நிலவொளியில் ஒரு குளியல் – 19

8

ஸ்ரீஜா வெங்கடேஷ்

Srija venkateshசென்ற சில வாரங்களைப் போலில்லாமல் இந்த வாரம் சற்றே இலகுவான விஷயத்தைப் பற்றிப் பேசலாம் என்றிருக்கிறேன். வாசகர் மௌலி கேட்டுக்கொண்டது போல பெண்ணுரிமை பற்றியும் கடமைகள் பற்றியும் வேறொரு சந்தர்ப்பத்தில் கண்டிப்பாகப் பேசுவேன். அது மிகவும் கனமான தலைப்பு. நிறைய யோசித்தே ஒவ்வொரு வார்த்தையையும் எழுத வேண்டும் எனவே சற்றுக் கால தாமதம் ஆகும்.

நேற்று மயிலாப்பூர் மார்க்கெட் போயிருந்தேன். எங்கே பார்த்தாலும் மாவடுகள், மோர் மிளகாய் போட ஏற்ற மிளகாய்கள், மணத்தக்காளிகள் என்று மார்க்கெட் முழுவதும் ஊறுகாய், வடாம், வற்றல் போடுவதற்குரிய பருவம் வந்துவிட்டது என்பதைச் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன. அவற்றையெல்லாம் பார்த்ததும் என் மனம் விர்ரென்று பின்னோக்கிப் பயணித்து, என்னுடைய பள்ளிப் பருவ நாட்களில் வந்து நின்றது.

மாசி மாதம் வந்தாலே எங்கள் வீடு அல்லோலகல்லோலப்படும். ஏனென்றால் அதுதான் பருவம், வடாம் – வற்றல்கள் போட. நாங்கள் இருந்த கிராமம் பற்றி  உங்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கும். இப்போது கூட வடாம் வகைகள் விலைக்குக் கிடைப்பது அரிது என்றால், முப்பது வருடங்களுக்கு முன்னால் எப்படி இருந்திருக்கும் என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன். வடாம், வற்றல் வகைகள் கடைகளில் விற்கப்படும் பொருளாக ஆகும் என்பதே தெரியாத காலகட்டம், அது. எனவே வருடம் முழுவதற்குமான தேவைக்கு மாசி, பங்குனி மாதங்களில் போட்டு வைத்தவைதான் கை கொடுக்கும்.

அதுவும் மழைக் காலங்களில் காய்கறி அதிகம் கிடைக்காத தருணத்தில் கொத்தவரங்காய் வற்றலையோ, வெண்டைக்காய் வற்றலையோ , கூழ் வற்றலோடு சேர்த்துப் பொறித்து வைத்துச் சுடச்சுட மிளகு ரசத்தோடு சாப்பிட்டால்… ஆஹா! அந்த மழை ஈரத்திற்கும் மிளகு காரத்திற்கும் …ம்ம்ம்! அந்த ருசிக்கு ஈடாக எதுவும் கிடையாது. வீட்டு உபயோகத்திற்கு மட்டுமல்லாமல் நகரங்களில் வாழும் சில உறவினர்களுக்கும் கொடுப்பாள் என் அம்மா. அதனால் மற்ற வீடுகளை விட, கூடுதலாகவே எங்கள் வீட்டில் செய்வார்கள்.

வடாம்வற்றல் போடுவதற்கு ஒரு வாரம் முன்னமிருந்தே அதற்கான பொருட்கள் சேகரிப்பு, தயாரிப்பு தொடங்கிவிடும். நல்ல அரிசி ரேஷனில் கிடைத்தால் அதையே கூட உபயோகப்படுத்திக்கொள்வார்கள். முதலில் கூழ் வற்றல்தான் செய்வார்கள், பிறகுதான் மோர்மிளகாய் முதலிய காய்கறி வற்றல்கள். வற்றல் போடும் நாளில் எங்கள் வீட்டில் பாட்டியும் அம்மாவும் ஆகப் பரபரப்பாய் இருப்பார்கள். அதிகாலையிலேயே எழுந்து கூழ் காய்ச்சி விடுவார்கள். அப்போதுதான் வெயிலுக்கு முன் மாடியில் சென்று போட முடியும்.

மொட்டை மாடியைத் தட்டோட்டி என்பார்கள். ஓட்டு வீட்டில் முன் பகுதியில் மாத்திரமே கூரையைச் சம தளமாக அமைத்திருப்பார்கள். அந்தச் சிறிய சமதளம் தான் எங்களுக்கு பால்கனி, மொட்டை மாடி எல்லாம். அங்கே தான் வற்றல் வடாமும் போடுவார்கள். 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புத் தேர்வுகள் நடைபெறும் சமயம் என்பதால் மதியம் மட்டுமே பள்ளி இயங்கும். அதனால் காவலுக்கு நானோ, என் அண்ணனோ தான் உட்கார்ந்திருப்போம் (காக்காய் விரட்ட). இது ஒரு நாள், இரண்டு நாள் சமாசாரமல்ல. ஏறத்தாழ பத்து நாட்கள் நடக்கும் இந்தத் திருவிழா.

காலை ஏழு மணிக்குள் என் அம்மாவும் பாட்டியும் சென்று தட்டோட்டியில் நல்ல வெள்ளை வேட்டியில் வற்றல்களைப் போட்டு விட்டு வந்து விடுவார்கள். பிறகு எங்களுக்குத்தான் டூட்டி. காலை ஏழு மணிக்கு வந்தோமானால் 12 மணி வாக்கில் தான் எங்களைக் கீழே இறங்க அனுமதிப்பார்கள். சாப்பாடு, தண்ணீர் எல்லாம் மேலே வந்து விடும். பாடப் புத்தகங்களையும் கொடுத்து “முழுப் பரீட்சை வருது, சும்மா உக்காராமே படி” என்ற கட்டளை வேறு. என்னதான் நிழல் இருந்தாலும் வெயிலின் கொடுமை அபாரமாக இருக்கும். இப்போது இதை எழுதத் தோன்றுகிறதே தவிர, அப்போது வெயில் கடுமை உறைத்ததாக ஞாபகமில்லை.

12 மணிக்கு மேல் காகங்கள் வராது என்பதால் நாங்கள் கீழே இறங்கி, குளித்து உடை மாற்றி, பள்ளிக்குத் தயராவோம். நாங்கள் இல்லாத சமயம் பாட்டியும் அம்மாவும் மாறி மாறிக் காவல் இருப்பார்கள். “ஏன் அப்பா மட்டும் காவலுக்கு வர மாட்டேங்கிறார்?” என்று பாட்டியோடும் அம்மாவோடும் சண்டை போட்டது இன்னும் பசுமையாக இருக்கிறது. அதற்கு அவர்கள் சொன்ன பதில், நினைவுக்கு வரமாட்டேனெங்கிறது. ஞாயிற்றுக்கிழமை என்றால் முழுப் பொறுப்பும் எங்களதுதான். மதியச் சாப்பாடு கூட தட்டோட்டிக்கே வந்து பாட்டி பரிமாறுவார்.

சொல்ல மறந்து விட்டேனே! எங்கள் ஊரில் காகங்கள் மட்டுமல்லாமல் குரங்குத் தொந்தரவும் உண்டு. வானரப் பட்டாளங்களிடமிருந்து வற்றல் வகைகளைக் காப்பாற்றுவது என்பது உண்மையிலேயே மிகவும் சிரமமான காரியம். எப்படித்தான் அவற்றுக்குத் தெரியுமோ? சரியாக வந்து விடும். ஒன்றிரண்டு வந்தால் பரவாயில்லை. சமாளித்து விடலாம். கம்பைக் காட்டினால் ஓடி விடும். கூட்டமாக வந்ததோ, நம் கதி அதோ கதி தான். நம்மையே ஈயென்று பயங்கரமாகப் பல்லைக் காட்டி மிரட்டும்.

ஒரு தடவை அந்தக் குரங்குக் கூட்டம் எங்கள் வீட்டின் மேல் படையெடுத்தது.

monkey attack

அன்று ஞாயிற்றுக் கிழமை. நானும் என் அண்ணனும் வற்றல்களுக்குக் காவலாக தட்டோட்டியில். கீழே அம்மாவும் பாட்டியும் சமையல் வேலையில் மும்முரமாக இருந்தனர். அப்பா வெளியூர் எங்கோ போயிருந்தார். நாங்கள் வழக்கம் போல புத்தகத்தைத் திறந்து வைத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டிருந்தோம். குரங்குகளை விரட்ட வைத்திருந்த கம்பால் சிலம்பம் பழகுகிறோம் பேர்வழி என்று அடித்துக்கொண்டிருந்தோம். பாட்டி வந்து சத்தம் போட்டுவிட்டு போனாள். சற்று நேரம் சும்மாயிருக்கும் போதுதான் கவனித்தோம். சுமார் 10 அல்லது 12 குரங்குகள் கூட்டமாக எங்கள் வீட்டுக்கு நாலைந்து வீடுகள் தள்ளி வந்துகொண்டிருந்தன.

நான் மிகவும் பயந்துவிட்டேன். என் அண்ணனுக்கும் பயம்தான். ஆனால் காண்பித்துக்கொள்ளவில்லை. “வரட்டும், இந்தக் கம்பால ஒரே அடி அடிச்சு வெரட்டிர்றேன் பாரு” என்று வீராப்பு பேசினான். நானும் அதை நிஜமென்று நம்பி, அவனுடைய வீரத்தைப் பார்க்க ஆவலாக இருந்தேன். ஆயிற்று, இன்னும் ஒரு வீடுதான் பாக்கி. அதைக் கடந்தால் எங்கள் வீடுதான். “பேசாம போய் அம்மாவையோ, பாட்டியையோ கூப்பிடலாம்டா, நெறைய வருது, நம்மளால சமாளிக்க முடியாது” என்று சொல்லிப் பார்த்தேன். என் அண்ணன் கேட்கவேயில்லை.

வந்ததையா குரங்குகள். எல்லாம் பெரியவையாக இருந்தன. அவற்றைக் கிட்டத்தில் பார்த்ததும் எங்களுக்கு இருந்த தைரியம் எல்லாம் போய்விட்டது. இருந்தாலும் என் அண்ணன் சமாளித்துக்கொண்டு உத்தேசமாக கம்பை ஒரு வீசு வீசினான். எங்கள் கெட்ட நேரம், அந்த வீச்சு தலைமைக் குரங்கின் மேல் பட்டுவிட்டது என்று நினைக்கிறேன். எல்லாக் குரங்குகளும் ஒரே நேரத்தில் உறுமி, பல்லைக் காண்பித்துக்கொண்டு எங்களை நெருங்க, கம்பைக் கீழே போட்டுவிட்டு எடுத்தோம் ஓட்டம். மும்மூன்றாக படிகளைத் தாண்டி ஓடினோம்.

குரங்குகளும் விட்டபாடில்லை. எங்களைத் தொடர்ந்து வீட்டுக்குள் வந்துவிட்டன. நாங்கள் போட்ட கூச்சலில் என்னவோ ஏதோவென்று ஓடி வந்த அம்மா, குரங்குகளைப் பார்த்ததும் சமயோஜிதமாக சமையலறைக் கதவை மூடி விட்டாள். அதற்கு மேல் போக வழியில்லாததால் அவை கூடத்திலேயே சுற்றிச் சுற்றி வந்தன. நாங்கள் எல்லோரும் வாசலுக்கு ஓடி விட்டோம். சில குரங்குகள் விட்டத்தைப் பிடித்துக்கொண்டு தொங்கின , சில குரங்குகள் ஈஸி சேரின் கைப்பிடியில் உட்கார்ந்து கொண்டு ஆடின. கூடத்தில் எங்கள் வீட்டில் ஆளுயரக் கண்ணாடி உண்டு. நல்ல பெல்ஜியம் கண்ணாடி என்று பாட்டி அடிக்கடி சொல்லி பெருமைப்பட்டுக்கொள்வாள்.

ஒரு குரங்கு, அந்தக் கண்ணாடியின் முன்னால் நின்று அதையே பார்த்து அழகு காட்டிக்கொண்டிருந்தது. உள்ளே இருப்பது மற்றொரு குரங்கு என்று நினைத்ததோ என்னவோ கண்ணாடியைப் பிடித்து உலுக்கி, பயங்கரமான சப்தம் எழுப்பியது. அதைக் கேட்டு மற்ற குரங்குகளும் கண்ணாடிக்கு வர, அவற்றுக்குள் சண்டை வேறு வந்துவிட்டது. வீடே மிருகக் காட்சி சாலை போல் ஆகிவிட்டது. எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

இதற்குள் அக்கம்பக்கத்தவர் கூடி விட்டனர். ஆளாளுக்கு அப்படிச் செய்தால் குரங்கை விரட்டலம் , இப்படிச் செய்தால் குரங்கை விரட்டலாம் என்ற அறிவுரைகள். அந்த நேரத்தில் எங்களால் எதுவுமே செய்ய முடியாத நிலை. கடைசியில் பக்கத்து வீட்டு கிருஷ்ண மூர்த்தி மாமா வந்து அவசர அவசரமாக ஒரு தீப்பந்தம் தயர் செய்து தைரியமாக அதை எடுத்துச் சென்று விரட்டினார். தீப்பந்ததைக் கண்டவுடன் அவை கொஞ்சம் ஒடுங்கி விட்டன. ஒரு வழியாக எல்லாவற்றையும் விரட்டி விட ஒரு மணி நேரம் ஆகி விட்டது. பிறகென்ன, அன்று செய்திருந்த வற்றல், வடகம் எல்லாம் வீணாகப் போய்விட்டது. அடுப்பை அணைக்காமல் சமையறைக் கதவை மட்டும் அடைத்ததால் குழம்பு வேறு கருகிவிட்டது. அன்று எங்களுக்கு கிடைத்த திட்டு, அடேயப்பா ஏழு ஜென்மங்களுக்கும் போதும்.

பீட்ஸா, பர்கர், இன்னும் வாயிலேயே நுழையாத தின்பண்டங்களையெல்லாம் காசைக் கொட்டி வாங்கிச் சாப்பிட்டு, உடம்பைக் கெடுத்துக்கொள்ளும் இந்தத் தலைமுறையினருக்கு, வற்றல், வடகம் போடுதல் போன்றவற்றின் நுட்பமான சந்தோஷம் தெரியாது. எல்லாம்தான் கடைகளில் கிடைக்கிறதே எதற்கு நாம் வீட்டில் செய்து கஷ்டப்பட வேண்டும் என்று வாதிடும் இவர்களுக்கு நம்மால் புரிய வைக்க முடியாது.

வற்றல், வடகங்கள் தயாரிக்கும் அளவுக்கு நேரமும் பொறுமையும் இருந்த நம் முந்தைய தலைமுறையினருக்கு என் வணக்கங்கள். நாமும் அவர்கள் காட்டிய வழியில் செல்லவேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டு நிலவொளியில் ஒரு குளியல்.

(மேலும் நனைவோம்….

===========================

படங்களுக்கு நன்றி: http://www.dinakaran.com | http://www.takemasti.com

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “நிலவொளியில் ஒரு குளியல் – 19

  1. Very funny madam. Today children prefer kurkure or lays or bingo. It is not all because of children. Even shops don’t sell items like murrukku,thattai,etc. Romba nalla soneenga. Good work. Happy women’s day.

  2. This is really good and interesting one. I have recollected my early days,particularly in village where we have our own house and we have also prepared ‘Vadam’ etc in the same manner. Now-a-days, we can not see like this and no one is ready to prepare and spend time.

    Thank you.

  3. Good recollection. But you didnt mention eating the semi-dried vathal in the evening – the taste of the same is unmatchable..

  4. In olden days people prepared Vadam using wood fuel stove. Now a days people are using Gas stove even though many people are not ready to prepare Vadam.
    The taste of the vadam depend on ingredient and way of preparation (amount of water addition, duration of cooking etc.) .
    As madam said, if we start our preparation early morning then only we can get good colour and taste.
    Some people prepare in previous day night and start putting vadam on white cloth on next day morning. This will not give good taste.
    Nice Article; Really enjoyed reading

  5. கட்டுரை மிகவும் நன்று. தற்போது இது போன்று யாரும் வடாம் செய்வதில்லை. தங்களது கட்டுரை எனது பள்ளிப் பருவத்தை நினைவுபடுத்துகிறது. எனது வீட்டிலும் இது மாதிரிதான் செய்வார்கள்.

    என்றும் அன்புடன்
    சாரதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *