ஜபல்பூர் – பாந்தவ்கர் பயணக் கட்டுரை – (பகுதி 9)
வெங்கட் நாகராஜ்
காட்டுக்குள்ளே நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்று போன பதிவில் சொன்னேன். இங்கே 2001 – ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அறுபதிற்கும் மேலான புலிகள் இருக்கின்றன என்ற தகவலையும் சொன்னார் வன இலாகா அதிகாரி.
முதல் நாளில் மூன்று மணி நேர வனப் பயணம் சென்று காணக் கிடைக்காத புலியை அடுத்த நாள் காலையில் நான்கு மணி நேரம் செல்லப்போகும் பயணத்திலாவது பார்த்து விட மாட்டோமா என்ற எண்ணத்தோடு, காட்டிலிருந்து வெளியே வரும்போதே இருட்டி விட்டது. குளிர் காலம் என்பதால் ஆதவன் சீக்கிரமே மறைந்து விடுகிறான். வேறு எந்த வேலையுமில்லை என வந்ததால் எங்களுக்காக ஒரு ஆவணப் படம் காண்பிக்க ஏற்பாடு செய்திருந்தார் விடுதி மேலாளர்.
பாந்தவ்கர் காடுகளில் உள்ள விலங்குகள், அதிலும் குறிப்பாகப் புலிகள் பற்றிய ஆவணப்படம் இது. ஒரு யானைப்பாகன் மற்றும் அவனது மகன் மூலம் கதை சொல்லிப் போகிறார்கள். ஒவ்வொரு புலியும் தனது அதிகாரப் பரப்பு என்று வைத்துக்கொள்ளுமாம். அதற்காக மரங்களில் தனது கூரிய நகம் கொண்டு அடையாளம் செய்து வைக்குமாம். அந்த அடையாளம் பார்த்து மற்ற புலிகள் பெரும்பாலும் வருவதில்லை. மீறி சில மூர்க்கப் புலிகள் வந்தாலும் அவற்றுக்குள் பயங்கரச் சண்டை வரும் என்றும் சொல்கிறார் யானைப் பாகன்.
அவரது மகனையும் யானை மீது உட்கார வைத்து தனது தொழிலைப் பழக்குகிறார். யானையைக் குளிப்பாட்டுவது முதல் எல்லாவற்றிலும் மகன் கூடவே இருக்கிறார். புலிகளைப் பற்றி நிறைய விஷயங்கள் சொல்லிப்போனது ஆவணப் படம். படம் பார்த்த பிறகு, இரவு உணவு உண்டு அடுத்து என்ன என்று யோசனையுடன் அறைக்குச் செல்லும் போது பார்த்தால் விறகுகளைக் குமித்து வைத்து மகிழ்ச்சித் தீக்கான [அதாங்க! BONFIRE] ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தது.
அன்று லோடி [Lohri] எனும் பண்டிகை என்பதால் கூடுதல் சந்தோஷம். நமது ஊரில் போகி கொண்டாடுவது போலவே வட இந்தியாவில் லோடி கொண்டாடுவர். நிலவொளியில் இப்படி விறகுகளைக் குமித்து வைத்து, அதற்குத் தீ மூட்டி, வேர்க்கடலை, ரேவ்டி [எள்ளும், வெல்லமும் கலந்த மிட்டாய்] போன்றவற்றை அக்னிதேவனுக்குப் படைத்து தீயைச் சுற்றி வலம் வந்து ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று களிப்படைவார்கள். அதனால், நிறைய ரேவ்டி, வேர்க்கடலை, எல்லாம் வாங்கி வைத்து தீ மூட்டி, தீயைச் சுற்றி வந்து ஆட்டமும் கொண்டாட்டமும் ஆரம்பித்தது.
எல்லோரும் ஏதாவது ஒரு பாடல் பாடியோ, நகைச்சுவை சொல்லியோ, மிமிக்ரி செய்தோ அந்த மாலைப் பொழுதை இனிமையாக்க வேண்டுமென முடிவு செய்தோம். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விஷயத்தினைச் செய்தார்கள். பல பழைய ஹிந்திப் பாடல்கள், ஒரு மலையாளப் பாடல், பஞ்சாபி பாங்க்ரா நடனம், பல நகைச்சுவை துணுக்குகள் பரிமாற்றம் என நேரம் போவது தெரியாமல் மகிழ்ச்சி பரவிக் கொண்டிருந்தது.
அந்தத் தீயும் குளிருக்கு இதமாக இருந்ததால் அறைக்குள் செல்ல எவருக்கும் மனமில்லை. ஒரு வழியாக இரவு பன்னிரெண்டு மணிக்கு அவரவர் அறைகளுக்குச் சென்றோம். காலை 06.00 மணிக்கே காட்டுக்குள் மீண்டும் செல்ல வேண்டும் என்பதால் நான் சென்று சற்று நேரமாவது உறங்குகிறேன். நீங்களும் வருவதென்றால், குளிருக்குத் தகுந்த உடையோடு காத்திருங்கள் – காட்டிலே குளிர் நடுக்கி எடுத்து விடுமாம்! 🙂
மீண்டும் காலையில் புலிவேட்டையில் சந்திப்போம்.
தொடரும்..