உறவேல் ஒழிக்க ஒழியாது!
அன்பு நண்பர்களே,
பிரபல எழுத்தாளர் திரு ராமஸ்வாமி ஸம்பத் அவர்களை நம் வல்லமையில் அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். அவரைப்பற்றி அவருடைய உற்ற தோழர் திரு திவாகர் அவர்கள் சொல்கிறார்.
”திரு ராமஸ்வாமி ஸம்பத் நூற்றுக்கணக்கான ஆங்கிலக் கட்டுரைகளை எழுதியவர். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைகளில் பணி புரிந்த பின், விசாகப்பட்டினத்து ஹிந்து பத்திரிக்கையின் ஆசிரியர் குழு தலைமைப் பொறுப்பிலிருந்து ஐந்து வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்று தற்சமயம் சென்னையில் வசிக்கிறார். 70 வயதாகும் இளைஞரான ஸம்பத் தெலுங்கு, ஆங்கிலம், தமிழ் மொழியில் பேச்சாளர் கூட.”
திரு ராமஸ்வாமி ஸம்பத் அவர்களின் படைப்புகளை நம் வல்லமையில் தொடர்ந்து காணலாம் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
அன்புடன்
ஆசிரியர்
ராமஸ்வாமி ஸம்பத்
1
பின்பனிக்காலத்து வைகறைப் பொழுது. அருணோதயத்திற்கு இன்னும் ஒரு நாழிகை நேரம் இருக்கலாம். மாலிருஞ்சோலைவனத்தில் ‘கீசு கீசு’ என்று யானைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் ஓய்ந்து, ஏனைய புள்ளினங்கள் தம்தம் கூட்டைவிட்டு வான் நோக்கிப்பறக்க ஆயத்தமாகிவிட்டதை தங்கள் சிறகுகளைச் சிலுப்பி ஆர்ப்பரித்தன. அப்படிப்பட்ட புலர்ந்தும் புலராத மனோரம்யமான வேளையில் ஓர் வைணவ பாலகன் விதவிதமான மலர்களையும் துளசிதளங்களையும் பறித்துத்தன் இடதுதோள்மீது சார்த்தியுள்ள குடலையில் இட்டுக் கொண்டிருந்தான். அவனது செவ்வாய் ’அச்சுதா, அநந்தா, கோவிந்தா’ என்ற ஹரிநாமங்களை முணுமுணுத்துக் கொண்டிருந்த்து.
அச்சமயம் பெரியாழ்வாரின் பாசுரம் ஒன்று பாடப்படுவது அவன் செவிகளில் இன்பத்தேன்வந்து பாய்வதுபோல் வீழ்ந்தது.
“எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்
அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனைப்
பந்தனைத் தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதுமே.”
இப்பாசுரத்தை தனது இனிய குரலில் பாடிக்கொண்டு ஒரு வைணவப் பெரியவர் அவ்வழியே நடந்துகொண்டிருப்பதைக் கண்டான் அச்சிறுவன். உடனே
விரைவாக அவரைத் தொடர்ந்தான்.
சரியாக “…வில்லிப்புத்தூர் விட்டுசித்தன் விரும்பியசொல் நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோ நாராயணாயவென்று பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே” என்று கூறிமுடித்ததும், அவர்தம் காலடியில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்தான்.
இதனைச்சற்றும் எதிர்ப்பார்க்காத அப்பெரியவர், “குழந்தாய், நீ யாரப்பா? இப்பூம்பொழிலில், நடுங்கும் குளிரில் இப்படி அடியேன் கால்களில் வீழ்ந்து வணங்குவது? இவ்வணக்கங்கள் நாரணனுக்கே உரியவை,” என்றார்.
“அய்யா! என் பெயர் மாறன். தங்களது ‘பல்லாண்டு’ பாடும் இன்னிசை என்னை பெரியாழ்வாரிடமே அழைத்துச் சென்றுவிட்டது. அந்த உணர்வு தங்களை விஷ்ணுச்சித்தராகவே பாவித்து உங்களிடம் அடைக்கலம் செய்யத் தூண்டியது. தாங்கள் யார் என்பதனை இந்தப் பாலகன் அறியலாமா?”
“குழந்தாய், என் பெயர் மாலடியான். நான் திருமுல்லைவாயில் என்ற கிராமத்தைச் சேர்ந்தவன். அக்கிராமம் ’சீகாழிச் சீராம விண்ணகரம்’ என்று புகழ்பெற்ற தாடாளன் சன்னிதி உள்ள சீர்காழியின் பக்கத்தில் கடலுக்கு அருகாமையில் உள்ளது. தற்போது வைணவத் திருத்தலங்களுக்குச் சென்று மாலவனின் அர்ச்சாவதார மூர்த்திகளை தரிசித்து வருகின்றேன். நேற்று மதுரையம்பதியில் கூடலழகரை வணங்கிவிட்டு இன்று மாலிருஞ்சோலை அண்ணல் கள்ளழகரைக் காண விரும்புகிறேன். அதன் முன்பாக இம்மலைமீதுள்ள நூபுரகங்கையில் புனலாடிவிட்டு அழகர்கோவிலை நோக்கி விழைகிறேன்.”
“அப்படியானால் என்னுடன் வாருஙகள். அக்கோவில் பட்டர் எஙகள் குடும்பத்திற்கு மிகவும் வேண்டியவர். அவர் தங்களுக்கு அங்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருவார்,” என்று சொல்லி மாறன் அவருடன் அடிவாரம் நோக்கி நடந்தான்.
கள்ளழகரைக் கண்ணாறக்கண்டு, வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து, நெய்யிடை நல்லதோர் அக்கார அடிசில் ப்ரஸாதத்தை உண்ட மகிழ்ச்சியில் திளைத்திருந்த மாலடியான், “குருகூர் சடகோபரின் திருநாமத்தைக் கொண்டிருக்கும் குழந்தாய்! கள்ளழகரை எனக்குச் சிறப்பாக தரிசனம் செய்வித்த உனக்கு எவ்வாறு நன்றி சொல்வேன்,” என்றார்.
“மாலடியாரே, தங்களைப் போன்ற வைணவ சீலர்களுடைய சகவாசத்தை விரும்புவன் நான். என் வேண்டுகோளைத் தாங்கள் மறுக்கக்கூடாது. இன்றையப் பொழுதினை எங்களுடன் செலவிட்டால் என் பாட்டனார் மிக்க மகிழ்ச்சிகொள்வார். இங்கிருந்து அரைக்காதத் தொலைவில் உள்ள கள்ளந்திரி எனும் கிராமத்தில் உள்ளது அடியோங்களுடைய அடிக்குடில்,” என்று அவரைத் தன்இல்லத்துக்கு அழைத்தான் மாறன்.
“இதைவிட எனக்கு வேறு பாக்கியம் வேண்டுமோ! மாறா, உன் தாய்தந்தையர் யார்? தகப்பனார் எப்பணியில் ஈடுபட்டுள்ளார்?”
“அய்யா! பிறக்கும்போதே அன்னையை இழந்த பாபி நான். அச்சமயம் என் தந்தையார் ஏதோ அரச சேவகத்தில் வெளியூரில் இருந்ததாகவும் அப்போது சோழநாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால், பாட்டனார் என்னைச்சுமந்து கொண்டிருந்த அன்னையை அழைத்துக்கொண்டு பாண்டிய தேசத்துக்கு வந்துவிட்ட்தாகவும் கேள்வி.”
“மாறா, உன் பாட்டனாரின் பெயர் என்ன?”
”அவர் திருப்பெயர் மணிவண்ண நம்பி.”
”உன் அன்னையின் பெயர்?”
“குமுதவல்லி.”
”என்ன குமுதவல்லியா? அவள் பகவத்ராமானுஜரின் திருவடியைச் சேர்ந்து விட்டாளா?” என்று கண்ணீர்மல்க கேட்ட மாலடியான் மாறனை அப்படியே தழுவிக்கொண்டு, “ஆகா! எவ்வளவு நாட்களாக உங்களையெல்லாம் தேடிக்கொண்டிருக்கிறேன். மகனே, புறப்படு, நான் என் மாமனை பார்க்க வேண்டும்.”
பேராச்சரியத்துடன் மாறன் தன் தந்தையைத் தழுவிக்கொண்டான். பிறகு இருவரும் கள்ளந்திரியை நோக்கி விரைந்தனர்.
தொடரும்
படங்களுக்கு நன்றி:
http://tamil.oneindia.in/news/2012/05/06/tamilnadu-kallazhagar-enters-river-vaigai-153523.html
http://www.kamat.com/indica/culture/4897.htm

பின்பனிக்காலத்து வைகறப்பொழுதைப்போலவே குளிர்ச்சி தரும் இடுகை.
பாலகனோடு பயணிக்கும் கதையின் ஆரம்பமே அருமையாக உள்ளது. கள்ளழகரின் படம் கண்ணுக்கு விருந்து. தொடர்ந்து வரப்போவதை வாசிக்கக் காத்திருக்கிறோம்.
என்ன ஒரு தொடக்கம்!
அருமை. தொடரட்டும் உங்கள் எழுத்து.
திருமங்கை மன்னனா இந்த மாலடியான்?? குமுதவல்லிக்கும், திருமங்கை மன்னனுக்கும் பிறந்த பிள்ளையா இந்த மாறன்? அருமையாக ஆரம்பித்துள்ளார். தொடரக் காத்திருக்கேன்.
Well begun is half done.
இந்த கட்டுரையை ஆர்வத்துடன் படித்தேன்.
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை 30 பாக்களைக் கொண்டது. பக்தர்கள் விடியற்காலையில் அனுதினமும் 30 பாக்களையும் வந்தனம் செய்வது முக்திக்கு வழிவகுக்கும். நாள்தோறும் திருப்பாவையை அனுசந்திப்பவர்களுக்கு நாரணனின் திருவருளைப் பெற்று இன்புறுவர். இப்படி ஆண்டு முழுவதும் திருப்பாவையை சங்கீர்த்தனம் செய்யவேண்டும்,
ஆண்டு முழுவதும் முடியாவிட்டால்,
ஒரு மாதமாவது அனுஷ்ட்டிக்க வேண்டும்,
ஒரு மாதம் முடியாதவர்கள்
ஒரு நாளாவது 30 பாடல்களையும் பாடவேண்டும்,
அதுவும் முடியாவிட்டால் ஒரு நாளைக்கு ஒரு பாட்டு வீதம் 30 நாள் பாடவேண்டும்,
இவை கடைபிடிக்க முடியாதவர்கள், தினமும் ஒரு வரியாவது பாடவேண்டும். முக்திக்கு வழிகாட்டும், இந்த சாதாரண எளிய வழியைக்கூட பின்பற்ற முடியாதவர்கள் இந்த உலகில் இருந்தென்ன பயன், இந்த உலகம் வீணாகச் சுமக்கிறது என்று சொல்கிறது ஒரு வெண்பா.
திருப்பாவையின் பெருமையை உணர்த்தும் வகையில், வேதபிரான் பட்டர் பாடிய அந்த வெண்பா பாடலைக் கேட்போம்.
பாதகங்கள் தீர்க்கும், பரமனடி காட்டும்,
வேதமனைத்துக்கும் வித்தாகும் = கோதைதமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு
முதல் தொடரிலேயே, துவக்கம் முதலே சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் பாமாலையிலிருந்து ஒரு வரியில் தொடங்கி, பிறகு நாலயிரத்தில் நுழைந்து, இந்த முக்திக்கு வழிகாட்டும் எளிய கைங்கர்த்தைச் செய்ய முனைந்துள்ளார், மதிப்பிற்குறிய திரு ராமசாமி சம்பத் அவர்கள். திரு ராமசாமி சம்பத் அவர்களிடமிருந்து அரிய, புதிய தகவல்களைத் தெரிந்து கொள்ள வல்லமை வாசகர்கள் சார்பாக என் வேண்டுகோளைச் சமர்ப்பிக்கிறேன்.
அறிமுகத்தில் வல்லமை ஆசிரியர், “எழுபது வயதான இளைஞர்” என்று எழுத்தாளரை அறிமுகப் படுத்துகிறார், இந்த வயதான இளைஞர் தம் எழுத்துக்களால், மற்ற இளைஞர்களுக்கு கண்டிப்பாக நல்வழிகாட்டுவார் என்று நம்புகிறேன்.
பெருவை பார்த்தசாரதி
Excellent beginning of the serial by Sri. Ramaswamy Sampath. The title itself is very attractive and has been taken from Andal’s Thiruppavai. The chance meeting between the father and the son has been brought out very nicely. I will be eagerly waiting for the next issue.
S. Rajagopal