வெள்ளை உடையில் தூய அன்னங்கள் [இரண்டாம் பாகம்]
பிரும்மகுமாரிகளின் அமைப்பு முதன் முதலில் சிந்து மாகாணத்தில் இருந்தது. பின்னர் இடவசதி இல்லாமல் இருந்ததால் பெரிய இடம் தேடி பின் இடம் மாறி மவுண்ட் அபுவுக்கு வந்தது அப்போது இருந்ததென்னவோ ஒரு ஏக்கர் நிலம் தான். ஒரு பெரிய தியான மண்டபமும் சமையல் செய்ய ஒரு சிறிய சமையலறையும் தான் காணமுடிந்தது.
இது நடந்த வருடம் 1950…..
இப்போது அதன் வளர்ச்சியைப் பார்க்க வேண்டுமே.! அதிசயக்கும் முறையில் இன்று 200 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த இயக்கம் வியாபித்துள்ளது.
நான் சென்னையில் அண்ணாநகரில் கே 4 காவல் நிலயத்தின் அருகில் இருக்கும் பிரும்மகுமாரி இயக்கத்தின் கோயிலுக்குச் சென்றிருந்தேன். அப்போது அவர்களில் ஒருவரைக் கண்டு மேலும் இந்த இயக்கத்தைப்பற்றி அறிந்து கொண்டேன்.
“அபு என்றால் ஞான சமுத்திரமாம். ஞானத்தை அள்ளி அள்ளி வழங்கும் இறைவன் இருக்கும் இடமே அபு மலையாகும். இந்த இயக்கத்தில் ஜாதி மத பேதம் கிடையாது. அபுவில் இருக்கும் மதுபன் என்ற இடத்திற்கு பலவித கலாச்சாரம் கொண்ட மக்கள் வந்து சேர்ந்திருக்கின்றனர். இந்தியாவைத் தவிர்த்து உலகளவில் சுமார் 130 நாடுகள் கலந்து கொள்கின்றன.
அன்பே தெய்வம், மனிதநேயமே வாழ்க்கையின் குறிக்கோள் என்ற கொள்கையையே இவர்கள் கடைப்பிடிக்கின்றனர்.
“அன்பகத் தில்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று” என்கிறார் திருவள்ளுவர்.
அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழ்க்கை என்ன வாழ்க்கை?
வளமற்ற பாலை நிலத்தில் பட்ட மரம் தளிர்த்தாற் போன்றது.
அபு மலையின் அடிவாரத்தில் “தல்லட்டி’ எனும் இடத்தில் “சாந்தி வனம்” என்ற பெரிய ஹால் கட்டப்பட்டு நடுவே சுமார் 20 ஆயிரம் பேர் அமரக்கூடிய வைர விழா மண்டபம் கலை வண்ணத்துடன் மிகவும் பொலிவுடன் எல்லோரையும் வசப்படுத்துகிறது. அங்கு வரும் மக்களுக்கு தங்கவும் வசதி இருக்கிறது. பெரிய கட்டிடங்கள் பல வசதிகள் கொண்டு, பல அறைகள் கொண்டு, மக்கள் சௌகரியத்திற்காகவே கட்டப்பட்டிருக்கின்றன.
மின்சக்தி தட்டுப்பாடு இருந்தாலும் கவலையில்லை. ஏனென்றால் சூரிய ஒளியினால் இயங்கும் சோலார் எனெர்ஜி கிடைக்க பெரிய மின்சக்தி வளாகம் தகுந்த கருவிகளோடு இயக்கப்படுகின்றன. ஏனென்றால் தியானம் செய்யும் போது உடலுக்கும் தேவையான வசதிகள் இருந்தால் தான் மனம் ஒருநிலை பெற்று மேலே இயங்கமுடியும். பாதி தியானம் போது சுழலும் விசிறி நின்றாலோ அல்லது வேறு அசௌகரியம் ஏற்பட்டாலோ ஆரம்ப நிலையில் தியானத்திற்குத் தடங்கல் ஏற்படும்.
சமையல் செய்யும் போதும் நீராவி சமையல் முறையைக் கையாளுவதால் உணவில் சக்தி குன்றாமல் தியானத்திற்குத் தேவையான சத்வ உணவாக செய்ய முடிகிறது.
பிரம்மகுமாரி இயக்கத்தில் இறைவனின் அருள்மொழிகள்.
இங்கு இறைவனது அருள்மொழியை ”முரளி’ என்று சொல்கிறார்கள் கண்ணனது புல்லாங்குழலின் இசையில் மாயை அகன்று அந்த அருமையான ஒலி ஆன்மாவில் ஆழமாக நுழைந்து பரமாத்மாவுடன் கலக்க வைத்து பேரானந்தத்தை அளிக்கிறது. அது போல் இறைவனது அருள் மொழிகளும் காமம், குரோதம், லோபம், மோஹம், பற்று, பேராசை, அகங்காரம் போன்ற தீய குணங்களை அழித்து மாயையில் விழாதபடி நம்மைக் காப்பாற்றுகின்றது. அருள்மொழிகளில் தாயன்பு, விவேகம், தெய்வீகப்பரிவு, உயர் நீதி, அன்பான அறிவுரை ஆகியவற்றை அதிக அளவில் பார்க்க முடிகிறது.
“பிரஜாபிதா பிரும்மா” அவர்கள் 1969 ஆம் ஆண்டு வரை அருள்மொழிகளை அள்ளி வழங்கி வந்தார். தற்போது அந்தப்பணியை “தாதி இருதய மோகினிஜி” என்பவர் மாதத்தில் இருமுறை மவுண்ட் அபுவில் செய்து வருகிறார். இந்த அருள்மொழிகளைக் கேட்க பல்லாயிரம் பேர்கள் வந்து கூடுகின்றனர். அவர் ஆற்றும் சொற்பொழிவை 18 மொழிகளில் மொழி பெயர்த்து வழங்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அவர் வழங்கிய அருள்மொழிகள் சில …
“எப்போதும் அமைதியாக இருங்கள்.”
“உலகம் முழுவதும் அமைதியைக் காக்க, அதிலுண்டாகும் அமைதி நற்றலைகள் உலகத்தில் அமைதியைக் கொண்டு வரும்.”
“பேச்சில் இனிமையும் அன்பும் இருக்க வேண்டும்.”
“வாழும் வரை ஞானத்தைக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.”
“தியானப்பயிற்சியால் உன்னத நிலை அடைய முயற்சிக்க வேண்டும்.”
“ஆத்மா என்ற தீபத்தில் ஞானம், யோகம் என்ற எண்ணெயைத் தினமும் ஊற்றி வரவேண்டும்.”
“சிவபெருமானே உங்கள் வாழ்வின் பொறுப்பாளர் . அவரிடம் பிரச்சனைகளை சம்ர்ப்பணம் செய்து விடவேண்டும்.”
“சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்றில்லாமல் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும்.”
“இறைவனின் குழந்தைகள் நீங்கள். நீங்கள் செய்யும் செயல்களால் பரமதந்தைக்கு இழுக்கு ஏற்பட்டு விடக் கூடாது.”
“நீங்கள் அனைவரின் பொருட்டும் சுப சிந்தனையுடன் நல்ல எண்ணங்கள் எண்ண வேண்டும்.”
“இரக்க சிந்தனை கொண்டு யாவருக்கும் நன்மை செய்ய வேண்டும்.”
“எதிரிகள் என்று ஒருவரும் இருக்கக்கூடாது. அப்படித் தோன்றினாலும், எதிரிகளுக்கும் நல்லது செய்யவேண்டும்.”
“தாமச உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். தூய்மையான எண்ணங்கள் தூய்மையான உணவு, எளிமையான வாழ்க்கை இவற்றின் பின்னணியில் தான் வாழ்க்கைப் படகு மிதக்க வேண்டும்.”
“ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.”
இந்த அருள்மொழிகளை என்னிடம் விவரித்த அண்ணாநகர் இயக்கத்தைச் சார்ந்த சகோதரி பிரும்மகுமாரிக்கு நன்றி.
புகைப்படத்துக்கு நன்றி:
http://www.khabarexpress.com/Thousand-of-women-devoted-to-change-society-article_564.html