சொர்க்கத்தில் ஒரு முள் (அத்தியாயம்-11)

0

ஸ்ரீஜா வெங்கடேஷ்

மங்கையின் சிரிப்பைப் பார்த்து விதிர்விதிர்த்துப் போனார்கள் அனைவரும். ஒரு வேளை மூளை கலங்கி விட்டதோ? இழப்பைத் தாங்க முடியாமல் ஹிஸ்டீரியா வந்து விட்டதோ? என்று யோசித்தார்கள். ஆனால் அவள் சிரிப்பு வெறி பிடித்த சிரிப்பாக இல்லாமல், குழந்தைகள் தெரியாமல் தவறு செய்யும் போது கண்டித்து அன்போடு சிரிக்கும் சிரிப்பு மாதிரி இருந்தது. ப்ரியா பயந்து விட்டாள். மாமிக்கே என்னவோ போல் இருந்தது. “டீ மங்கை என்னது எப்பேர்ப்பட்ட விஷயம் சொல்லியிருக்கோம், நீ அதைப் புரிஞ்சிக்காம சிரிக்கிறியே? பாரு குழந்தைகள்ளாம் பயப்படறது. மங்கை! மங்கை” என்று அருகில் சென்று உலுப்பினாள்.

“சாரி மாமி! நீங்க நெனக்கறா மாதிரி எனக்கு ஒண்ணும் பைத்தியம் பிடிக்கலை. ஆனா ஒரு விஷயம் நான் சொல்றேன் கேட்டுக்குங்க அவருக்கு ஒண்ணும் ஆகலே, அவரு எங்கியோ இருக்காரு, நிச்சயமா ஒரு நாள் திரும்பி வரப் போறாரு பாருங்க. நீங்க அது புரியாமே ஏன் இப்படிக் கவலைப் படறீங்கன்னு நெனச்சுத்தான் சிரிச்சேன்” என்றாள். அவள் பதிலைக் கேட்டவர்களுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

ப்ரியா மெதுவாக ஆரம்பித்தாள். “அண்ணி நீங்க சொல்றது அப்படியே நடக்கட்டும். அது தான் எங்களுக்கும் சந்தோஷம். ஆனா அண்ணன் போன ஃப்ளைட் முழுசுமா எரிஞ்சிப் போச்சி. அதுல இருந்த யாருமே பிழைக்கல்லேன்னு எல்லா நியூஸ் சேனல்லயும் சொல்லிட்டாங்க. அப்படியிருக்கறபோது நாம ஏன் பொய்யா ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கிக்கணும்? உண்மையை அப்படியே ஏத்துக்கறதுதான் அண்ணி நல்லது”

“அவ சொல்றது சரிதான் மங்கை. இது ஒரு தாங்க முடியாத துக்கம்தான் நான் இல்லேங்கலை! ஆனா நீ இதை உன் குழந்தைகளுக்காகத் தாங்கித்தான் ஆகணும்! இத்தனை நாளும் உன் நாத்தனாரும், உன் பிள்ளையும் பட்டிருக்கற பாடு இருக்கே ஈஸ்வரா! அதுக்கெல்லாம் ஒரு முடிவு வரணும். நீ இன்னமும் சின்னக் குழந்தை மாதிரி பேசாதே” என்றாள் மாமி குரலில் லேசான கோபம்.

“நிகில்! இங்க பாரு கண்ணா! உங்கப்பா சாகலே! அவர் இன்னும் உயிரோடத்தான் இருக்கார், என் மனசுக்குத் தெரியுது. அவருக்கு ஏதாவது ஒண்ணுன்னா எனக்குக் கண்டிப்பாத் தெரிஞ்சிடும். நீங்க சொல்றதை என் உள் மனசு ஏத்துக்க மறுக்குது. அவரு எங்கியோ இருக்காருன்னுதான் திருப்பித் திருப்பித் சொல்லுது. உங்களுக்கு என்ன வேணும்? நான் அவரு செத்துட்டார்னு சொல்லி தாலியைக் கழட்டணுமா? பொட்டை அழிக்கணுமா? நீங்க என்ன சொல்ல வரீங்க?” என்றாள் மங்கை உணர்ச்சி வசப்பட்ட நிலையில். அவள் சுவாசம் சற்றே தடுமாறத் துவங்கியது.

அதைக் கவனித்து விட்ட நிகில் “மம்மி! நீங்க எதையும் நெனச்சுக் கொழப்பிக்காம இருங்க மம்மி! அப்பா உயிரோடு வருவாருங்கறதை நான் நம்புறேன். நீங்க எதுவும் செய்ய வேணாம். பேசாம சாப்பிட்டுத் தூங்கி ரெஸ்ட் எடுங்க. எல்லாத்தையும் நாங்க பாத்துக்கறோம்.” என்றவன் மாமியையும் ப்ரியாவையும் நோக்கி கண் சிமிட்டினான். புரிந்து கொண்டவர்களாய் அவர்களும் மேற்கொண்டு எதுவும் பேசாமல் வெளியேறினர். மங்கையைத் தூங்க வைத்து விட்டு வெளியில் வந்தான் நிகில்.

“அத்தை! மாமி! அப்பா திரும்ப வருவாங்கன்னு மம்மி நம்புறாங்க! அதை நாம் கெடுக்க வேணாம். காலப் போக்குல தானே புரிஞ்சிக்குவாங்க. நாம வலுக்கட்டாயமா ஏதாவது செய்யப் போயி மம்மிக்கும் ஏதாவது ஆயிடிச்சின்னா அதைத் தாங்கற சக்தி எனக்குக் கிடையாது” என்று கண் கலங்கிப் பேசியவனின் தலையைக் கோதி விட்டாள் மாமி. “நிகில் ரொம்பப் பெருமையா இருக்குப்பா. இந்தச் சின்ன வயசுல உனக்குத்தான் எத்தனை பக்குவம்? நீ நன்னா வருவே ராஜா! உன் புத்திசாலித்தனத்தை இருந்து பாக்க உங்கப்பாவுக்குக் குடுத்து வெக்கலியே” என்று கண் கலங்கினாள்.

அன்று சில தீர்மானங்கள் எடுத்தனர். முக்கியமாக, மங்கை இன்னும் சிவநேசன் உயிரோடு இருப்பதாக நம்புவதால் வேறு எந்தச் சடங்குகளும் செய்ய வேண்டாம் என்றும், மேலும் அவளுக்கு ப்ரியாவும், நிகிலும் வேலைக்குப் போவது தெரிந்தால் மனமுடைந்து போவாள், அதோடு தானே ஒரு வேலைக்குச் செல்ல முன் வரலாம். இப்போதுள்ள அவளது உடல் நிலைக்கு அவள் அதிகம் அலட்டிக் கொள்ளக் கூடாது என்பதால் இந்த விஷயங்களை இத்தனை நாள் மறைத்தது போல இனியும் மறைக்க வேண்டியது தான் என்று முடிவு செய்தார்கள்.

வழக்கம் போல எல்லாம் நடை பெற்றது. ஆனால் சாயங்கால வேளைகளில் ப்ரியாவும் நிகிலும் களைப்பாக வருவதைப் பார்த்து ஒரு நாள் “ஏன் இப்படி நாள் பூராக் கஷ்டப்பட்டு வேலை செஞ்சிட்டு வரவங்க மாதிரி முகத்தைச் சீரியசா வெச்சிக்கிட்டு வரீங்க? முன்ன மாதிரிக் கலகலப்பாப் பேச மாட்டேங்கறீங்க? ஏன் ஏதாவது பிரச்சனையா? பணம் இல்லையா? இல்லை, என்னோட வைத்திய செலவுக்காக எங்காவது கடன் வாங்கிட்டீங்களா? அதை அடைக்க முடியாமே திணர்றீங்களா? ஏன் எங்கிட்ட எதுவுமே பேச மாட்டேங்கறீங்க?” என்று கேட்டு விட்டாள் மங்கை.

அன்றிலிருந்து ப்ரியா, நிகில் இருவரும் மிகவும் கலப்பாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள். நாள் முழுவதும் மெக்கானிக் ஷெட்டில் உழைத்து விட்டு சாயங்காலம், மற்ற ஃப்ரெண்ட்ஸோடு விளையாடப் போவது நிகிலால் முடியவேயில்லை. உடலெல்லாம் வலித்தது. கைகள் காய்த்துப் போயின. அதனால் அவன் சற்று நேரம் வெளியில் விளையாடப் போகிறேன் என்று சொல்லி கோவிலில் போய் உட்கார்ந்து விட்டுத் திரும்பி வந்து, படிக்கிறேன் என்று அம்மாவிடம் சொல்லி விட்டு ரூமில் போய்ப் படுத்துக் கொள்வான். உடம்பு வலியால் துடிக்கும் என்றால் மன வேதனை ஒரு பக்கம் அழுத்தும்.

ப்ரியாவின் நிலையும் கிட்டத்தட்ட இது தான். அந்த அம்மாள் கொடுக்கும் எல்லா வேலையையும் முடித்து விட்டு வந்து எப்போதடா உடம்பைச் சாய்ப்போம் என்று இருக்கும் அவளுக்கு. அவளும் படிப்பைக் காரணம் காட்டி மற்றொரு ரூமில் படுத்துக் கொள்வாள். சந்தோஷமாகக் காலேஜ் போய் வந்து கவலையில்லாமல் திரிந்த நாட்கள் கண்களில் ஆடும். எதையும் நினைக்கக் கூடத் தெம்பில்லாமல் கண்களைத் தூக்கம் அழுத்தும்.

மாமிக்கு இது தெரியும். “எப்படி இருந்த குடும்பம் இப்படி ஆயிடுத்து. சே! எந்த நேரத்துல நான் இந்த ஆத்துல கால் எடுத்து வெச்சேனோ தெரியலை, என் கிரகம் இவாளையும் பிடிச்சு ஆட்டறதே? எப்படி இருந்த குடும்பம்? என்னைத் தள்ளி நில்லுனு ஒரு வார்த்தை யாரு வாயிலேர்ந்தும் வரலையே. இந்தாத்துக்காராளுக்குத்தான் எவ்வளவு நல்ல மனசு. இந்தத் தெய்வமும் நல்லவாளைத்தானே சோதிக்கறது. ஏன் இப்படி? ஒரு வேளை முன்னாடி இந்தப் பக்கத்தாத்து மாமி சொன்னாப்ல இந்த வீடு ராசியில்லாத வீடோ? சேச்சே! வீடு என்ன செய்யும்? எல்லாம் அவாவா கர்ம பலன், தலை விதி” என்று நொந்து கொண்டு மாமி பாட்டுக்கு வேலை செய்து கொண்டிருந்தாள்.

நாட்கள் ஓடின.

ப்ரியாவும் நிகிலும் வேலைக்குப் போகத் தொடங்கி மாதங்கள் நான்கு முடிந்து விட்டன. அவர்கள் கொண்டு வரும் பணத்தில் தான் இப்போது அரிசி,பருப்பு,காய் வாங்கிச் சமாளிக்கிறாள் மாமி. கூடவே மாமியின் வருமானமும். ஒரு மாதிரி வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. மங்கை இன்னும் சிவநேசன் உயிரோடு இருக்கிறான் என்றே நம்பினாள். மற்றவர்களும் ஒன்றும் சொல்வதில்லை. காலம் உண்மையை உணர்த்தும் என்று விட்டு விட்டார்கள். நித்திலாவின் பேச்சும், சிரிப்பும் தான் அந்த வீட்டைக் கலகலப்பாக்கியது.

இந்த நிலையில் தான் ஒரு நாள் ப்ரியா மதிய நேரம் அலுவலகத்திலிருந்து அரக்கப்பரக்க ஓடி வந்தாள் அந்தச் செய்தியோடு.

குறிப்பு: குங்குமச்சிமிழ் இதழில் தொடராக வெளி வந்தது)

 

படத்திற்கு நன்றி:http://deaddictioncentres.in/news/women-drug-abuse-india-specific/attachment/indian-woman-smiling

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *