நிலா காய்கிறது
நடுவானில்
நட்சத்திரங்களோடு
பவனி வருகிறது
பவுர்ணமி நிலவு .
பஞ்சு மேகங்களுக்குள்
மறைந்து மறைந்து
கண்ணாமூச்சி ஆட்டம்
காட்டி வருகிறது.
கண்டு கொள்வார் யாருமில்லை.
கண்டு கொண்டாலும் ……
காரியத்திற்காக கண்டுகொண்டாலும்
ரசிப்பார் யாருமில்லை.
நிலாவைக் காட்டி குழந்தைக்கு
நித்தமும் சோறு ஊட்டுகிறாள் தாய்.
பிஞ்சு …அழாமலிருக்க …அந்த
பால் நிலாவை காட்சிப் பொருளாக்குகிறாள்.
நிலா ..வெளிச்சம்
அறைக்குள் வருகிறது
அந்த ஜன்னல்
திரையை கொஞ்சம்
இறக்கிவிடு என …..ஆணை இடுகிறான்.
நிலவின் வெளிச்சம்
நிலவு தாண்டி வர விரும்பவில்லை அவன்.
கள்ளன் …அவன்
உள்ளத்தில்
நிலவு ஒளியில்
நிம்மதியாகக் களவாட முடியவில்லை …..என்ற வருத்தம்
நிலவு அவனை
நெருப்பாய் சுடுகிறது.
மாடியில் நிலா காய்கிறது
மாடிக்கு ஓடி வா
மனைவியை அழைத்தான்
வந்த மனைவியின்
மடியில் தலை வைத்து
அவளை ரசித்தான்
அந்த நிலாவை ரசிக்கவில்லை.
காய்ந்த நிலா
கடந்தது அவர்களை.
வாசலில் இருந்த ….அந்த
வயதான தம்பதிகள் ..அவர்கள்
வாழ்ந்த கதை பேசுகிறார்கள்
வலம் வந்த அந்த
நிலவை
நலம் விசாரிக்காமல்.
அழகு நிலாவை ரசிக்க
ஆளில்லைதான் அவனியில் ….
அதனால்தான்
அதிகாலைக்கு முன்னரே
நட்சத்திர பரிவாரங்களுடன்
பார்வைக்கு படாமல் மறைந்து விடுகிறதோ ?
படத்துக்கு நன்றி
http://www.cretegazette.com/2009-09/gazing-starry-sky-crete.php
அன்புள்ள செழியன் அவர்களே!
நிலவின் ஆற்றாமை ஒழுக்காய் தாங்கள் படைத்த கவிதை அருமை.
ஆங்கில கவிஞர்களின் இலக்கிய வெளிப்பாடு தங்கள் எழுத்தில் தெரிகின்றது. தொடருங்கள்.
முகில் தினகரன்.