இலக்கியம்கவிதைகள்

குப்பை

முகில் தினகரன்

எல்லாமே குப்பைதான்
ஒரு நிலைப்பாட்டில்!
எல்லோருமே குப்பைதான்
ஒரு சுடுகாட்டில்!

வறுமை வெயில் சூட்டுக்கு
வயிற்றுத் துணி கட்டி
வாரிசுகளின் வருங்காலப் பாதைக்கு
கல்வி மலர் தூவி,
தளர்ந்து நின்ற தகப்பன் மரங்கள்
முதுமை உடுத்தியபின்
மூலைக்குப் போய்விடும்
குப்பைகளாய்!

வாலிப தேசத்தின் வரைமுறை தாண்டி
கட்டுப்பாட்டைக் காற்றில் விட்டு
கறைபட்டுக் கருவுற்று பெற்றெடுத்த சிசுவை
குப்பைத் தொட்டிக்குத் தாரை வார்க்கும்
நவீன குந்திகளுக்கு
குழந்தைதான் குப்பை!

மாற்றானுடன் மணம் புரியும்
மாற்றம் நேர்கையில்
நேற்றைய காதலனின்
நெஞ்சுருக்கிய கடிதங்கள்
இன்றைய இல்லாளுக்கு
இற்றுப் போன குப்பைகள்!

கள்ளமிலா உள்ளத்தார்க்கு
காசு பணம் குப்பை!
காதலுறவில் கலந்தோர்க்கு
சாதி மதம் குப்பை!
சேவைச் சிந்தாந்தம் கொண்டோர்க்கு
பட்டம் பதவி குப்பை!
தாய் மொழி தாகமுடையோர்க்கு
அந்நிய மொழி குப்பை!

சில வறுமைப் புத்திரர்கள்
வகையாய் பொறுக்கி
வயிறு கழுவ வரும்படி
காண்கையில்தான் புரிகிறது
குப்பையுமொரு
சிறுதொழில் மூலப் பொருள்!
உயிர் வளர்க்கும் ஊடுபயிர்!

உயிரற்ற குப்பைகளை
உடனே ஒழித்து
உத்தமம் கொள்ளும் மனிதா!
உன்னுடன் வாழும்
உயிருள்ள குப்பைகளை
என்று காண்பாய் அடையாளம்?
அன்று தெறிக்கும் உன் கடிவாளம்!

படத்துக்கு நன்றி
http://www.sccwrp.org/ResearchAreas/MarineDebris/DebrisOnBeaches.aspx

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (1)

 1. Avatar

  கிடக்கட்டும் குப்பைகள்
  என்றேன்..
  இங்கே,
  கிடைத்தது குப்பையில் 
  அருமைக் கவிதை..
         -செண்பக ஜெகதீசன்…

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க