இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் …………. (10)

 
சக்தி சக்திதாசன்
 
 
 
அன்பினியவர்களே !

இதோ இனிய வணக்கங்களுடன் அடுத்தொரு மடலை தொடுத்தபடி உங்கள் முன்னே வந்து விழுகின்றேன்.

தான் சார்ந்திருக்கும் ஜ‌ரோப்பிய ஒன்றியம் படு வேகமான ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது, தன் நாட்டு மக்கள் பொருளாதாரச் சுமைகளினால் அழுந்தப்பட்டுத் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள், தன் நாட்டு அரசியல்வாதிகளின் மீது மக்கள் வேகமாக நம்பிக்கையிழந்து கொண்டிருக்கிறார்கள் ……..

இத்தகைய ஒரு சூழலிலே இங்கிலாந்து, சூறாவளியில் சிக்குண்ட ஒரு கப்பல் தடுமாறியபடி பயணித்துக் கொண்டிருப்பது போல் உலகம் எனும் ஆழியில் 2012ம் மைலைக் கடந்து கொண்டிருக்கிறது.

இத்தகைய ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் நானொரு அற்புதம் கண்டேன். ஆமாம் ஒரு நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் ஒரு சக்தி ஆங்கிலத்தில் Unifying force என்பார்கள். அத்தகைய ஒரு சக்தியினால் கட்டுண்டு இந்நாட்டு மக்கள் தமது வேறுபாடுகளை, தமது பொருளாதாரச் சிக்கல்களை, தமது இனவேற்றுமைகளை மறந்து ஒன்றாக நாமெல்லோரும் ஒன்றுபட்ட பிரித்தானியர்கள் எனும் வகையில் ஒரு கொண்டாட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட அற்புதமான நிகழ்வைத்தான் குறிப்பிடுகிறேன்.

அப்படி அந்த நிகழ்வு என்னதான் எனும் கேள்வி எழுகிறது இல்லையா ?

தொடர்ந்து அறுபது ஆண்டுகள் முடிசூட்டிக் கொண்டு இங்கிலாந்தின் மகாராணியாகத் திகழம் 86 வயது நிரம்பிய இரண்டாவது எலிசபெத் மகாராணியாரின் வைரவிழாவைத்தான் குறிப்பிடுகிறேன்.

இங்கிலாந்தில் வருடாவருடம் வரும் வசந்தகால வங்கி விடுமுறை இவ்வருடம் ஜூன் மாதம் 4ம் திகதி வந்தது அத்தோடு சேர்த்து இங்கிலாந்தின் மகாராணியாரின் வைர்விழாவிற்கான உத்தியோகபூர்வ விடுமுறைநாளாக ஜூன்5ம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது.

சனி,ஞாயிறு வாராந்தர விடுமுறையுடன் இவ்விரண்டு நாட்களையும் சேர்த்த நான்கு நாட்கள் விடுமுறை தினங்களாக, மகாராணியார் பட்டமேறி 60 ஆண்டுகள் பூர்த்தியடைந்த வைரவிழாக் கொண்டாட்டங்கள் வெகுகோலாகலமாக இங்கிலாந்தில் கொண்டாடப்பட்டன.

தொடர்ந்து இங்கிலாந்தில் ஏற்பட்ட பொருளாதார விழுக்காட்டினால் பாதிப்படைந்திருந்த மக்களுக்கு ஒரு உற்சாகத்தைக் கொடுக்க இவ்விழா நிச்சயமாகத் தேவைப்பட்டிருந்தது.

புலம்பெயர்ந்து இங்கிலாந்துப் பிரஜையாக நான் இந்நாட்டு மக்களில் ஒருவனாக பெருமைகூர்ந்து பார்க்கும் பண்பு, இந்நாட்டு மக்களின் கலாச்சார விழுமியங்களைப் பாதுகாக்கும் பண்பு என்றே சொல்லுவேன்.

புராதானக் காலக் கட்டிடங்கள் ஆகட்டும், சரித்திரப் பிரசித்துவம் வாய்ந்த இடங்களாகட்டும், தமது பாரம்பரிய வழக்கங்களாகட்டும் அனைத்தையும் செலவைப் பாராமல் பராமரிப்பதில் இவர்களுக்கு நிகர் இவர்களே என்றுதான் சொல்லவேண்டும்.

கடந்த மூன்றாம் திகதி ஞாயிற்றுக்கிழமை, “புளோட்டிலா(Flotila)” என்று அழைக்கப்படும் படகுகளின் அணிவகுப்பில் இலண்டன் தேம்ஸ் நதியை அலங்கரித்த நிகழ்வே இவ்வைரவிழாவின் மையவிழாவாக அமைந்திருந்தது.

இப்படகு ஊர்வலத்தில் 1000 படகுகள் கலந்து கொண்டிருந்தன. விசேடமான விடயம் என்னவெனில் அனைத்துப் படகுகளும் மனிதக் கரங்களினால் இயக்கப்பட்ட துடுப்புக்களின் உதவியுடன் பவனி வந்தன என்பதுவேயாகும்.

சுமார் 250 வருடங்கலின் பின்னர் தேம்ஸ் நதியில் இத்தகிய ஒரு விழா கொண்டாடப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. படகுகள் அனைத்தும் பலவர்ணங்களில் அலங்கரிக்கப்பட்டு தேம்ஸ் நதி அழகுப்புள்ளிகளினால் கோலமிடப்பட்டிருந்தது போலிருந்தது.

இவ்வகுப்பினை 86வயது நிரம்பிய இங்கிலாந்து மகாராணியாரும், 91 வயது நிரம்பிய அவரது கணவர் பிலிப்பும் அவர்கள் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் புடைசூழ அவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த விசேட ராஜமுத்திரையுடனான கப்பலில் இருந்தபடியே அவதானித்து பரவசமடைந்தார்கள்.

இயற்கை மழையுடன் கூடிய இன்னலைக் கொடுத்தாலும் தமது மகாராணியாரையும் அவரது குடும்பத்தினரையும் மகிழ்விக்கும் பொருட்டு இந்நாட்டின் அனைத்து மக்களும் நாம் பிரித்தானியர்கள் எனும் உணர்வுடன் ஒன்று பட்டு பல்லாயிரக்கணக்கில் தேம்ஸ் நதிக்கரையோரங்களில் திரள், திரளாகக் கூடி நின்று ஆதரவளித்த காட்சி மனதுக்கு ஒருவகைத் தெம்பைக் கொடுத்தது என்றே சொல்லலாம்.

அதைத் தொடர்ந்து திங்கட்கிழமை 4ம் திகதி மாலை 7.30 மணியளவில் மகாராணியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான “பக்கிங்காம் பலஸ்(Buckingham Palace) முன்றலில் விக்டோரியா மகாராணியாரின் நினைவுச்சின்னத்தின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான மேடையில் மகாராணியாரினதும் அவரது குடும்பத்தினரினதும் முன்னிலையில் பல முன்னனி பாடகர்கள், கலைஞர்கள் கலந்து கொண்ட மாபெரும் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. இதைக் காண்பதற்கு நேரடியாக சுமார் 20000 பேர்வரை அங்கே கூடியிருந்தார்கள்.

விக்டோரியா மகாராணியார் 63 வருடங்கள் தொடர்ந்து முடிசூட்டி சாதனையை ஏற்படுத்திய பின்பு 86 வயது நிரம்பிய எலிசபெத் மகாராணியார் தொடர்ந்து 60 வருடங்கள் முடிசூட்டிக் கொண்டுள்ளார்.

அப்படி இந்நாட்டு மக்களின் அபிமானத்திற்கு தன்னை உட்படுத்திக் கொண்ட இம்மகாராணியாரின் விசேடம் தான் என்ன?

திருமணமாகி 5 வருடங்கள் ஆன நிலையில் மூன்று வயது நிரம்பிய மகனிற்குத் தாயாக 26 வயதே நிரம்பிய இளவரசி எலிசபெத் ஆக தனது கணவருடனும், மகனுடனும் கென்ய நாட்டில் சுற்றுப்பயணத்தின் போது தந்தையான ஜார்ஜ் மன்னர் இறந்து போக காலத்தின் கட்டாயத்தினால் இளவயதில் முடிசூட்டிக் கொண்டார்.

அது மட்டுமல்ல இப்போது போலன்றி அப்போது அவர் இங்கிலாந்துக்கு மட்டுமல்ல பல காலனித்துவ நாடுகளின் அரசியாக பொறுப்பு வகிக்க வேண்டிய கடமையிருந்தது.

அன்றிலிருந்து இன்றுவரை காலம் தன்மீது வீசிய கடுமையான சவால்களையெல்லாம் ஏற்று, எப்போதும் தனது கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டுவரும் இவர் அரசியல் வாழ்க்கையிலாகட்டும், பொது வாழ்க்கையிலாகட்டும், இராஜ காரியங்களிலாகட்டும் அனைவருக்கும் ஒருமுன்மாதிரியாக இதுவரை வாழ்ந்து காட்டியுள்ளார்.

தனது பிள்ளைகள் தற்கால சமூக கலாச்சார பாதிப்புக்களான விவாகரத்து, திருமணத்திற்கு வெளியான உறவு எனப் பலதரப்பட்ட சர்சைகளுக்கு உள்ளாகிய போதும், அனைத்தையும் கடமையுணர்வோடு ஏற்று சமாளித்த வகை உலகில் அனைவருக்கும் இவர் மீது ஒருதனியான  அபிலாஷையையும், மரியாதையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஸ்திரமான குடும்ப வாழ்க்கையின் அத்தியாவசியத்தை இவரது 60 வருடங்களுக்கு மேலான திருமண வாழ்க்கை அனைவருக்கும் எடுத்துக் காட்டுகிறது.

தனது ஆட்சிக்காலத்தில் இதுவரை சுமார் 12 பிரதமர்களைச் சந்தித்துள்ள இவருக்கு உலக அரசியல் மாற்றங்கள், உள்நாட்டு அரசியல் மாற்றங்கள் என்பவற்றின் ஊடாக கிடைத்த அனுபவம் அளப்பரியது.

சோவியத் யூனியனில் ஸ்டாலின் அதிபராக இருந்த காலம் தொட்டு இன்று பூட்டின் வரை உலகமகாயுத்தங்களினூடாகவும், உலக அரசியல் மாற்றங்களினூடகவும் தொடர்ந்து மகாராணியாக வீற்றிருந்து இங்கிலாந்து நாட்டின் அரசியல் மாற்றங்கள் குழப்பமில்லாமல் நிகழ துணையாக இருந்திருக்கிறார்.

அதிகாரமிக்க மகாராணி எனும் நிலையில் இருந்து இன்று அதிகாரமற்ற வெறும் அலங்காரத்துக்குரிய மகாராணி எனும் நிலைவரை தனது கடமையுணர்வில் இருந்து சிறிதும் பிறழாமல் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

தனது சொந்த அரசியல் அபிப்பிராயங்கள் எதுவாக இருப்பினும் இங்கிலாந்தின் பிரதமர்களையும், அரசாங்கத்திலிருக்கும் கட்சிகளைப் பொறுத்த மட்டிலும் என்றும் நடுநிலை தவறாது அனைத்து உலகத் தலைவர்களுக்கும் ஒரு அனுபவ ஆசிரியராக வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

பிரித்தானிய ஏகாதிபத்தியத்தில் சூரியன் அஸ்தமனவாதில்லை என்னும் கூவல் ஒலித்த காலம் முதல் ஒவ்வொன்றாகத் தமது ஆட்சியின் கீழிருந்த உலகநாடுகள் ஒவ்வொன்றும் சுதந்திரமடைந்து கொண்டு செல்லும் போது அனைத்து மாற்றங்களுக்கூடாகவும் தன்னை உட்படுத்தி அனைத்து மாற்றங்களையும் உள்வாங்கிக் கொண்டுள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் தலைவியாகத் தொடர்ந்து பொறுப்பேற்று இவ்வமைப்பின் முக்கியத்துவத்தைப் பாதுகாத்து வருவதில் இவர் ஆற்றிய, ஆற்றிக்கொண்டிருக்கும் பங்கு அளப்பரியது.

அதற்கேற்ப இவரது வைரவிழாக் கொண்டாட்டங்கள் அனைத்துப் பொதுநலவாய நாடுகளிலும் ஏதாவது ஒருவகையில் நினைவு கூறப்பட்டுள்ளதும், பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் லண்டனில் நடைபெற்ற இவ்வைரவிழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

குறையற்ற மனிதர்கள் உலகில் இல்லை. நிச்சயம் இவர்மீதும் குறைகளும், தவறுகளும் கூறப்படுவது தவிர்க்கப்படமுடியாதது. ஒரு நாட்டின் தலைவியாக, ஒரு குடும்பத்தின் தலைவியாக இத்தவறுகளைக் கடந்து இவரின் தனிப்பட்ட பண்புகளைப் பார்த்து பாராட்டாமல் இருக்க முடியாது.

இங்கிலாந்திலே முடியாட்சி முறை மாற்றியமைக்கப்பட்டு குடியாட்சி முறை நிறுவப்பட வேண்டும் என்று கூப்பாடு போடுவோர்கள் இல்லாமல் இல்லை.

அதேபோல இங்கிலாந்தின் கடந்தகால பேரினவாத ஆட்சியினையும் அடிமைத்தளையைப் பூட்டிய வல்லரசுகளில் இங்கிலாந்தும் ஒன்று எனும் சரித்திர உண்மைகளையும் முன்னிறுத்தி இங்கிலாந்தின் இராஜ குடும்பத்தினரை காழ்ப்புணர்ச்சியோடு பார்க்கும் மனிதர்கள் இல்லாமல் இல்லை.

ஒவ்வொரு மனிதனும் தனக்கென அபிப்பிராயம் கொள்வதே அவனின் அடிப்படி உரிமையாகும். ஜனநாயக நாட்டின் தனிப்பண்பே அதுதான். அதேசமயம் அடுத்தவரின் போற்றுதற்குரிய பண்புகளைக் கண்டு அதில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்வதும் ஜனநாயகத்தின் முக்கிய பண்பாகும்.

கலாச்சாரத்திற்கும் பாரம்பரியத்திற்கும் தனிமனித உரிமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு நாட்டின் மகாராணியாரின் வைரவிழாக் கொண்டாட்டங்கள் நடைபெறும் வேளையில், அந்நாட்டின் பிரஜைகளில் ஒருவனாக நானும் வாழ்ந்தேன் என்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

தொடர்ந்து மேலும் பல ஆண்டுகள் இந்நாட்டின் அரசியாக அதிககாலம் முடிசூட்டிக் கொண்டவர் எனும் மைல்கல்லை அடைந்து புதிய சாதனையை இரண்டாவது எலிசபெத் மகாராணியார் படைப்பார் எனும் வாழ்த்துக்களோடு மீண்டும் அடுத்த மடலில் சந்திக்கிறேன்.

அன்புடன்
சக்தி சக்திதாசன்
இலண்டன்

படங்களுக்கு நன்றி …… பி.பி.ஸி, டெய்லி டெலிகிராப் , மற்றும் பிற இணையத்தளங்கள்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.