ஒரு பாமரனின் பார்வையில் நம்மாழ்வார்
திவாகர்
“சரிதான்.. இருக்கட்டுமே! “
“அவன் அழகுக்கு ஈடு இணை ஏதுமில்லை. “
“எல்லோரும் அப்படி சொல்கிறீர்களேயென்றுதான் நானும் ஒப்புக்கொள்கிறேன்.”
“அவன் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!”
“அப்படியா.. சரிதான்.. சரிதான்.. நான் ஒரு இளம் பெண்.. அதுவும் கலியாணமாகாத கன்னிப்பெண்.. அதனால் என்னிடம் ஆண்களைப் பற்றியெல்லாம் பேசாதீர்கள்..”
“அவனை ஒருமுறைப் பார்த்தால் போதும்.. பார்த்துக் கொண்டே இருக்கலாம்”
“அடடே! சொன்னால் கேட்கமாட்டீர்களோ.. எப்போதும் அவனைப் பற்றித்தான் பேச்சோ.. நான் வேண்டுமென்றால் காதை மூடிக் கொள்கிறேன்..”
“அந்தக் கண்கள்…. அந்தக் கண்களால் சர்வ சாதாரணமாய் வீசப் படுகின்ற காந்தசக்தி….. அவன் விடுகின்ற இளஞ்சூட்டு மூச்சு தென்றலோடு கலந்து அந்தத் தென்றலை அனுபவிக்கும் அனைவரையும் தாலாட்டும் அதிசயம் …. இப்படி அவன் ஒவ்வொரு அசைவையும் சொல்லிக்கொண்டே போகலாம்தான்.”
“சரி..சரி.. நீங்கள் சொல்லிக்கொண்டே இருங்கள்.. ஆனால் என் காதில் எதுவும் விழவில்லை என்பதை மட்டும் சற்று ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.. நான் காதை கெட்டியாக எப்போதோ மூடிக்கொண்டாயிற்று! ஆமாம் நானும் சொல்லிவிட்டேன்.. சொல்லிக்கொண்டே போகிறேன்..”
“போவதற்கு முன் மறுபடியும் சொல்கிறேன்… வேண்டுமானாலும் ஓராயிரம் முறை சொல்கிறேன், எனக்கு அவன் மேல் காதல் தோன்றவில்லைதான். ஏன் என்று கேட்பீர்களே.. யதார்த்தமான உண்மைதான்! எனக்கும் அவனுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம்….. நான் எங்கே? அவன் எங்கே? அவன் மலை.. நான் சிறு மணல் துகள்… நான் ஆகாயத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருந்தாலும் அவன் அதற்கு மேலும், இன்னும் உயரமாக தெரிபவன்… எனக்கு எதுக்கு சாமி வீண் ஆசை? நமக்கு எதுக்கு அவன் சகவாசம்? அவனைப் பற்றி நான் ஏன் நினைக்கவேண்டும்? அடைய முடியாதவனைப் பற்றி ஏன் ஆசைப் பட வேண்டும்? ச்சேச்சே… என் சிந்தனையில் அவன் இல்லை இல்லை.. அவனை என் சிந்தனையிலிருந்து எப்பவோ தூக்கிப் போட்டாயிற்று.. நீங்கள் எத்தனை முறை கேட்டாலும் என் பதில் இதுதான். அவன் என் நெஞ்சத்தில் இல்லை.. இல்லை..இல்லை… ஏன் தெரியுமோ.. யதார்த்தம் தெரிந்த என் நெஞ்சு தனி நெஞ்சு… அந்த தனி நெஞ்சத்தில் அவனுக்கு இடம் இல்லை.. போதுமா.. ஆளை விடுங்க சாமி..
”ச்சேச்சே.. அவனாம் அவன்.. அவன் அத்தனை பெரிய அழகனாயிருந்தால் இருந்துவிட்டு போகட்டுமே.. எனக்கென்ன போச்சு?”
ஆனால் என்ன ஆச்சரியம் பாருங்கள்…
இங்கே அவனே வருகிறானே..
நான் ஏறெடுத்தெல்லாம் பார்க்கமாட்டேன்..
ஆமாம்.. எத்தனை பெரிய அழகன்.. அவன் பாதங்கள் பார்த்தாலே தெரிந்துவிடுகிறதே..
சற்று ஏறெடுத்துதான் மெல்லப் பார்ப்போமே..
கம்பீர நடைதான்.. அந்தக் கண்கள்.. ஆமாம்.. எல்லோரும் சொல்கிறாற்போல.. வசீகரப் பார்வைதான்..
வேண்டாம் நான் பார்க்கமாட்டேன்.. என் இனிய கண்களே.. இந்த கள்ளனைப் பாராதீர்..
இதென்ன நியாயம்.. என் கண்கள் என்னை மதிக்கவே இல்லையே.. . ஐய்யோ.. பாருங்களேன்.. இதோ என் அருகே வருகிறானே..
அந்தக்காந்தப் பார்வையால் என் கண்களில் ஊடுருவி உள்ளே போக வழி கேட்கிறானே..
இது அடுக்குமா.. என் கண்களும் எனக்கு சதி செய்கின்றதோ. என்னைக் கேளாமலே என் பார்வை வெறித்து அவனைப் பார்த்ததோடு மட்டுமில்லாமல் என் அனுமதி பெறாமலே கண் வாசல் வழியாக என் இதயத்திற்கு அவன் மொத்த வடிவத்தையும் அனுப்பிவிட்டதே. என் தனி நெஞ்சை வஞ்சித்து விட்டது.
என் கையைப் பிடிக்கிறான்.. ஐய்யய்யோ.. இது என்ன சோதனை.. நானா அவனைப் பார்க்க ஏங்கினேன்? இத்தனைப் பெரிய அழகன் என்னிடம் ஏன் தானாக வரவேண்டும்? ஏதோ பார்த்தோமா.. போனோமா என்றிருக்கக் கூடாதா? என் உடலுக்குள் புகுந்து என் உயிரிலும் கலந்து என் தனி நெஞ்சத்தை என்னிடமிருந்து ஏன் பிரித்தாய்? இனியும் உன்னை விட்டு என்னால் பிரிய முடியுமா?
என்ன..என்ன? மறுபடியும் சொல்…
நானே போகச் சொன்னாலும் என்னை விட்டு விலக மாட்டாயா? நிச்சயமாகவா..
“யானொட்டி வந்து இருத்துவம் என்றிலன்
தானொட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்று என் உயிருனுள் கலந்து இயல்
வானொட்டுமோ… என்னை நெகிழ்க்கிவே”
(நானாக உன்னை என்னோடு இருந்துவிடு என்று சொல்லவில்லையானாலும் நீயாகவே வந்து என்னுடையை உள்ளத்தைக் கவர்ந்து உடலோடு ஒட்டி உயிரோடும் கலந்து இனி என்னைப் பிரியேன் என்ற அந்தப் பரந்தாமனின் உன்னத உள்ளம் என்னை எப்படியெல்லாம் நெகிழ்விக்கிறது என அறிவீர்களோ! –
(நம்மாழ்வார் திருவாய்மொழி)
படங்களுக்கு நன்றி:
http://anudinam.org/2012/01/26/paduka-sahasram-part-6/
ஆஹா படங்களைப்புகழ்வதா எழுத்து வன்மையைப்புகழ்வதா? ஆழ்வார்பெருமானின் அவதாரத்திருநாளுக்கே பெருமை சேர்த்துவிட்டீர்கள் திவாகர்! கண் என்ன மனமே குளிர்ந்தது!
அருமை! அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். நானும் அனுபவித்துப் படித்தேன்.
“ஆம், என் நெஞ்சத்தில் அவனுக்கென்று தனியாக இடம் இல்லைதான்; உள்ளம் முழுக்க, உயிர் முழுக்க, அவனாக இருக்கும் போது தனியாக இடம் என்னத்திற்கு?” 🙂
அருமை. அவனை ஏறெடுத்துப் பார்க்க நமக்கு சக்தி உள்ளதா?. அது சரி, அவனுள் நான் என்னை முழுமையாக ஐயிக்கியமாக்கிக் கொண்ட பிறகு, ஏன் பார்க்க வேண்டும்.?
ஷைலஜா, கவிநயா, மனோகர் உங்களன்பு பின்னூட்டங்களுக்கும் ரசித்தமைக்கும் நன்றி! – திவாகர்