நூ த லோகசுந்தர முதலி, திருமயிலை

வரலாற்றாளர் கருத்துப்படி குறைந்தது 1300 – 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தவைகளாகிய தேவாரப் பாடல்கள் போற்றும் சிவனுறையும் திருக்கோயில்கள் (பாடல் பெற்றவை) 270 ம் மேல் உள்ளன என்பதை நன்கே அறிவோம் அக்காலத்தே அப்பாடல்களால் விதந்து போற்றப் படாமலும் ஆனால் சிவனுறையும் தலங்கள் என குறிக்கும் பேறு மட்டும் பெற்றவை வைப்புத் தலங்கள் எனக் காட்டப்படுபவை ஓர் 300 க்கும் மேல் உள்ளதை சிலரே அறிவர்.

பாடல் பெற்றவை எனும் வகையில் காணும் 275 ல் இந்நாளைய சென்னை மாநகரத்தின் உள்ளும் மிக அணித்தும் காண்பவை ஆறு தலங்கள்

திரு மயிலை – நகர் நடுவண் – கடற்கரை (வாயிலார் நாயனார் பிறந்த தலம் ஆகும் )
திரு வான்மியூர் – நகர் தெற்கு – கடற்கரை
திருவொற்றியூர் – நகர் வடக்கு – கடற்கரை (சுந்தரமுர்த்தி நாயனார் சங்கிலி யை மண ந்த தலம்)
திருவலிதாயம் (பாடி) – நகர் மேற்கு-வட மேற்கு
திருமுல்லைவாயில் – நகர் மேற்கு-வட மேற்கு (மேலும் சில கி மீ)
திருவேற்காடு – நகர் மேற்கு (மூர்க்க நாயனார் பிறந்த தலம் ஆகும் )

இவற்றில் ஒன்றான திருஒற்றியூர் பழைமை மிக்க கற்றளியாகவே இன்றும் உள்ளது அதனில் வரலாறுகள் பல ஆவணப்படுத்தப்பட்ட கல்வெட்டுக்கள் நுற்றுக் கணக்கில் உள்ளன அவற்றில் ஒன்றில் அத்தலத்தில் உறையும் பெருமானார் படம்பக்கநாதர் எனும் பெயர் உடையவராக காட்டப்படுகின்றார்

படம்பக்கம் என்பது ஓர் கொட்டும் பறை அக்காலத்து இத்தலத்தில் பயன்கொண்ட ஓர் வகை பறை ஞானசம்பந்தர் 1360 ஆண்டுகள் முன் அத்தல இறைவனை வழிபடுங்கால் தான் கண்ட காட்சியை தேவாரத்தில் ஆவணப்படுத்தியுள்ளார்.

“படம்பக்கம் கொட்டும் கடல் ஒற்றியூர்” க்ஷேதிரக்கோவை – 2397

ஞானசம்பந்தருக்கு ஏறக்குறைய நூறு ஆண்டுகள் பின் வந்தவரான சுந்தரரும் தன் தேவாரத்தில் மீண்டும்

“படம்பக்கம் கொட்டும் கடல் ஒற்றியூரீர்”7.2.6 பரங்குன்றப் பதிகம்)
எனப்பாடிச் சென்றுள்ளார்

தேவாரப் பாடல்கள் போற்றப்பட்ட சோழமாமன்னர்கள் காலத்தே கோயில்களும் நன்கு பராமரிக்கப்பட்டன அக்காலத்தே ஞானசம்பந்தரின் சுந்தரரின் வாக்கிற்கு இணங்க இறைவன் பெயரையும் படம்பக்க நாதர் என்றே வைத்து வழங்கினர். எனவே கல்வெட்டிலும் அவ்வாறே காண்கின்றது

பதிகப் பாடல் குறிக்கும் குறிப்புகளாலேயே பெயர் வைக்கும் மரபு கைக்கொண்டாமை பரவி இருப்பதைக் காணலாம்

மேற்குறித்த மற்றொரு
(வட) திருமுல்லைவாயில் தலத்தின் சுந்தரர் பதிகப் பாடலில்
“கூடிய இலயம் சதி பிழையாமைக் கொடியிடை உமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே ” 7.69.2 தலப் பதிகப் பாடலில் வந்த விளிகொண்டே முல்லைவாயில் தலத்து கொடியிடை நாயகி என்றும் “பாலிவடகரை முல்லைவாயிலாய் மாசிலாமணியே ” 7.69.5 எனவருவதால் அத்தனுக்கு மாசிலாமணி ஈசுவரர் எனவும்

மயிலையின் ஞானசம்பந்தர் தேவாரம் கபாலீச்சரம் என்றதால் அத்தல ஈஸ்வரன் கபாலீஸ்வரர் என வழங்குவதும் இவ்வகைத்தே

“கூடிய இலயம் சதி பிழையாமை” என ஆடலின் தரத்தைக் குறித்துள்ளமைக் காண்க இன்றும்

சதிர் ஆடுதல் என்றே “நாட்டியம்” ஆடுவதை தமிழ்மொழிச் சொல்லை பயன்கொள்ள நினைப்பவர் எழுதுவார்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படம் பக்க நாதர்

  1. சுருக்கமாக இருந்தாலும் மிக அருமையான
    ஆய்வுக்கட்டுரை; லோகசுந்தரம் ஐயா
    அவர்கள் மேலும் இதுபோன்ற கட்டுரைகளை
    வழங்க வேண்டும். திருமுறைகளை
    வாசிப்பவருக்கும் மிகவும் பயனளிக்கும்

    தேவ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *