மும்பை ரயில் நிலையங்களில் ஆரம்பித்திருக்கும் புரட்சி..

சாந்தி மாரியப்பன்

மும்பையின் ரயில் நிலையங்களில் ப்ளாஸ்டிக் உறைகளில் அடைக்கப்பட்ட ஜங்க்ஃபுட், பிஸ்கட் மற்றும் துரித வகை உணவுப்பொருட்களின் விற்பனை, இந்த ஜூன் முதலாம் தேதியிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் சமோசா, சாண்ட்விச், வடாபாவ் போன்றவற்றைப் ப்ளாஸ்டிக்கைத் தவிர்த்துப் பேப்பரில் சுற்றி வைத்து விற்றுக்கொள்வதானால் அனுமதி உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில், உணவுப்பொருட்களை வாங்கிச் சாப்பிட்டு விட்டு உறைகளை ப்ளாட்பார்மிலோ அல்லது ரயில் தண்டவாளங்களிலோ வீசி விடுவதால் ரயில் நிலையங்கள் குப்பைக்கூடைகளாகக் காட்சியளிக்கின்றன. மட்டுமல்லாது ரயில் தண்டவாளங்களில் வீசப்படும் ப்ளாஸ்டிக் குப்பைகள் அடைத்துக் கொள்வதால் மழைக்காலங்களில் மழை நீர் வடிந்து செல்வதும் தடுக்கப்படுகிறது. இப்படித்தேங்கி நிற்கும் நீரில் தண்டவாளங்கள் மூழ்கிக் கிடப்பதும், அதனால் ஒவ்வொரு வருடமும் மழைக்காலத்தின் சில நாட்களில் மும்பையின் உயிரோட்டமான மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்படுவதும் வழக்கமான ஒன்று. இனி வரும் காலங்களிலாவது இந்நிலையைத் தவிர்க்க வேண்டும் என்றுதான் இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் மட்டுமல்ல, நகருக்குள்ளும் வீசப்படும் ப்ளாஸ்டிக் பைகள் காற்றில் பறந்து சில சமயம் சாக்கடைகளுக்குள்ளும் விழுந்து அடைத்துக் கொள்வதுண்டு. இப்படி அடைத்துக் கொண்டதன் விளைவாக 2005-ம் வருடம், ஜூலை 26-ம் தேதியிலிருந்து சில நாட்களுக்கு மும்பை மாநகரமே வெள்ளத்தில் மிதந்தது. மும்பையை ஷாங்காய் நகரைப்போன்று மாற்ற வேண்டுமென்ற அப்போதைய முதலமைச்சரின் ஆசைக்கு வருண பகவான் செவி சாய்த்து விட்டானோ என்று கேலியாகத் தோன்றுமளவுக்கு.

ப்ளாஸ்டிக்கின் நன்மைகள் ஒரு பக்கம் இருந்தாலும் அது சுற்றுப்புறச் சூழலுக்கு உண்டாக்கும் கேடுகளையும் அதைத்தவிர்ப்பதையும் பற்றிய விழிப்புணர்வு இப்போது மக்களிடையே பரவலாக எழுந்துள்ளது. சூப்பர் மார்க்கெட்டுகள், மால்கள் மற்றும் சிறு கடைகளில் பாலிதீன் பைகளில் பொருட்களைப் போட்டுக் கொடுக்கும் வழக்கம் பெருமளவில் குறைந்து வருகிறது. அப்படியே தவிர்க்க முடியாமல் பைகள் தேவைப்பட்டாலும் அதை விலை கொடுத்தே வாங்க வேண்டும் என்ற ஒரு கட்டாயமும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலிருந்தே பைகள் எடுத்துப் போவது அதிகரித்துள்ளது. இதுவே ஒரு நல்ல ஆரம்பம்.

மும்பையைப் பொறுத்தவரை 50 மைக்ரான்கள் அளவிற்குக் குறைவாக இருக்கும் பைகளுக்கு அனுமதி கிடையாது. எந்தக் கடையிலாவது அந்த அளவிற்குக் குறைவாக இருக்கும் பைகளைப் பயன்படுத்துவது தெரிய வந்தால் உடன் பறிமுதல் செய்யப்படுவதோடு அபராதமும் விதிக்கப்படும். ஏனெனில் 50 மைக்ரான்களுக்குக் குறைவாக இருக்கும் பைகள் எளிதில் மக்கிச் சிதைவதில்லை. புவியின் மேற்பரப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்துக் கொள்ளும் இவை, மழைநீர் புவியினுள் செல்லாதவாறு தடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைய வாய்ப்பேற்படுகிறது. மற்றும் சில சமயங்களில் பைகளில் கெட்டுப்போன உணவுகள் இருந்து, அவை குப்பைத்தொட்டியில் வீசப்படும் பட்சத்தில், அவற்றைத் தின்னும் மாடுகளின் வயிற்றுக்குள் உணவோடு இந்தப்பைகளும் சென்று விடுகின்றன. இதனால் கால்நடைகள் உடல் நலம் குன்றி இறக்கவும் நேரிடுகிறது.

இவை தானாகவே அழிவதற்கு சுமார் ஆயிரம் வருஷங்களாகும். எரித்து அழித்து விடலாமென்றாலோ அது சுற்றுச்சூழலை இன்னும் மாசு படுத்தும். ப்ளாஸ்டிக்கிலிருக்கும் காட்மியம், காரீயம், பென்சீன், வினைல் க்ளோரைட், ஹைட்ரோகார்பன்கள், அப்புறம் எரிக்கும் போது வெளியேறும் நச்சுவாயுக்களால் புற்று நோய் ஏற்படும் அபாயமும் உண்டு. இந்த வாயுக்கள் தண்ணீரில் கரைந்தும், காற்றில் கலந்தும் ஏற்படுத்தும் விளைவுகள் கணக்கிலடங்காது. இதையெல்லாம் சுவாசிப்பதால் நம் நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.

இதையெல்லாம் யோசித்துத்தான் தன்னாலான முயற்சியாக மத்திய ரயில்வே தற்சமயம் மும்பையின் மத்திய ரயில் தடங்களில் வரும் நிலையங்களில் மட்டும் இந்தத் தடையுத்தரவை முதலில் அமல் படுத்தியது. ஏற்கனவே சேமித்து வைத்திருக்கும் உணவுப்பண்டங்களை விரைவில் காலி செய்து விடும்படியும், ஜூன் ஒன்றாம் தேதிக்குப் பின் அவ்வாறான விற்பனை நடப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அபராதமோ அல்லது தண்டனையோ உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவு ரயில்கள் நின்று புறப்படும் சி.எஸ்.டி போன்ற சில நிலையங்களுக்கு முதலில் விதி விலக்கு அளிக்கப்பட்டு, கல்யாண், தானா, குர்லா, வடாலா போன்ற நிலையங்களில் இதைச் செயல்படுத்த ஆரம்பித்தார்கள். போகப்போக மற்றும் சில நிலையங்களும் இந்தப் பட்டியலில் இணைந்து கொண்டார்கள். ஆனால் சி.எஸ்.டியில் கடைகளையே எடுத்து விட்டார்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து செய்தி வந்தது.

நவி மும்பையின் பன்வெல்லிருந்து, வாஷி வரைக்குமான துறைமுகத்தட ரயில் நிலையங்களில், உள்ளே ஒரு கடை கூடக் கிடையாது. நிலையத்தின் உள்வாயிலில் மட்டுமே ஒரு சில கடைகள் இருக்கும், அதுவும் டீ, காபி, சமோசா, வடாபாவ் போன்ற சிற்றுண்டிகள் மட்டுமே கிடைக்கும். மத்திய மற்றும் மேற்கு ரயில் தடங்களுடன் ஒப்பிடும்போது மும்பையின் துறைமுகத்தட நிலையங்களில் இருக்கும் நடைமேடைகளின் சுத்தம் திருப்திகரமானது. பெருமளவில் மக்கள் போக்குவரத்து இருந்தாலும் நன்றாகப் பராமரிக்க முடியும் என்பதற்கு இவை எடுத்துக்காட்டு.

தொலைதூர ரயில்கள் நின்று புறப்படும் நிலையங்களிலும் இப்போது உணவுப்பொருட்கள் கிடைக்காது என்று ஆகி விட்டதால் அவசரத்துக்கு பிஸ்கட், சிப்ஸ் போன்றவற்றை வாங்கிப்பயனடையும் பயணிகள், முக்கியமாகக் குழந்தைகளுடன் வருபவர்கள் பெரும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். சமோசா போன்ற உணவுப்பொருட்கள் கிடைக்குமென்றாலும் அது சுத்தமான முறையில்தான் தயாரிக்கப்படுகிறதா என்பது எப்போதும் கேள்விக்குறியாகவே இருப்பதால் அவற்றைக் குழந்தைகளுக்குக் கொடுக்க முடிவதில்லை.

வரவேற்பு இருக்கும் அதே சமயத்தில் பெருமளவு அதிருப்தியையும் சம்பாதித்துக் கொண்டுள்ளது இந்த அறிவிப்பு. ரயில் நிலையங்களுக்கு வெளியே இருந்து இந்த உணவுப்பொருட்களைக் கொண்டு வருவது தடை செய்யப்படவில்லை, அப்படிக் கொண்டு வந்து, சாப்பிட்டு விட்டு வீசும் ப்ளாஸ்டிக்கால் மட்டும் ரயில் நிலையம் குப்பையாகாதா? ரயில் நிலையங்களில் குப்பைக்கூடைகள் வைத்து, அதில்தான் குப்பையைப் போட வேண்டும் என்று அறிவுறுத்துவதை விட்டுவிட்டு, வெறுமனே தடை செய்வதென்பது என்ன பலன் தரும்? என்பது அவர்கள் எழுப்பும் நியாயமான கேள்விகள்.

ஆனால், சுத்தமான சூழலை ஒரு தடவை உருவாக்கி விட்டால் அப்புறம் அதைப் பாழ்படுத்த மனம் வராது என்பதும், நல்லதொரு பழக்கத்தைக் கற்றுக்கொள்வதில் நாமே குழந்தைகளுக்கு முன்னோடியாக விளங்க வேண்டும் என்பதும் சத்தியமான உண்மைகள்.

1 thought on “மும்பை ரயில் நிலையங்களில் ஆரம்பித்திருக்கும் புரட்சி..

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க