சென்ற வார வல்லமையாளர் விருது!
(ஜூன் 18 ~ 24, 2012)
இன்னம்பூரான்
25 06 2012

சிறுதுளி பெருவெள்ளம். வல்லமை களை கட்டி வருகிறது. மகிழ்ச்சி. இதழ்களின் பயன், தகவல் அளித்து, அறிவை வளர்த்து, சிந்தனையை தூண்டுவதே. விருதுகளின் பயன் அவற்றை, அவற்றாலான படைப்புகளைக் கட்டியம் கூறி வரவேற்பதே. கட்டியம் கூறுவதின் பயன் படைப்பாற்றலுக்கு உரமிட்டு, நீர் பாய்ச்சுவதே. உரமிட தோண்ட வேண்டும், களையெடுக்க வேண்டும், பாத்தி கட்டவேண்டும், வரப்பு உயர்த்த வேண்டும். அன்றாடம் தோட்டத்தை பராமரிக்க முயலும் எனக்கு, அதிகாலையில் எத்தனை பரிசில்கள்: மறைந்திருந்து எட்டிப் பார்க்கும் மொட்டு, மலர்ந்த பூ, படர்ந்த கொடி, நரம்பு புடைத்த வெளிர்பச்சை இலை, ஜமக்காளப்புல்! அம்மாதிரி தான், கவிதை, கதை, கட்டுரை, களஞ்சியம் எல்லாம், இதழ்களிலும், நூல்களிலும், தொகுப்புகளிலும். படிக்கப்,படிக்க, சுவை கூடுகிறது. ஆம். சுவை கூட்டுவதும், இதழ்களின் பணியே. ஆங்கிலத்தில் ஏஸ்தெட்டிக்ஸ் என்று வர்ணிக்கப்படும் கவின்கலையை பற்றி தற்கால தமிழிதழ்களில் அதிகம் பேசப்படுவதில்லை என்ற குறை எனக்கு உண்டு.

என் நண்பர் திவாகர் கலை, தொழில் நுட்பம், சிந்தனை, பாமர கீர்த்தி, நினைவாற்றல் வடிக்கும் இலக்கியம், பேசாமடந்தையாயினும் கூசாத ஒளியில் மிளிரும் எழில், விழிப்புணர்ச்சி, மழலை இலக்கியம் எல்லாவற்றையும் கவர்ந்த பின், நான் யாது செய்வேன்? எதை படிப்பேன்? எதைப் பற்றி எழுதுவேன்? என்னால் விருது அளிக்க முடியுமா? அல்லது என் முயற்சி ‘விருதா’ வாக ஆகி விடுமா, வாசகர்களே? இட்ட பணியை செய்யத்தான் வேண்டும். என் பணியை வாசகர்கள் விமரிசிக்கலாம். தடை யாதும் இல்லை. விருது அறிவிக்க வேண்டிய கெடு நெருங்கியும், வாசகர்களின் பரிந்துரைகள் ஒன்றும் எமக்கு கிட்டவில்லை. இனியும் அவை வந்தால், தாராளமனதுடன் வல்லமை அவற்றை பிரசுரிக்கும் என நினைக்கிறேன். எனக்கு இதழியலுடன் பல வருடங்களாக தொடர்பு உண்டு. அதனால், சில உரிமைகளை எடுத்துக்கொள்கிறேன்.

விருது அறிவிப்பது எல்லாம் தன் விருப்பத்தை எழுத ஒரு தருணம். அதை விடலாமோ? இன்று களை கட்டும் ‘வல்லமை’ இதழ் முன்னேற வேண்டும். இலக்கிய வரவுகள் போதாது. கவிதைகளின் தரம் உயரவேண்டும். கட்டுரைகள் மேலும் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும். தரமுயர்ந்த சிறுகதை இலக்கியம் பெருக வேண்டும். சுருங்கச்சொல்லின்,

‘சமன் செய்து சீர் தூக்கும் கோல்போல் அமைந்து, ஒருபால்
கோடாமை-சான்றோர்க்கு அணி.’

என்ற திருக்குறளுக்கிணங்க, நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் மட்டுமே பிரசுரிக்கப்பட வேண்டும். முதலில் எதிர்ப்பு இருந்தாலும், படைப்பாளர்களே அந்த கொள்கையின் உரத்தை காலாவட்டத்தில் உணர்ந்து வரவேற்பார்கள். ஆங்கிலத்தில் வெளிவரும் சில சஞ்சிகைகளில் புத்தக மதிப்பீட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அவை நீண்ட கட்டுரைகளாக அமையும். பதிலடிக்கு இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த அளவுக்கு இங்கு கருத்து பரிமாற்றத்தை நான் எதிர்பார்க்கிறேன். ஆனால், மணலை கயிறாகத் திரித்தாலும், வல்லமை வாசகர்களின் கருத்து அறிய முடிவது இல்லை. இந்த நிலையில் புத்தக மதிப்பீடுகளுக்கு வரவேற்பு இருக்காதோ என்ற ஐயம் உளது. எத்தனையோ செய்யலாம். உதாரணமாக, மற்ற மொழியில் உள்ள நூல்களை அறிமுகம் செய்யலாம். நம்மில் எத்தனை பேருக்கு அம்பர்ட்டோ ஈக்கோ என்ற இலக்கிய கர்த்தாவை பற்றித் தெரியும்? திவாகர், ‘இவர் என்ன சுற்றி வளைக்கிறார்?’ என்று கேட்பது காதில் விழுகிறது. விஷயத்துக்கு வருகிறேன். மற்றைதையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

கவியரசர் கண்ணதாசன்,
‘…ஒரு பாடலைத் தனியே இருந்து கேட்கும் போது அது சிந்தனைக்கும் விருந்தாக அமைந்தால் தான் அது நல்ல பாடலாகும். நான் எழுதும் பத்துப் பாடல்களில் ஏழு பாடல்களாவது அப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’
என்று பதிலளித்தை அன்பர் சக்திதாசன் நினைவூட்டினார். இந்த வாரம் வந்துள்ள படைப்புகளை, இந்த அளவுகோலால் முதலில் அளந்தேன். மற்ற தனி சிறப்புகளை புரிந்து கொள்ள, எல்லாவற்றையும் பலமுறை படித்தேன். வல்லமை மடலாடும் தளத்தின் தரம் பன்மடங்கு உயரவேண்டும் என்று முதலிலேயே சொல்லி விடுகிறேன்.

இந்த வாரம் ‘… இன உணர்வு இல்லையெனில் இழிவு நமக்கென்று…’ என்ற மென்மையான குற்றச்சாட்டு வரி என் கவனத்தை ‘சிக்’ கென பிடித்துக்கொண்டது. வள்ளலார் தோன்றிய காலம், ஒரு விதத்தில் இருண்ட காலம். அன்னியர் ஆட்சி. சமுதாயத்தில் ஏற்ற தாழ்வு மிகுந்து இருந்தது. சம்பிரதாயமும், சடங்கும் மேலாண்மை செய்த வண்ணம் இருந்தன. சமய பிணக்குகள் மேலோங்கி இருந்தன. புலவர் பெருமக்கள் குடத்தில் ஏற்றிய தீபமாக,அமரிக்கையாக வாழ்ந்து வந்தனர். புதியதொரு ஆன்மீகத்திற்கு அடி கோலிய வள்ளலாரை திரள் திரளாக மக்கள் வந்து தொழுது அடி பணிந்தது இயல்பான நிகழ்வு. அன்று எளியவர்களுக்குப் புரியும் வகையில் திரு அருட்பா இயற்றிய வள்ளலாரின் கோட்பாடுகளின் ரத்தின சுருக்கத்தை, ‘எறும்புடன்’ தொடங்கி, மனிதனின் ஒவ்வாத செயல்களை, ‘ஆரோக்ய வாழ்வுக்கு அடிகோலும்’/’ பாங்கான வழி’/’ ஒன்றே வழி’/’ தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும்.’ என்றெல்லாம் கேலி செய்து விட்டு, ‘வள்ளல் பிரான் வாழ்வும் நாம் தினமும் ஓர்வோம்.’ என அறிவுரையை ஈற்றடியாக, ஜூன் 21, 2012 அன்று ‘நான்‘ என்ற கவிதையில் தந்தருளிய சொல்லின் வனப்பும், பொருளின் நிறைவும், நகைச்சுவையில் பொதித்த நன்னெறியும் ஈன்றதற்காக, திரு.சு. கோதண்டராமனுக்கு ‘வல்லமையாளர் விருது அளிப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

இரு ஆலோசனைகளை பகிர்ந்து கொள்கிறேன். விருது பெற்றவரின் சுருக்கமான பதில் பின்னூட்டமாக இடம் பெறுதல் சிலாக்கியம். ஏதாவது ஒரு வகையில் ஆங்கில இதழ்களில் இடம் பெறும் லிடரரி க்ரிட்டிஸிஸம் போல,மாதம் ஒரு முறை, வல்லமை ஆசிரியர், ஒரு வாசகரை அணுகி, சில இலக்கிய விமர்சனங்கள் பெறலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “வல்லமையாளர்!

 1. திரு இன்னம்பூரான் அவர்களுக்கும், வல்லமை ஆசிரியர் குழுவினர்க்கும் நன்றி என்ற ஒரு சொல் தவிர வேறு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை.

  சுமார் 20 ஆண்டுகள் முன்பு தான் எழுதத் தொடங்கினேன். கடந்த 3 ஆண்டு காலமாக எழுதுவதை நிறுத்திவிட்டு வேறு ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன். இடைப்பட்ட காலத்தில் எழுதியதை எல்லாம் ஒவ்வொன்றாக வெளியிடக் களம் அமைத்துக் கொடுத்தது வல்லமை. நான் கிறுக்கியது எதுவாக இருந்தாலும்  அது மிக நன்று, தொடர்ந்து எழுதுங்கள் என்று ஒவ்வொரு முறையும் ஊக்கம் கொடுத்தார் ஆசிரியர் திருமதி பவள சங்கரி. அவரிடம் என்னை ஆற்றுப்படுத்தியவர் திரு அண்ணா கண்ணன். இவரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் திரு மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள். 

  என் பெட்டியில் குப்பைகளாக உறங்கிக் கிடந்த படைப்புகளை வெளிக் கொணர்ந்து எனக்கு ஒரு விருது வாங்கிக் கொடுத்த விதியின் விளையாட்டை எண்ணி வியக்கிறேன்.

  இந்த நான் என்ற கவிதை பற்றி-
  இதை இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்று எனக்கு அவ்வப்போது தோன்றுவதுண்டு.  ஆனால் கதை கட்டுரைகளைத் திருத்தி எழுதுவது போல கவிதைகளைச் செப்பனிட முடியாது என்பது என் அனுபவம். உள்ளத்திலிருந்து பீறிட்டு எழும்போது எந்த வடிவம் வாய்க்கிறதோ அதைப் பின்னர் திருத்த முயன்றால் கவிதையின் உயிர் கெட்டுவிடுவதைப் பார்த்திருக்கிறேன். 

  வடிவம் குறைபாடு உடையதாக இருந்தாலும் அது கூறும் கருத்து- வர வர நமது அன்பு வட்டம் சுருங்கி தன்னலமுடையவர்களாக மாறிக் கொண்டிருக்கிறோம் என்ற வேதனையான உண்மை- வாசகர் உள்ளத்தைத் தொடுமாயின் அதுவே படைப்பின் வெற்றி.
  அனைவர்க்கும் நன்றி 
  சு.கோதண்டராமன்

 2. தங்களுடைய இந்தக் கவிதை மட்டுமின்றி, அடுக்கு மாடிக் குடியுருப்புகளில் குளம் அமைப்பது பற்றிய கட்டுரை, தங்கள் சிறுகதைகள், அனைத்தையும் விரும்பிப் படிக்கும் வாசகன் நான்.

  இணையத்தில் எழுதுவோர் நிறைய பேர் இருந்தாலும், தன் புகழ் வேண்டுவதைப் பின் தள்ளி, சமூகத்தின் மேல் கரிசனம் கொண்டு எழுதுவோர் மிகக் குறைவு. அந்தக் குறைந்த எண்ணிக்கையுள்ளோரில் தங்களுக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு என்பதையே இந்த விருது உறுதிப் படுத்துவதாக எண்ணுகிறேன்.

  வாழ்த்துக்கள் ஐயா!

   

 3. வல்லமையாளர் விருது பெறும் சு.கோதண்டராமன் அவர்களுக்கு வாழ்த்துகள். அவர் தம் கட்டுரைகளுக்காக என்றேனும் விருது பெறுவார் என நினைத்திருந்தேன். ஆனால், கவிதைக்குப் பெற்றது, எதிர்பாராத திருப்பம். ஆயினும் கவிதையும் நன்று.  அவரைத் தேர்ந்தெடுத்து நேர்த்தியாக அறிவித்த இன்னம்பூரான் அவர்களுக்கு நன்றிகள்.

 4. ‘வல்லமை வார விருது’ பெற்ற திரு சு. கோதண்டராமன் அவர்களுக்கு எனது அகமகிழ்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு, வல்லமையின் அனைத்து அங்கத்தினர்களும், ஆசிரியர்களும் தன்னலம் கருதாது வல்லமையின் தரத்திற்கும், வளர்ச்சிக்கும் உழைப்பதற்கு,  இன்னொரு முறை என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  திருவாளர் அண்ணாகண்ணன் மற்றும் இளங்கோ அவர்கள் கூறியது போல், புகழுக்காகவும், நகைச்சுவைக்காகவும் எழுதுவதை விட சமூக நலனுக்காக எழுதுவரையே நானும் பெரிதும் மதிக்கிறேன். 

  மதிப்பிற்குறிய திரு இன்னம்பூரான் அவர்கள் தொடர்ந்து நான்கு வாரங்கள் ‘வல்லமை விருது’ வழங்க பொருப்பு ஏற்றுக்கொண்டு, ‘விருது அளிப்பது’ பற்றிக் கூறிய ‘உயரிய கருத்துக்களும்’ என்னை வெகுவாகக் கவர்ந்தன.

  அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

  பெருவை பார்த்தசாரதி.

 5. வல்லமையாளர் திரு. கோதண்டராமன் அவர்களுக்கு வாழ்த்துகள். திரு. இன்னம்பூரான் அவர்களுக்கும் வல்லமைக்கும் நன்றி.

 6. வாழ்த்துத் தெரிவித்த அனைவர்க்கும் நன்றி.
  கோதண்டராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.