ஆடைகளுக்கிடையினின்று வரும் அழைப்புகள்

 
உனைக் காணும் ஆவலில்
யாசித்த வார்த்தைகளின்
ஆவலைப் பூர்த்தி செய்ய
ஒரு சிறுமழையிரவில்
மென்சாரல் பெய்யும் ஜன்னல்களுக்கு
மத்தியிலிருந்த அறைதனில் அமர்ந்தவைகளை
சேகரிக்கத் துவங்கினேன்.

மழையிரவின் பெருங்குளிரில்
விரைந்து நிறைந்தன
பெருங்கூட்டமாய் வார்த்தைகள்
காகிதப் பரப்பெங்கும்
நெருங்கியமர்ந்து குளிர்காய்ந்தபடி

வெள்ளைக் குளத்தில்
நீலக்கொக்குகளாய் தவமிருக்கின்றன
அவ்வார்த்தைகள் கால்களுமின்றி

எழுதியவற்றை அழைத்து வந்து
அறிமுகம் செய்விக்க வலுவின்றி
ஒளித்து வைத்திருக்கிறேன்
ஆடைகளுக்கிடையே அலமாரியில்

அன்றாடம் உடை மாற்ற கடை திறக்கையில்
அக்காகிதச் சமவெளியினின்று
பெருங்குரலெடுத்துக் கத்துகின்றன
அவ்வார்த்தைகள் முக்திக்காய்.

படத்துக்கு நன்றி
 http://www.pubhist.com/work/6303/cornelis-norbertus-gijsbrechts/an-open-cupboard-door

 

2 thoughts on “ஆடைகளுக்கிடையினின்று வரும் அழைப்புகள்

 1. அன்பினிய வரூணன்,
  உங்கள் கவிதை யதார்த்தமாக உண்மையான உள்ளத்து உணர்வுகளை அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றன. உங்கள் உவமானக்கள் உள்ளத்தைஇத் தொடும் வகையில் அமைந்திருக்கின்றன. உதாரணமாக
  ” வெள்ளைக் குளத்தில்
  நீலக்கொக்குகளாய் தவமிருக்கின்றன
  அவ்வார்த்தைகள் கால்களுமின்றி” என்பது பிர,ஆத,ஆகவிருக்கிறது. தொடர்ந்து பல படையுங்கள். வாழ்த்துக்கள்
  அன்புடன்
  சக்தி

 2. தோழர் சக்திக்கு,
  தங்களின் பின்னூடத்தை இன்றுதான் கண்டேன். மனம் மகிழ்ந்தேன். படைப்பினை ரசித்து தங்களைப் போன்றோர் தரும் இந்த ஊக்கத்திற்கு இணையேது… இருப்பினும் எனது தாமதமான மறுமொழிக்கு எனது வருத்தங்கள். மன்னிக்க.

  என்றென்றும் அன்புடன்,
  வருணன்.

Leave a Reply

Your email address will not be published.