விக்கிடோனார் +சுஜாதாவின் 14 நாட்கள்
மோகன் குமார்
வார இறுதியில் பார்த்த ஒரு சினிமாவும், வாசித்த புத்தகமும் ஒன்றாய் பகிர்கிறேன்
விக்கிடோனார்
வித்தியாசமான கதைக் களன். டில்லியில் குழந்தைப்பேறு இல்லாதோருக்கு மருத்துவம் செய்யும் டாக்டர் சந்தா, புதிதாக டோனார் தேடுகிறார் . ஹீரோ விக்கியை பார்த்து விட்டு, அவனது பரம்பரையில் நிறைய குழந்தைகள் உண்டு என அறிந்து அவனை டோனார் ஆக்க போராடி சம்மதம் வாங்குகிறார் டாக்டர். விக்கி துவக்கத்தில் விருப்பமின்றி இறங்கினாலும் பின் நன்றாக பணம் பார்க்கிறான். இடையில் அஷிமா என்கிற பெங்காலி பெண்ணை காதலித்து மணக்கிறான். அவர்களுக்கு குழந்தை பேறு இல்லை. அஷிமாவுக்கு குழந்தை பேறுக்கு வாய்ப்பு இல்லை என தெரிகிறது. விக்கி அவள் மீது அன்போடு இருந்தாலும் கூட, ஒரு வாக்கு வாதத்தில் அவன் ஒரு ஸ்பேம் டோனார் என தெரிந்து விலகுகிறாள் அஷிமா. இருவரும் மீண்டும் ஒன்று சேர டாக்டரே காரணமாகிறார். பெற்றோரை விபத்தில் இழந்த ஒரு குழந்தை இவர்கள் வசம் வர, புது வாழ்க்கை துவங்குகின்றனர்.
படம் ஓஹோ என்று சொல்ல முடியாது. அதே நேரம் மிக சிக்கலான ஒரு விஷயத்தை கையாண்டமைக்கு நிச்சயம் பாராட்ட தான் வேண்டும்.
குழந்தை பேறின்மை என்பது நம் நாட்டில் உள்ள மிக பெரிய பிரச்சனை. ஆர்டிபிசியல் Insemination என்பது உயர் தட்டு மக்களிடையே நன்கு ஏற்று கொள்ள பட்டாலும், நம் மக்கள் பலரிடமும் சென்று சேரவில்லை. இத்தகைய வெகு ஜன படங்கள் மூலம் இது பற்றி ஏராளமான மக்கள் அறியமுடியும்.
படத்தின் ஹீரோ விக்கி புதுமுகம் என்பதால் நடிக்கிற மாதிரியே தெரியவில்லை. மிக இயல்பாக இருக்கிறார். அஷிமாவாக வரும் ஹீரோயின் செம அழகு. பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கிறார்.
படத்தில் சண்டைகள் இல்லை. பாடல்களும் பின்னணியில் தான் ஒலிக்கிறது. ஹீரோவின் அம்மா பாத்திரம் மற்றும் ஹீரோயின் அப்பா பாத்திரம் வித்யாசமாய் உள்ளது. பஞ்சாபிகளுக்கும் பெங்காலிகளுக்கும் இருக்கும் உரசல், கிண்டல் போன்றவை ஆங்காங்கு விரவப்பட்டுள்ளது.
ஜான் ஆப்ரஹாம் என்கிற பிரபல ஹிந்தி நடிகர் தயாரித்தாலும், அவர் முன்னணி பாத்திரத்தில் நடிக்கலை. படம் முடிந்ததும் டைட்டில் ஓடும்போது ஒரு டான்ஸ் ஆடி விட்டு போகிறார். சின்ன பட்ஜெட்டில் எடுத்து படம் பெரிய ஹிட் ஆகிடுச்சு.
இரண்டு மணி நேரமே ஓடும் இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம் !
**************
சுஜாதாவின் 14 நாட்கள் –நாவல்
இந்தியா- பாகிஸ்தான் இடையே 1972-ல் நடந்த போரின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல்.
குமார் என்கிற விமானி தன் விமானம் மூலம் பாகிஸ்தான் விமானங்களை தாக்குகிறான். பின் பாகிஸ்தான் விமானத்தால் தாக்கப்பட்டு பாராசூட் மூலம் ஒரு காட்டில் விழுந்து பாகிஸ்தான் படையிடம் சிக்குகிறான் குமார். சுல்தான் என்கிற மோசமான ஆபிசர் அவனை சிறைப்பிடித்து துன்புறுத்துகிறான். இந்திய படை அந்த இடத்தை அடைந்ததும், பாகிஸ்தான் படை சரணைடைகிறது. ஆனால் குமாரை காணோம். இந்திய படைகள் வருவதை அறிந்த சுல்தான், அவனை ஆற்றுக்கு அருகே கூட்டி சென்று துப்பாக்கியால் சுட்டு விடுகிறான். இந்திய ராணுவம் குமாரை கண்டுபிடித்து மருத்துவம் கொடுத்து அவனை காப்பாற்றுகிறது. நாவலின் இறுதியில் குமார் இந்த முழு கதையும் கதாசிரியரான சுஜாதாவிடம் சொல்வதாக முடிகிறது.
மிக விறுவிறுப்பான கதை. குமாருக்கு என்னாகுமோ என்கிற பயம், வாசிக்கும் ஒவ்வொருவரையும் தொற்றிக் கொள்கிறது. இடை இடையியே அவன் மனைவி-மகன் பற்றி சொல்லி கொண்டே வருகிறார் (ரோஜா கதையின் முடிச்சு இங்கிருந்து கூட எடுக்கப் பட்டிருக்கலாம்) விமானம் பற்றியும், பறப்பது பற்றியும், போர், துப்பாக்கி இவை பற்றியும் விரிவான விவரணைகள் ஆச்சரியப் படுத்துகிறது. சுஜாதா கதையில் மருந்துக்கும் காமெடி இன்றி ஒரு கதை படித்தது இது தான் என நினைக்கிறேன். ஆனால் கதையின் களம் அது போல !
எல்லையில் நம் வீரர்கள் எந்த நிலையில் பணி புரிகிறார்கள், அவர்கள் குடும்பம் எந்த மன நிலையில் வாழ்கிறது போன்றவற்றை உணர இந்த நாவலை ஒரு முறை அவசியம் வாசியுங்கள் !
புகைப்படங்களுக்கு நன்றி:
http://movies.ndtv.com/images/reviews/Vicky-Donor-big.jpg
http://www.noolulagam.com/book_images/5163.jpg
