மகளிர் தினத்தில் மனம் திறந்து…

0

சக்தி சக்திதாசன், இலண்டன்

sakthidasanவருடத்தில் ஒவ்வொரு தினமாய் வந்து போகிறது. தந்தையர் தினம், அன்னையர் தினம், நண்பர்கள் தினம், காதலர் தினம் என்னும் வரிசையில் மகளிர் தினமும் வந்து போகிறது.

பெண்களின் பெருமைகளைப் பறைசாற்றும் கவிதைகள், கட்டுரைகள் எனப் பல்வேறு வகையிலான படைப்புகள் பத்திரிகைகள், சஞ்சிகைகள், இணைய சஞ்சிகைகள், இணையத்தளங்கள் என்பனவற்றை நிறைத்துப் போகின்றன.

ஆனால் மனத்தளவில் உண்மையாக இந்த மகளிர் தினத்தின் முக்கியத்துவத்தை எண்ணிப் பார்ப்போர் எத்தனை பேர்? இவர்களில் ஆண்கள் அதுவும் திருமணமாகி மனைவி, குழந்தைகள் என இல்லற வாழ்வின் தாத்பரியங்களுக்குள் தம்மை இணைத்துக்கொண்ட எத்தனை ஆண்கள் இதன் உண்மையான அர்த்தத்தைத் தம்முள் உள்வாங்கியுள்ளனர்? இது எம் அனைவரினதும் மனங்களிலேயும் ஊசலாட வேண்டிய ஒரு கேள்வி.

இக்கேள்வியை உங்களுடன் பகிரங்கமாகப் பகிர்ந்துகொள்வதால் நான் இக்கேள்விகளுக்கு அப்பாற்பட்டவன் என்பதல்ல கருத்து. என்னையும் உள்ளடக்கித்தான் நான் இக்கேள்விகளை, உள்விசாரணைகளை எழுப்பிவிட்டிருக்கிறேன்.

எம் பாட்டன், முப்பாட்டன் காலத்துப் பெண்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளும், தற்காலப் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளும் வித்தியாசமானவை. இந்த வித்தியாசங்களின் காரணம் கால மாற்றம் என்பது அப்பட்டமான ஓர் உண்மை.

பால்ய விவாகம், சுய வளர்ச்சித் தடை, சமுதாய வரம்புகள் என்னும் போர்வையில் முன்னேற்ற‌த்தைத் தடுக்கும் தடைக் கற்கள் என்பன அக்காலப் பெண்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளில் முக்கியமானவை.

ஆனால் இப்போது காலம் மாறியுள்ள‌து. சமூகத்தின் சில பகுதிகளில் அக்காலப் பிரச்சனைகள் சில எச்சங்களாக ஒட்டிக்கொண்டிருந்தாலும், பழைய பிரச்சினைகளில் பல, இப்போதைய பெண்களை எதிர்நோக்குகின்றன என்று சொல்ல முடியாது.

இன்றைய சமுதாய, பொருளாதார வளர்ச்சிகளில் பெண்கள் எடுக்கும் பங்கின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. உலகின் பல நாடுகளில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்களின் முன்னேற்ற‌த்துக்கு உதவும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.

இச்சட்டங்களில் பல, வெறும் சட்டங்களாகவே இருக்கின்றன என்னும் முணுமுணுப்பு என் காதுகளில் விழாமலில்லை. அதை இப்போது ஒருபுறம் தள்ளி வைப்போம்.

வாழ்வில் வசதிகளைப் பெருக்கிக்கொள்ள, தமது வாழ்வின் தராதரத்தைக் கூட்டிக்கொள்ள ஆண்களோடு சேர்ந்து, பெண்களும் வெளியே சென்று பணிபுரிவது அவசியமாகிறது.

படித்த பெண்களை மணப்பதையே அதிகமாக ஆண்கள் இப்போது விரும்புகிறார்கள். இதன் காரணத்தினாலும் பெண்களின் தன்னம்பிக்கையின் வளர்ச்சி அதிகரித்ததாலும் பெண்கள் கல்வியில் தம்மை முன்னேற்றிக்கொள்வதை முக்கியமாகக் கொள்கிறார்கள்.

நான் மேலே குறிப்பிட்ட நிலை, பொதுவாகத் தற்போதைய காலகட்டத்தில் எமது பின்புல நிலைமையை எடுத்துக் காட்டுகிறது.

ஆனால் புலம்பெயர் சமுதாயத்திலே, நான் வாழும் இந்த இலண்டன் சூழலில், இன்றைய காலக்கட்டப் பெண்களின் வாழ்வில் அதுவும் இளம் பெண்களின் வாழ்வில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை வித்தியாசமானது.

இங்கிலாந்திலே அதுவும் குறிப்பாக பதின்ம வயதுத் தாய்மாரின் (Teenage mothers) எண்ணிக்கை, மிகவும் அதிக அளவில் இருக்கிறது.

2008ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணிப்பில் 18 வயதிற்குற்பட்ட பெண்களுள், 41,325 பேர்கள் தாயாகியிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையோர் அவர்களைத் தாய்மைக்குள் தள்ளிவிட்ட ஆண்களின் துணையின்றி, தனியாகத் தமது குழந்தைகளை வளர்க்க வேண்டிய நிலைமையை எட்டுகிறார்கள்.

இத்தகைய ம‌களிர் தினங்கள் போன்ற தினங்களிலே பெண்களின் வாழ்வில் ஏற்படும் இத்தகைய தாக்கங்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது. இது நடப்பது அநேகமாக வெள்ளை, கறுப்பு இனத்தவரிடையே தானே, எமது தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் அது அதிகம் நடப்பதில்லையே எனப் பாராமுகமாக இருப்பது நம் எதிர்காலச் சந்ததியினருக்கு நாமிழைக்கும் அநீதியாகும்.

சுமார் பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் அசாதாரணமாக இருந்த வேற்று இனக் கலப்பு மணம், இப்போது சாதாரணமாகி விட்டது போல, இத்தகைய பதின்ம வயதுத் தனிமைத் தாய்மை நிலை கூட எதிர்காலத்தில் எமது சமூகங்களுக்கிடையிலும் தலையெடுக்கக் கூடிய அபாயம் இருக்கிறது.

இப்படி ஒரு நிலை ஏற்படுவதற்கு பெண்கள் மட்டும்தான் காரணமா?

இல்லை, ஒரு பெண்ணைத் தாய்மை எனும் நிலைமைக்குத் தள்ளி விட்டு தாம் தமது பொறுப்புகளுக்கு முகம் கொடுக்காது ஓடி மறையும் ஆண்கள், பெண்களை விட அதிகமாக இதைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள்.

பதின்ம வயதுக் காதல், இங்கிலாந்து போன்ற தேசங்களிலே மிகவும் சகஜமான ஒரு செயலாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் இக்காதல் கண்ணியமான வரைமுறையைத் தாண்டும் போதுதான் அங்கே விபரீதங்கள் விளைய ஆரம்பிக்கின்றன.

இதற்கான காரணங்களை ஆராயப் பல நிறுவனங்கள் முயற்சியில் ஈடுபட்டு, பல்வேறு முடிவுகளை எட்டி, அதற்கான தமது நிவாரண ஆலோசனைகளை முன்வைக்கின்ற நிலைமையைக் காணக் கூடியதாக இருக்கின்றது.

ஆனால் உண்மையான நிவாரணத்தின் ஆரம்பம், எங்கே ஆரம்பிக்கப்பட வேண்டும்?

அவரவர் குடும்பங்களிலிருந்தேதான். ஆம் இதுதான் எமது நாடுகளில் குடும்பம் ஒரு கோவில் என்கிறார்கள். ஒரு மனிதனது ஆரம்ப காலப் பண்பாட்டு வழிமுறைகள்தான் வாழ்க்கை முழுவதும் அவனுக்குத் துணை வருகிறது. காதலின், கண்ணியத்தின் முக்கிய அம்சம் கட்டுப்பாடு. அந்தக் கட்டுப்பாடு, ஆண் ஒருவன், பெண்ணுக்குக் கொடுக்கும் மரியாதையிலிருந்தே விளைகிறது.

பெண்களை மதிக்கும் தன்மையை ஆண் குழந்தை, தன் தந்தையிடமிருந்தே பெறுகிறது. நாம் ஒவ்வொருவரும் எமது வாழ்க்கைத் துணைவியருக்கு கொடுக்கும் மதிப்பும் மரியாதையுமே எமது குழந்தைகள் அவர்களைப் பார்க்கும் கோணத்தை வரையறுக்கிறது.

இன்றைய அவசர உலகத்திலே எம் பெண்கள் சாதித்திருக்கும் பல சாதனைகள் போற்றப்பட வேண்டியவை. ஒரு பெண் தன்னை வளர்த்துக்கொள்ளும் காலம், திருமணமாவதற்கு முன், திருமணம் முடிந்ததும் அவளின் சுய வளர்ச்சி தடைப்பட்டு விடும் என்பதெல்லாம் தள்ளி வைக்கப்பட வேண்டிய வாதம். ஒவ்வொரு கணவனும் தன் மனைவியின் முன்னேற்றத்துக்குத் தமது பரிபூரண ஆதரவை நல்கி, குடும்பத்தின், இல்லப் பணிகளின் சுமையைப் பாதியாகச் சுமக்க முன்வந்தால் பெண் தன்னை வளர்த்துக்கொள்ள நிச்சயம் அவகாசம் கிடைக்கும்.

ஒவ்வொரு தாய், தந்தையரும் தாய்மையின் மகத்துவத்தை, தந்தையின் கடமையைத் தமது குழந்தைகளுக்கு ஊட்டி வளர்க்க வேண்டும் அப்போதுதான் தாய்மை என்னும் அந்தப் புனிதமான அந்தஸ்தை, அந்தப் புனிதத்தின் மகத்துவத்தைப் புரிந்துகொள்ளும் முதிர்ச்சியை அடைவதன் முன்னம், அப்பொறுப்பை அடைந்துவிடும் நிலையிலிருந்து எமது எதிர்காலச் சந்த‌தியினரைப் பாதுகாக்கலாம்.

புலம்பெயர் நாட்டில் வாழும் தமிழர் சமுதாயம் மிகவும் முக்கியமான ஒரு காலகட்டத்தில் நிற்கிறது. எமது தாய்நாடுகளின் கலாச்சார விழுமியங்களை நுகர்ந்து வளர்ந்து, பின்னர் புலம்பெயர் சமுதாயங்களில் அவற்றின் தாத்பரியத்தைப் புரிந்துகொள்ளும் நிலையிலிருக்கும் எமது சந்ததியினருக்கு அத்தகைய வசதி இருக்கவில்லை. அவர்கள் அறிந்தது, அறியப் போவது புலம்பெயர் சமுதாய வாழ்க்கை மட்டுமே. நாம் வாழும் நாடுகளில் உள்ள‌ பெரும்பான்மையினரின் கலாச்சாரங்களையே அவர்கள் தமது கலாச்சாரங்களாகப் பார்க்கத் தலைப்படுவது இயற்கை.

இங்கேதாம் எமது மகளிரின் மகத்துவம் தனித்து நிற்க வேண்டிய தேவையிருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்தின் தலைவியும் அறிவில் தம்மை உயர்த்திக்கொண்டால்தான் அவர்கள் வலிமை மிக்க எமது காலாச்சாரத்தைப் புரிந்துகொண்டு அதனைச் சரியான விகிதத்தில் தாம் வாழும் நாட்டுக் கலாச்சாரங்களுடன் பிணைத்து, தமக்கு ஒரு வெற்றிகரமான வாழ்வினை அமைத்துக்கொள்ளும் எதிர்காலச் சந்ததியை வளர்க்கலாம்..

இம்மகளிர் தினத்தில் குடும்பம் எனும் கோவிலில் ஓர் அன்னையாக மிளிர்ந்துகொண்டு, அதே சமயம் தமது குடும்பங்களின் நல்வாழ்விற்காக உழைக்கும் உன்னதமான் மகளிருக்கும், எம்மத்தியிலே இன்று அற்புத படைப்புகளைத் தந்து நிற்கும் இனிய பெண் படைப்பாளிகளுக்கும், தமது பெற்றோரைப் பராமரித்து நிற்கும் இனிய சகோதரிகளுக்கும், பாரெங்கும் புகழ் படைக்கும் அருமையான தமிழ் மகளிருக்கும் சிரந்தாழ்த்தி எனது மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *