ஒத்தியுள்.. விளக்குமாற்றுள்.. நீருள்…

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

japan-earthquake-tsunami

சோயாக் கரைசலில்
நூதில் நெளிவில்
வேர் வெங்காய நறுக்குடன்
தூவிய பச்சை மிளகாய்ச் சீவல்கள்
விரல் நளினத்தில் விளையாடும் தடியிரண்டால்
உதொங்கு சுவைத்த சிறுவன்
கடிக்கத் தெம்புரா கேட்டான்
எண்ணெய் காய்ந்து பொரிக்க நேரமாகும்
இரவுணவுடன் தருகிறேன் என்றவள்
என்ன வெள்ளம் வீட்டுக்குள் ஏன் எனக்
கேட்டுக்கொண்டிருந்தபொழுதே
உதொங்கு தாங்கிய கிண்ணம் மிதக்க
சிறுவனுடன் தாயையும் வெள்ளம் அள்ளிச் சென்றது
யாவும் கண்ணிமைக்கும் நேரத்தில்
வாழ்ந்த சுவடே தெரியாமல்
கடலுள் மறைந்தனர் இருவரும்.

தத்தாமியைத் துடைத்தவள்
கிமோனோவின் நெருக்கத்தில்
முழந்தாள் மடித்திருந்து குனிந்து
தேநீர்க் கோப்பைகளை அடுக்கினாள்.
விருந்துக்கு வரும் அலுவலகத் தோழியைக்
கணவருடன் எதிர்பார்த்துக்
கண்கள் வாயிலைப் பார்க்க
வெள்ளம் வீறுடன் வாயில் வழி உள்ளே
ஆ என்றவள் அலறுமுன்னே
அடித்துச் சென்றது
வீட்டைக் கூரையுடன் கிமோனோவுடன்
யப்பானியப் பண்பாட்டுப் பேழையோ
விரல் நொடிக்கும் நேரத்துள்
வீடுபேறு எய்தினாள்.

அடுக்ககம் நாற்பதாவது மாடி
அறைக்குள் அலங்காரம், அழகான இருக்கை.
குனிந்து நிமிரும் மேலாளர்
குனிந்து நிமிரும் வாடிக்கையாளர்.
இருமுறை குனிந்து பணிந்து நிமிர
தோசோ தோசோ என இருக்கை காட்ட,
கெங்கி தெசுக்கா என்ற வினாவுடன்
குசலம் விசாரிக்க, ஆடியது அடுக்ககம்
தொங்கும் விளக்குகள் ஊஞ்சலாடின
இம்மியளவு நேரத்துள் பொலபொலவென
அடுக்ககம் சொரிந்தது இடிபாடுகளுள்
குசலம் விசாரித்தவர்களை இரத்த வெள்ளத்தில்
தோசோ தோசோ சொன்னது நிலநடுக்கம்
அறிகாத்தோ சொல்லுமுன்பே அணைத்தது இயற்கை.

பயிற்சிக்குப் பறப்போம் என யப்பான் தற்காப்பு
விமானப் படை விமானத்துள் விமானிகள் இருவர்
சான் நி இச்சி இக்கிமாசு சொல்கையில்
விமானத் தளம் வெள்ளத்தில்
பறக்கவேண்டிய படை விமானம்
படகாய் மிதந்தது பல கி.மீ. பயணித்து
வீட்டுத் தொகுப்பின் இடிபாட்டு வீதிக்குள் முடங்கியது.
அறியாது அலமந்த பயிற்சி விமானிகள்
தப்பினோம் பிழைத்தோம் என்ற அலறலுடன்
இருக்கைப் பட்டியைத் தளர்த்தினர்.

சக்காலின் முதலாக ஒக்கினாவா ஈறாக
ஓலக் குரல்கள் கோர நிகழ்வின்
கொடுமையில் இரோசிமா நாகசாக்கி
நினைவுகள் நிழலாட, ஆதிசேடனின்
தூக்க விழிப்பால் பசிபிக் நெருப்பு வட்டமே
ஆடிக்கொண்டிருந்தது பூமிப் பந்தின்
மேல்தட்டுகள் நெரித்து விலகின
எட்டு அடி விலகியது தீவு ஒன்று.

நிலநடுக்கம், ஆழிப் பேரலை, எரிமலைச் சீற்றம்
இயற்கையின் கோரத் தாண்டவமா?
மேல்தட்டுகள் நகர்கின்றன, நகர்வதால்
நெரிகின்றன, விலகுகின்றன, அறிவியலுக்குச்
சவால் விடுகின்றன, அறிவாயோ என் நகர்வை
ஊடுபார்க்கும் உய்த்துணரும் உந்தித் தள்ளும்
கருவிகளுக்கு அப்பால் நகர்கின்றன அந் நகர்வுகள்
மனிதர்களை எறும்புகளாக்குகின்றன

வீட்டைக் கழுவும் பெண்ணின் ஒத்தியுள்
விளக்குமாற்றுள் நீருள் சிக்கும் எறும்புகளாய்
இந்த நகர்வுகளுள் சிக்கும் மனிதர்கள்…….

=====================================

படத்திற்கு நன்றி – http://www.bharatchronicle.com

——————————————————————-

  • உதொங்கு – மெல்லிய சோயாக்கரைசலில் நூதிள்சும் வெங்காயமும் பச்சைமிளகாயும் கிண்ணத்தில், சொப் தடிகளால் நூதிள்சை உண்டவாறே, சோயாக் கரைசலை உறிஞ்ச…
  • தெம்புரா  – பச்சி போன்ற உணவு
  • தத்தாமி  – பாய்
  • கிமோனோ  – பெண்களின் புடைவை
  • தோசோ சோசோ  – சற்றே சற்றே (Please)
  • அறிகாத்தோ  –  நன்றி
  • சான்  –  மூன்று
  • நி  –  இரண்டு
  • இச்சி  – ஒன்று (3 2 1 go -count down before starting a flight)
  • இக்கிமாசு  –  செல்க
  • சக்காலின்  – வட எல்லைத் தீவுக் கூட்டம்
  • ஒக்கினாவா  – தெற்கு எல்லைத் தீவுக் கூட்டம்
  • இரோசிமா, நாகசாக்கி  – அணுக்குண்டு பாய்ந்த நகரங்கள்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஒத்தியுள்.. விளக்குமாற்றுள்.. நீருள்…

  1. ”ஊடுபார்க்கும் உய்த்துணரும் உந்தித் தள்ளும்
    கருவிகளுக்கு அப்பால் நகர்கின்றன அந் நகர்வுகள்
    மனிதர்களை எறும்புகளாக்குகின்றன”

    விஞ்ஞானத்துக்கு ஒரு சவால் இந்த நகர்வுகள்

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *