அண்ணாகண்ணன்

மே 30ஆம் நாள், என் தாயார் சவுந்திரவல்லிக்குச் சென்னை சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் கண் புரை அறுவை நிகழ்ந்தது. அதன் பொருட்டு, அவரது நலம் விசாரிக்க, மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்கள், ஜூன் 3 அன்று காலை அம்பத்தூரில் எமது இல்லத்திற்கு வருகை தந்தார். அடுத்து, தாம் கலைஞரைச் சந்திக்க உள்ளதாகவும் நீங்களும் வரலாம் என அன்புடன் அழைப்பு விடுத்தார். நானும் மகிழ்வுடன் அவருடன் இணைந்துகொண்டேன்.

அண்ணா அறிவாலயம் புறப்பட்டோம். செல்லும் வழியில் கலைஞரது பங்களிப்புகள், இயல்புகள், நிலைப்பாடுகள் ஆகியவற்றைப் பற்றிப் பேசியபடி சென்றோம். 70 ஆண்டுகளுக்கும் மேலான பொது வாழ்வில் கலை, அரசியல், சமூகம் எனப் பல துறைகளில் அவரது பங்களிப்பினை யாரும் மறுக்க முடியாது. அவரை விலக்கிவிட்டு, தமிழக வரலாற்றை எழுத முடியாது என்ற நிலையை அவர் உருவாக்கி உள்ளதைச் சச்சி குறிப்பிட்டார். 90 வயதில் தனிச் சிறுநீர்ப் பையுடன் பெரியார் பயணித்ததைப் போல், கலைஞர் இந்த 89 வயதிலும் பயணித்து வருகிறார். அந்த அளவுக்கு உழைப்பு எனச் சச்சி எடுத்துரைத்தார்.

நீங்கள் சொல்வது சரிதான். ஆயினும் கலைஞர், தமது ஆற்றலை, செல்வாக்கை முழுமையாகப் பயன்படுத்தவில்லை. ஈழ நிலைப்பாட்டில் இந்திய அரசின் நிலையே தமது நிலை என அவர் சொன்னதை நான் நினைவூட்டினேன். தமிழகத்தின் முதலமைச்சராக அக்காலத்தில் யார் இருந்திருந்தாலும் அப்படித்தான் சொல்லியிருப்பார்கள் என்றார். நீங்கள் தமிழகத்தின் முதலமைச்சராக அக்காலத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் எனக் கேட்டேன். பதவி விலகியிருப்பேன் என்றார் சச்சி. போனது போகட்டும். தமது வாழ்நாளுக்குள் தமிழ் ஈழம் பிறக்க உழைப்பேன் என அவர் இப்போதேனும் முடிவு எடுத்திருக்கிறாரே எனக் கலைஞரைப் பாராட்டினேன்.

அச்சமயம், அறிவாலயத்திற்குள் நுழைந்தோம். அங்கே தி.மு.க. தலைவரும் ஐந்து முறைகள் தமிழகத்தின் முதல்வராய் வீற்றிருந்தவருமான கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 89ஆம் பிறந்த நாள் விழா களைகட்டி இருந்தது. வழியெங்கும் வாழ்த்துப் பதாகைகள். தோரணங்கள். வரிசை வரிசையாக மகிழுந்துகள். சாரை சாரையாகத் தொண்டர்கள். அவர்கள் கைகளில் பல்வேறு சீர்வரிசைப் பொருள்கள். தி.மு.க. அறக்கட்டளைக்கு ரூ.1 இலட்சம் நன்கொடை வழங்கிய காசோலையை ஒருவர், பெரிய பதாகையில் அச்சிட்டு எடுத்து வந்தார். அது, கிரிக்கெட் ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதைப் பெறுபவருக்கு, காசோலையைப் பெரிய பலகையில் அச்சிட்டு வழங்குவது போலிருந்தது. பல்வேறு வேடங்கள் அணிந்த நாட்டுப்புறக் கலைஞர்கள், ஆடிப் பாடியபடி வந்து கலைஞரை வாழ்த்தினர். டாக்டர் கலைஞர் வாழ்க என்ற முழக்கம், அடிக்கடி எழுந்தது.

விழா அரங்கில் மேடையில் முக்கிய பிரமுகர்கள் நின்றிருந்தனர். மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, வீரபாண்டி ஆறுமுகம், பச்சையப்பன் கல்லூரியில் சச்சியின் ஒரு சாலை மாணாக்கர் துரைமுருகன், பொன்.முத்துராமலிங்கம், பொன்முடி, டி.கே.எஸ்.இளங்கோவன், உதவியாளர் சண்முகநாதன்… உள்ளிட்ட பலரும் புடைசூழ, கலைஞர் அமர்ந்திருந்தார். சச்சியைக் கண்டதும் அங்கிருந்தோர், உடன் அழைத்துச் சென்றனர். சச்சி என்னைக் கையோடு கூட்டிச் சென்றார். கலைஞரைச் சந்தித்தோம். பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்தோம். கலைஞருடன் கைகுலுக்கி வாழ்த்துகளைத் தெரிவித்தேன். அவர் புன்னகையுடன் எங்கள் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார். சச்சியுடன் சில வார்த்தைகள் பேசினார்.

வாழ்த்துச் சொல்லிப் புறப்பட்ட எம்மைத் தடுத்த டி. ஆர் பாலு, கட்டாயம் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். எதிரில் நிழற்படக் கலைஞர்கள் படம் பிடித்தனர். கலைஞரின் தனி உதவியாளர் சண்முகநாதன், சச்சியிடம் வந்தார், சில ஆவணங்களைக் காட்டினார். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். வணங்கி விடைபெற்றோம். அரங்கில் நுழைந்த ஐந்து நிமிட நேரத்தில் சச்சியால் கலைஞரைச் சந்திக்க முடிந்தது. அது, நட்பிற்குக் கலைஞர் கொடுக்கும் மதிப்பு.

கலைஞர் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். சக்கர நாற்காலியில் இருப்பினும் முகம் பொலிவுடன் இருக்கிறது. டெசோ அமைப்பிற்குப் புத்துயிரூட்டி, தனி ஈழத்திற்கு வாக்கெடுப்பு நடத்த முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். மூப்பும் தளர்வும் மிகுந்த இந்த வயதிலும் துடிப்புடன் அவர் இயங்கி வருகிறார். ஓரிடத்தில் முடங்கிவிடாமல், பணிகளைத் தேங்க விடாமல், உடனுக்குடன் நிறைவேற்ற முயன்று வருகிறார். அவர் நீடூழி வாழ்க நிறைவுடன், நித்தியப் புன்னகை ஒளியுடன்.

படங்களுக்கு நன்றி:

http://newindianexpress.com/states/tamil_nadu/article534701.ece

http://indiatoday.intoday.in/story/tamil-nadu-dmk-karunanidhi-89th-birthday/1/198916.html

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கலைஞரைச் சந்தித்தோம்

  1. நட்பை மதிக்கும் மனிதரைக்கண்டு வந்து எழுதிய விவரங்கள் நன்று

  2. கலைஞ்சரை,சந்திக்கவில்லை இன்றைய தமிழை சந்தித்தீர்கள்,உங்கள் கண்களுக்கு என் வணக்கம்

    அந்த பாக்யவான் பெற்ற பாக்யசாலி நீங்கள்,அமுதை சுவைத்த பெருமை உங்களுக்கு சுவைத்தவரை

    பார்த்த பெருமை எங்களுக்கு,பார்த்தால் பசி தீராமளா போய் விடும் ??நீங்கள் பார்த்ததை எங்களை

    பார்க்கவைத்ததற்கு உங்களை பார்த்து ஒரு நன்றி எங்களுடையது *****தேவா***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *