ஜபல்பூர் – பாந்தவ்கர் பயணக் கட்டுரை – (பகுதி 10)

0

வெங்கட் நாகராஜ்

இன்றாவது புலியைக் காண வேண்டும் என்ற ஆர்வத்தில் அதிகாலையிலேயே எழுந்து தயாராகி விட்டேன். காடுகள் நிறைந்த பகுதி என்பதால் குளிர் கடுமையாகத் தெரிந்தது. வெளியே வந்தால் பற்கள் கிடுகிடுவென அடித்துக் கொள்ளும் அளவுக்குக் குளிர். குளிரிலிருந்து காத்துக்கொள்ள தலையில் குல்லாய், காலுறை, ஸ்வெட்டர், லெதர் ஜாக்கெட் என்று போட்டுக்கொண்டு ஒவ்வொருவரும் ஐந்து கிலோ எடை கூடியிருந்தோம்!

அவரவர்களுக்கு நியமிக்கப்பட்ட வாகனங்களில் ஏறி அமர்ந்து சரியாக 5.45 மணிக்கெல்லாம் புறப்பட்டோம். ஜீப் மெதுவாகச் சென்றாலும், அடிக்கும் குளிர்காற்று அத்தனை உடைகளையும் தாண்டி நரம்புகளில் அதிர்ச்சியை உண்டாக்கிற்று. நேற்று சென்றதை விட இன்று சென்ற வனப்பகுதி இன்னும் அடர்த்தியானதும், மலைகள் அதிகம் கொண்டதுமாகும்.

வனத்தினை நான்கு பகுதிகளாகப் பிரித்திருப்பதாக முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். அந்த நான்கு பகுதிகள் கிதோலி, மகதி, பான்பத்தா மற்றும் தாலா எனப் பெயர் கொண்டவை. இந்த நான்கில் மிக முக்கியமானது தாலா எனப்படும் பகுதி தான். இங்கேதான் கோட்டையும் இருக்கிறது. 32 மலைகள் சூழ்ந்த காடுகளை இந்தப் பகுதியில் சென்றால் நன்கு ரசிக்கலாம். மேலும் இந்தப் பகுதியில் தான் புலிகள் உங்கள் கண்களுக்குத் தட்டுப்பட வாய்ப்புகள் அதிகம். மேலே செல்லுமுன் சில உபயோகமான தகவல்களைப் பார்க்கலாம்.

நீங்கள் இந்த வனப்பயணம் செய்ய ஆசைப்பட்டால் முன்பதிவு செய்து வைத்துக்கொள்வது அவசியம். இணையத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ள மத்தியப் பிரதேசச் சுற்றுலாத் துறை இணையதளத்தின் மூலமோ அல்லது மற்ற தனியார் துறை தங்கும் விடுதிகள் மூலமோ நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஒரு குழுவிற்கு எட்டு பேர்கள் வரை ஜீப்பில் பயணிக்கலாம். யார் பெயரில் முன்பதிவு செய்கிறீர்களோ அவரது அடையாள அட்டை எடுத்துச் செல்வது மிக மிக அவசியம். முன்பதிவு செய்யும்போது கொடுத்த அடையாள அட்டை எண்ணை வனத்திற்குள் செல்லுமுன் சரி பார்ப்பார்கள். சரியாக இல்லையெனில், உள்ளே யாரையும் விடுவதில்லை.

தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற உடைகள் எடுத்துச் சென்றால் நல்லது. சூழலுக்குத் தகுந்த உடைகள் [சிவப்பு, ஆளை அடிக்கும் ராமராஜன் போட்டுக்கொ[ல்லும்]ள்ளும்] வண்ண உடைகளைத் தவிர்த்தல் நலம்!

பீடி, சிகரெட், பான், சாக்லேட் போன்ற எதுவுமே வனத்திற்குள் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை.

தகவல்கள் நீங்கள் செல்லும் நேரத்தில் நிச்சயம் பயன்படுமென நினைக்கிறேன்.

சரி வனத்திற்குள் செல்லலாம் வாருங்கள். இரண்டாம் நாள் நாங்கள் சென்றது தாலா பகுதிக்கு. இங்கே கோட்டையும், 39 குகைகளும் இருக்கின்றன. இவைகள் ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த குகைகள் எனச் சொல்கிறார்கள். குகைகளில் பிராம்மி எழுத்துகள், புலி, பன்றி, யானை, குதிரை மேல் மனிதன் என்று நிறைய வரையப்பட்டிருக்கிறது. ”[B]படி [G]குஃபா” என்று இருப்பதிலேயே பெரிய வாசல் இருக்கும் குகையை மட்டும் சுற்றுலாப் பயணிகள் பார்க்க அனுமதிக்கிறார்கள். இந்த குகைக்குள் 9 சிறிய அறைகள் இருக்கின்றன. குகையை பார்க்க மனிதர்களை அனுமதிப்பதால் விலங்குகளுக்கு அனுமதி இல்லை! எப்போதும் ஒரு கதவு போட்டு மூடி வைத்திருக்கிறார்கள். மனிதர்கள் மட்டும் திறந்து உள்ளே செல்ல முடியும்!

இந்த [B]படி குஃபாவை பார்த்து விட்டு வனத்திற்குள் எங்கள் புலி வேட்டை தொடர்ந்தது. வனத்திற்குள் இருக்கும் குறுகிய பாதைக்குள் எங்கள் ஜீப் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. நிறைய மான்கள், காட்டுப் பன்றி, சில பறவைகள் என கண்களுக்குத் தென்பட்டது. புலி மட்டும் கிடைக்கவில்லை. அதற்குள் நடுவே ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார் எங்களது வாகன ஓட்டுனரும், வன இலாகா ஊழியரும். அந்த இடம் சேஷ்நாக் மீது படுத்துக் கொண்டிருக்கும் சேஷையாவையும் சிவனையும் பார்க்கத்தான்.

மலைகளுக்கு ஊடே சென்று ஒரு குறுகிய பாதையில் வண்டி நின்றது. சில படிகள் ஏறிச் சென்றால் ஒரு பெரிய ஐந்து தலை நாகத்தின் மீது சேஷையா எனும் விஷ்ணுபகவான் படுத்துக் கொண்டிருக்கிறார். பக்கத்திலேயே ஒரு பெரிய சிவலிங்கமும் இருக்கிறது. நமது கிராமங்களில் ஒன்று சொல்வார்கள் – “அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயில மண்ணு!” என்று. அதை நிரூபிக்கும் வண்ணம் இங்கே இருவரும் ஒரே இடத்தில் அருள் பாலிக்கிறார்கள். அங்கே இருவரின் தரிசனமும் கண்டபின் எங்கள் புலி வேட்டை தொடர்ந்தது.

அது பற்றி அடுத்த பகுதியில்..

மீண்டும் சந்திப்போம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.