தான் என்று சொல்லாதவர்களே பாக்கியில்லை. ரோசா வண்ணமும், மெலிதான உடல்வாகும், செதுக்கி வைத்த சிற்பம் போன்ற அழகான தோற்றமும் யாருக்குத்தான் பிடிக்காமல் போகும். பட்டப்படிப்பு முடிய சில மாதங்கள் இருக்கும்போதே வரன்தேட ஆரம்பித்தார்கள். ஜாதகத்தில், ஏழாம் இடத்தில் ராகுவும், கேதுவும் இருப்பதால் அதே போன்று உள்ள ஜாதகம் மட்டுமே பார்த்து மணம் முடிக்க வேண்டும் என்று ஜோசியக்காரர்கள் சொல்ல… அப்போது ஆரம்பித்த வேட்டை, நாட்கள் மாதங்களாகி வருடம் 2ம் ஓடிவிட்டது..

மாப்பிள்ளை தேடி அலுத்துப்போன பெற்றோர் ஒருவழியாக சரியாக பொருந்தியிருந்த ஜாதகம் வந்த திருப்தியில் மேற்கொண்டு காலங்கடத்தாமல் விரைவில் மணமுடித்தனர். திருமணம் முடிந்த முதல் வாரம் விருந்து, உறவினர் கேலி, என்று கொண்டாட்டமாகத்தான் நாட்கள் நிமிடமாகக் கழிந்தது. தேனிலவிற்காக குலுமணாலிக்கு டிக்கெட்டும், தங்குமிடமும் ஏற்பாடு செய்து மகளையும், மருமகனையும் அனுப்பி வைத்தனர். குளுகுளு குலுமணாலிக்குச் சென்று சேர்ந்தவுடன் ஆனந்தமாக தொலைபேசியில் அழைத்து தம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டவள் பிறகு இரண்டு நாட்கள் சத்தமில்லாமல் இருக்கவும், மகள் போன் செய்யக்கூட நேரம் இல்லாமல் மாப்பிள்ளையுடன் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறாள் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தனர் பெற்றோர். ஆனால் மூன்று நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிக்காமல், பத்து நாள் டிரிப்பை நான்காவது நாளே முடித்துக்கொண்டு திடுதிப்பென்று வந்து நிற்கும் மாப்பிள்ளையையும், பெண்ணையும் பார்த்து அதிர்ச்சியாக இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவளே சொல்லட்டும் என்று காத்திருந்தனர்.

அடுத்து இயந்திரமாக இருவரும் சாப்பிட மட்டும் வந்து போய் மற்றபடி ஆளுக்கொரு அறையில் முடங்கிக்கொண்டிருந்தனர். அடுத்த நாள் மாப்பிள்ளை தன் வீட்டிற்குக் கிளம்புவதாக சொன்னபோது, லதா மட்டும் தான் உடனே போகப்போவதில்லை சில நாட்கள் கழித்துதான் செல்லப்போவதாகக் கூறிவிட்டாள். மாப்பிள்ளையை தனியே அனுப்ப சம்மதமில்லாவிட்டாலும், லதா பிடிவாதமாக போக மறுத்ததால் மாப்பிளளையிடம் தாங்களே கொண்டுவந்துவிடுவதாக சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தனர். ஏகப்பட்ட குழப்ப ரேகைகளுடன் தலை குனிந்தவாறே சென்றவரைப் பார்த்து சற்று கலக்கமாகத்தான் இருந்தது.

மாப்பிள்ளை கிளம்பியவுடன் மகளை மெல்ல தாய் அருகில் சென்று தலையைக்கோதி, மெதுவாக என்ன நடந்தது என்று கேட்டவள் மகள், ‘ஓ’ வென்று அழ ஆரம்பித்ததைப் பார்த்து அதிர்ந்து போய்விட்டனர் பெற்றோர். அவளை சமாதானம் செய்து மெதுவாக விசயத்தை வாங்கினர். கணினித் துறையில் பணி, கைநிறைய வருமானம், வீட்டிலும் செல்லப்பிள்ளை, சகவாசம் சரியில்லாமல் குடித்துப் பழகியிருக்கிறார்.. தேனிலவு சென்ற இடத்திலும் அளவிற்கதிகமாக குடித்துவிட்டு வாந்தி எடுத்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் இதேபோல் நடந்து கொள்ளவும், லதாவிற்கு அருவறுப்பாக அங்கு இருக்கவே பிடிக்காமல் அடம்பிடித்து கிளம்பி வந்திருக்கிறாள். முன்பின் இது போலெல்லாம் நேரில் பார்த்திராத லதாவிற்கு இது அதிர்ச்சியையும், வெறுப்பையும் ஊட்டிவிட அதற்குமேல் பொறுக்க முடியாமல் கிளம்பி வந்திருக்கிறார்கள். பெற்றோருக்கும் இது அதிர்ச்சியாகத்தான் இருந்துள்ளது. நன்கு விசாரித்துதான் இந்த வரனை முடிவு செய்திருந்தார்கள். ஆனால் எப்படியோ இதைக் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. இனி ஆகப்போவதை கவனிப்போம் என்று மனதை தேற்றிக் கொண்டாலும், இத்தகைய ஏமாற்றத்தை சீரணித்துக்கொள்வது வெகு சிரமமான காரியமாகவே இருந்தது.

மகளை அழைத்துக்கொண்டு சம்பந்தி வீட்டில் நேரில் சென்று பேசி, இனி மாப்பிள்ளை குடிக்கமாட்டார் என்று உறுதியுடன் சமாதானம் செய்து விட்டுவிட்டு வந்தாலும், அடுத்த சில நாட்களிலேயே மகள் திரும்ப கண்ணைக் கசக்கிக் கொண்டு வரவும், பெற்றவர்களுக்கு கோபம் தலைக்கேற, பிறகு இருகுடும்பத்திற்கும் இடையே வாக்குவாதம் முற்றி, பிரச்சனை பெரிதாகிவிட்டது. இறுதியில் லதாவின் வாழ்க்கையில் மண் விழுந்தது. அவளும் ஒரே பிடிவாதமாக கணவனுடன் சென்று வாழப்போவதில்லை என்று உறுதியாக இருந்ததுதான் அவள் செய்த பெருந்தவறானது..

வாழ்க்கையில் தவறே செய்யாத மனிதரைப்பார்ப்பது எளிதல்லவே.. மேடு, பள்ளங்கள் நிறைந்த வாழ்க்கையைப் பற்றிய விழிப்புணர்வேற்படுத்த வேண்டிய பெற்றோரே, தெளிவில்லாமல் சண்டையை பெரிதுபடுத்திக் கொண்டிருந்ததன் விளைவு மகள் வீட்டோடு வந்து விட்டதுதான்.. தான் மனது வைத்தால் எளிதாக கணவனை திருத்திவிட முடியும் என்று உறவினர்கள் பலரும் எடுத்துச்சொல்லியும் ஏற்றுக்கொள்ள இயலாமல் மறுத்ததன் விளைவு இறுதியில் விவாகரத்தில் சென்று முடிந்தது.. மூன்று மாதத்தில் மறுமணம் செய்து கொண்டு மாப்பிள்ளை கவலை இல்லாமல் செட்டிலாகிவிட, லதாவின் வாழ்க்கை மட்டும் காற்றில் ஆடும் தீபமாக இன்று தள்ளாடிக் கொண்டிருக்கிறது. தங்கைக்குத் திருமணம் செய்தாகிவிட்டது. மேற்கொண்டு படித்து இன்று கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறாள் லதா.மற்றொரு முறை மணமேடையில் ஏற மனமில்லாமல் தள்ளிப்போட்டுக்கொண்டே போய்க்கொண்டிருக்கிறாள்.. காலங்கள் யாருக்காகவும் காத்து நிற்காதே… சற்று சுயமாக சிந்தித்திருந்தால் எப்படியாவது கணவனை திருத்தி நல்வழிப்படுத்த நம்பிக்கை கொண்டிருந்தால் அவள் வாழ்க்கையும் இன்று நன்றாக இருந்திருக்கலாம்.. எல்லோருக்கும் வாழ்க்கையில் பட்டுக்கம்பளம் விரித்து வரவேற்பு கிடைப்பதில்லை. பாதையில் கிடக்கும் கல்லையும், முள்ளையும் அப்புறப்படுத்திக் கொண்டே முன்னேறிக்கொண்டே இருக்கவேடியதுதான் சிறந்த வாழ்க்கை முறையாக இருக்க முடியும்! நினைத்த வாழ்க்கையே அனைவருக்கும் அமைந்துவிடுவதில்லை. கிடைத்த வாழ்க்கையை தமக்கு தோதாக மாற்றியமைத்துக் கொள்வதில்தானே ஒரு பெண்ணின் சாமர்த்தியம் இருக்க முடியும் அதைவிடுத்து வெறுத்து,விலகி ஓடுவதில் அர்த்தமில்லையே.. வாழவேண்டிய காலங்களை வீணே வேதனையில் கழிப்பதில் யாருக்கும் இலாபமில்லையே.. மகள் எப்படியும் ஒரு நாள் மறுமணத்திற்கு மனம்மாறி சம்மதிப்பாள் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கும் பெற்றோர் காலங்கடந்து இன்று தங்களுடைய தவறையும் நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறார்கள்……

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.