Featuredஇலக்கியம்கட்டுரைகள்பத்திகள்

சிதைக்கப்பட்ட நகரம் (பாகம்-2)

ஷைலஜா

உலக சரித்திரத்திலேயே அதிகமாக ஒரு சாம்ராஜ்ஜியத்தின் தோற்றத்திற்குப் பின்னால் ஒருவரோ அல்லது பலரோ அவர்களுடைய ஆசைகள் அல்லது பெயர் புகழுக்காக இருந்திருப்பார்கள். ஆனால் விஜய நகர சாம்ராஜ்ஜியத்தின் உதயம் அது போல இல்லாமல் ஒரு தர்மத்தின் பாதுகாப்பிற்காகச் சம்ஸ்க்ருதிக்காக (பண்பாட்டிற்காக) உருவானது என்று தேசாய் ஸ்ரீனிவாச ரித்தி மற்றும் பாராகோபால் ராவ் ஆகியோர் மேற்கண்டவாறு கர்னாடக சரித்திரம் என்கிற நூலில் எழுதி உள்ளனர்

14ம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டது. ஒரு வரலாற்றுச் சிறப்புடைய இந்தச் சம்பவம் இந்தியத் தேச வரலாற்றுக்கே சிறப்புச் சேர்க்கும் சம்பவம் எனலாம்.

கிபி 1294-ம் ஆண்டு; ஸியோனா/ ஆட்சிப்பகுதிக்குள் அலாவுதீன் கில்ஜீ ஊடுருவி வந்தவுடனேயே நர்மதைக்குத் தெற்கில் உள்ள பகுதிகள் அனைத்தும் ஆக்கிரமிப்பாளர்களின் வெறியாட்டத்தில் நடுக்கம் கண்டது. விக்கிரகங்கள் சிதைப்பு நடவடிக்கையில் பெரும் கவலை கொண்டது. மிகவும் குறுகிய முப்பது ஆண்டு காலத்தில் தேவகிரியில் தொடங்கி ராமேஸ்வரம் வரையிலான தென்னிந்தியத் தீபகற்பப் பகுதி முழுவதும் அந்நியர்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. அன்று தென்னிந்தியக் கலாசாரத்தையும் ஹிந்து தர்மத்தையும் பாதுகாத்ததில் விஜயநகர சாம்ராஜ்ஜியம் பெரும்பங்கு வகித்திருக்கிறது.

அவ்வப்போது நமக்குள் சிறு பூசல்கள் இருப்பினும் ஹிந்து மற்றும் ஜைனர்களின் சாம்ராஜ்யங்கள் அந்தக்காலத்தில் அமைதியாகவே இயங்கின.

ஆனால் 14ம் நூற்றாண்டில் தொடக்கத்தில் எற்பட்ட முகலாயர்களின் படையெடுப்பு முற்றிலும் புதிதான அரசியல் நிகழ்வாக அமைந்தது.

எதிர்ப்படுகிற எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போகிற பனிப்பாறைச் சரிவு போல, சுனாமி போல அது நிகழ்ந்தது. அந்த முதல் ஆக்கிரமிப்பு சற்றும் எதிர்பாராததாக இருந்தது. உள்ளூர் ஆட்சியாளர்களும் பொதுமக்களும் நாசகாரர்களுக்கு அடிபணிய வேண்டி வந்தது.

மக்களோடு மன்னர்களும் புனி்தமானவை என்று பூஜிக்கப்பட்டவைகள் சிதைபடுவதைக் கண்டு மௌனமாகவே இருக்க நேர்ந்தது.

தொடக்கத்திலேற்பட்ட அதிர்ச்சி சற்று நீங்கியதும் அவர்களுக்கு வடக்கிருந்து வந்த அக்கிரமக்காரர்களுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று எண்ணம் எழுந்தது. அதற்கு தென்னிந்தியப்பகுதியின் எல்லா அரசியல் சக்திகளும் சேர்ந்து ஒன்றுகூடிப் போராட வேண்டும் எனத் தோன்றவும் அதன் விளைவாய் உருவானது தான் விஜயநகர சாம்ராஜ்ஜியம்.

விஜயநகர சாம்ராஜியம் மட்டும் இல்லாதிருந்தால், ஹிந்து தர்மம் தென்பாரதத்தில் ஒரு மூலையில் தள்ளப்பட்டிருக்கும். வெறும் நிழல், மாயை என்ற கேலிப்பொருளாகி இருக்கும் என்கிறார் டாக்டர் பிசி தேசாய்.

இஸ்லாமியர்கள் ஹம்பி அருகே உள்ள கம்ப்ளி என்ற ஊரைத் தாக்கியபோது அங்கிருந்த ஆசிரியர்கள், விவசாயிகள், துணி வெளுப்பவர்கள், ஆடு மேய்ப்பவர்கள் அனைவரும் தொழிற்கருவிகளை எடுத்துக்கொண்டு திக்குத்தெரியாமல் ஓடினர் என்பதை பாஞ்சால கங்கா என்பவர் எழுதி உள்ள “குமார ராம சாங்கித்ய” எனும் நூல் தெரிவிக்கிறது.

நான்கு வம்சாவளியினர் ஹம்பியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். கிபி 1336 முதல் கிபி 1485 வரை சங்கமா வம்சாவளியில் வந்த ஹரிஹராயா, புக்க ராயா வம்சாவளியினர் விருபாஷா ராயா வரை ஆட்சி செய்து ஹம்பியில் மிகப்பெரிய திறந்தவெளிச் சிற்பக்கூடத்தை நிறுவினர். தொடர்ந்து சலுவா வம்சத்தினர் துளுவ வம்சத்தினர் என 1572 முதல் 1586 வரை ஆண்டனர்.

14ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிபி 1380ல் சிருங்கேரி சாரதா மடத்தில் ஸ்ரீவித்யாரண்யர் 12வது ஆச்சாரியராகப் பொறுப்பேற்றார். ஆறு வருடங்களே அலங்கரித்தாலும் அவர் சாதனை அதிகம். இவர்தான் சிருங்கேரியிலும் ஹம்பியிலும் கோயில்கள் எழுப்பக் காரணமாய் இருந்தார். வித்யாரண்யரின் கனவில் சரஸ்வதி பிரத்யட்சமானபோது அவர் அன்னையிடம், “அன்னையே எனக்கு ஒரு ஹிந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க விருப்பம்” என விண்ணப்பித்தார்.

“வித்யாரண்யரே! இப்போது வேண்டாம், அடுத்த ஜன்மத்தில் பார்த்துக் கொள்ளலாம்” என்றார் அன்னை. ஆனாலும் வித்யாரண்யர் மறுமுறை கேட்கவும் “அப்படியே ஆகட்டும்” என ஆசீர்வதித்து மறைந்தாராம் சரஸ்வதி அன்னையாரும்.

தன்னிடம் ஒரு நாள் ஆசி வேண்டி வந்த ஹரிஹரர் புக்கர் இருவரிடமும் இந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்கும் பணியை ஒப்படைத்தார்.

‘நான் மடத்தில் இருந்து கொண்டு நல்லநேரம் வரும்போது சங்கு ஊதுவேன். அப்போது வேலையை ஆரம்பியுங்கள்” என்று சொல்லி இருந்தார்.

வேலையாட்கள் நல்ல நேரத்திற்குக் காத்திருந்தபோது அந்த வழி வந்த சில பிச்சைக்காரர்கள் தங்கள் வசமி்ருந்த சங்கை எடுத்து ஊத வித்யாரண்யர்தான் ஊதுகிறார் எனத் தவறாக நினைத்து வேலையைத்தொடங்கி விட்டனர்.

பிறகுதான் கண்டு பிடிக்கப்பட்டது, புனிதமில்லாத நேரத்தில் துவங்கப்பட்டதால் இந்தச் சாம்ராஜ்யம் நூறு வருடம் மட்டுமே நீடிக்குமென வித்யாரண்யர் சொன்னது உண்மையானது என்று,

ஹரிஹரர், புக்கர் இருவரும் சேர்ந்து விஜயநகரத்தை ஆண்டனர். சென்றவிடமெங்கும் வெற்றி மேல் வெற்றி கண்டனர். வித்யாரண்யரின் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட வித்யாநகரம்தான் தொடர்ந்த வெற்றிகளின் காரணமாய் விஜயநகரம் எனறானது.

துளுவ வம்சத்தில் வந்த ஸ்ரீகிருஷ்ண தேவராயர் (1509-1529) எல்லாரையும் விடச் சீ்ரும் சிறப்புமாய் ஆண்டார். இவரிடம் ஏழு லட்சத்து முப்பதாயிரம் காலாட்படைகளும், ஐநூற்று ஐம்பது யானைப்படைகளும், மிகப்பெரிய குதிரைப்படைகளும் இருந்ததால்தான் இவரால் அநேகமாக எல்லா இஸ்லாமிய அரசர்களையும் முறியடிக்க முடிந்தது. சிற்பக்கலைக்கு மட்டுமின்றி இலக்கியத்திற்கும் மிகப்பெரிய தொண்டாற்றியவர் கிருஷ்ண தேவராயர். இவரது இலக்கிய ஆர்வத்தை மற்றும் ராஜ பரிபாலனையை, அடுத்து வரும் பகுதிகளில் காண்போம்..

(தொடரும்)

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க