பெண்களே சமூகத்தின் உண்மையான சிற்பிகள்

அண்ணாமலை சுகுமாரன்

Annamalai_SUGUMARANஇன்று (மார்ச்சு 8), உலக பெண்கள் தினம்! நமது நாட்டில் இப்படி ஒரு தினம் தேவையா? என்று என்னுள் ஒரு எண்ணம் தோன்றியபோது இன்று தினசரியில் வந்த ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது .

அதை தந்திருப்பது தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நிறுவனமான TVS.

Who needs women’s day
when we rule 24x 7x 365

பெண்கள் இருவர் திருப்பி ஒரு ஆணைப் பார்த்து, HAPPY GUY’S DAY என்று சொல்வது போல் அமைந்திருந்தது.

இது நூறு சதவீதம் சரியா, தவறா எனத் தெரியாது. ஆனால் நம் மக்கள், பெண்ணைத் தெய்வமென மதிக்கும் இயல்பினைத் தம்முள் பதித்தவர்கள்.

கணக்கெடுத்தால் தமிழ்நாட்டில் பெண் தெய்வங்களே அதிகம்! சதி எனத் தீயில் பாய்ந்தாலும் அவளைத் தீப்பாய்ந்தம்மன் எனக் கோயில் கட்ட நம் ஆண்கள் மறப்பதில்லை.

“அக்கன் கொடுத்ததும் எம் பெண்டுகள்” கொடுத்ததும் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்வெட்டில் பொறித்து மகிழ்ந்தது நம் நாடு!
ஆண்களுக்குச் சமமாகவே அதிகாரிச்சிகளும் ஆட்சி புரிந்த வரலாறு நமக்குண்டு!

சங்க காலேத்திலேயே மன்னர்களை இடித்துரைத்த பெண் புலவர்களும் உண்டு. பெண்ணில் சித்தர்களும் பலருண்டு! அவர்கள் சித்தர்கள் பதினெட்டில் அடங்கிய வரலாறும் உண்டு.

ஆனால் பெண்ணினத்திற்குத் தனியே ஒரு குணமுண்டு! தரணியை ஆளும் வல்லமையும் உண்டு. இறைவன் பெண்ணினத்திற்குப் பெண்மையுடன் சேர்த்து அமைந்த ஓர் உள்ளுணர்வையும் கலந்தே படைத்திருக்கிறான்.

இதைச் சரியான விகிதத்தில் கலந்து உபயோகிக்கத் தெரிந்த எந்தப் பெண்மணியும் உலகில் எந்த ஆணையும் வெல்லும் வல்லமையைத் தானே பெற்று விடுகின்றனர். ஆனால் விகிதம் மாறினாலோ விளைவது விபரீதம்!

சொல்லப் போனால் பெண்களே சமூகத்தின் உண்மையான சிற்பிகள்! அவர்களே வருங்காலச் சந்ததியினரை நிர்ணயிக்கும் சமையல் கலைஞர்கள்! அவர்கள் வீட்டில் சமைப்பது உணவை மட்டும்தானா? அவர்களே வருங்காலச் சந்ததியினரையும் சமைக்கிறார்கள். அதில், ஆணும் பெண்ணும் அடங்குவர்! தாய் வளர்க்காத பிள்ளைகள் எங்காவது உண்டா? உலகில் எந்த நாட்டில்தான் தாய் இல்லை? பின் தான் வளர்த்த பிள்ளைகளைத் தானே குறை கூறல் எனன நியாயம்?

மனம், உண்ணும் உணவைப் பொறுத்திருக்கிறது. உணவோ சமைக்கும் குணவதியைப் பொறுத்திருக்கிறது. நல்ல சமூகத்தைச் சீக்கிரம் உருவாக்க எண்ணினால் நல்ல பெண்களை விரைவில் உருவாக்க வேண்டும். இதைத்தான் பெண்ணின் பெருமை எனத் திரு.வி.க. கூறினார். குடும்ப விளக்கு எனப் பாரதிதாசன் கூறினார்! எங்கெங்கு காணினும் சக்தி எனச் சக்தியின் மொத்த உருவாக பெண்ணினமே சக்திகளின் கூட்டமாக இருக்கிறது.

கடந்த பல நூற்றாண்டுகளில் பெண்ணினம் ஒரு மந்திரக் கண்ணாடியாகவே மாறியிருக்கிறது! நல்லதைக் கண்டால் அதை இரட்டிப்பாக்கும் வல்லமை
இயற்கையில் அவர்களுக்கு உண்டு! மிகப் பெரிய வெற்றி பெறும் ஆண் ஒருவனின் பின்னணியில் பெண் ஒருத்தியும் இருப்பாள் என்று அதனால் தான் கூறப்படுகிறது போலும்! ஆணின் வல்லமை, பெண்ணினால் இரட்டிப்பாகும்! இல்லை, பாதியாகும்!

பெண்ணினத்தின் பெருமைகளைக் கூற, ரீம் ரீமாகப் பேப்பரில் எழுதினாலும், ரீல் ரிலாகப் படங்கள் எடுத்தாலும் முழுமையாகப் புரிய வைத்ததாகக் கூற இயலாது!

பெண்களும் கடவுள் போன்றவரே. படித்தால், பிறர்கூறக் கேட்டால், புரிந்துகொள்ள முடியாது. உணர்ந்தால்தான் தெரியும், உண்மையான பெண்ணினத்தின் பெருமை! அதுவும் பெருமைக்குரிய பெண்ணின் மூலமே!

இவையெல்லாம் நானே எழுதியது தான். வீட்டில் கட்டளையிட்டு எழுதியதாக எண்ண வேண்டாம்!

இன்று ஒரு நாள் மட்டுமல்ல! மனம் கவர்ந்த பெண்ணிருந்தால், அனைத்து ஆண்களுக்கும் அனைத்து நாளும் பெண்களின் தினமே.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “பெண்களே சமூகத்தின் உண்மையான சிற்பிகள்

  1. ஆழ்ந்து படிக்கவேண்டிய கட்டுரை. கருத்துக்கள் தெளிவாக உள்ளன. வாழ்த்துக்கள், சுகுமாரன்,

  2. “ஆணை அடக்கி வளர்!, பெண்ணைப் போற்றி வளர்!” என்று எதற்குச் சொன்னார்கள்?

Leave a Reply

Your email address will not be published.