வார ராசி பலன் 18-06-2012 முதல் 24-06-2012 வரை
காயத்ரி பாலசுப்ரமணியன்
மேஷம்: வியாபாரிகளை இந்த வாரம் பங்குதாரர்கள் பணம் கேட்டுத் தொல்லை தரலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க முயலுபவர்களை இனங்கண்டு ஒதுக்கி விட்டால், வாழ்க்கை மகிழ்வாக அமையும். பெண்கள் முக்கியமான முடிவெடுக்கும் முன் அதில் உள்ள சாதக பாதகங்களைக் கவனத்தில் கொள்வது நல்லது. ஆசிரியர்களும்,பெற்றோர்களும் காட்டும் ஆதரவை மாணவர்கள் தக்க விதத்தில் பயன்படுத்திக் கொண்டால் எதிர்காலம் வளமாக இருக்கும். கலைஞர்கள் வழக்கு சம்பந்தமான விவகாரங்களில் தகுந்த ஆலோசனையைப் பெற்று முடிவெடுத்தால், நஷ்டமிராது. சுய தொழில் புரிபவர்கள் மேற்கொள்ளும் பயணங்கள் லாபகரமாக இருப்பதோடு புதிய நண்பர்களையும் கூட்டாளிகளாகக் கொண்டு வந்து சேர்க்கும்.
ரிஷபம்: ஊழியர்களால் தொல்லைகள் தோன்றி மறைந்தாலும், வியாபாரிகள் தங்கள் திறமையால் வேலைகளை முடித்து நல்ல பெயரைப் பெறுவர். பெண்கள் தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் பிரச்னைகளைக் கையாளுவார்கள். ஏனோதானோவென்று செயல்படும் ஊழியர்களைப் பொறுப்பில் இருப்பவர்கள் இதமாகக் கண்டிப்பது நல்ல பலனைத் தரும். மாணவர்கள் தங்களுக்கேற்ற நாகரீக உடை, ஆபரணங்கள் ஆகியவற்றை வாங்கி மகிழ்வார்கள். உறவுகள் காட்டும் ஆதரவால், பெண்கள் தங்கள் ஆக்கப் பூர்வமான எண்ணங்களைச் செயலாய் மாற்றுவது எளிதாக இருக்கும். பணியில் இருப்பவர்கள் மூடித்தனமாக யாரையும் நம்பாமல் விழிப்புடன் இருந்தால், நல்ல பெயரையும், அதிகாரிகளின் நம்பிக்கையும் தக்க வைத்துக் கொள்ளலாம் .
மிதுனம்: இந்த வாரம் வராமல் போக்குக் காட்டிக் கொண்டிருந்த புதிய ஒப்பந்தங்கள் அவர்கள் வசமாவதால், சுய தொழில் புரிபவர்கள் சுறுசுறுப்புடன் இயங்குவர். கலைஞர்களைத் தேடி வரும் வாய்ப்புகளைக் கடின உழைப்பின் மூலம் தக்க வைத்துக் கொண்டால், வருமானத்தில் எந்தக் குறைவும் இராது. கடன் தொல்லைகள் குறைவதால், பெண்கள் இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி வைப்பார்கள். மேற்படிப்புக்கான வாய்ப்புகள் கனிந்து வருவதால் மாணவர்கள் விரும்பிய பாடத்தில் தங்களின் திறமையை வெளிப்படுத்துவதுடன் மற்றவரின் பாராட்டையும் பெற்று மகிழ்வர். பெற்றோர்கள் பிள்ளைகளின் பழக்க வழக்கத்தில் கவனமாய் இருப்பது அவசியமாகும். முதியவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.
கடகம்: குடும்ப நலம் சிறக்க, பெண்கள் காரசாரமான உரையாடல்களைத் தவிர்த்து விடவும். கலைஞர்கள் சரளமான பணப்புழக்கம் இருந்தாலும், தவறான பாதைக்கு மற்றவர் அழைத்துச்செல்லும் அளவிற்கு நெருங்கிப் பழக வேண்டாம். வாய்ப்புகள் உங்களை நாடி வரும் போது அதனைத் திறம்பட பயன்படுத்தினால் கலைஞர்களின் உயர்வும், வெற்றியும் உறுதி. வியாபார விருத்திக்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கேற்ப உங்கள் லாபமும், உங்கள் சேவையை நாடி வரும் வடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் கூடும். சோம்பலுக்கு விடை கொடுத்தால்தான் சிறப்பான மதிப் பெண் பெற முடியும் என்பதை மாணவர்கள் நினைவில் கொள்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் அனுசரணையாய் இருப்பதால், சொத்து விஷயங்களை லாபகரமாய் முடித்துக் கொள்வீர்கள்.
சிம்மம்: ஏறுக்கு மாறாக நடந்து கொள்ளும் பெண்கள் உறவுகளிடம் இதமான அணுகுமுறையைக் கையாண்டால், பிரச்னைகள் தானே அமுங்கி விடும். இந்த வாரம் வீண் செலவும், நெருக்கடியும் பொது வாழ்வில் இருப்பவர்களின் பொறுமையைச் சோதிக்கலாம். மாணவர்கள் வம்பு, வழக்குகளிலிருந்து ஒதுங்கியிருப்பது அவசியம். கடன் தொல்லை குறைந்து விடும். என்றாலும், வியாபாரிகள் வீண் செலவைக் கட்டுப்படுத்தினால், பணப் புழக்கம் சீராக இருக்கும். பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் அதிக ஆர்ப்பாட்டமின்றி அமைதியான செயல்பட்டால், அடுத்தவரின் நன்மதிப்பைப் பெறுவது எளிதாகும். கூட்டு வியாபாரத்தில் இருப்பவர்கள் அவ்வப்போது வரவு செலவுகளைச் சரி பார்த்துக் கொண்டால், வீண் சந்தேகமும், வேண்டாத பிரச்னைகளும் வளராமலிருக்கும்.
கன்னி: உறவுகளின் அனுசரணையான போக்கால், சுப நிகழ்ச்சிகள் நல்ல விதமாக நடந்தேறும். அலுவலகத்தில் நிலவிய பிணக்குகள் தீர்வதால் சுறுசுறுப்புடன் வேலைகளைத் தொடர்வீர்கள். இந்த வாரம் காரணமற்ற சச்சரவுகளால், பெண்களின் மன அமைதி குறையும். கலைஞர்கள் கவனக் குறைவைத் தவிர்த்துச் செயல்பட்டால், தொழிலில் அனுசரணையான நிலை உண்டாகும்.மாணவர்கள் எவரிடமும் வீண் விரோதம் காட்ட வேண்டாம். முதியவர்கள் ஒவ்வாத உணவு வகைகளை ஒதுக்கி விட்டால், ஆரோக்கியம் நலிவடையாமல் இருக்கும். படிப்புக்குக்காக வெளி இடம் செல்பவர்கள் புதிய இடத்தில் எச்சரிக்கையாகப் பழகுதல் அவசியம்.
துலாம்: பெண்கள் கடினமான காரியங்களைத் தங்கள் அனுபவ அறிவால் எளிதாக முடிப்பார்கள். அவ்வப்போது, வெறுப்பும், சலிப்பும் வந்து வந்து நீங்கும் வாய்ப்பிருப்பதால், மாணவர்கள் தங்கள் வேலைகளைத் தள்ளிப் போடாமல் இருப்பது புத்திசாலித் தனம். கலைஞர்கள் தவறான கண்ணோட்டம் உடையவரிடமிருந்து விலகி இருப்பதன் மூலம் தங்கள் மன அமைதிக்குப் பங்கம் வராமல் பார்த்துக் கொள்ளலாம். முதியவர்கள் காரசாரமான உணவுகளை ஒதுக்கி விட்டால், ஜீரணக் கோளாறு ஏதும் தலை காட்டாது. பொது வாழ்வில் இருப்பவர்கள் உழைப்பிற்குத் தகுந்த பாராட்டைப் பெற, சிறிது பொறுமையாய் இருப்பது அவசியம்.
விருச்சிகம்: பெண்களின் ஆசைப்படியே புதிய பொருட்களின் சேர்க்கை இல்லத்தில் கூடும். இந்த வாரம் பொது வாழ்வில் இருப்பவர்கள் உடனிருப்பவர்களுக்காகச் செலவும் செய்வதோடு அலையவும் வேண்டியிருக்கும். உங்களின் படபடப்பான பேச்சு புதிய தொல்லைகளுக்கு வித்திடும் நிலையிலிருப்பதால், கலைஞர்கள் எவரிடமும் அளவாகப் பழகி வருதல் நல்லது. மாணவர்கள் வகுப்பறைகளில் வீண் அரட்டைகளில் ஈடுபடாமலிருப்பது அவசியம். இந்த வாரம் வியாபாரிகள் பணத்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பிறர் தயவை நாட வேண்டியிருக்கும். எனவே வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
தனுசு: பணியில் இருப்பவர்கள் உங்கள் பணி, வீடு என்றிருந்தால், பிரச்னை ஏதும் இராது. மாணவர்கள் அவ்வப்போது மனதில் எட்டிப்பார்க்கும் சஞ்சலத்தைக் கட்டுக்குள் வைக்க நல்ல புத்தகங்களைப் படியுங்கள். சிந்தனை தெளிவாகும். வியாபாரிகள் பணியாளர்களிடம் அனுசரணையாய் நடந்து கொண்டால், மனக்கசப்பு இன்றி வேலைகளைச் செய்து முடிக்கலாம். உடன் பிறப்புகளால், கருத்து வேறுபாடு தோன்றினாலும், தக்க சமயத்தில் உதவ வருபவர்களிடம் பெண்கள் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கலைஞர்கள் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுமுன், தகுந்த ஆலோசனையை மேற்கொள்வது நல்லது.
மகரம்: பெண்கள் வாழ்க்கைத் துணைவரோடு அனுசரித்துச் செல்வது நன்மை தரும். மாணவர்கள் செலவு வகைகளைச் சுருக்கி வைத்தால், கடன் தொல்லை ஏதும் இராது. நீங்கள் எங்கு பணி புரிந்தாலும், சொல், செயல் ஆகிய இரண்டிலும் நிதானத்தைக் காட்டி வந்தால், நிலைமை சாதகமாய் மாறி விடும். வியாபாரிகள் புதிய நபர்களிடம் வியாபார ஒப்பந்தம் செய்யும் முன்பு, அவர்களின் பொருளாதாரம், முன் அனுபவம் ஆகியவற்றை அறிந்து செயல்பட்டால், அதிக லாபம் பெறலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் பொறுமையைச் சோதிக்கும் சந்தர்ப்பங்களையும், லாவகமாகக் கையாண்டால், அமைதிக்குப் பங்கம் வராது.
கும்பம்: சொத்து விஷயங்களில், தகுந்த வழிகாட்டுதலுடன் செயல்படவும். பெண்கள் இதமாக நடப்பதன் மூலம், உறவுகளின் அனுசரணையைத் தக்க வைத்துக் கொள்ளலாம். மாணவர்கள் உங்களின் வாகனங்களை இரவலாக தருவதைக் குறைத்துக் கொண்டால், வீண் செலவுகள் எட்டிப் பாராது. பொது வாழ்வில் இருப்பவர்கள் பெருந்தொகையைக் கையாளும் போது, பாரபட்சமின்றி நடந்து கொண்டால், உங்களின் நல்ல பெயர் மங்காமலிருக்கும். பங்குதாரரிடையே சிறு சலசலப்பு அவ்வப்போது தோன்றி மறையும் வாய்ப்பிருப்பதால், முக்கியமான விஷயங்களில் தக்கபடி ஆலோசித்துச் செயல்படுவதே புத்திசாலித் தனம்.
மீனம்: இந்த வாரம் உங்களின் அலுவலகத்தில் நீங்கள் செய்யும் மாறுதல்கள் மனதிற்கு இனிமை சேர்க்கும் விதமாக அமையும். வியாபாரிகளின் முயற்சியால், விரிவாக்கத்திற்கேற்றவாறு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் உயரும். சுய தொழில் புரிபவர்கள் வார்த்தைகளை நம்பி, சரக்குப் பரிமாற்றம் செய்வதை இதமாக மறுத்து விடுங்கள். பொருளாதாரச் சிக்கல்களைத் தவிர்த்து விடலாம். பெண்கள் பொருள் சிக்கனத்தோடு சொற்சிக்கனத்தையும் மேற்கொள்வது நன்மையாக இருக்கும். கலைஞர்கள் சந்தித்த இடர்ப்பாடுகள் நீங்கி, சுமூகமான நிலை நிலவுவதால், புதிய முயற்சியில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.